ராமச்சந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமச்சந்திரா (எ) மாஸ்டர் ராமச்சந்திரா(1821 – 1880) , 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய கணிதவியலாளரும் உருது மொழிப் பத்திரிகையாளரும் ஆவார். .[1]ட்ரியடீஸ் ஆன் ப்ராப்ளம்ஸ் ஆஃப் மேக்சிமா அண்டு மினிமா என்கிற அவரது புத்தகத்தை பிரபல கணிதவியலாளர் அகஸ்டஸ் த மோர்கன் ஊக்குவித்தார் .[2]

இளம் பருவம்[தொகு]

பானிபட்டில் 1821-ஆம் ஆண்டு பிறந்தார். அவரது ஒன்பது வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், அவரது தாயார் கல்வி கற்பித்தார். வீட்டிலேயே சிறிது காலம் படித்த பிறகு 1833-ஆம் ஆண்டில் அவர் ஓர் ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளியில் கணிதவியல் கற்பிக்கும் ஏற்பாடு இல்லாவிடினும் தானாகவே முயன்று அதில் நல்ல தேர்ச்சி அடைந்தார். அவருக்குப் பதினோரு வயது ஆனபோதே திருமணம் ஆனது. இவரது மனைவி காது கேளாத, வாய் பேச முடியாதவர். தன் மனைவியைக் கவனித்துக் கொண்டதோடு, அறிவியல் தேடலிலும் அவர் ஈடுபட்டார் .[3]

கணிதவியல் துறை[தொகு]

தற்போது ஜாகிர் உசேன் டில்லி கல்லூரி என அழைக்கப்படும் கல்லூரியில் கணித ஆசிரியராகச் சேர்ந்தார். அவர் எழுதிய உருது மொழிப் புத்தகத்தில் இந்திய-அரேபிய மரபான இயற்கணிதத்தையும், நவீன கணிதமாக அப்போது அறிமுகமாயிருந்த நுண்கணிதத்தையும் இணைக்க முயற்சி செய்தார். மேலை நாடுகளிலும் அவரது கோட்பாடு பரவ, நுண்கணிதத்தைப் பற்றி ஆங்கிலத்தில் இரு புத்தகங்கள் வெளியிட்டார். வடிவவியலில் அதிக புலமை தேவைப்படாத இயற்கணிதத்தின் அடிப்படையிலான நுண்கணிதத்தை அவர் இப்புத்தகங்களில் அறிமுகப்படுத்தினார். அவரவருடைய தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

பத்திரிக்கையாளர்[தொகு]

ஐரோப்பிய அறிவியல் கட்டுரைகளை உருது மொழிக்குக் கொணரும் பணிக்காகவே அவர் 2 பத்திரிக்கைகளைத் தொடங்கி நடத்தினார். இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அறிவியல் ஆதாரமற்ற மூடநம்பிக்கைகளுக்கெதிராக ஏராளமான கட்டுரைகளை அவர் தனது பத்திரிகையில் எழுதினார்.

விமர்சனம்[தொகு]

தில்லி மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த அவரது தாய்மொழிவழிக் கல்வியோ, கணிதத்தில் அவரது கோட்பாடுகளோ அறிவுலகத்தினரால் பெரிதும் அங்கீகரிக்கப்படவில்லை. அவரது திட்டம் அரசியல் அதிகாரத்திற்கும் அறிவியல் துறையில் இருந்த அரசியலுக்கும் பலியானது. 1857 சுதந்திரப் போரின்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், தனது பணியாளின் உதவியுடன் அவர் பாதுகாப்பிற்காக ஓடி ஒளிய நேர்ந்தது.

இறப்பு[தொகு]

1880 ஆகஸ்ட் 11 அன்று தனது 59-வது வயதில் அவர் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Scientists of India- Ramchandra". The Council of Scientific and Industrial Research. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2014.
  2. Gail minault. "Master Ramchandra of Delhi College: Teacher, Journalist, and Cultural Intermediary". பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2014.
  3. கே. ராஜு (18 ஆகத்து 2014). "மாஸ்டர் ராமச்சந்திரா". தீக்கதிர் தமிழ் நாளிதழ். p. 4. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமச்சந்திரா&oldid=3569624" இலிருந்து மீள்விக்கப்பட்டது