சமூக ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமூக ஒப்பந்தம் தொடர்பான ஜான் லாக்கின் (John Locke) எழுத்துக்கள், அமெரிக்காவின் தொடக்க காலத் தலைவர்களிடையே மிகுந்த செல்வாக்குச் செலுத்தின.

சமூக ஒப்பந்தம் என்பது பல்வேறு வகையான மக்களாட்சிக் கொள்கைகளை விளக்கும் ஒன்றாகும். இது, சமூக ஒழுங்கைப் பேணும் நோக்கில், நாடுகளை உருவாக்குவதற்காக மக்கள் உட்கிடையான ஒப்பந்தங்களைச் செய்து கொள்கிறார்கள் என்னும் கருத்துருவின் அடிப்படையிலானது.

நவீனம் என்பது ஒரு கண்ணோட்டமாக, அணுகுமுறையாக இருந்த காலத்தில் உருவான அரசியல் தத்துவவியலாளர்கள், அரசாங்கமோ அல்லது ஆட்சியாளர்களோ தங்களது ஆளும் உரிமையையும், இறையாண்மையையும் மனித சமூகத்திற்கு அப்பாற்பட்ட இறைவன் அல்லது தெய்வீக ஆற்றல் போன்றவைகளிலிருந்து பெறவில்லை என்று உணர்ந்தனர். சமூகத்திலுள்ள ஆளப்படுகின்ற மனிதர்கள் தங்களுடைய நடைமுறைகளையும் வாழ்வியலையும் சீராக சண்டை, சச்சரவின்றி நடத்திட தங்களுக்குள் நடுநிலை கொண்ட ஒரு அமைப்பு வேண்டும் என உணர்ந்ததனால் ஒரு சமூக ஒப்பந்தத்தை உருவாக்கினர் என்று அவர்கள் எடுத்துக்கூறினர். பறிக்கமுடியாத தனிமனித உரிமைகளைத் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களையும் அந்த நடுநிலை அமைப்பின் பொறுப்பில் ஒப்படைத்தன் மூலம் சமூக ஒழுங்கைப் பேண மக்கள் முயன்றனர் என அவர்கள் கருதினர். அந்த நடுநிலை அமைப்பே நாடு, அரசு, ஆட்சியாளர்கள் என வளர்ச்சியடைந்தன என்ற தத்துவத்தையும் அவர்கள் முன் வைத்தனர். தாமஸ் ஹாப்ஸ், ஜான் லாக் மற்றும் ஜான் ஜேக்கஸ் ரூசோ போன்ற அறிஞர்களே சமூக ஒப்பந்தத் தத்துவத்தை முன் வைத்த தலைசிறந்த நவீன கால அரசியல் சிந்தனையாளர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூக_ஒப்பந்தம்&oldid=2718527" இலிருந்து மீள்விக்கப்பட்டது