வெறிபாடிய காமக் கண்ணியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெறிபாடிய காமக்கண்ணியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்க நூல்களில் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. [1] இரண்டும் குறிஞ்சித் திணை பற்றிப் பாடிய அகப்பொருள் பாடல்கள். இரண்டு பாடல்களிலும் தலைவி தன் தோழியிடம் தலைவனைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறாள். இரண்டு பாடல்களிலும் வெறியாட்டு பற்றிய செய்திகள் உள்ளன.

பொருளடக்கம்

பெயர் விளக்கம் [தொகு]

வெறியாட்டு விழாவைப் பற்றி இப் புலவர் தம் இரு பாடல்களிலும் பாடியுள்ளதால் இவரை வெறிபாடிய காமக் கண்ணியார் என்றனர். காமக் கண் என்பது வெறியாடும் பெண்ணின் காமக் கண்.
  • இவர் பாடற் பொருளால் பெயர் பெற்ற புலவர்.

வெறியாட்டு [தொகு]

தலைவன் தலைவியைத் துய்த்தான். அவன் ஏக்கத்தால் தலைவி மெலிந்தாள். மெலிவுக்குக் காரணம் தாய் ஆராய்ந்தது பற்றியும், வெறியாட்டு விழாக் கொண்டாடியது பற்றியும், விழாவுக்குப் பின் நிகழ்ந்தது பற்றியும் இப் புலவர் தன் இரு பாடல்களிலும் கூறியுள்ள செய்திகளின் தொகுப்பு இது.

  • தலைவன் தலைவி உறவு தாய்க்குத் தெரியாது.
  • தலையளி செய்யாத தலைவனை நினைந்து ஏங்கும் தலைவி உடல் மெலிந்துபோகிறாள். அதனால் அவளது கைவளை கழல்கிறது.
  • தலைவி மெலிவுக்குக் காரணம் என்னவென்று அவளது தாய் குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டைக் கேட்கிறாள். அவளும் அவளைச் சேர்ந்தவர்களும் 'பொய்வல் பெண்டிர்'. அவள் பிரம்பைத் தலைவியின் கையில் வைத்துப் பார்த்துக் குறி சொல்கிறாள்.
  • குறிக்காரி நெடுவேளாகிய முருகனைப் பேணி விழாக் கொண்டாடினால் இவள் ஏக்கம் தணியும் என்கிறாள்.
  • அதன்படி விழாக் கொண்டாடினர்.
  • அந்த விழாவை முருகாற்றுப்படுத்தல் என்றும் கூறுவர்.
  • மகளின் அழகு முன்பு இருந்ததைவிட மேலும் சிறக்கவேண்டும் எனத் தாய் வேண்டிக்கொள்வாள்.
  • மனையில் இன்னிசை முழங்கப்படும்.
  • விழாவுக்குக் களம் அமைப்பர். அகன்ற பந்தல் போடுவர்.
  • முருகாற்றுப்படுத்தும் பெண்ணுக்கு வெள்ளெருக்கு மாலையும், கடம்பு மாலையும் அணிவிப்பர்.
  • வேலன் வீடெங்கும் எதிரொலிக்கும்படி முருகன் பெயர் சொல்லிப் பாடிக்கொண்டு கைகளை உயர்த்தி ஆடுவான்.
  • (மறி என்னும் ஆட்டுக்குட்டியைப்) பலி கொடுப்பான்.
  • அதன் குருதியில் கலந்து தினையை மனையெங்கும் தூவுவான்.
  • பொம்மலாட்டத்தில் பொம்மையை ஆட்டுவது போல வெறியாடு மகளைத் தன் விருப்பப்படி ஆட்டுவிப்பான்.
இதுதான் வெறியாட்டு.

பாடல் தரும் செய்திகள் [தொகு]

  • வெறியாட்டு விழாக் கொண்டாடி முடிந்த நாளின் நள்ளிரவில் தலைவன் தலைவியின் இல்லத்துக்கு வந்துவிட்டான். தலைவியை வேலன் பிரம்பால் அடித்த இடங்களிலெல்லாம் உயிர் குழைந்து இன்பம் ஏறும் வகையில் ஆரத் தழுவித் தழுவி ஆறுதல் கூறினான். [2]
  • என் கைகளில் கழன்ற வளையல் வெறியாடிய பின் முருகன் அருளால் கழலாமல் நின்றுவிட்டால், நின்றுவிட்ட செய்தியை என் கான்கெழு நாடன் கேட்டால், பிறன் ஒருவன் வளையல் செறியச் செய்தான் என எண்ணினால், நான் உயிர் வாழமாட்டேன் - என்கிறாள் தலைவி. [3]

அடிக்குறிப்பு [தொகு]

  1. அகநானூறு 22, 98
  2. அகநானூறு 22
  3. அகநானூறு 98
சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்
அள்ளூர் நன்முல்லையார் | ஆதி மந்தியார் | ஒக்கூர் மாசாத்தியார் | ஓரம்போகியார் | ஔவையார் | கச்சிப்பேட்டு நாகையார் | கழார்க் கீரன் எயிற்றியார் | காக்கை பாடினியார் நச்செள்ளையார் | காவற்பெண்டு | காமக்கணி பசலையார் | குறமகள் இளவெயினியார் | குறமகள் குறிஎயினியார் | குமிழி ஞாழலார் நப்பசலையார் | நக்கண்ணையார் | நன்னாகையார் | நெடும்பல்லியத்தை | பக்குடுக்கை நன்கணியார் | பூங்கண் உத்திரையார் | பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு | பேரெயில் முறுவலார் | பேயார் | பேய்மகள் இளவெயினியார் | பொதும்பில் புல்லாளங் கண்ணியார் | பொன்முடியார் | மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் | மாரிப்பித்தியார் | மாறலோகத்து நப்பசலையார் | முள்ளியூர்ப் பூதியார் | வருமுலையாரித்தி | வெறியாடிய காமக் கண்ணியார் | வெள்ளி வீதியார் | வெண்ணிக் குயத்தியார் | வெண்மணிப் பூதியார்
பா    தொ