1869 ராஜபுதானா பஞ்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ராஜபுதானா சமஸ்தானம் மற்றும் ஆஜ்மெர்-மெர்வாரா பகுதிகளின் வரைபடம்.

1869 ராஜபுதானா பஞ்சம் (Rajputana famine of 1869) 1869 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவில் இராஜபுதனம் சமஸ்தானத்தையும், ஜபல்பூர், அஜ்மீர், மத்திய மாகாணம் மற்றும் பேரர், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் போன்ற பகுதிகளையும் பாதித்த ஒரு பெரும் பஞ்சம். இது ராஜபுதானா பெரும் பஞ்சம், ராஜபுதானா மற்றும் மேல் இந்துஸ்தான் பஞ்சம், ராஜபுதானா பஞ்சம், 1868-70 ஆகிய பெயர்களாலும் குறிக்கப்படுகிறது.

1868 ஆம் ஆண்டு பருவமழை தாமதமாகவும், வழக்கத்தை விடக் குறைவாகவும் பெய்தது. இதனால் ராஜபுதானத்தின் பெரும்பாலான பகுதிகளில் தீவனப் பற்றாக்குறையும் பல பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறையும் ஏற்பட்டன. உணவுப் பற்றாக்குறையைப் போக்க உணவு தானியங்கள் மெதுவாக நகரும் ஒட்டகப் போக்குவரத்து மூலம் கொண்டுவரப்பட்டன. ஆனால் இவை பஞ்சத்தை சமாளிக்க போதுமானதாக இல்லை. மக்கள், தங்கள் கால்நடைகளுடன் பஞ்சம் பிழைக்க இடம் பெயரத் தொடங்கினர். ஆனால் அருகில் இருந்த பிரித்தானிய மாகாணமான ஆஜ்மீரில் மட்டுமே பஞ்ச நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ராஜபுதானா சமஸ்தானத்தில் நிவாரணப் பணிகள் நடைபெறவில்லை. இதனால் இடம் பெயர்ந்த மக்களிடையே அதிக எண்ணிக்கையில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தன. அடுத்த ஆண்டு மழை பெய்துவிடும் என்ற நம்பிக்கையில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 1869 இலும் பருவமழை பொய்த்து விட்டது. பட்டினிச் சாவுகள் தவிர காலராவால் பாதிக்கப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர். 1870 இல் பருவமழை வழக்கம் போல் பெய்து அறுவடை நிகழ்ந்த பின்பே பஞ்சத்தின் கடுமை குறைந்தது.[1]

1866 ஒரிசா பஞ்சத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தவறியதால் விமர்சனத்துள்ளாகியிருந்த காலனிய அதிகாரிகள், இப்பஞ்சத்தில் ஓரளவு நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் அவை போதுமானதாக இல்லை. பிரித்தானிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாத ராஜபுதானா சமஸ்தானத்தில் நிவாரணப் பணிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இப்பஞ்சத்தின் விளைவாக ஏறத்தாழ 15 லட்சம் மக்கள் ராஜபுதானத்தில் மடிந்தனர்.[2][3][4]

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Hall-Matthews, David (2008), "Inaccurate Conceptions: Disputed Measures of Nutritional Needs and Famine Deaths in Colonial India", Modern Asian Studies, 42 (1): 1–24, doi:10.1017/S0026749X07002892
  • Imperial Gazetteer of India vol. III (1907), The Indian Empire, Economic (Chapter X: Famine, pp. 475–502, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxx, 1 map, 552.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1869_ராஜபுதானா_பஞ்சம்&oldid=3900242" இலிருந்து மீள்விக்கப்பட்டது