பரூக்சியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரூக்சியார்
முகலாயப் பேரரசின் பேரரசர்
ஆட்சி1713 - 1719
முன்னிருந்தவர்சகாந்தர் சா
பின்வந்தவர்ராபி உல்-தார்சத்
மனைவிகள்
  • நவாப் பக்ருன்நிசா பேகம் சாகிபா
  • இந்திரா கன்வார்
முழுப்பெயர்
அப்துல் முசாபர் முயினுத்தீன் முகம்மத் சா பரூக்-சியார் ஆலிம் அக்பர் சானி வாலா பாட்சா-இ-பாகர்-உ-பார்
அரச குலம்தைமூரிய வம்சம்
தந்தைஆசிம்-உசு-சான்
தாய்சாகிபா நிசுவான்

அப்துல் முசாபர் முயினுத்தீன் முகம்மத் சா பரூக்-சியார் ஆலிம் அக்பர் சானி வாலா பாட்சா-இ-பாகர்-உ-பார் [சாகித்-இ-மசுலும்] என்னும் முழுப்பெயர் கொண்ட பரூக்சியார் (Farrukhsiyar - ஆகத்து 20, 1685 - ஏப்ரல் 19, 1719) 1713 முதல்1719 வரை முகலாயப் பேரரசராக இருந்தார். அழகானவராகக் குறிப்பிடப்படும் இவர் மிகவும் பலமற்ற ஒரு ஆட்சியாளராக இருந்தார். ஆலோசகர்களின் போக்குக்கு இலகுவாக இசைந்து கொடுக்கக் கூடியவராக இருந்தார். இவர் சுதந்திரமாக ஆட்சி செய்யக்கூடிய திறமையும், இயல்பும் அற்றவராக இருந்தார். இவரது காலகட்டத்தில் சையத் சகோதரர்களின் பலம் அதிகரித்து வந்தது. முகலாயர் ஆட்சி என்ற முகமூடிக்குப் பின்னால் இவர்களே நாட்டின் உண்மையான ஆட்சியாளர்களாக இருந்தனர்.

வரலாறு[தொகு]

பரூக்சியார், முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் சாவின் மகனான ஆசிம் உசு சானின் இரண்டாவது மகனாவார்.இவர் தக்காணத்தில் உள்ள ஔரங்கபாத்தில் 1683 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் தேதி பிறந்தார். இவரது தாய், காசுமீரில் முகலாய சுபேதாராக இருந்த நவாப் சைசுத்தா கானின் சகோதரி சாகிபா நிசுவான் ஆவார். பரூக்சியார், டிசம்பர் 1715 ஆம் ஆண்டுக்கு முன், காசுமீரத்துப் பிரபுவான சாதாத் கான் பகதூர் என்பவரின் மகளான பக்ருன்நிசா பேகம் சாகிபா என்பவரை மணந்து கொண்டார். பின்னர் சோத்பூரின் மகாராசா அசித்சிங்கின் மகள் இந்திரா கன்வாரையும் திருமணம் செய்தார். மூன்றாவதாக இன்னொரு பெண்ணையும் இவர் மணம் புரிந்ததாகத் தெரிகிறது.

ஆட்சிக்காலம்[தொகு]

1713 சனவரி 10 ஆம் தேதி ஆக்ராவுக்கு அருகில் உள்ள சமுகர் என்னும் இடத்தில் அப்போதைய முகலாயப் பேரரசர் சகாந்தர் சா தோற்கடிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பரூக்சியார் ஆட்சியில் அமர்வதற்கு சையத் சகோதரர்கள் உதவினர். 1713 சனவரி 11 ஆம் நாள் தனது 30 ஆவது வயதில் பரூக்சியார் ஆட்சிப்பொறுப்பு ஏற்றார். ஆனாலும், ஆட்சியதிகாரம் சையத் சகோதரர்கள் கையிலேயே இருந்தது.

வணிகச் சலுகை[தொகு]

பரூக்சியாரின் காலத்திலேயே பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி முழு வங்காளத்திலும் வரியற்ற வணிகம் செய்வதற்கான உரிமையை ஆண்டொன்றுக்கு மூவாயிரம் ரூபாயைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டது. கம்பனியின் மருத்துவர் வில்லியம் அமில்ட்டன், பரூக்சியாருக்கு ஏற்பட்ட நோயொன்றைக் குணப்படுத்தியதனால் இவ்வாறு குறைந்த விலைக்கு இச்சலுகை வழங்கப்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர். சூரத்தில் இருந்த முகலாயர்களின் கடற்படையைத் தாக்கப்போவதாக வதந்தியைக் கிளப்பிவிட்டு இந்தச் சலுகையைப் பெற்றதாக வேறு சிலர் கூறுகின்றனர்.

இறப்பு[தொகு]

ஆறு ஆண்டுகளுக்குச் சற்றுக் கூடிய காலமே பதவியில் இருந்த பரூக்சியார், சையத் சகோதரர்களால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்டுப் பசியால் வாடினார். 1719 பெப்ரவரி 28 ஆம் நாள், சையத் சகோதரர்களின் ஆணையின்படி பரூக்சியாரின் கண்கள் ஊசியால் குத்திக் குருடாக்கப்பட்டதுடன், 1719 ஏப்ரல் 27/28 இரவில் அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார். பின்னர் பரூக்சியாரின் ஒன்றுவிட்ட சகோதரனான ராபி-உல்-தார்சத் என்பவர் பேரரசன் ஆக்கப்பட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரூக்சியார்&oldid=2715751" இலிருந்து மீள்விக்கப்பட்டது