பங்கஜ் உதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கஜ் உதாஸ்
பங்கஜ் உதாஸ்
பின்னணித் தகவல்கள்
பிறப்புஜெட்பூர், குசராத்து, இந்தியா
தொழில்(கள்)பாடகர்
இணையதளம்www.pankajudhas.com

பங்கஜ் உதாஸ், (குசராத்தி: પંકજ ઉધાસ) இந்தியாவைச் சேர்ந்த பாடகர். ஜக்ஜித் சிங், தலத் அஜிஸ் போன்ற கஜல் பாடகர்களைப் போல் இவரும் கஜல் பாடல்களை இசையுலகில் பிரதானப்படுத்தி பிரபலமடைந்தவர்.

1986 இல் வெளிவந்த ‘நாம்’ இந்தித் திரைப்படத்தில் அவர் பாடிய ‘சிட்டி ஆயி ஹை’ என்ற பாடல் மிகப்பிரபலமடைந்து இவருக்கு மிகுந்த புகழைப் பெற்றுத்தந்தது. அதைத்தொடர்ந்து, பல திரைப்படங்களுக்கு இவர் பின்னணி பாடியுள்ளார். பல இசைத்தொகுதிகளை (ஆல்பம்) வெளியிட்டுள்ள இவர் சிறந்த கஜல் பாடகராக உலகளவில் அறியப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இளவயது வாழ்க்கை[தொகு]

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகருக்கு அருகில் உள்ள ‘ஜேட்பூர்’ என்னும் ஊரில் உள்ள ஒரு குஜராத்திக் குடும்பத்தில் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உண்டு. பெற்றோர் பெயர் : கேஷுபாய் உதாஸ் மற்றும் ஜித்துபென் உதாஸ். பங்கஜ் உதாஸின் மூத்த சகோதரர் ‘மன்ஹர் உதாஸ்’ பாலிவுட் திரைப்படங்களில் பின்னணி பாடகர். இரண்டாவது சகோதரர் ‘நிர்மல் உதாஸ்’, நன்கறியப்பட்ட கஜல் பாடகரும், குடும்பத்தில் பாடகராக முதலில் அறிமுகமானவரும் ஆவார். குடும்பம் மும்பை சென்ற பிறகு, பங்கஜ் அங்குள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார்.

இசைப்பயணம்[தொகு]

மூத்த அண்ணன் மன்ஹர், மேடைக்கச்சேரி செய்து வந்தது, பங்கஜ் இசைத்துறையில் நுழைவதற்கு ஏதுவாக அமைந்தது. சீன-இந்தியப் போரின்போது, அவர் பாடிய ‘ஆயே மேரே வதன் கே லோகோன்’ என்ற பாடல் மூலம் முதன்முதலாக மேடையில் அறிமுகமானார்.

பின்னர் ராஜ்கோட்டில் உள்ள ‘சங்கீத் நாட்டிய அகாடெமி’யில் தபேலா வாசிக்கும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். இளமறிவியல் (B.Sc) பட்டம் பெற்ற பிறகு, மாஸ்டர் நவ்ரங் என்பவரிடம் சாஸ்த்ரிய சங்கீதம் (வாய்ப்பாட்டு) கற்றுக்கொண்டார்.

‘காம்னா’ திரைப்படத்தில் பங்கஜ் உதாஸ் தனியாக பாடிய ஒரு பாடல்தான் அவருடைய முதல் திரைப்பாடல் ஆகும். அந்த திரைப்பாடலை எழுதியவர் நஃஷ் லைல்புரி; இசையமைத்தவர், உஷா கன்னா. அந்த திரைப்படம் தோல்வியடைந்த போதும் பாடல் அவருக்குப் புகழைத் தந்தது. பிறகு கஜல்கள் பக்கம் அவர் கவனம் திரும்பியது. கஜல் பாடல்கள் மேல் ஆர்வம் பெருக, அதற்காக உருது மொழியைக் கற்றார்.

கனடாவிலும், அமெரிக்காவிலும் பத்து மாதங்கள் கஜல் கச்சேரிகள் செய்து பின் இந்தியா திரும்பினார். அவருடைய முதல் கஜல் பாடல் தொகுதி (ஆல்பம்) ‘ஆஹத்’ 1980 இல் வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து உதாஸ், 2011 வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட இசைத்தொகுதிகளையும் நூற்றுக்கும் மேற்பட்ட இசைத்தொகுப்புக்களையும் (compilation albums) வெளியிட்டுள்ளார்.

1986 இல் ‘நாம்’ (இந்தி) திரைப்படத்தில் பாடியதில் புகழடைந்தார். 1990 இல் ‘காயல்’ திரைப்படத்துக்காக லதா மங்கேஷ்கருடன் இணைந்து ஒரு இனிமையான டூயட் பாடலைப் (மஹியா தேரி கசம்..) பாடினார். இப்பாடல் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமடைந்தது. 1994 இல் ‘மொஹரா’ திரைபடத்துக்காக பெயர் பெற்ற ‘நா கஜ்ரே கி தார்..’ என்ற பாடலைப் பாடினார்.

பின்னணிப் பாடகராக இருந்த அதேவேளை, ‘சாஜன்’, ‘யே தில் லகி’, ‘ஃபிர் தேரி கஹானி யாத் ஆயி’ போன்ற படங்களில் திரையிலும் தோன்றியுள்ளார். ‘மியூசிக் இண்டியா’ இவரது இசைத்தொகுதியான ‘ஷகுஃப்தா’ வை 1987 இல் இந்தியாவிலேயே முதன்முதலாக குறுந்தகட்டில் (சி.டி) வெளியிட்டது

பின்பு ‘சோனி’ தொலைக்காட்சியில், திறமை தேடும் நிகழ்ச்சியான ‘ஆதப் ஆர்ஸ் ஹை’ என்னும் நிகழ்ச்சியை பங்கஜ் நடத்தினார். முதன்முதலாக ஒரு மராத்திய திரைப்படத்திலும் அவர் தோன்றியிருக்கிறார்.

குடும்பம்[தொகு]

பங்கஜ் ஃபரீதா என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு ‘நயாப்’, ‘ரேவா’ என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

Shabad-[1]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கஜ்_உதாஸ்&oldid=3779360" இலிருந்து மீள்விக்கப்பட்டது