மைக்கலாஞ்சலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கலாஞ்சலோ
Michelangelo
மைக்கலாஞ்சலோவின் உருவப்படம், ஜசொப்பீனோ டெல் கொன்டே வரைந்தது (1535 இற்குப் பின்னர்) 60 வயதில்
பிறப்புMichelangelo di Lodovico Buonarroti Simoni
(1475-03-06)6 மார்ச்சு 1475
காப்பிரசே, இத்தாலி)
இறப்பு18 பெப்ரவரி 1564(1564-02-18) (அகவை 88)
ரோம், இத்தாலி
தேசியம்இத்தாலியர்
கல்விடொமெனிக்கோ கிர்லண்டையோ இடம் பயிற்சி[1]
அறியப்படுவதுசிற்பக்கலை, ஓவியம், கட்டடக்கலை, கவிதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்டேவிட், ஆதாமின் உருவாக்கம், பியேட்டா
மைக்கலாஞ்சலோ
கையொப்பம்
மைக்கலாஞ்சலோ

மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும், கட்டடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.

1498ல் மைக்கலாஞ்சலோ தனது 23ஆம் வயதில் செதுக்கிய, ஆறு அடி (180 சமீ) உயரம் உடைய பியேட்டா சிலை

மைக்கலாஞ்சலோவின் புகழ் பெற்ற படைப்புகளான, பியேட்டா (Pietà), டேவிட் ஆகியவை 16ஆம் நூற்றாண்டின் இருபதுகளின் பிற்பகுதியிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் உருவாக்கப்பட்டவை. ஒவியம் தொடர்பாக இவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதபோதும், மேற்கத்திய ஓவியக் கலைத் துறையில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இரண்டு ஓவியங்களையும் இவர் படைத்துள்ளார். இவை ரோம் நகரிலுள்ள சிசுடைன் சிற்றாலய உட்கூரையிலும் அதன் பீடத்தின் பின்னுள்ள சுவரில் வரையப்பட்டுள்ள கடைசித் தீர்ப்பு ஓவியங்களாகும். இவருடைய வாழ்வின் பிற்பகுதியில் வத்திக்கானின் புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடத்தை (dome) வடிவமைத்தார்.

இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரது இரண்டு வாழ்க்கை வரலாறுகள் வெளியிடப்பட்டது. இவற்றில் ஒன்றை எழுதிய ஜோர்ஜியோ வசாரி (Giorgio Vasari), இவரை, மறுமலர்ச்சிக் காலச் சாதனைகள் அனைத்துக்கும் சிகரம் போன்றவர் எனப் புகழ்ந்துள்ளார். இக்கருத்து, பின்வந்த நூற்றாண்டுகளில், கலைத்துறையில் ஆமோதிக்கப்பட்டது.

ஆரம்ப காலம்[தொகு]

மைக்கலாஞ்சலோவின் மோசே.

மைக்கலாஞ்சலோ, மத்திய இத்தாலியப் பிரதேசமான தஸ்கனியிலுள்ள (Tuscany) அரெஸ்சோ (Arezzo) மாகாணத்தில் காப்ரெஸ் (Caprese) எனும் ஊரில் 1475 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தையார், லொடோவிகோ டி லியனார்டோ டி புவனரோட்டி டி சிமோனி (Lodovico di Leonardo di Buonarotti di Simoni) ஒரு நீதிபதியாக இருந்தவர். இவரது தாய் பிரான்செஸ்கா டி நேரி டெல் மினியாட்டோ டி சியேனா (Francesca di Neri del Miniato di Siena) என்பவர். புவனரோட்டி குடும்பம் தஸ்கனியின் பிரபுத்துவ குடும்பத்தின் வழிவந்தது. எனினும் மைக்கலாஞ்சலோவின் காலத்தில் இவர் குடும்பம் ஒரு முக்கியத்துவமற்ற பிரபுத்துவ குடும்பமாகவே கணிக்கப்பட்டனர். ஆரம்பகாலத்தில் மைக்கலாஞ்சலோ புளோரன்சிலேயே வளர்ந்து வந்தார். பின்னர், இவரது தாயார் நீண்டகாலம் நோய்வாய்ப் பட்டிருந்தபோதும், அவர் இறந்த பின்னரும், மைக்கலாஞ்சலோ, செட்டிக்னானோ (Settignano) என்னும் நகரத்தில் ஒரு கல் வெட்டுபவரின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த நகரத்தில் இவர் தந்தைக்கு ஒரு பளிங்குக்கல் அகழ்விடமும் (quarry), ஒரு சிறிய பண்ணையும் சொந்தமாக இருந்தது.

சிலகாலம் இலக்கணம் படித்த மைக்கலாஞ்சலோ, அவரது தந்தையாரின் விருப்பத்துக்கு மாறாக, டொமினிக்கோ கிர்லாண்டாயியோ (Domenico Ghirlandaio) என்பவரிடம் ஓவியத்துறையிலும், பெர்ட்டோல்டோ டி கியோவன்னி (Bertoldo di Giovanni) என்பவரிடம் சிற்பத்துறையிலும் பயிற்சி பெற்றார். 1488 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று, ஒரு பிரபல ஓவியரிடம் வேலை செய்வதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவரது திறமையால் கவரப்பட்ட இவரது பயிற்சியாளரான டொமெனிக்கோ, இவரை அந் நகரத்து ஆட்சியாளரான லொரென்சோ டி மெடிசிக்குச் (Lorenzo de' Medici) சிபாரிசு செய்தார். 1489 இல், தனது பயிற்சித் தலத்திலிருந்து விலகிய மைக்கலாஞ்சலோ, 1490 இலிருந்து 1492 வரை லொரென்சோவின் பாடசாலையில் படித்து வந்தார். இக்காலத்தில் அவர் பல பிரபலமானவர்களைச் சந்தித்தார். அவர்கள் மூலம் இவரது கலை பற்றிய எண்ணங்கள் மாற்றம் பெற்றதுடன், விரிவாக்கமும் பெற்றது.

மைக்கலாஞ்சலோவின் படைப்புத்திறன்[தொகு]

மைக்கலாஞ்சலோ, தான் ஓவியம் வரைவதற்கு முன்பயிற்சியாக சற்றேறக்குறைய பன்னிரண்டு ஆண்டு காலம் மனித உடற்கூறு இயல் (ANATOMY) குறித்து நன்குக் கற்றுத் தேர்ந்தார். அவரது ஓவியப் படைப்புகளை இக்கற்றல் அனுபவமும் நுட்பமும் உயிர்ப்புடையதாக ஆக்கின. இதன் காரணமாக, அவருடைய ஓவியம் மற்றும் சிற்பப் படைப்புகளில் மனித உடலின் எலும்பு அமைப்பு, உடல் தசையின் தோற்ற அமைப்பு, தோலின் வடிவமைப்பு முதலியவை துல்லியமான முறையில் உருவாகின. மேலும், ஓவியத்திற்கான வண்ணக் கலவைகளை மைக்கலாஞ்சலோவே உருவாக்கிக் கொண்டார். இந்த வேலைக்குத் தம்மிடம் பணிபுரியும் பணியாட்களையோ, தம்முடைய மாணாக்கர்களையோ அவர் அனுமதிப்பதை விரும்பவில்லை.[2]

படைப்புக்கள்[தொகு]

ரோமில் அவரது படைப்புக்கள்[தொகு]

மைக்கேலேஞ்சலோ தன் 21 வயதில் 1496-ஆம் ஆண்டு ஜூன் 25 இல் ரோம் வந்தடைந்தார். அதே ஆண்டு ஜூலை 4, அவர் கார்டினல் ராஃப்யேல் ரியாரியோவுக்காக ரோமானிய மது கடவுள் பாக்கஸின் சமஅளவு சிலைக்கான வேலையைத் தொடங்கினார். பின் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கார்டினலால் நிராகரிக்கப்பட்டது, பின்னர், வங்கி அதிபர் ஜாகோபொ காலி தனது தோட்ட சேகரிப்புக்காக அதை வாங்கிக்கொண்டார். நவம்பர் 1497 இல், பிரஞ்சு புனித தூதுவர் பியாடா, இயேசு உடல் மீது கன்னி மேரி வருத்தப்படுவதைக் காட்டும் ஒரு சிற்பம் செதுக்க அவரை நியமித்தார், மைக்கேலேஞ்சலோ அதன் முடிந்த நேரத்தில் அவர் வயது 24ஆக இருந்தது. இந்தச் சிற்பம் உலகின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மைக்கேலேஞ்சலோ ரோமில், சாண்டா மரியா டி லொரேட்டோ தேவாலயம் அருகே வசித்து வந்தார். இங்கே, அவர் வெட்டோரியாவா க்ளோனா என்ற கவிஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரின் லொகோன் மற்றும் அவரது மகன்கள் என்ற சிற்பம் தற்காலத்தில் வாடிகனில் உள்ளது.

பியட்டா சிலையின் சிறப்புகள்[தொகு]

பியட்டா (Pieta) என்னும் சொல்லுக்கு இத்தாலிய மொழியில் இரக்கம் என்பது பொருள் ஆகும்.[3]

இந்த பியட்டா சிலையானது சலவைக் கல் கொண்டு மைக்கலாஞ்சலோவால் உருவாக்கப்பட்டதாகும். இந்த பியட்டா சிலையின் தோற்றத்தில் அன்னை மேரியின் மடியில் இயேசு படுத்திருக்கும் காட்சி வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதில், அன்னை மேரியின் ஒரு கரம் இயேசுவின் உடலைத் தாங்கிப் பிடித்திருக்கும். அவரது பிறிதொரு கரமானது ஆகாயத்தை நோக்கித் திரும்பிக் காணப்படும். ஏஞ்சலோ அன்னை மேரியினை இங்கு இளம்பெண்ணாகச் சித்திரித்து இருப்பார். அச் சித்திரிப்பானது அன்னை மேரியின் கன்னித்தன்மையை உலகுக்கு உணர்த்துவதாகக் காணப்படுகின்றது. செயின்ட் பீட்டர் பஸிலிக்காவில் இப்பியட்டா சிலையானது பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த ஒரு சிலையில் மட்டுமே மைக்கலாஞ்சலோவின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.[3]

டேவிட் சிலை[தொகு]

மைக்கேலேஞ்சலோ 1499-1501 இல் புளோரன்ஸ் திரும்பினார்.1498 இல் குடியரசு எதிர்ப்பு மறுமலர்ச்சி பூசாரி மற்றும் புளோரன்ஸ் கிரோலாமோ தலைவர் சவோனரோலான் வீழ்ச்சி மற்றும் கோந்ஃபாலொனிரெ பைரோ சொடெரினியின்(gonfaloniere Piero Soderini) எழுச்சி பின்னர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது, எனவே புளோரன்ஸ் சுதந்திரச் சின்னமாக டேவிட்ஐ சித்தரித்து ஒரு மாபெரும் சிலையை அகோச்டினோ டி டுச்சியோ மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது ஒரு முடிக்கப்படாத திட்டத்தை முடிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டார். மைக்கேலேஞ்சலோ 1504 இல் டேவிட் சிலையை முடித்தார்.

சிஸ்டின் சேப்பல் மேற்கூரை[தொகு]

1505 இல், மைக்கேலேஞ்சலோ புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் இரண்டாம் ஜூலியஸால் மீண்டும் ரோமிற்கு அழைக்கப்பட்டார். அவருக்குப் போபின் கல்லறையை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. மைக்கேலேஞ்சலோ போபின் பல்வேறு பணிகளை நிறைவேற்றியதன் பொருட்டு கல்லறையில் அவரது பணி தொடர்ந்து குறுக்கீடுகளை சந்தித்தது. அந்த சிக்கல்கள் காரணமாக அவர் 40 ஆண்டுகள் கல்லறையில் பணியாற்றினார். இதே காலத்தில், மைக்கேலேஞ்சலோ சிஸ்டின் சேப்பல் மேற்கூரையை முடிக்க சுமார் நான்கு ஆண்டுகள் (1508-1512) பிடித்தன. மைக்கேலேஞ்சலோ முதலில் விண்மீன்கள் வானத்தின் பின்னணியில் பன்னிரண்டு அப்போஸ்தலர்களை வரைவதற்கு நியமித்தது, ஆனால் பின் மனிதனின் உருவாக்கம்,மற்றும் தீர்க்கதரிசிகள் வாக்குறுதிபடி வீழ்ச்சி, மற்றும் கிறிஸ்துவின் மரபுவழி குறிக்கும் ஆகியவற்றை வரையுமாறு ஒரு வேறுபட்ட மற்றும் மிகவும் சிக்கலான திட்டம் முன்மொழியப்பட்டது.கத்தோலிக்க திருச்சபை கொள்கையை மிகவும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக தேவாலயத்தில் உள்ள அலங்காரம் உள்ளதாக கூறப்படுகிறது. கூரை மீது மிகவும் பிரபலமான ஓவியங்களான ஏதேன் தோட்டத்தின் மத்தியில் ஆடம், ஆதாம் மற்றும் ஏவாள் உருவாக்குதல், பெரிய வெள்ளம், நபி ஏசாயா ஆகியவை உள்ளன. சாளரத்தை சுற்றி கிறிஸ்துவின் முன்னோர்கள் வரையப்பட்டிருந்தது.

கடைசி தீர்ப்பு ( 1534-41 )[தொகு]

சிஸ்டின் மண்டபத்தில் பலிபீடத்தின் சுவரில் கடைசி தீர்ப்பு சுவரோவியம் பால் III மைக்கேலேஞ்சலோ மூலமாக தொடங்கியது. மைக்கேலேஞ்சலோ 1534 முதல் அக்டோபர் 1541 வரை வரைதலில் ஈடுபட்டிருந்தனர். சிஸ்டின் மண்டபத்தில் பலிபீடத்தின் பின்னால் முழு சுவரிலும் பரவியிருக்கின்றது. கடைசி தீர்ப்பு மற்றும் கிறிஸ்து வெளிப்படுத்தல் சித்திரம் உள்ளது. அது முடிந்தவுடன், கிறிஸ்து மற்றும் கன்னி மேரி ஓவியம் நிர்வாண சித்தரிக்கப்பட்டிருந்தது புனிதத்துவத்தை பாழடிக்கிற குற்றமாக கருதப்படுகிறது, மைக்கேலேஞ்சலோ மரணத்திற்கு பிறகு அதன் பிறப்புறுப்புக்களை மறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு அசல் தணிக்கை நகல், நேபிள்ஸ் காபோடிமொண்டே அருங்காட்சியகத்தில் காண முடியும் .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Web Gallery of Art, image collection, virtual museum, searchable database of European fine arts (1100–1850)". www.wga.hu. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2008.
  2. "A GENTLEMAN IS A GENTLEMAN". பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2017.
  3. 3.0 3.1 "Re: [anbudan] Re: Art of the Day". பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கலாஞ்சலோ&oldid=3603424" இலிருந்து மீள்விக்கப்பட்டது