மாதவன் என்ற சொற்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதவன் என்ற பெயர் இந்து சமயத் தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 72-வது, 167-வது, 735-வது பெயராக மூன்றுமுறை வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் மூன்றாவது பெயர்.

'மா' என்பவளுடைய கணவன்[தொகு]

  • 'மா' என்றால் அலைமகளான லட்சுமி. அவளுடைய 'தவ:', அதாவது, கணவன் மாதவன்.
  • 'மா' வை பெயர்ச்சொல்லாகக் கொண்டால் தாய், லக்ஷ்மி, அளவு என்று மூன்று பொருள்கள். வினைச் சொல்லாகக் கொண்டால் தன்னுள் அடக்கிக் கொள்வது, அளவிடுவது, பிரித்துப் பகிர்ந்து கொடுப்பது என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். உலகைக் கருவாகத் தன்னுள் அடக்கிக் கொள்வதால் அவள் தான் எல்லோருக்கும் தாய்; 'மா' எனும் (பரமனின்) பரம சக்தி.
  • 'மா' வை 'அளவிடும் கருவி' என்று கொள்ளும்போது, அளவிடும் கருவியாக அளவிடப்படும் பொருளின் முன்னும் பின்னும் நின்று அளக்கப்பெறும் பொருளைவிட மிகப் பெரியதாக இருப்பவள். உலகைப் படைக்கு முன்னும், மறைந்த பின் உலகமிருக்கும் அந்நிலையிலும் தொடர்ந்து நின்று அவற்றை அளவில் அடக்கி அடையாளம் காட்டுபவள்.
  • செல்வத்தின் தேவதையான 'மா' செல்வமாகி நின்று அதனை அதனிடத்தில் நிலைக்கவைத்து பகிர்ந்து கொடுப்பவள்.

'மாதவனு'க்கு இதர பொருள்கள்[தொகு]

  • (ஆதி சங்கரர் உரை) சாந்தோக்ய உபநிடதத்தில், மதுவித்தை [1] மூலம் சூரியனை தேனாக உபாசனை செய்து பிரம்மஞானம் பெறுகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி மதுவித்தை மூலம் உணரப்பெறும் பரம்பொருள் 'மாதவன்'.
  • (பராசர பட்டர் உரை)'மா' - மௌனம், 'த' - தியானம், 'வ' - யோகம் இவை மூன்றாலும் அறியத்தக்கவர் மாதவன். மகாபாரதம் உத்தியோக பர்வம் 71-4 இல் இதற்கு [2] சான்று உளது. ஆதி சங்கரரும் இச்சான்றை எடுத்தாள்கிறார்.
  • (இரு உரையிலும்): 'மா' எனப்படும் பரமாத்ம ஞானத்தை அளிப்பவர். இதற்கு [3] மேற்கோள் ஹரிவம்சத்திலிருந்து எல்லா உரையாளர்களும் எடுத்தாள்கின்றனர்.
  • 'மா' என்பது சித்தத்தின் போக்கு. கண்ணால் கண்டுணர்ந்த பொருள் மனதைக் கட்டுப்படுத்த மனம் அப்பொருளின் வடிவை அடைகிறது. இன்னும் மற்ற பொறிகளினாலும் மனம் இப்படித்தான் கட்டுப்படுத்தப் படுகிறது. ஆக பல பொருள்களின் வடிவைப் பெறுவதால் மனம் ஒருநிலைப்படுவதில்லை. மௌனம், தியானம், யோகம் இம்மூன்றும் மனதைக் கட்டுப்படுத்தப் பயன்படும். பொறிகளை வெளி உணர்விற்குச் செல்லாதபடி அடக்குதல் மௌனம். அப்பொழுது நூலறிவால் ஏற்பட்ட ஆன்மிக சிந்தனையில் மனம் ஈடுபடும். கருத்தால் உணர்ந்த இத்தத்துவங்களில் மனம் பதிந்திருப்பது தியானம். இம்மனப்பதிவு நிலைத்திருப்பது யோகம்.சித்தத்தின் போக்கை நிலைநிறுத்துவதுதான் யோகம்[4] என்பர் யோகசூத்திரத்தை உலகுக்கருளிய பதஞ்சலி முனிவர்.ஆக, மௌனம், தியானம், யோகம் இவற்றால் சித்தம் போன போக்கில் போகாதபடி நிலைநிறுத்துபவர்[5]மாதவன்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

துணை நூல்கள்[தொகு]

  • ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். சி. வெ. ராதகிருஷ்ண சாஸ்திரி. சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்ட். 1986.
  • ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். உரை ஆசிரியர் "அண்ணா". ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். மயிலாப்பூர், சென்னை 4. 1959
  • Vishnu Sahasranama. Compiled by Dr. Arulmallige Parthasarathy. Vishnu Sahasranama Trust, Bangalore. 2007.
  • ஸ்ரீ ஜயமங்கள ஸ்தோத்திரம். (பதினொன்றாம் பாகம்). பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர். சேலம் லிட்டெரரி அச்சகம். 1964.


மேற்கோள்கள்[தொகு]

  1. இந்த சூரியன் தேவர்களுக்கு மது (அமிர்தம், தேன்) அவர்கள் உண்பதுமில்லை, பருகுவதுமில்லை. இவ்வமிர்தத்தைப் பார்த்தே களிப்படைந்துவிடுகின்றனர்.
  2. மௌனாத்தியானாச்ச யோகாச்ச வித்தி பாரத மாதவம்
  3. மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈசோ யதோ பவான். தஸ்மான் மாதவ நாமாஸி...
  4. யோக: சித்தவிருத்தி நிரோத: - பதஞ்சலி யோக சூத்திரம் 1.
  5. மாம் சித்தவிருத்திம் தவதி தூரீகரோதி இதி மாதவ:
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவன்_என்ற_சொற்பொருள்&oldid=2928931" இலிருந்து மீள்விக்கப்பட்டது