ஹர்ஷவர்தனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஹர்ஷர் அல்லது ஹர்ஷவர்தனர் (हर्षवर्धन) (590647) வட இந்தியாவை 40 வருடங்கள் வரை ஆண்ட ஒரு இந்தியப் பேரரசர். இவருடைய தந்தை பிராபாகரவர்தனர். இவருடைய அண்ணன் ராஜ்யவர்தனர் தானேஸ்வரத்தின் அரசர். இவர் தன் ஆட்சியின் உச்சத்தில் பஞ்சாப், வங்காளம், ஒரிசா, சிந்து கங்கைச் சமவெளி முழுவதையும் ஆண்டு வந்தார். தெற்கே நர்மதை நதி வரை இவருடைய ஆட்சி இருந்தது.

Harsha's empire at its greatest extent

ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியா முழுதும் குப்த பேரரசு வீழ்ச்சிக்குப்பின் சிறு சிறு குடியாட்சிகளாகவும் குறுநில மன்னராட்சிகளாகவும் இருந்து வந்தது. ஹர்ஷர் பஞ்சாபிலிருந்து மத்திய இந்தியாவரை இணைத்தார். இந்தக் குறுநில மன்னர்கள் கி.பி606 ஏப்ரலில் ஹர்ஷரை அவருடைய 16ஆவது வயதில் அரசராக முடிசூட்டினர்..[1]

ஹர்சரின் மூதாதையர்[தொகு]

ஹர்சரின் முன்னோர்களின் தோற்றம் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவு. இதனால் அவர்களுடைய வரலாறு தெளிவாக இல்லை. ஹர்சரின் அவையில் சமஸ்கிருதப் புலவராக இருந்த பாணபட்டர் (Banabhatta) என்பவருடைய கூற்றுப்படி, தானேசர் என்று இன்று வழங்கும், ஸ்தானேஸ்வர் என்னும் அரசை நிறுவி அதனை ஆண்டுவந்த புஷ்பபூதி என்பவனுடைய வழித்தோன்றலே ஹர்சா. தானேஸ்வர் தொன்மையான இந்து யாத்திரை மையமும், 51 சக்திபீடங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுமான இவ்விடம் இன்று ஹரியானா மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குருக்சேத்திரா என்னும் நகருக்கு அண்மையில் ஒரு சிறு நகரமாக உள்ளது. இப் புஷ்பபூதி என்னும் பெயர் ஹர்சரின் முன்னோர்களைப் பற்றிய ஆய்வில் ஒரு முக்கிய சான்றாகக் கொள்ளப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள குண்டா என்னுமிடத்தில் காணப்பட்ட கி.பி 181 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் இது தொடர்பில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இக் கல்வெட்டு, ஹரியானாப் பகுதியை முன்னர் ஆண்டுவந்த யௌதேயர்களைத் தோற்கடித்த முதலாம் ருத்திரதாமன் என்பவனுடைய மரபில் வந்த முதலாம் ருத்திரசிம்மன் என்பவனுடைய தளபதியாக இருந்த ருத்திரபூதி என்பவனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

புகழ் பெற்ற சீனப் பயணியான சுவான்சாங் என்பவர் ஹர்சா ஒரு வைசியன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவன் மரபின் தோற்றம் பற்றி எதுவும் கூறவில்லை. அக் காலத்து இந்தியச் சாதிகளைப் பற்றிய சிறப்பான அறிவைப் பெற்றிருந்தவரான சுவான்சாங், அரசர்கள் பொதுவாக சத்திரியர்கள் என்பதைத் தெளிவாகவே அறிந்திருந்தார் எனினும் ஹர்சாவை வைசியனாகக் குறிப்பிட்டிருப்பது இது வழமைக்கு மாறானது என்பதனாலாக இருக்கலாம். எனினும், முடிசூட்டு விழாவின்போது ஹர்சா ராஜபுத்திரன் என்னும் பட்டத்தை ஏற்றுக் கொண்டான்.

நாடக ஆசிரியர்[தொகு]

இவர் நாகானந்தம், ரத்னாவளீ, ப்ரியதர்சிகா என்ற மூன்று சமஸ்கிருத நாடகங்களை இயற்றியுள்ளார். இவை மன்னரின் அவைப் புலவர்களான பாணர் முதலியோரால் எழுதப்பட்டவை என்றும் ஒரு கருத்து உண்டு. இந்த நாடகங்களுக்கு சமசுகிருத இலக்கியத்தில் முக்கியப்பங்கு உண்டு. 12-வது நூற்றாண்டில் இருந்த ஸ்ரீஹர்ஷர் (நைஷதம் என்ற பெருங்காப்பியத்தை இயற்றியவர்) வேறு, இவர் வேறு.

மேற்கோள்கள்[தொகு]

  1. RN Kundra & SS Bawa, History of Ancient and Meddieval India
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்ஷவர்தனர்&oldid=1659952" இருந்து மீள்விக்கப்பட்டது