வேளாண்காடு வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்க்லேண்ட் எனுமிடத்திலுள்ள ஓர் வேளாண்காடு

வேளாண் காடுகளின் தோற்றமும் பரிணாமும்[தொகு]

     ஆதி மனிதனின் முதல் தொழில் வேட்டையாடுதலும், மீன்பிடித்தலுமேயாகும். தொடக்க நிலையில் உணவிற்காக விலங்குகளைப் போல் பிற உயிரினங்களையே மனிதன் சார்ந்து வாழ்ந்தான். அசைவ உணவை உண்டு வந்த ஆதி மனிதன் அவ்வகை உணவு வகைகள் கிடைக்காத காலங்களில் இயற்கையாக விளைந்திருந்த காய், கனி, கிழங்கு, தேன் உள்ளிட்ட சைவ உணவுகளை உண்ண பழகினான். வேட்டையாடுதலுடன் இவற்றைத் தேடி அலைந்து வேகவைத்து உண்ணத் தொடங்கினான்.
    சில காலம் கழித்து அதே இடத்திற்கு அவன் வந்தபோது, அவன் உண்டு போட்ட விதைகள் மற்றும் கொட்டைகள், தாவரங்களாகவும்,  மரங்களாகவும் வளர்ந்திருப்பதைக் கண்டான். பின்னர் பருவகால மாற்றங்களாலும் உணவுத் தேவைக்காகவும் இடம் பெயரும் போது தன்னிடமிருந்த உணவு பயிர் விதைகளை வீசி (விதைத்து) சென்றான். அடுத்தப் பருவத்திற்கு வந்தபோது அவைகள் முளைத்து விளைந்திருத்ததைக் கண்டு மகிழ்ந்தான். இப்படியாக அவன் தோற்றுவித்தது நாடோடி வேளாண்மை.
    இவை தந்த அனுபவத்தின் அடிப்படையில் இயற்கை வேளாண்மை செய்ய தலைப்பட்டான். விலங்குகளினால் சேதம் ஏற்படாமல் தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கவும், காவல் பரண்கள் அமைக்கவும் கற்றுக்கொண்டான். காடுகளுக்கிடையேயும், மலையடிவாரங்களிலும் நிலத்தைச் சீர்படுத்தி காடுகளுக்கிடையே வேளாண்மையை தொடர்ந்தான். நாளடைவில் காடுகளுக்கிடையில் நடந்த வேளாண்மை காடுகளுடன் வேளாண்மை என்ற நிலையை அடைந்தது. 
   மனித சமுதாய மேம்பாட்டின் விளைவாக சமூகங்களும் கிராமங்களும் தோன்றிய பின்னர் சிறிது சிறிதாக காடுகள் மறையத் தொடங்கின. ஆனால் கிராமங்களில் மரங்கள் நிறைந்திருந்தன. இதன் பின்னர் காடுகளுடன் வேளாண்மை என்ற நிலை மாறி மரங்களுடன் வேளாண்மை என்ற நிலை வந்தது. கடந்த பல ஆண்டுகளாக மரங்களும் பெருமளவில் அழிக்கப்பட்டு நகரங்களும் தொழிற்சாலைகளும் உருவாகின. அதனால் மரங்கள் குறைந்து வேளாண்மை மட்டும் தொடர்ந்தது. பின்னர் அதுவே வேதி வேளாண்மையானது. கால்நடைகள் வளர்ப்பும் குறைந்தது.
  காடுகள், மரங்கள் மற்றும்  கால்நடைகள் இழப்பினால் பருவநிலை மாற்றமும் அதனால் வேளாண்மையும் பெருமளவில் சிதைந்து நலியத் தொடங்கியது. இவற்றைத் தவிர்த்து, களைந்து வேளாண்மையை மீட்டெடுக்கவும் 33 சதவீத வனப்பரப்பை எட்டி மழையளவைப் பெருக்கவும் இன்று அறிவியல் எடுத்த நிலைப்பாடே வேளாண்காடுகள் ஆகும். காட்டில் தோன்றிய மனித இனம் மீண்டும் காட்டை நாடிச் செல்ல துணைபுரிவதே வேளாண் காடுகள் என்னும் அறிவியல் தத்துவமாகும்.

வேளாண் காடுகள்[தொகு]

     உணவுப் பயிர் உற்பத்தி + மரம் வளர்ப்பு = வேளாண் காடுகள். ‘வயலில் நெல் வளர்ப்போம் வரப்பில் மரம் வளர்ப்போம்’ என்ற வாசகமே வேளாண் காடு என்பதற்கான சரியான எளிமையான விளக்கமாகும். வயல் வெளியில் வளர்க்கப்படும் இம்மரங்களில் விளைச்சலைப் பெருக்கும் பற்பல விலங்கின உயிரினங்கள் தங்கி பலுகிப் பெருகும். மேலும் இங்கு வாழும் பறவைகள் அயல் மகரந்தச் சேர்க்கை, பூச்சிக்கட்டுப்பாடு உள்ளிட்ட பற்பல நலன்களை நல்கும்.
    சுயசார்பு வேளாண்மை சீரான பொருளாதாரம் என்ற சமூக மேம்பாட்டிற்கு வேளாண் காடுகள் அடித்தளமாக அமைகிறது. 
    ‘தோப்பு’ என்ற முறையில் குறிப்பிட்ட ஒரு மரயினம் மட்டும் பெரும்பரப்பில் வளர்க்கப்படும். ஆனால் ‘காடு வளர்ப்பு’ என்ற முறையில் பல்வேறு வகை மரங்கள் ஒரே இடத்தில் வளர்க்கப்படும். இவ்வாறு கலந்து வளர்ப்பதினால் சூழ்நிலை சமன்பாட்டோடு மண்வளமும் நிலைப்படுத்தப்படும். 
     மர இலைகள் வயலில் வீழ்வதால் மூடாக்கு, இயற்கை உரம், நீர் ஆவியாதல் தடுப்பு, நிலத்தின் நுண்ணுயிரிப்பெருக்கம், ஈரப்பத மேலாண்மை உள்ளிட்ட கண்களுக்குப் புலப்படாத பற்பல உயிரி தொழில்நுட்ப பயன்களும் ஏற்படும் என்பது உறுதி. காடாக்கத்தின் முதல் நிலையே வேளாண்காடுகள் என்றால் மிகையாகாது.

வேளாண்காடு வளர்ப்பு (agroforestry அல்லது agro-sylviculture) என்பது வேளாண்பயிர்களோடு இணைந்து வேளாண் நிலங்களின் எல்லைகளிலும் தனியார் நிலங்களின் ஓரங்களிலும் மரங்களை நடும் திட்டம் ஆகும். வேளாண்பயிர்கள், மரங்கள் மற்றும் கால்நடைகளைப் பெருக்குவதற்கு இத்தகைய நிலங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். வேளாண் காடுகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் பயிர்கள் மற்றும் கால்நடைகள் இணைந்த நிலப்பயன்பாட்டுத் திட்டங்களின், இணைந்த சேர்க்கை முறையாகும்.[1] அடிப்படை மூலாதாரத்தைப் பாதுகாப்பதோடு பன்முக விளைபொருட்களை உற்பத்தி செய்தல்; தாயகத்தின் பன்முகத்தன்மைகொண்ட மரங்கள் மற்றும் புதர்களை வளர்தல்; மிகக் குறைவான இடுபொருட்கள் மற்றும் எதிர்மறையான சுற்றுச் சூழலுக்கும் பொருத்தமானதாகவும் நிலப் பயன்பாட்டுத் திட்டத்தை ஏற்படுத்தல்; சமூக, பொருளாதார பண்பாட்டுத் தளங்களுக்கு உகந்ததாகவும் இக்கூட்டு முறையானது அமைகிறது. அதாவது மரபுவகையாக வனம் அல்லாத நிலங்களில் அமைக்கப்படும் வனம் வளர்ப்பு பற்றியது

வரையறை[தொகு]

வேளாண் காடுகள் என்பவை எவ்வித நிலப்பயன்பாட்டிற்கும் உகந்த, ஒரலகு நிலப்பரப்பில் வேளாண் பயிர்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றின் உற்பத்தியை நிலைநிறுத்துவது அல்லது அதிகரிப்பதுடன், அதன் நிர்வாக செயல்முறைகள், சமூக பண்பாட்டிற்கேற்றவாறு உள்ளூர் மக்களின் சூழலியல் மற்றும் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டது.[2] வேளாண் காடுகள் எனும் சேர்க்கைப் பெயரானது ஒரலகு நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற மரங்கள், கால்நடைகள் மற்றும் உணவுப் பயிர் உற்பத்தி ஆகியவற்றை இணைத்து ஒரு குறித்த வரிசையில் நிரந்தரமாகவோ அல்லது நிலையான அடுக்குமுறையிலோ மேற்கொண்டு விளைச்சலை நிலைநிறுத்தி அதிகப்படுத்துவதாகும். வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் பொருளாதாரம் மற்றும் சூழலியலுக்கிடையேயான பிணைப்பையும், அவைகளின் திட்டப்பிரிவுகளையும் உள்ளடக்கியது.[3]

வேளாண் காடுகளின் நோக்கம்[தொகு]

  • 33 சதவீத வனப்பரப்பை ஏற்படுத்துதல்
  • உணவாதாரத்தையும், பொருளாதாரதையும் மேம்படுத்துதல்
  • மழைப் பொழிவதற்கான சூழலை ஏற்படுத்துதல்
  • மழைநீரை இயற்கையாக சேமித்து நிலத்தடி நீரை பாதுகாத்தல்
  • நீர் நில வளத்தைப் பேணுதல்
  • உயிரி பல்வகைமையைக் காத்தல்

சமூகக்காடுகள் மற்றும் வேளாண்காடுகள்[தொகு]

Silvopasture over the years.

சமூகக்காடுகள் மரபுமுறையான காடுகள் அல்ல, அவை மக்களின் நுகர்வுப் பொருட்கள், சேவைகள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ஏற்படுத்தப்படுவதாகும். இவ்வரையறை உள்ளூர் மக்களின் வனப்பொருட்கள் தேவைகளை நிறைவு செய்கின்ற நோக்கமுடையது. சா(1985) வரையறுத்தபடி சமூகக்காடுகள் உள்ளூர் மக்களின் எரிபொருள், கால்நடைத்தீவனம் போன்றவற்றை எவ்வித் தடையுமின்றி நிறைவு செய்கின்ற கருத்தியல் உடையது.

பண்ணைக்காடுகள்[தொகு]

பண்ணைக் காடுகள் வணிகமுறையில் விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களில் மரங்களை வளர்ப்பதாகும். தேசிய வேளாண்மைத் திட்டக் குழு (1976) வரையறுத்தபடி பண்ணைகளைச் சுற்றிலும் அல்லது கிராம நிலங்களில் பண்ணை சார்ந்த தொழில்களுடன் வன மரங்களை வளர்ப்பதாகும்.

விரிவாக்கக் காடுகள்[தொகு]

மரபு முறையான காடுகளிலிருந்து வெகுதொலைவில் உள்ள பகுதிகளில், மரங்கள் மட்டுமே வளரக்கூடிய நிலப்பகுதிகளில் வனங்களை வளர்த்தெடுப்பதாகும். இவைகள் கீழ்க்காண்பவைகளை உள்ளடக்கியது.

  • கலப்புக் காடுகள்: இவ்வகைக் காடுகள் கிராமப்புறம் மற்றும் கிராமத்தின் பொது நிலங்களில் தீவனம் தரும் மரங்கள், தீவனப்புற்கள், பழ மரங்கள் கட்டை மற்றும் விறகு தரும் மரங்களை வளர்ப்பதாகும்.[4]
  • தடுப்புப் பட்டைகளல்லது காற்று அரண்கள்: புயல் காற்று, சூரிய ஒளி மற்றும் பனிச் சரிவுகளுக்காக தடைகளை ஏற்படுத்துவதற்காக வரிசையாக மரங்கள் அல்லது புதர்களை வளர்ப்பதாகும்.[5]
  • நேரினை மரம் வளர்ப்பியல்: இம்முறையில் மிக வேகமாக வளரும் மரங்களை ஒரே நேர்க்கோட்டில் நடவு செய்து வளர்ப்பதாகும்.[6]
  • அழிந்த வனங்கள் மீட்பு: இவ்வகைக் காடுகள் முற்றிலும் அழிந்த வனப்பகுதியாகும் விரைவான கவனம் செலுத்த வேண்டியவையாகும். சுற்றுச் சூழலியல் மேம்பாட்டிற்கினங்க, உள்ளூர் மற்றும் சுற்று வட்டார சமூக மக்களின் தேவைக்கேற்ப வளர்ப்பது மற்றும் மறுசீரமைப்பது ஆகும்.[7]
  • பொழுது போக்குக் காடுகள்: இவை அழகிய மரங்கள் மற்றும் அழகிய புதர்களுடன் வளர்க்கப்படுகின்ற வனப்பகுதியாகும். இவை நகர்ப்புறம் சார்ந்த கிராமங்களை ஒட்டி ஏற்படுத்தப்படுகிறது. இவைகள் அழகியல் வனங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

வேளாண்காடு வளர்ப்புத் திட்டங்களின் வகைகள்[தொகு]

வேளாண்காடு வளர்ப்புத் திட்டங்கள் கீழ்க்கண்ட வகையில் வகைப்படுத்தப்படுகின்றன.

  1. அமைப்புகளின் அடிப்படையிலான வகைப்பாடு :
  2. செயல்பாட்டு முறையான வகைப்பாடு
  3. சூழலியல் வகைப்பாடு

அமைப்புகளின் அடிப்படையிலான வகைப்பாடு[தொகு]

இதனடிப்படையில் கீழ்க்கண்ட திட்டங்கள் அடங்கும்.

  • வேளாண் மர வளர்ப்புத் திட்டம்
  • முல்லைப்புல்பரப்புத் திட்டம்
  • வேளாண் முல்லைப்புல் பரப்புத் திட்டம்
  • வேறு திட்டங்கள்

வேளாண் மர வளர்ப்புத் திட்டம்[தொகு]

இத்திட்டத்தில் மரங்களுக்கிடையே வேளாண் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. வேளாண் பயிர்கள் இறவை அல்லது மானாவாரியாக நான்கு ஆண்டுகள் வரை சாகுபடி செய்யப்படுகிறது. பயிர்சாகுபடி லாபகரமற்றதாக மாறும் வரை பயிர்சாகுபடி செய்யலாம். தீவனப்பயிர்கள், நிழல் விரும்பும் பயிர்கள் மற்றும் சல்லி வேர் கொண்ட பயிர்கள் ஆகியவற்றைச் சாகுபடி செய்வது சிறப்பு. ஒரு முக மரவளர்ப்பதை விடவும் இவ்வகையில் மரங்கள் செழித்து வளர்க்கின்றன.

முல்லைப்புல் பரப்புத் திட்டம்[தொகு]

தீவனப்பயிர்களுடன் வளர்க்கப்படும் மரங்கள்

கடினமான மரக்கட்டை தரும் மரங்கள் தீவனப்பயிர்களுடன் வளர்க்கப்படும் முறையே முல்லைப்புல் பரப்பு முறையாகும். இம்முறையில் மரங்கள் மற்றும் புதர்கள் கால்நடைத்தீவனம், மரக்கட்டை, விறகு மற்றும் பழம் உற்பத்திக்கும், மண்ணை வளப்படுத்தவும் பயன்படுகிறது. இம்முறை மூன்று வகைப்படும்.

  1. புரத வங்கி
  2. தீவனமரங்களின் உயிர்வேலி மற்றும் தடுப்பு
  3. மேய்ச்சல் நிலப்பகுதிகளில் மரம் மற்றும் புதர் வளர்ப்பு

புரத வங்கி[தொகு]

பன்முக மரங்கள் (புரதம் நிறைந்தவை) பண்ணையின் சுற்று வரப்புகளில் வளர்க்கப்படுகின்றன. சான்றாக வேலம், வாகை, வேம்பு அகத்தி பொன்ற மரங்களின் பசுந்தாள் இலைகள் அவ்வப்போது வெட்டியெடுத்துச் செல்லப்பட்டு கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தீவனமரங்களின் உயிர்வேலி மற்றும் தடுப்பு[தொகு]

பல்வேறு வகையான மரங்கள் மற்றும் குத்துச் செடிகள் பரவலாகவோ, ஒழுங்கமைப்புடனோ அல்லது ஒழுங்கமைப்பற்றோ, தீவனத்தேவையை தீர்ப்பதற்காக வளர்க்கப்படுகின்றன. (எ-கா) வேலம், அகத்தி, கல்யாண முருங்கை

மரங்கள் மற்றும் புதர்கள் வளர்ப்பு[தொகு]

மேய்ச்சல் நிலங்களில் பல்வேறு வகையான மரங்கள் மற்றும் புதர்கள் தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்காக வளர்க்கப்படுகின்றன. (எ-கா) புளியமரம், வேம்பு, வேலம் மற்றும் அகத்தி

வேளாண் முல்லைப்புல் பரப்புத் திட்டம்[தொகு]

பல்லாண்டு மரங்களுடன் தீவணப்புற்களையும், வேளாண் பயிர்களையும் வளர்த்தெடுப்பது வேளாண் முல்லைப்புல்பரப்புத் திட்டமாகும். இவ்வகையில் வீட்டுத் தோட்டங்கள் அமைத்தல், மரத் தடுப்பு வரிசைகள் அமைத்தல் முதலியன அடங்கும்.

வீட்டுத் தோட்டங்கள்[தொகு]

இம்முறையானது மிதமிஞ்சிய மழைப்பொழியும் வெப்ப மண்டலப்பகுதிகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிரபலமாக உள்ளது. இம்முறை ஈரப்பதமிக்க வெப்பப் பகுதிகளான தமிழ்நாடு,கேரளா பகுதிகளில் தென்னை முக்கியப் பயிராகவுள்ள இடங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. வேறுபட்ட இனங்களில் மரங்கள், குத்துச்செடிகள், காய்கறிகள் மேலும் சிறு செடிகள் அடர்த்தியாகவும் வெவ்வேறு அமைப்பிலும் வளர்க்கப்படுகின்றன.

மாடு அல்லது ஆடு மற்றும் பறவைகள் இனங்களுடன் இக்காடுகள் பராமரிக்கப்படுகின்றன, தீவனம் தரும் மரங்கள் கால்நடைக்கான தீவனத் தேவைகளை நிறைவு செய்கின்றன. இந்தியாவில் 0.5 ஏக்கரிலிருந்து 1.25 ஏக்கர் நிலப்பரப்பு வரை வீட்டுத் தோட்டங்கள் அமைக்கப்படுகின்றன. வீட்டுத்தோட்டங்கள் பன்முகப்பயன்பாடுடைய மரங்கள் மற்றும் பயிர்கள் வளர்ப்பதுடன் சீரிய நிலப்பயன்பாட்டுத் திட்டமாகவும் முன் வைக்கப்படுகிறது. மரவளர்ப்பும் இதனுடன் கால்நடைப்பராமரிப்பும் குடும்ப உறுப்பினகளாலேயே மேற்கொள்ளப்படுகிறது. வீட்டுத்தோட்டங்கள் பல அடுக்கு முறையென்றும் அல்லது பல அடுக்குp பயிரிடுதல் முறை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் வீட்டுத் தோட்டங்கள் அதிக உற்பத்தித்திறன், நிலையான மற்றும் அதிக செய்முறை சார்ந்தது. ஒரு குடும்பத்தின் உணவுத் தேவையை நிறைவு செய்வதை முதல்நிலையாக உடையது.

வீட்டுத் தோட்டங்கள் பல பயிர் இனங்களின் தொகுப்புடன் 3 அல்லது 4 செங்குத்து மேற்பரப்பை முன் வைக்கிறது.வேறு வேறு அடுக்குகளுடன் அமைக்கப்படுகிறது. தரையையொட்டி வளரும் கிழங்குச் செடிகள், குறும்பயிர்கள், மிக உயரமாக வளரும் மா, தென்னை போன்ற மரங்கள் மிதமான உயரத்துடன் வளரும் பழ மரங்கள் போன்றவற்றுடன் இவை பயிரிடப்படுகிறது. குறைந்த உயரத்தில் அதாவது 1 மீட்டர் வரை காய்கறிகளும் 1 க மீட்டர் வரையுள்ள குத்துச் செடிகளும், 25 மீ உயரம் அல்லது அதற்கு மேல் வளரும் மரங்களும், 20 மீட்டரை விட குறைவாக வளரும் பழ மரங்களும் வெவ்வேறு அடுக்குகளாக பயிரிடப்படுகின்றன.

பல்லாண்டுத் தாவர இனங்களான மா, பலா, தென்னை, கொய்யா, எலுமிச்சை, வேம்பு மற்றும் பல மரங்களும் ஈராண்டுத் தாவரங்களான வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், வாழை, பட்டாணி, முள்ளங்கி மற்றும் பலவகையான இனங்களும் வீட்டுத்தோட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

மரத்தடுப்பு வரிசைகள்[தொகு]

A riparian buffer bordering a river.

அதி வேகமாக வளரும் மரங்களுடன், தீவனமாகப் பயன்படக்கூடிய புதர்ச்செடிகள் மற்றும் பசுந்தாள் தரும் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவை மண் மூடாக்கு மண் வளப் பாதுகாப்பு பசுந்தாள் உரம் ஆகியற்றுக்காகப் பயன்படுகின்றன.[6] இத்தகைய தாவர இனங்கள் முறையே கல்யாண முருங்கை, அபாபுல், வாகை ஆகியவை பொதுவாக விளைவிக்கப்படுகின்றன.

வேறு திட்டங்கள்[தொகு]

மரம் மற்றும் தேனி வளர்ப்பு, நீர் வனங்கள் அமைத்தல்,கலப்பு மரத்தோப்புகள் அமைத்தல் ஆகியன பிற திட்டங்கள் ஆகும்.

மரம் மற்றும் தேனி வளர்ப்பு[தொகு]

பண்ணையில் பல்வேறு வகையான மலர்கள் பூக்கும் மரங்களை தேனீக்கள் தேன் சேகரிப்பதற்கு ஏதுவாக விளைப்பதும், தேன் கூடுகளை அமைத்து தேனி வளர்ப்பு மேற்கொள்வதும் மற்றுமொரு நிலப்பயன்பாட்டுத் திட்டமாகும்.

நீர்வனங்கள்[தொகு]

இம்முறையில் மீன்கள் உணவாக உட்கொள்ளும் வகையில் மீன் குட்டைகளைச் சுற்றிலும் பல்வேறு மரங்கள் மற்றும் புதர்கள் வளர்க்கப்படுகின்றன. மரம் மற்றும் புதர்களிலிருந்து உதிரும் இலைகளை மீன்கள் உணவாக உட்கொள்ளுகின்றன.

கலப்பு மரத்தோப்பு[தொகு]

இம்முறையில் பல்வகைப்பயன்பாட்டிற்குரிய மரங்கள் கலப்பாகவோ இனவாரியாக தனித்தோ நட்டு வளர்க்கப்படுகின்றன. இவை விறகு, தீவனம், மண் வளப் பாதுகாப்பு மற்றும் மண்வள மீட்பு போன்றவை இவற்றுள் அடங்கும்.

செயல்பாட்டு முறையான வகைப்பாடு[தொகு]

அனைத்து வேளாண் வகைத் திட்டங்களும் செயல்பாட்டின் ஊடாக இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை

  1. உற்பத்திச் செயல்பாடுகள்
  2. பாதுகாப்பு செயல்பாடுகள்

என்பன.

உற்பத்திச் செயல்பாடுகள்[தொகு]

வேளாண்காடுகளில் உற்பத்தி செய்யப்படும் 1.உணவு ,2.கால்நடைத்தீவனம்,3.எரிபொருள் விறகு 4.ஆடைகள் 5.கட்டுமானப் பொருட்கள் 6.மரகட்டைகள் அல்லாத வனப்பொருட்கள் ஆகிய பொருள்களின் அடிப்படையில் இவை வகைப்படுத்தப்படுகின்றன.[8]

பாதுகாப்புச் செயல்பாடுகள்[தொகு]

பாதுகாப்புச் செயல்பாடுகளின் அடிப்படையிலான வகைப்பாடுகள்[4] இவ்வகையில் அமையும்.

  1. காற்றுத் தடுப்பு
  2. தடுப்புப் பட்டைகள்
  3. மண் மேலாண்மை
  4. மண் தரம் உயர்த்துதல்

சமூக, பொருளாதார வனக்கட்டுபாடு[தொகு]

சமூக பொருளாதாரக் கொள்கைளை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி அமைவு,தொழில்நுட்ப ஈடுபாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றைக் கொண்டு வேளாண் காடுகளை பின்வருமாறு மூன்று வகையில் பிரிக்கலாம்.

  • வணிக ரீதியான வேளாண் காடுகள் திட்டம்
  • நடுநிலை வேளாண் காடுகள் திட்டம்
  • தன்னிறைவு வேளாண் காடுகள் திட்டம்

வணிக ரீதியான வேளாண் காடுகள் திட்டம்[தொகு]

இத்திட்டத்தின் உற்பத்திப்பொருட்கள் மட்டுமே எப்போதும் அளவீடாகிறது. எடுத்துக்காட்டாக தென்னை, ரப்பர் மற்றும் எண்ணெய்ப் பனை முதலானவை தோப்பாக பல ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படுகிறது. மற்றும் நிழல் தாங்கி வளரும் காப்பி, தேயிலை மற்றும் கோ கோ போன்றவை மரங்களின் நிழல்களில் பராமரிக்கப்படுகிறது

நடுநிலை வேளாண் காடுகள் திட்டம்[தொகு]

இத்திட்டத்தின் கீழ் வேளாண் காடுகள் வளர்ப்பில் நோக்கம் தன்னிறைவை மிஞ்சுகிற வேளையில் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்ற நோக்கமுடையது.

தன்னிறைவு வேளாண்காடுகள் திட்டம்[தொகு]

இத்தகைய வேளாண் காடுகள் திட்டப் பண்ணை உரிமையாளரின் திருப்திக்காகவும் அவருடைய குடும்பத் தேவைகள் மட்டுமே நிறைவு செய்து கொள்கின்ற கருத்துடையது.[4]

சூழலியல் வகைப்பாடு[தொகு]

மண் வளம், காலநிலை, நில அமைப்பு போன்ற இயற்கைச் சூழலுக்கேற்ற வேளாண்பயன்பாட்டை இவ்வகைக் குறிக்கிறது.

  • மிதமான ஈரப்பதம்/ஈரப்பதமான தாழ்நிலைப்பகுதிகளில் வேளாண் காட்டுத் திட்டங்கள்: வீட்டுத் தோட்டங்கள், புல்வெளிகள் மீது மரங்கள் மற்றும் மேய்ச்சல், மேம்படுத்தப்பட்ட சுழற்சி விவசாயம் மற்றும் பல பயன்பாட்டு மரத்தோப்புகள் அமைத்தல் ஆகியன இதில் அடங்கும்.
  • மிதமான வறட்சி/வறண்ட பகுதிகளில் வேளாண் காட்டுத் திட்டங்கள்: வெவ்வேறு வடிவிலான மரங்கள் மற்றும் மேய்ச்சல் புல் வளர்ப்பு, காற்றுத் தடுப்பு மற்றும் தடுப்புப் பட்டைகள் (காற்று அரண்கள்) அமைத்தல் ஆகியன இதில் அடங்கும்.
  • வெப்பமண்டல உயர்நிலப் பகுதிகளில் வேளாண் வனத் திட்டங்கள்: இப்பகுதிகளில் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள், பல்லாண்டு மரங்கள் வளர்ப்பு போன்றவை மண்ணை வளப்படுத்துவதிலும் மண்ணரிப்பைத் தடுக்கவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

வேளாண்காடு வளர்ப்புத் திட்டங்களின் பயன்கள்[தொகு]

வேளாண்காடுகள் வளர்ப்பானது பெருமளவு நன்மையைத் தருவதாகும்.வேளாண்மை மற்றும் காடுகளைப் பாதுகாத்தல், உற்பத்தியை அதிகரித்தல், வணிகம் மற்றும் பொருளாதாரப் பயன்பாடு,சுற்றுச்சூழல் காப்பு, சமூகப்பயன்பாடு முதலிய பலவகைகளில் நன்மை தருகிறது.[9][9]

  • வேளாண்காடு வளர்ப்பினால் சுற்றுச்சூழலியல் சார்ந்த பயன்கள் பெருமளவில் ஏற்படுகின்றன.
  • இயற்கைக்காடுகள் அழிவது தடுக்கப்படுகிறது.
  • வெகு வலிமையான ஊட்டச்சத்துக்கள் ஆணிவேருடைய மரங்களால் அடி மண்ணிலிருந்து மேல்பரப்பிற்கு கொண்டு வரப்படுகிறது
  • சூழலியல் திட்டங்களுக்குப் பாதுகாப்பு
  • மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது மேலும் மண்ணிலிருந்து சத்துக்கள் நீக்கப்படுவது அதிக வேர்ப்பிடிப்புகளால் தடுத்து நிறுத்தப்படுகிறது
  • தாவர காலநிலை மேம்படுத்தப்படுகிறது,மண்ணின் மேற்பரப்பு வெப்பநிலை குறைக்கப்படுகிறது,மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதைத் தடுக்கின்றது.
  • இலையுதிர்வின் காரணமாக மண்ணின் மட்கும் திறன் மேம்படுகிறது.
  • மண்ணமைப்பானது அங்ககப் பொருட்களின் அதிகரிப்பு காரணமாக மேம்பாடடைகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Silvopasture". Archived from the original on 2013-07-06. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
  2. USDA National Agroforestry Center (NAC)
  3. "What is Agroforestry?".
  4. 4.0 4.1 4.2 "Forest gardening". Archived from the original on 2013-02-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-06-20. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
  6. 6.0 6.1 "Silvoarable – intercropping & alley cropping". Archived from the original on 2012-07-02. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
  7. Elkan, Daniel. Slash-and-burn farming has become a major threat to the world's rainforest தி கார்டியன் 21 April 2004
  8. "Forest farming". Archived from the original on 2012-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
  9. 9.0 9.1 "Benefits of agroforestry". Archived from the original on 2013-07-06. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Agroforestry
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளாண்காடு_வளர்ப்பு&oldid=3767454" இலிருந்து மீள்விக்கப்பட்டது