வைசாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெசாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பௌத்த பிக்குகள் இந்தியாவில் உள்ள சிராவஸ்தி அருகே உள்ள ஜேடவனத் தோட்டத்தில் புத்த பூர்ணிமா விழா கொண்டாடுதல்

புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது வைசாகம் அல்லது விசாகம் (இலங்கையில்) (Wesak) மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.

இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.[1][2][3]

  1. சித்தார்த்த கௌதமர் லும்பினி (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்த நாள்.
  2. புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள்.
  3. புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள். (இடம்:குசிநகர்)

இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணை நாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள் நம்புகின்றனர். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இலங்கையில் வெசாக் நாள்[தொகு]

கொழும்பில் வெசாக் பந்தல் ஒன்று

இது இலங்கை பௌத்தர்களினதும் பண்டிகை நாளாகும். "வெசாக்" மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர்வாணம்) ஆகியவற்றை நினைவுறுத்தி இலங்கையில் பௌத்த சிங்களவர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும். "வெசாக்" என்பது தமிழ் சொல் அல்ல. ஆனால் இலங்கைத் தமிழர்களும் வெசாக் என்றே அழைக்கின்றனர். இலங்கையில் தற்போது காணப்படும் இந்த வெசாக் கூடுகள், தோரணங்கள் அமைத்தல் போன்ற வெசாக் கொண்டாட்ட முறை சீனக் கலாச்சாரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகின்றது.

வெசாக் கூடு[தொகு]

குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் வீடுகளில் மூங்கில் மற்றும் ஈக்கிள் குச்சிகளால் கூடுகள் செய்யப்பட்டு மெல்லிய கடதாசிகளினால் வடிவமைக்கப்பட்டு அதற்குள் மெழுகுவர்த்தியை ஏற்றி வீடுகளின் முன்னே உயரத் தொங்கவிடுவர். இவை இலங்கையில் “வெசாக் கூடு” என்று அழைக்கப்படுகின்றது. இந்த வெசாக் கூடுகள் பல்வேறு வடிவங்களில் இருக்கும். ஒவ்வொருவரும் தத்தமது கலைவண்ணத்தை இங்கே காட்டியிருப்பர்.

இதைத் தவிர வீடுகளில் தொங்கவிடக் கூடிய சிறிய வகை வெசாக் கூடுகள் கடைகளில் விற்பனை செய்யப்படும். இக்காலப்பகுதியில் இவை அதிகம் விற்பனையாகும். இவைகளும் உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி தொங்கவிடுபவைகள் தான். மின்சாரம் வழங்கப்படும் பிரதேசங்களில் மெழுகுவர்த்திக்குப் பதிலாக மின்விளக்குகளை கூடுகளின் உள்ளே தொங்கவிடுவர்.

வெசாக் தோரணங்கள்[தொகு]

பிரதான சந்திகளில் மாபெரும் மின்னலங்காரத் தோரணங்கள் பல இலட்சங்கள் செலவில் கட்டப்படும். அத்தோரணங்களில் பௌத்த வரலாற்று கதைகளை ஓவியமாக வரைந்து அதற்கு ஒலிபெருக்கியில் விளக்கங்கள் கவிதை வடிவிலும் பேச்சு வடிவிலும் கொடுக்கப்படும். இதனால் இந்தத் தோரணங்கள் கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு பெருந்திரளான மக்கள் கூட்டம் பெருகும். சில பகுதிகள் வாகனங்கள் போகமுடியாத அளவிற்கு சனக்கூட்டம் பெருகுவதால் பாதைகள் மூடப்படும். கொழும்பில் ஒவ்வொரு ஆண்டும் வெசாக் தோரணங்கள் கட்டப்படும் இடங்கள்: புறக்கோட்டை அரசமரத்தடிச் சந்தி, கிரான்ட்பாஸ் சந்தி, தெமட்டகொடை சந்தி, பொரல்லை சந்தி, வெள்ளவத்தை, பேலியகொடை சந்தி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

பௌத்த காலக் கணிப்பீட்டு முறை[தொகு]

புத்தர் பிறந்த நாள் எனக் கருதப்படும் கி.மு. 563 இல் இருந்து பௌத்த காலக் கணிப்பீட்டு முறை ஒன்றும் நடைமுறையில் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fowler, Jeaneane D. (1997). World Religions: it is celebrated to mark the birth, enlightenment and the passing away of the Lord Buddha. An Introduction for Students. Sussex Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-898723-48-6. 
  2. The World Buddhist Directory
  3. "Visakha Puja". Accesstoinsight.org. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசாகம்&oldid=3229515" இலிருந்து மீள்விக்கப்பட்டது