ஆர்தர் காட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் ஆர்தர் காட்டன்
சர் ஆர்தர் காட்டன்
பிறப்பு15 மே 1803
காம்பர்மேர், செஷயர், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு24 சூலை 1899(1899-07-24) (அகவை 96)
டோர்கிங், சுரே, இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
சார்பு ஐக்கிய இராச்சியம்
சேவை/கிளைமெட்ராஸ் படை
பிரித்தானிய படை
தரம்தளபதி
போர்கள்/யுத்தங்கள்முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்

சர் ஆர்தர் காட்டன் KCSI (ஆங்கிலம்: Sir Arthur Thomas Cotton, மே 15, 1803 – ஜூலை 24, 1899) என்பவர் பிரித்தானிய பொறியாளர் மற்றும் படைத்தளபதி ஆவார். இவர் தனது வாழ்க்கை முழுவதையும் இந்தியாவில் நீர்ப்பாசன வசதி செய்துதரவும், கால்வாய்களை அமைப்பதிலும் அர்ப்பணித்தார். இவர் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுகிறார்.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

சர் ஆர்தர் காட்டன் இங்கிலாந்து நாட்டில் செஸ் ஷைரில் ஹென்றி கால்வெலி காட்டனுக்கு 1803 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி பத்தாவது மகனாக பிறந்தார். பொறியியலில் ஆர்வம் கொண்ட அவர் தனது 15 வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் இணைந்தார்.

1821 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணி ஏற்றார். பின்னர் 1822 ஆம் ஆண்டு ஏரி பராமரிப்பு துறையில் கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு உதவியாளராக பணி நியமனம் செய்யபட்டார். இதன் மூலம் கோவை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களில் உள்ள ஏரி, கண்மாய், குளங்களைப் பராமரித்து நீர் விநியோகம் செய்யும் பணி வாய்ப்பு காட்டனுக்கு கிடைத்தது.

தொடர்ந்து பல பதவிகளை வகித்த அவர் மெட்ராஸ் மாகாண பொதுப் பணித் துறையின் தலைமை பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றார். இதனிடையே, 1841 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அவர் எலிசபெத் லியர்மந்த் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1899 ஆம் ஆண்டு ஜூலை 14 -ம் தேதி தனது 96 -வது வயதில் காலமானார்.

கல்லணைக்கு ஆர்தரின் பங்களிப்புகள்[தொகு]

1829 இல் காவிரி பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக நியமித்தது ஆங்கிலேய அரசு. மணல் மேடுகளால் நீரோட்டம் தடைப்பட்டு பயனற்று இருந்த கல்லணையைத் தைரியமாக சிறு பகுதியைப் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறன் மற்றும் பாசன மேலாண்மையை உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு 'கிரான்ட் அணைகட்' என்ற பெயரையும் சூட்டினார்.

ஆழம் காண முடியாத மணற்படுகையில் எவ்வாறு அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தைத் தமிழர்களிடம் அறிந்து கொண்டோம். இதை கொண்டு பாலங்களும், அணைக்கட்டுகளும் போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம். எனவே, இந்த மகத்தான சாதனையைப் புரிந்த அந்நாளைய மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.[2][3]

மேலணை மற்றும் கீழணைக் கட்டுமானம்[தொகு]

கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு காவிரியும், கொள்ளிடமும் பிரியும் இடமான முக்கொம்புவிற்கு வரும் தண்ணீர் நேராகக் கடலில் கலந்து விரயமாகிக் கொண்டிருந்ததைத் தடுக்க கொள்ளிடத்தில் தடுப்பணையைக் (மேலணை) கட்டினர். இதன் மூலம், காவிரி நீர் கொள்ளிடத்தில் செல்வது தடுக்கப்பட்டது. மேலும், வெள்ளக் காலத்தில் உபரி நீரைக் கொள்ளிடத்தில் விடுவதற்கு அந்த அணை பயன்படுகிறது.

இதனை அடுத்து கொள்ளிடம் ஆற்றில் 1840 ல் கும்பகோணத்திற்கு அருகில் அணைக்கரை எனும் இடத்தில் கீழணையை முழுமையாகக் கட்டியதும் இவரே ஆவார். இதனால் தண்ணீர் வீணாகி கடலில் சென்று கலப்பதைத் தடுத்து வீராணம் ஏரிக்குக் சென்று அங்கு பல்லாயிரகணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேட்டூர் அணைக்கு முயற்சி[தொகு]

வெண்ணாறு, வெட்டாறு முதலியவற்றில் தண்ணீர் முழவதும் பாசனத்துக்கு பயன்படும் வகையில் திட்டங்களை வகுத்த காட்டன், அடுத்ததாக மேட்டூரில் அணை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். இதற்கான அனுமதி பெற சர் ஆர்தர் காட்டன் மைசூர் சமஸ்தானத்துக்கு 1835 ல் சென்றார் ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் அம்முயற்சி தடைபட்டது. (அவரது காலத்துக்கு பிறகு 1925 ஆம் ஆண்டு அவரது கோரிக்கை செயல்வடிவம் பெற்று 9 ஆண்டுகால கட்டுமானத்துக்கு பின் 1934 ல் மேட்டூரில் அணை கட்டி முடிக்கப்பட்டது.

கிருஷ்ணா, கோதவரி நதிகளில் அணைகள்[தொகு]

தமிழகத்தை போல் ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா நதியில் விஜயவாடாவிலும், கோதாவரி நதியில் தவளேஸ்வரத்திலும் அணைகளைக் கட்டினார். ஆந்திரா பூமியை செல்வம் கொழிக்கும் மாநிலமாக மாற்றியவர் சர் ஆர்தர் காட்டன் என்றால் மிகை ஆகாது. கோதாவரியில் அணை கட்ட 1878 ல் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை முன் காட்டன் ஆஜராகி அணையின் முக்கியதுவத்தை விளக்க வேண்டிவந்தது[4]. அதே போல் இந்தியாவின் மாநில செயலருக்கும் ஆர்தர் ஒரு கடிதத்தை எழுதினார். அதன் இறுதி வரிகள் இவை

"மை லார்ட், கோதவரி நதியில் வெள்ள காலத்தில் ஒரு நாளில் ஓடும் நீரின் அளவு, லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் ஒரு வருடம் ஓடும் நீருக்கு சமம் "

இவரது கோரிக்கை பின்னர் ஏற்றுகொள்ளப்பட்டு கோதாவரி அணையை வெற்றிகரமாக கட்டிமுடித்தார்.

சிலைகள்[தொகு]

ஐதராபாத்தில் ஆர்தர் காட்டனின் சிலை

ஆந்திராவையும், தமிழகத்தையும் வளமான பகுதிகளாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த காட்டனுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆயிரக்கணக்கான சிலைகளும் தமிழகத்தில் கல்லணையில் ஒரு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_காட்டன்&oldid=3924568" இலிருந்து மீள்விக்கப்பட்டது