ஸ்டாலின்கிராட்டின் வாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுடாலின்கிராட்டின் வாளைப் பார்க்கும் ஒரு சிறுவன், சுடாலின்கிராட் சண்டை நூதனசாலை, 1953

சுடாலின்கிராட்டின் வாள் (Sword of Stalingrad) என்பது இரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வாளாகும். இது சுடாலின்கிராட் போரின்போது அந்நகரத்தைக் காப்பாற்றிய வீரர்களுக்கு பிரித்தானிய மக்களின் மரியாதையைச் செலுத்தும் முகமாக, ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் சார்ச்சு மன்னரின் கட்டளைப்படி உருவாக்கப்பட்டது.[1] 1943, நவம்பர் 29 அன்று, தெகிரான் மாநாட்டின் மாலை நிகழ்ச்சியொன்றின் போது பிரித்தானியப் பிரதமர் வின்சுடன் சேர்ச்சிலினால் சோசப் சுடாலினிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் அமெரிக்க சனாதிபதி பிராங்கிளின் ரூசவெல்ட்டும் கலந்துகொண்டார்.

தகவல்கள்[தொகு]

இவ்வாள் இருபுறமும் முனைகளைக் கொண்டிருந்தது. இதன் குறுக்கே வெள்ளியினாலான பாதுகாப்புத் தடுப்பும் உள்ளது. இதன் நீளம் அண்ணளவாக நான்கு அடியாகும். இவ்வாளில் ஆங்கிலத்திலும் உருசிய மொழியிலும் பொறிக்கப்பட்ட வாசகங்கள் பின்வருமாறு:

ГРАЖДАНАМ СТАЛИНГРАДА • КРЕПКИМ КАК СТАЛЬ • ОТ КОРОЛЯ ГЕОРГА VI • В ЗНАК ГЛУБОКОГО ВОСХИЩЕНИЯ БРИТАНСКОГО НАРОДА
TO THE STEEL-HEARTED CITIZENS OF STALINGRAD • THE GIFT OF KING GEORGE VI • IN TOKEN OF THE HOMAGE OF THE BRITISH PEOPLE

இதன் விளக்கம்: அஞ்சாநெஞ்சம் கொண்ட சுடாலின்கிராட்டின் மக்களுக்கு பிரித்தானிய மக்களின் மரியாதையைச் செலுத்தும் முகமாக ஆறாம் சார்ச்சு மன்னனின் அன்பளிப்பு

இதன் கைப்பிடி 18 கரட் தங்கக் கம்பியினால் சுற்றப்பட்டுள்ளது. இதன் அடிப் பூண் பளிங்கினால் செய்யப்பட்டு அதில் இங்கிலாந்தின் தங்க ரோசா அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. 10 அங்குல நீளமான பாதுகாப்புத் தடுப்பின் இரு முனைகளிலும் சிறுத்தைத் தலை உருவங்கள் பொன்முலாமிடப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.[2]

36 அங்குல நீளமுள்ள இரட்டை முனையுள்ள வாள்முனையின் குறுக்குவெட்டு குவிவு வில்லை வடிவமுள்ளது. மேலும் சிறந்த செஃபீல்ட் உருக்கைப் பயன்படுத்தி, கையினால் உருவாக்கப்பட்டதாகும். வாளின் உறை பாரசீகச் செம்மறியாட்டுத் தோலினால் செய்யப்பட்டு கருஞ்சிவப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. எனினும் சில மூலங்கள் இது மொரோக்கோ தோலினால் செய்யப்பட்டதாகக் குறிப்பிடுகின்றன.[3] இது அரச இலச்சினையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அக்காலத்தில் இவ்வாள் நவீன வாள் உருவாக்கும் கலையின் இறுதி சிறந்த ஆக்கங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டது.[4]

உருவாக்கம்[தொகு]

இவ்வாளை வடிவமைத்தவர் ஒக்சுபோர்ட் பல்கலைக்கழக நுண்கலைப் பேராசிரியரான ஆர். எம். வை. கிளீடோவ் என்பவராவார். இதனை வடிவமைப்பதற்காக அவர் மன்னரின் அனுமதியையும் பெற்றிருந்தார். கோல்ட்சுமித்சு ஓலின் ஒன்பது திறமைவாய்ந்த கைவினைஞர்கள் இவ் வடிவமைப்புப் பணிகளை மேற்பார்வை செய்தனர். வாளில் பொறிக்கப்பட்டுள்ள உருசிய வாக்கியங்கள் சுலாவோனியப் படிமவியலாளரும் கேம்பிரிட்ச் பெம்புரோக் கல்லூரியின் தலைவருமான சர் எல்லிசு ஒவெல் மின்சினால் சரிபார்க்கப்பட்டது.[5]

வாளை உருவாக்கியோர் வில்கின்சன் நிறுவனத்தினராவர். இதன் முக்கிய கொல்லர்கள் டொம் பேசிலி மற்றும் சிட் ரோசு ஆகியோராவர். வனப்பெழுத்தாளர் M.C. ஒலிவர் மற்றும் விமானப்படைப் பொற்கொல்லர் கோப்ரல் லெசிலி G. டேர்பின் ஆகியோரும் இதன் உருவாக்கத்தில் பங்குபற்றினர். வாளைச் செய்வதற்கான உருக்கு சன்டர்சன் சகோதரர்கள் மற்றும் செஃபீல்டின் நியூபோல்ட் ஆகிய நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டது. இச் செயற்திட்டத்தை நிறைவு செய்வதற்கு மூன்று மாதங்கள் எடுத்தன.

கையளிப்பு[தொகு]

இவ்வாளின் அதிகாரபூர்வ கையளிப்பு நிகழ்வு, நவம்பர் 1943ல் ஈரானில் உள்ள சோவியத் தூதரகத்தில் நடைபெற்ற, அப்போதைய முக்கிய மூன்று தலைவர்கள் கலந்துகொண்ட, தெகிரான் மாநாட்டில் நடைபெற்றது. இங்குதான் ஓவர்லோர்ட் நடவடிக்கையின் இறுதித் திட்டங்கள் தீட்டப்பட்டன.[6]

மூன்று மணிநேர தாமதத்தின் பின், தலைவர்களும் அவர்களது பிரதிநிதிகளும் மாநாட்டு மண்டபத்தில் கூடினர். மண்டபத்தின் இருபுறமும் உருசிய மற்றும் பிரித்தானிய மரியாதைக் காவலர்கள் அணிவகுத்து நின்றனர். உருசிய இராணுவ வாத்தியக் குழுவினர் இரு நாட்டுத் தேசிய கீதங்களையும் இசைக்க வின்சுடன் சேர்ச்சில் மண்டபத்தினுள் நுழைந்தார். பிரித்தானிய லெப்டினன்ட் ஒருவரிடமிருந்து வாளைப் பெற்ற சேர்ச்சில் சோசப் சுடாலினை நோக்கியவாறு, "பிரித்தானிய மக்களின் மரியாதையைச் செலுத்தும் முகமாக இவ்வாளைப் பரிசளிக்கிறேன்" எனக் கூறினார். வாளின் உறையை முத்தமிட்ட சுடாலின் பிரித்தானிய மக்களுக்கு மௌனமாக நன்றி தெரிவித்தார். பின்னர் சுடாலின் அவ்வாளைப் பார்வையிடுவதற்கு ஃபிராங்கிளின் ரூசுவெல்டிடம் வழங்கினார். வாளை உருவி மேலே உயர்த்திய ரூசுவெல்ட், "உண்மையாகவே அவர்கள் இரும்பு இதயம் படைத்தவர்கள்" என்று குறிப்பிட்டார். (உருசிய மொழியில் சுடாலின் என்ற பெயரின் பொருள் "இரும்பு மனிதன்" என்பதாகும்.)

பின்னர் அவ்வாள் உறையிலிடப்பட்டது. நிகழ்வின் முடிவில் எதிர்பாராதவிதமாக சுடாலின் அவ்வாளை தனது விசுவாசமான போர்வீரரான மார்சல் கிளிமென்ட் வொரோசிலோவிடம் கையளித்தார். மிகுந்த ஆச்சரியத்துடன் அவ்வாளை எடுக்க முயன்ற அவர் அவ்வாளை தலைகீழாகத் தூக்கியதால் வாள் நழுவிக் கீழே விழுந்தது.[7] எனினும் அது நிலத்தில் விழுந்ததா, அவரது காலில் விழுந்ததா அல்லது கீழே விழாமல் பிடிக்கப்பட்டு உறையினுள் இடப்பட்டதா என்பதில் அவதானிகள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.[8]

ஏற்பாடுகள்[தொகு]

கையளிப்புக்கு முன் இவ்வாள், வெஸ்ட்மின்ஸ்டர் அபே உட்பட ஐக்கிய இராச்சியமெங்கும், ஒரு சமயச் சின்னம் போல் காட்சிப்படுத்தப்பட்டது. இவலின் வோவின் போர்க்காலத் திரைப்படமான ஸ்வோர்ட் ஒஃப் ஹொனர்இல், இந் நிகழ்வு ஒரு முக்கிய காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.[9]

இவ் வாள் வொல்கோகிராட்டிலுள்ள ஸ்டாலின்கிராட் போர் நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[10] பனிப்போர் காலத்தில் குறைந்தது மூன்று தடவைகள் இவ்வாள் பிரித்தானியாவில் தற்காலிக காட்சிப்படுத்தலுக்காக கொண்டுவரப்பட்டது.[11] வில்கின்சன் நிறுவனம் மேலும் மூன்று வாள்களை உருவாக்கியது. இவை தற்போது காணப்படும் இடங்கள்:[சான்று தேவை]

  • வில்கின்சன் நூதனசாலை, வாள் நிலையம், அக்டன், லண்டன்[சான்று தேவை]
  • தென்னாபிரிக்கத் தேசிய இராணுவ வரலாற்று நூதனசாலை, ஜொகனஸ்பேர்க்[12]
  • தனியாரிடம்[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. Antony Beevor (1998), Stalingrad, Viking Press, p. 405 ISBN 0-14-024985-0.
  2. Olof Janson, The Sword of Stalingrad Page, with original pictures & information courtesy of Robert Wilkinson Latham, son of John Wilkinson Latham of the Wilkinson Sword Co.
  3. Ed Levin, The Sword of Stalingrad Description பரணிடப்பட்டது 2012-02-24 at the வந்தவழி இயந்திரம், Russianswords.com.
  4. "Sword of Stalingrad...Perfection in its Field", Sklar advertisement, July 1944, in The Journal of Bone and Joint Surgery[தொடர்பிழந்த இணைப்பு], Vol. XXVI, No. 3, Boston MA. p. 11.
  5. Elizabeth Hill, "Obituary: Sir Ellis Hovell Minns (1874–1953)," The Slavonic and East European Review, 1953, pp. 236-238.
  6. Paul D. Mayle (1987), Eureka Summit: agreement in principle and the Big Three at Tehran, 1943, University of Delaware Press, pp. 89-90 ISBN 0-87413-295-9.
  7. Gladwyn Jebb's eyewitness account recorded in the 16 December 1943 diary entry of Harold Nicholson (1967), The War Years, 1939–1945, Vol. II of Diaries and Letters, Atheneum, New York, p. 334.
  8. Mayle, p. 90.
  9. Alan Sinfield (1983), Society and Literature, 1945–1970, Taylor & Francis, London, p. 23 ISBN 0-416-31770-7.
  10. "The Battle of Stalingrad" & "Queen Elizabeth – Honorary Citizenship", The Voice of Russia, Tid-bits of the Week, 1999–2000.
  11. Andrew Higgins, "Stalingrad blade blunted by time: The sword Churchill gave Stalin is gathering museum dust," 7 November 1993, The Independent, U.K.
  12. "Smitten by the Sword of Stalingrad – 40 years on display at Jo'burg War Museum", Noseweek Online, Issue # 103, May 2008.

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sword of Stalingrad
என்பதில் ஊடகங்கள் உள்ளன.