டுயோங் தூ யோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டுயோங் தூ யோங்
டுயோங் தூ யோங், 2014
டுயோங் தூ யோங், 2014
பிறப்புடுயோங் தூ யோங்
1947
தாய் பின், வியட்நாம்
தொழில்எழுத்தாளர்
மொழிவியட்நாமிய மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு
காலம்1985-தற்பொழுதும்
இலக்கிய இயக்கம்மாற்றுக்கருத்தாளர் (அதிருப்தியாளர்)
குறிப்பிடத்தக்க படைப்புகள்பார்வையற்றவர்களின் சொர்க்கம்

டுயோங் தூ யோங் (Dương Thu Hương, பிறப்பு 1947) ஒரு வியட்நாமிய எழுத்தாளரும், அரசியல் மாற்றுக்கருத்தாளரும் ஆவார். வியட்நாமியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான இவர், இவரது படைப்புகளுக்காகவும், வியட்நாமிய அரசில் நிலவிய ஊழலை வெளிப்படையாக விமர்சித்ததற்காகவும் 1989 இல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்படவும், சில காலம் சிறைவாசம் அனுபவிக்கவும் நேரிட்டது.

இளமை வாழ்க்கை[தொகு]

வடக்கு வியட்நாமில் தாய் பின் மாநிலத்தில் 1947 இல் பிறந்த டுயோங் வியட்நாம் போர் உச்சமடைந்த கட்டத்தில் வயதுக்கு வந்த இளையோரில் ஒருவராவார். வியட்நாமியப் பண்பாட்டு அமைச்சகத்தின் கலைக்கல்லூரியில் மாணவியாக இருக்கும்போது தமது 20 ஆம் அகவையில் "அமெரிக்கர்களுக்கு எதிரான போரில்" களத்தில் முன்நின்று பணியாற்ற இளம்பெண்கள் படையில் தன்னார்வலராகச் சேர்ந்தார். போரின்போது கடுமையாகக் குண்டுவீச்சுக்கு ஆளான பைன் டிரீ தீன் பகுதியின் அடர்காடுகளிலும் சுரங்கங்களிலும் அடுத்த ஏழு ஆண்டுகளை டுயோங் கழித்தார்.

"குண்டுகளைவிடச் சத்தமாகப் பாடுவது", வட வியட்நாமியப் படைகளுக்காக நாடக நிகழ்ச்சிகளை நடத்துவது ஆகியவற்றோடு, காயமடைந்தவர்களைக் கவனித்துக்கொள்வது, இறந்தவர்களை அடக்கம் செய்வது, சிப்பாய்களுடன் இணைந்து பணியாற்றுவது ஆகியவையும் அவரது பணிகளாக இருந்தன. அந்தக் குழுவில் இருந்த நாற்பது தன்னார்வலர்களுள் உயிரோடு எஞ்சிய மூவரில் இவரும் ஒருவர். 1979 இல் வியட்நாமைச் சீனா தாக்கியபோது நிகழ்ந்த குறுகிய காலமே நீடித்த சீன வியட்நாமியப் போரிலும் போர்முனையில் பணியாற்றினார்.

ஆனால், 1975 இல் நடந்த வியட்நாமிய மறு ஒன்றிணைப்பிற்குப் பிறகு, பொதுவுடைமைக் கட்சியால் உருவாக்கப்பட்ட ஒடுக்குமுறைச் சூழலுக்கு எதிராக வெளிப்படையாகக் குரலெழுப்பத் துவங்கினார். வடக்கோடு ஒப்பிடும்போது தெற்கு வியட்நாம் இருந்த மோசமான நிலை இவ்வாறு செயல்பட அவரைத் தூண்டியது.

படைப்புகள்[தொகு]

அவரது துவக்க கால நாவல்களான, குழந்தைப் பருவத்துப் பயணம் (Journey in Childhood, 1985), காட்சிப்பிழைகளைக் கடந்து" (Beyond Illusions, 1987),[1] பார்வையற்றவர்களின் சொர்க்கம்" (Paradise of the Blind, 1988)[2] தொலைந்த வாழ்க்கை (The Lost Life, 1989) ஆகியவை அவரது தாய்நாடான வியட்நாமில் வெளியிடப்பட்டு நன்கு விற்பனையான நிலையில் தடைசெய்யப்பட்டன. பார்வையற்றவர்களின் சொர்க்கமே ஆங்கில மொழியில் அமெரிக்காவில் வெளியான முதல் வியட்நாமிய நாவலாகும்.[3] அவரது அடுத்த மூன்று நாவல்களான பெயரற்ற ஒரு நாவல் (Novel Without a Name, 1991),[4] தூய இளவேனில் ஒன்றின் நினைவுகள் (Memories of a Pure Spring, 2000),[5] ஆளற்ற நிலம் (No Man's Land, 2002)[6] — ஆகியவை அமெரிக்காவில் வெளியாகவில்லை.

1994 இல் அவருக்குப் பிரெஞ்சு அரசாங்கம் கலை, இலக்கியத்திற்கான செவாலியே பட்டத்தை வழங்கியது.[7] டுயோங் பல சிறுகதைகளையும், திரைக்கதைகளையும் எழுதியுள்ளார். இளவேனில் நினைவலைகள் (Reflections of Spring) என்ற கதை லின் தின் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு இரவு, மீண்டும்: வியட்நாமின் தற்காலச் சிறுகதைகள் (Night, Again: Contemporary Fiction from Vietnam) என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ஆளற்ற நிலம் (பிரெஞ்சில் Terre des oublis), பெமினா 2006 பரிசுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றதோடு, 2007 இல் எல் (Elle) இதழின் பரிசினையும் வென்றது. .

2006 இல் டுயோங் பாரிசுக்குப் புலம்பெயர்ந்தார். ஜனவரி 2009 இல் அவரது சிகரம் (பிரெஞ்சில் Au zénith) நாவல் வெளியானது.

விருதுகள்[தொகு]

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

  • 2005 ஆக்ஸ்ஃபாம் நோவிப்/பென் விருது[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Beyond Illusions Paperback – January 3, 2003
  2. Paradise of the Blind: A novel Paperback – July 1, 1994
  3. VIETNAMESE
  4. Novel without a Name Paperback – June 1, 1996
  5. [1] Paperback – January 1, 2001
  6. No Man's Land Hardcover – April 13, 2005
  7. Duong Thu Huong at PEN
  8. Jan Baeke (December 2005). "Novib / PEN Awards for persecuted writers". The Power of Culture. பார்க்கப்பட்ட நாள் September 10, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டுயோங்_தூ_யோங்&oldid=3368829" இலிருந்து மீள்விக்கப்பட்டது