Wikipedia:இன்றைய சிறப்புப் படம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- மார்ச் 21, 2008
|
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் இடிபாடுகளுக்கிடையில் தீயணைப்பு வீரரொருவர் உதவி கேட்கும் காட்சி. அல் கைடாவுடன் தொடர்புடைய இசுலாமியத் தீவிரவாதிகள் பொதுமக்கள் போக்குவரத்துக்கான நான்கு விமானங்களை செல்வழி கடத்தி அவற்றில் இரண்டை உலக வர்த்தக மையம் மீது மோதினர். மூன்றாவது விமானம் பென்டகன் கட்டிடம் மீது மோதியதோடு நான்காவது பென்சில்வேனியாவில் வீழ்ந்து நொறுங்கியது. இத்தாக்குதல்களின் போது ஐக்கிய அமெரிக்காவின் உலகவர்த்தக மையத்தின் இரண்டு கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன; பென்டகன் கட்டிடமும் சேதத்துக்குள்ளானது. விமானங்களில் இருந்த பயணிகள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள், தீயணைப்புப் படையினர் என கடத்தல்காரர்கள் 19 பேர் நீங்கலாக 80 நாடுகளைச் சேர்ந்த 2,998 பேர் கொல்லப்பட்டனர்.
|
- மார்ச் 7, 2008
|
இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாநகரத்தில் அமைந்துள்ள பலசரக்குக் கடை. வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை கவரும் வகையில் பலசரக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பல்வகை சுவையூட்டும் நறுமணமூட்டும் பலசரக்குகள் தமிழர் சமையல் உட்பட பல இனங்களின் சமையல்களில் பயன்படுத்தப்படுகிறது. 1499 ஆம் ஆண்டு வாஸ்கோ ட காமாவின் இந்தியப் பயணத்தின் முக்கிய நோக்கமாக தெற்காசியாவில் உற்பத்தி செய்த பலசரக்குகளின் வியாபாரத்தை தம்வசப்படுத்திக் கொள்வது அமைந்திருந்தது. இவ்வாறு பலசரக்குகளுக்காக தெற்காசியா வந்த ஐரோப்பிய நாடுகள் பின்னாளில் அப்பகுதிகளை தமது நாடுகளின் அடிமை நாடுகளாக மாற்றிக் கொண்டன. 2004 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தகவல்களின் படி உலக பலசரக்கு உற்பத்தியில் 86% இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
|
- பெப்ரவரி 29, 2008
|
இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புள்ளை பொற்கோவிலின் அடிவாரத்தில் ஏ 9 பெருந்தெருவையொட்டி அமைந்துள்ள புத்தரின் சிலையும் பௌத்த நூதனசாலை கட்டிடமும். அமர்ந்த நிலையில் பொற்கோவில் கட்டிடத்தின் மேல் அமைந்திருக்கும் கௌதம புத்தரின் சிலை 2001 ஆண்டு அமைக்கப்பட்டது. உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள மலையுச்சியில் இருக்கும் கி.மு. 700 காலத்தில் இருந்து பாவனையிலிருக்கும் குகைகளை பார்க்கச் செல்லும் உல்லாசப்பிரயாணிகளை கவரும் விதத்தில் இது அமைக்கப்பட்டது.
|
- பெப்ரவரி 22, 2008
|
சுசி யப்பானிய பாரம்பரிய உணவுவகைகளில் ஒன்றாகும். இது வினாகிரி இட்டு சமைக்கப்பட்ட சோற்று உருண்டையின் மேலாக மெல்லியதாக வெட்டப்பட்ட மீன், கணவாய், குதிரை இறைச்சி, மீன் முட்டை, சமைக்கப்பட்ட கோழி முட்டை போன்றவை வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சுஷி தயாரிப்பின் போது மேல்-படையாக கொள்ளப்படுபவை பெரும்பாலும் சமைக்கப்படாமல் இருக்கும், சில வேளைகளில் அவை சமைக்கப்படாததாகவோ அல்லது உப்பூட்டப் பட்டவையாகவோ இருக்கலாம்.
|
- பெப்ரவரி 15, 2008
|
ஆனையிறவு இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். யாழ்ப்பாணக் குடாநாட்டை வன்னிப் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. 1760 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் முதலாவதாக இங்கே பாதுகாப்புத் தளம் ஒன்றை அமைத்தனர். 1952 இல் இலங்கை இராணுவம் இங்கே தமது தளத்தை அமைத்ததுக் கொண்டது. இதன் அமைவுக் காரணமாக ஈழப் போரில் பல கடுமையான சண்டைகள் இங்கே நடைப்பெற்றுள்ளன. இத்தளத்தைக் கைப்பற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் 1991 முதல் போரில் ஈடுபட்டு இறுதியாக 2000 ஆம் ஆண்டு இத்தளத்தைக் கைப்பற்றினர்.
|
- ஜனவரி 31, 2008
|
வசுதாரா என்பது வளமைக்கும் செழிப்புக்கும் உரிய ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். இவரை செல்வத்தின் அதிபதியான குபேரனின் இணையாக கருதுவர். வசுதாரா நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்றவர். அங்கு அனைத்து இல்லங்களிலும் வசுதாரா வழிப்படப்படுகிறார். இவர் ரிக்-வேதத்தில் குறிப்பிடப்படும் வசுக்களுள் ஒருவர். |
- டிசம்பர் 11, 2007
|
மதுபானி ஓவியப் பாணி அல்லது மிதிலா ஓவியப் பாணி என்பது, இந்தியாவின், பீஹார் பகுதியில் நடைமுறையில் உள்ள ஒரு ஓவியப் பாணி ஆகும். மதுபானி ஓவியப் பாணி மிகவும் பழமையானது. இதன் தோற்றம் பற்றித் தெரியவில்லை. மரபுவழிக் கதைகள் இதை, இராமாயண காலத்துடன் தொடர்பு படுத்துகின்றன. ஜனகரின் மகளான சீதையின், திருமணத்துக்காக, ஒவியர்களை ஜனகர் அமர்த்தியதாக அவை கூறுகின்றன. |
- டிசம்பர் 04, 2007
|
உணர்வுப்பதிவு, சூரியோதயம் (Impression, soleil levant) என்பது குளோட் மொனெட் (Claude Monet) என்பவர் வரைந்த ஓவியமொன்றுக்கு இடப்பட்ட பெயராகும். இந்தப் பெயரை ஒட்டியே 19 ஆம் நூற்றாண்டின் ஓவிய இயக்கம் ஒன்றுக்கு உணர்வுப்பதிவுவாத இயக்கம் (Impressionist Movement) என்ற பெயர் ஏற்பட்டது. 1872 எனத் திகதியிடப்பட்டிருந்தாலும், 1873 இல் வரையப்பட்டதாகக் கருதப்படும் இவ்வோவியம், லெ ஹாவ்ரே துறைமுகத்தைக் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டது. எனினும் இதன் தளர்வான தூரிகைக் கோடுகள் கருப்பொருளைத் துல்லியமாகக் காட்டாமல், அதனைக் கோடிகாட்டுகின்ற வகையில் அமைந்துள்ளன. |
- நவம்பர் 19, 2007
|
அடிமன வெளிப்பாட்டுவாதம் (Surrealism) என்பது, ஒரு பண்பாட்டு, சமூக மற்றும் இலக்கிய இயக்கம் ஆகும். இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேலோங்கியிருந்தது. மனித மனத்தை விடுதலை செய்வதன்மூலம், தனிமனிதனையும், சமூகத்தையும் விடுதலை செய்யலாம் என்று இதன் சார்பாளர்கள் நம்பினர். இதை மனிதனது அடிமனத்தின் கற்பனா சக்தியைச் செயற்படுத்துவதன் மூலம் அடைய முடியும் என்று அடிமன வெளிப்பாட்டுவாதம் வலியுறுத்தியது. இயல்புநிலையிலும் மெய்மையான இந்த நிலை, தனிமனித, பண்பாட்டு மற்றும் சமூகப் புரட்சியையும், கட்டற்ற வாழ்க்கையையும், கவிதை, இலக்கியம் ஆகியவற்றையும் ஏற்படுத்தும் என்றும் இக் கொள்கையினர் நம்பினர். இந்தக் கருத்துருவை முதன் முதலில் முன்வைத்த அண்ட்ரே பிரெட்டன் (André Breton) என்பவர், இவ்வாறாக வெளிப்படுத்தப்பட்ட உண்மை அழகியல் சார்ந்தது என்றார். அடிமன வெளிப்பாடு என்ற இந்தக் கருத்துருவைப் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களும் பயன் படுத்தியபோது இது அடிமன வெளிப்பாட்டுவாத இயக்கம் எனப்பட்டது. |
- நவம்பர் 19, 2007
|
கூட்டமைவு VII (Composition VII) என்பது, ரஷ்யாவில் பிறந்த, புகழ் பெற்ற ஓவியரான வசிலி கண்டின்ஸ்கி வரைந்த ஓவியம் ஆகும். 1913 ஆம் ஆண்டில் வரையப்பட்ட இவ்வோவியம், முதலாம் உலகப் போருக்கு முற்பட்ட, கண்டின்ஸ்கியின் சாதனைகளின் உச்சக்கட்டம் எனக் கருதப்படுகின்றது. கண்டின்ஸ்கி இந்த ஓவியத்தை நேரடியாக வரையத் தொடங்கவில்லை. இதனை வரையுமுன், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம் போன்றவற்றைப் பயன்படுத்தி முப்பது ஓவியங்களைச் சோதனை நிலையில், வரைந்துள்ளார். இவருடைய இந்தச் சோதனைக் கட்டத்தின் பின் நான்கு நாட்களுக்கும் குறைவான காலத்தில் இறுதி ஓவியத்தை வரைந்து முடித்தார். |
- நவம்பர் 05, 2007
|
புத்தியல் ஓவியம் (Modern art) அல்லது நவீன ஓவியம் என்பது, 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஏறத்தாழ 1970கள் வரை உருவான பலவகையான ஓவியப் பாணிகளைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர் ஆகும். புத்தியல் ஓவியம், அக்காலத்திய ஓவியம் தொடர்பான புதிய அணுகுமுறையைக் குறித்தது. இந்த அணுகுமுறையில், பொருட்கள், அவை இருப்பது போன்றே வரையப்பட வேண்டும் என்பதில்லை. நிழற்படத் தொழில் நுட்பத்தில் தோற்றம், ஓவியத்துக்கு இருந்த அந்தத் தேவையை இல்லாமல் ஆக்கிவிட்டது. அதனால் கலைஞர்கள், இயற்கை, பொருட்கள், கலையின் செயற்பாடுகள், ஆகியவை தொடர்பாகப் புதிய சிந்தனைகளுடன், கலையை நோக்குவதற்கான புதிய முறைகள் பற்றிய சோதனைகளில் ஈடுபட்டார்கள். இது, கலையைப் பண்பியற் தன்மைக்கு (abstraction) நெருக்கமாகக் கொண்டு வந்தது. |
- அக்டோபர் 29, 2007
|
தற்காலத்தில் பண்பியல் ஓவியம் (Abstract art) என்பது, உலகப் பொருட்களை வரையாமல், நிறங்களையும், வடிவங்களையும் பயன்படுத்தி வரையப்படும் ஓவியமாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இயல்பான உருவங்களை எளிமையான வடிவில், அவற்றின் உலக இயல்பு குறைக்கப்பட்ட நிலையில் வரைவதையே குறித்தது. இந்த ஓவியங்கள் உலகப் பொருட்களை நேரடியாக அல்லாமல் மறைமுகமாக வெளிக்காட்டின. அக்காலத்தைச் சேர்ந்த கியூபிசம் மற்றும் இது போன்ற பிற கலை இயக்கங்கள் சார்ந்த ஓவியங்கள் இந்த அடிப்படையிலேயே அமைந்திருந்தன. இவ்வாறான நுட்பம், உலகப் பொருட்களின், வெளித் தோற்றத்துக்குப் புலப்படாத, உள்ளார்ந்த பண்புகளை ஓவியத்தில் கொண்டு வருவதற்கு உதவியது. |
- அக்டோபர் 21, 2007
|
முகலாய ஓவியம் என்பது, 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம், 19 ஆம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் இருந்த முகலாயப் பேரரசுக் காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு ஓவியப் பாணியாகும். இது பொதுவாகப் புத்தகங்களிலும், சிறு அளவினதாகவுமே வரையப்பட்டன. இரண்டாவது முகலாயப் பேரரசனான ஹுமாயூன், தப்ரீசில் இருந்தபோது, அவனுக்குப் பாரசீக ஓவியங்கள் அறிமுகமானது. ஹுமாயூன் இந்தியா திரும்பியபோது, பாரசீக ஓவியப் பாணியில் திறமை பெற்ற இரண்டு ஓவியர்களையும் அழைத்து வந்தான். இவர்கள் மூலம் இந்தியாவுக்கு அறிமுகமான இப் பாணி, பின்னர் உள்ளூர்ப் பாணிகளுடனும் கலந்து முகலாயப் பாணி எனப்பட்ட புதிய பாணியொன்றை உருவாக்கியது. |
- அக்டோபர் 14, 2007
|
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் அஜந்தா எனும் ஊரில் உள்ள குகைகளில் இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்களே அஜந்தா ஓவியங்களாகும். இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரையப்பட்டுள்ளன. பௌத்த மதக் கொள்கைகளை முதன்மைபடுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. |
- அக்டோபர் 08, 2007
|
தஞ்சாவூர் ஓவியப் பாணி என்பது தஞ்சை நாயக்கர் காலம் தொட்டு, தஞ்சை மராட்டியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களினூடாகத் தமிழ் நாட்டில் வளர்ச்சியடைந்து வந்த ஓர் ஓவியக் கலைப் பாணி ஆகும். பல்வேறுபட்ட காலகட்டங்களின் ஊடாக வளர்ந்து வந்த இப்பாணி, நாயக்கர்களினூடாக ஆந்திரக் கலைப் பாணியினதும், மராட்டியர்களினூடாக மராட்டிய மற்றும் முகலாய ஓவியப் பாணியினதும், ஆங்கிலேயரினூடாக மேனாட்டுக் கலைப் பாணியினதும் தாக்கங்களைப் பெற்றது. |
- செப்டெம்பர் 30, 2007
|
திருக்குறள், மனிதகுலம் என்றென்றும் ஒழுகத்தக்க வாழ்க்கை நெறிகளை உணர்த்திடும் ஓர் உலகப் பொதுமறை எனும் சிறப்பைப் பெற்றதும், உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப் பெற்றதுமான ஓர் ஒப்புயர்வற்ற நீதி இலக்கியமாகும். அத்தகைய நெறிகளை அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பிரிவுகளின் கீழ், 1330 குறட்பாக்களை 133 அதிகாரங்களில் இவ்வையகத்துக்கருளிய திருவள்ளுவரை காலந்தோறும் மக்கள் நினைவுகூர்ந்து போற்றும் வகையில், கன்னியாகுமரி கடல் வெளியில் அமைந்துள்ள பாறை ஒன்று தாங்கி மகிழ, திருவள்ளுவரது முழு உருவக் கற்சிலையைப் பெருமுயற்சியெடுத்து தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. |
- ஜூலை 25, 2007
|
ராஜா ரவிவர்மாவின் ஓவியம்: ஜடாயுவின் சிறகுகளை வெட்டியெறியும் இராவணன். இராமாயணத்தில் தீய கதாபாத்திரமாக கூறப்படும் இராவணன் அந்த நூலில் இலங்கை மன்னனாவான். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றான். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாக இருந்தது எனப்படுகிறது. |
- பெப்ரவரி 7, 2007
|
லெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் என்னும் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம்(simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள். |
- பெப்ரவரி 6, 2007
|
வௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டி. பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு இவ்வௌவால்தான். இவ்விலங்கை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டிகளிலேயே இவை மட்டுமே 20% ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயிரினங்களைத் தேர்ந்து வகைப்படுத்தும் அறிவியல் துறையாளர்களான (வகையியலாளர்கள்) வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனப்படும் Chiroptera என்னும் வரிசையில் வைத்துள்ளார்கள். இவற்றின் முகம் நரியின் முகம் போலும் இருப்பதால் ஆங்கிலத்தில் இவற்றை பறக்கும் நரி (flying fox) என்றும் அழைப்பர். பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே பறந்து திரிந்து உண்டு வாழ்கின்றன. |
- பெப்ரவரி 5, 2007
|
டூக்கான் பறவை அல்லது பேரலகுப் பறவை என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் பறவை இனமாகும். நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படுகின்றது. இப்பறவை நிலத்தில் வாழும் குயிலும் பறவை இனத்தைச் சேர்ந்தது. இவைகளில் சுமார் 21 இனம் கொலம்பியா நாட்டிலும், சுமார் 17 இனங்கள் பிரேசில், வெனிசூலா, ஈக்வெடார் போன்ற நாடுகளில் வாழ்கின்றன. அலகு பார்ப்பதற்குப் மிகப்பெரிதாக இருந்தாலும், அதிக கனம் கொண்டதல்ல. ஏனெனில், அதில் நிறைய காற்றறைகள் உள்ளன. |
- பெப்ரவரி 4, 2007
|
மயில்கள், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்திலுள்ள இரண்டுவகைகளைக் குறிக்கும். மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும். ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் : தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது. அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது. அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது. |
- நவம்பர் 15, 2007
|
புரூக்ளின் பாலம் (Brooklyn Bridge) ஐக்கிய அமெரிக்காவில், நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழைமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது மேன்ஹேட்டனில் இருந்து புரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3, 1870-ல் தொடங்கியது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மே 24, 1883-ல் இது கட்டிமுடிக்கப்பட்டது. முதல் நாள், மொத்தம் 1,800 ஊர்திகளும் 150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர். |

