வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெஸ்ட்ஃபேலியா அமைதி ஒப்பந்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெசிட்டுஃபாலியா அமைதி ஒப்பந்தம்
ஓசுனாப்ருயூக், மியூன்சிட்டர் அமைதி ஒப்பந்தங்கள்
மியூன்சிட்டர் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
ஒப்பந்த வகைஅமைதி ஒப்பந்தம்
வரைவு1646-1648
கையெழுத்திட்டது15 மே- 24 அக்டொபர் 1648
இடம்ஓசுனாப்ருயூக் மற்றும் மியூன்சிட்டர், வெசிட்டுஃபாலியா, தற்கால ஜெர்மனி
தரப்புகள்109

பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடை பெற்று வந்த முப்பதாண்டுப் போர், மற்றும் எண்பதாண்டுப் போர் ஆகியவை 1648 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. இப்போர்கள் முடிவுக்கு வர 15 மே 1648 இல் ஓசுனாப்ருயூக் (Osnabrück) என்ற இடத்திலும், 24 அக்டோபர் 1648 இல் மியூன்சிட்டர் (Münster) என்ற இடத்திலும் அமைதி உடன்படிக்கைகள் கையெழுத்தாகின. புனித ரோமன் பேரரசு, எசுப்பானியா, பிரான்சு, சுவீடன் அரசுகள், டச் குடியரசு, மற்றும் சுதந்திர நகரங்கள் உடன்பட்ட இந்த அமைதி ஒப்பந்தமே வெசிட்டுட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் (ஆங்கிலம்:Peace of Westphalia) என்றழைக்கப் படுகிறது.

பின்புலம்[தொகு]

பதினேழாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் ஐரோப்பாவில் இரு பெரும் போர்கள் நடந்து கொண்டிருந்தன. கத்தோலிக்கர்களுக்கும் புராட்டசுட்டன்டுகளுக்கும் இடையே நடைபெற்ற முப்பதாண்டுப் போரில் (1618-1648). புனித ரோமப் பேரரசு, எசுப்பானிய அரசு, குரோசியா, ஆத்திரியா, பவேரியா, அங்கேரி முதலிய கத்தோலிக்க நாடுகள் டச் குடியரசு, சுவீடன், இங்கிலாந்து முதலிய ப்ராடஸ்டன்ட் நாடுகளுடன் மோதின. இது தவிர எண்பதாண்டு காலமாக டச் குடியரசு எசுப்பானிய பேரரசிடமிருந்து விடுதலை பெற போராடிக் கொண்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற போர்களால், ஐரோப்பா கண்டத்தின் பெரும் பகுதி நாசமடைந்து மக்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்தனர். அரை நூற்றாண்டு தொடர்ந்து போரிட்டதால், அனைத்து நாடுகள் சோர்வடைந்திருந்தன.

அமைதி ஒப்பந்தங்கள்[தொகு]

முறையான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் முன்னரே ஆத்திரிய ஆபுசுபர்கு ல்லது ஆப்ஃசுபர்கு(Hamburg) குடிக்கும், பிரான்சுக்கும் இடையே பேச்சு வார்த்தை இருந்து வந்தது. பின்னர் பேச்சு வார்த்தைக்கு முன்னோடியாக சுவீடனும் புனித ரோமன் பேரரசும் ஆம்பர்கில் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. அமைதிப் பேச்சு வார்த்தை நடக்க வெசிட்டுஃபாலியா மாகாணம் (தற்கால இடாய்ச்சுலாந்து நாட்டின் ஒரு பகுதி) தேர்ந்தெடுக்கப்பட்டது. குறிப்பாக, ஓசுனாப்ருயூக் மற்றும் மியூன்சிட்டர் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

தூது குழுக்கள்[தொகு]

1643 இல் தொடங்கிய பேச்சு வார்த்தைகளில் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட தூது குழுக்கள் பங்கேற்றன. 16 ஐரோப்பிய அரசுகள் மற்றும் 66 ரோமப் பேரரசு மாகாணங்கள், இப்பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றன. டியூ டி ஆர்லியான் (பிரான்சு), யொஃகான் ஆக்ஃசன்சிட்டியர்னா (Oxenstierna) (சுவீடன்), மேக்சிமில்லியான் வான் டிரௌட்மன்சிடோர்ஃப் (Count Maximilian von Trautmansdorff) (புனித ரோமன் பேரரசு), கசுப்பார் டி பிராக்கமொண்ட்டே யி குசிமன் (Gaspar de Bracamonte y Guzmán)(எசுப்பானியா), ஃபாபியோ சிகி (கொலோன்), ஆகியோர் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்ற முக்கிய தூதுவர்களாவர்.

விளைவுகள்[தொகு]

அமைதிக்குப் பிறகு ஐரோப்பிய கண்டம் (1648)

அமைதி பேச்சு வார்த்தைகள் காரணமாக கீழே குறிப்பிட்டுள்ள உடன்படிக்கைகள் ஏற்பட்டன:

  1. புனித ரோமன் பேரரசர் மூன்றாம் ஃப்ர்டினாண்டின் அதிகாரங்கள் பல பறிக்கப்பட்டு, பேரரசின் மாகாணங்களுக்கு அளிக்கப்பட்டன
  2. நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து. செவோய், மிலான், ஜெனோவா, மாண்டோவா, டஸ்கனி, லூக்கா, பார்மா, மோதேனா ஆகியவை புனித ரோமன் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றன. சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டன
  3. சுவீடனுக்கு மேற்கு பொமரேனியா, விஸ்மார், ப்ரெமன், வெர்டன் ஆகிய பிரதேசங்களும், ஐந்து லட்சம் டாலர்கள் இழப்பீடும், ரோமப் பேரரசின் பாராளுமன்றத்தில் ஒரு இடமும் வழங்கப்பட்டன
  4. ஃப்ரான்சிற்கு மெட்ஸ், டவுல், வெர்டுன், டெகாபோல் ஆகிய பிரதேசங்கள் வழங்கப்பட்டன.
  5. பலாடினேட் பிரதேசம் கத்தோலிக்கர்களுக்கும் ப்ராடஸ்டன்டுகளுக்கும் இடையே பிரிவினை செய்யப் பட்டது.
  6. ப்ரஷியாவிற்கு ப்ரான்டன்பர்க் பிரதேசம் அளிக்கப்பட்டது.

இந்த அமைதி ஒப்பந்தத்தால் அரை நூற்றாண்டாக மத அடிப்படையில் ஐரோப்பாவில் நடை பெற்றுவந்த போர்கள் முற்றுப் பெற்று அமைதி திரும்பியது. ஐரோப்பாவில் ராஜ்யங்களின் (kingdoms) ஆதிக்கம் குறைந்து, தேசங்களின் (nation-states) அடிப்படையில் அரசியல் பரிவர்த்தனைகள் நிகழத் தொடங்கின.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Peace of Westphalia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.