கமகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமகம் என்பது கருநாடக இசையில் இசையொலிகளுக்கு அழகூட்டும் ஒலி அசைவுகள் அல்லது அலைவுகள் ஆகும். இதனைப் பழந்தமிழில் உள்ளோசைகள் என அழைத்தனர். சுரங்களைப் பாடும்போது அல்லது இசைக்கருவிகளில் வாசிக்கும்போது இனிமையும் அழகுணர்வும் கூடுவதற்குச் சில குறிப்பிட்ட இடங்களில் தக்க ஒலி அசைவுகள் உண்டாக்குதலைக் கமகம் என்பர். இராகங்களின் சிறப்பு இயல்புகளைக் காட்ட இக்கமக அசைவுகள் மிகவும் இன்றியமையாதவை.

பழந்தமிழ் இலக்கியங்களில் கமகம்[தொகு]

கமகங்களில் பல வகைகள் உள்ளன. பழந்தமிழில் சிலப்பதிகாரத்தில் கூறியபடி இவை எட்டு வகையாகும். அவையாவன வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்பன.

வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏருடைப் பட்டடை என இசையோர் வகுத்த
பட்ட வகைதன் செவியின் ஓர்த்த
(சிலப்.17, கானல் வரி-12-6)

பிங்கல நிகண்டு உள்ளோசைகள் ஆறு என்று கூறுகின்றது. அவையாவன:

முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும்
விழைவும் நுணக்கமும் உள்ளோசை என்ப (பிங்கலம் 1436)

பிங்கல நிகண்டில் கூறிய ஞெளிர் என்பது ஏங்குதல் இரங்குதல் போன்று ஒலிப்பது ஆகும். தெளிர் என்பது தற்காலத்தில் ரவை என்று அழைக்கப்படுகின்றது. [1]

கமகங்களின் வகைகள்[தொகு]

கமகம் என்பது 15 வகைப்படும் என்றும் அவைகளுக்கு மாத்திரை அளவு உண்டு என்றும் சங்கீத ரத்னாகரம் என்ற நூலில் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரங்கதேவர் குறிப்பிடுகிறார். அனுபவத்தில் பார்த்தால் எந்த கமகத்தையும் 1/4, 1/2 மாத்திரைக்கு உபயோகிப்பது சாத்தியமில்லை. வாய்ப்பாட்டில் குரல் வளத்திற்கும், இசைத் திறமைக்கும ஏற்றவாறு கமக அழகுகளைக் கூட்டிப் பாட முடியும். வீணை, வயலின் முதலிய இசைககருவிகளில் கமகங்களை (உள்ளோசைகளை)ப் பயன்படுத்தி இசைப்பதைப் பார்க்க முடியும்.

பிற்காலத்தில் 10 வகையான கமகங்களே பயன்படுத்தப் படுகின்றன. சென்னையில் இருந்த சின்னசாமி முதலியார் அவர்கள் ஊக்குவித்தபடி முத்துசுவாமி தீட்சதரின் தம்பி பாலுசாமி அவர்களின் பெயரரான சுப்பராம தீட்சதர் அவர்கள் 10 வகையான கமகங்களை (உள்ளோசைகளை) சீரமைத்து 1904 இல் புத்தகமாக வெளியிட்டார். அக் கமகங்களாவன: கம்பிதம், ஸ்புரிதம், பிரத்யாகதம், நொக்கு, ரவை, கண்டிப்பு, வலி, ஏற்றஜாரு, இறக்கஜாரு ஒடுக்கல், ஒரிகை என்பனவாகும். இவையன்றியும் பிற பெயர்களும் வழங்குகின்றன. கம்பிதம் என்பதைத் தமிழில் கம்பலை (நடுக்கம்) என்பர் (பிங்கல நிகண்டு 1441).

இன்று வகைப்படுத்தப்பட்டுப் பயன்படும் கமகங்கள்[தொகு]

  1. ஆரோகண கமகம்: ஆரோகண வரிசையில் அமைந்துள்ள ஸ்வரக்கோர்வைகளில் அசைவினால் தோன்றுவது ஆரோகண கமகம் (ஏற்றஜாரு ஒடுக்கல்) ஆகும்.
    • உ-ம் : ஸ ரி க ம ப த நி ஸ்
  2. அவரோகண கமகம்: அவரோகண முறையில் அமைந்துள்ள ஸ்வரக்கோர்வைகளின் அசைவினால் தோன்றுவது அவரோகண கமகம் (இறக்கஜாரு ஒடுக்கல்) ஆகும்.
    • உ-ம் : ஸ் நி த ப ம க ரி ஸ
  3. டாலு: பாடும் போதோ அல்லது இசைக்கருவிகளில் வாசிக்கும் போதோ கீழ் ஸ்தானத்திலிருந்து கொண்டே மேல் ஸ்தானத்தை எழுப்பும் போது உண்டாகும் கமகம் டாலு எனப்படும். (இது வலி என்னும் கமகத்திற்கு ஒத்தது)
    • உ-ம் : ஸகா - ஸமா - ஸபா
  4. ஸ்புரித கமகம்: ஜண்டை ஸ்வரங்களில் வரும் முதல் ஸ்வரத்தை சாதாரணமாகவும் இரண்டாவதாக வரும் ஸ்வரத்தை அடித்து பிடிக்கையில் வரும் கமகம் ஸ்புரித கமகம் எனப்படும். (இதனை தமிழில் அடுக்கல் என்பர். தமிழில் நான்கடுக்கு, ஆறடக்கு முதலியனவும் இரட்டை அடுக்கல்களாகவே வரும்)
    • உ-ம் : ஸஸ ரிரி கக மம
  5. கம்பித கமகம்: ஸ்வரங்களை தக்க இடங்களில் தக்க அளவில் கம்பீரமாக அழுத்தமாக அசைத்துப் பாடும் போது ஏற்படும் கமகம் கம்பித கமகம் ஆகும். (இதனைத் தமிழில் கம்பலை என்பர்)
    • உ-ம் : தன்யாஸி இராகத்தில் ஸகாமபநிஸ், இதில் 'க' வும், 'நி' யும் கம்பீரமாக அழுத்திப் பாடப்படுகிறது. அதே போல் அடாணாவில் ஸ்நிதாபமகாரிஸ. இதில் 'த' வும், 'க' வும் அழுத்திப் பாடப்படுகிறது.
  6. ஆகத கமகம்: ஸரி - ரிக - கம - மப போன்ற ஸ்வரக்கோர்வைகளை தக்க முறையில் அசைத்துப் பாடுதல் ஆகத கமகம் ஆகும்.
  7. பிரத்தியாகத கமகம்: ஸ்நி - நித - தப - பம போன்ற ஸ்வரக்கோர்வைகளைத் தக்க முறையில் அசைத்துப் பாடுதல் பிரத்தியாகத கமகம் ஆகும்.
  8. திரிபுச்சம்: ஸ்வரங்களை ஸஸஸ ரிரிரி ககக மமம என்று மும்மூன்று ஸ்வர அமைப்பு முறையில் பிடிக்கும் போது ஏற்படும் கமகம் திரிபுச்சம் ஆகும். (தமிழில் மூவடுக்கல்)
  9. ஆந்தோளித கமகம்: ஸரிஸதாத, ஸரிஸபாபா என்ற முறையில் வீணை போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் போது கீழுள்ள ஒரு ஸ்வரத்தின் மேல் சிறிது நின்று பின் தந்தியை இழுத்தோ அல்லது விரலை நகர்த்திச் சென்றோ மேல் ஸ்வரத்தைப் பிடிக்கும் போது ஏற்படும் கமகம் ஆந்தோளித கமகம் ஆகும்.
  10. மூர்ச்சனை கமகம்: ஸ்வரக் கோர்வையிலுள்ள ஸ்வரங்களை மிகத் துரிதமாக பிடித்து ஒவ்வொரு ஸ்வரக்கோர்வையின் கடைசி ஸ்வரத்தின் மேல் நிற்கும் போது ஏற்படும் கமகம் மூர்ச்சனை கமகம் ஆகும்.
    • உ-ம் : ஸரிகமபதநீ - ரிகமபதநிஸா - கமபதநிஸரீ

உசாத்துணை[தொகு]

  1. முனைவர் சுந்தரம், வீ. ப. கா., பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1986.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமகம்&oldid=3288755" இலிருந்து மீள்விக்கப்பட்டது