வெண்கலக் காலம்
வெண்கலக் காலம் (Bronze Age) மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு காலகட்டமாகும். இக்காலத்தில் முன்னரிலும் மேம்பட்ட உலோகவேலைத் தொழில்நுட்பம், செப்பு, தகரம் என்பவற்றை, நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்து உருக்குதல், வெண்கலம் ஆக்குவதற்காக அவ்விரு உலோகங்களையும் கலத்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது. வெண்கலக் காலம், வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான முக்கால முறையில் இரண்டாவது காலகட்டம் ஆகும். இம் முக்காலங்களில் முதலாவது கற்காலமும், மூன்றாவது இரும்புக் காலமும் ஆகும். இந்த முறையின் கீழ், சில பகுதிகளில், வெண்கலக் காலம், புதிய கற்காலத்தை அடுத்து வருகிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது.
பொருளடக்கம் |
வரலாறு[தொகு]
தொல்லியலின் முக்கால முறைமையின் படி கற்காலத்தை அடுத்து வெண்காலக்காலம் வருகிறது. தொன்மவியல் கதைகளின் படி இதற்கு முன் தங்கக்காலமும் வெள்ளிக்காலமும் இருப்பதாகக் கருதப்பட்டாலும் அவை வரலாற்று ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக்காலம் போன்றவை வரலாற்று ஆய்வாளர்களால் பொதுவாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த வெண்கலக் காலம் புவியின் ஒவ்வொரு பகுதியிலும் தொடங்கிய காலம் வேறுபடுகிறது. தகரக்கனிமத்தில் இருந்து தகரத்தை பிரித்தெடுத்து அதை செப்புக்கூழோடு சேர்ப்பர்.
சிந்து சமவெளி[தொகு]
சிந்துவெளி நாகரிகத்தில் வெண்கலத்தின் பயன்பாடு கி.மு. முப்பத்தி மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. அரப்பன் மக்கள் உலோகவியலில் செம்பு, வெண்கலம், ஈயம் மற்றும் தகரம் போன்றவற்றை பற்றிய புதிய நுட்பங்களை உருவாக்கினர். இப்பகுதியில் வெண்கலக் காலம் முடிந்தவுடன் இரும்புக் காலம் எழுந்தது. வெண்கல-இரும்புக் கால குழப்ப காலம் கி.மு. பதினேழாம் நூற்றாண்டில் இருந்து கி.மு. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை இருந்ததாக கணிக்கப்படுகிறது. இப்பகுதியின் வெண்கலக் காலம் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.
| ஆண்டுகள் (கி. மு. வில்) | கட்டம் | காலம் |
| 3300-2600 | முந்தைய அரப்பன் (முந்தைய வெண்கலக் காலம்) | |
|---|---|---|
| 3300-2800 | இரவி கட்டம் | |
| 2800-2600 | கோட் திசி கட்டம் (முதலாம் நௌசாரா, ஏழாம் மெகர்கார்) | |
| 2600-1900 | முதிர்ச்சி பெற்ற அரப்பன் சிந்துவெளி நாகரிகம் | ஓரிடமாக்கல் காலம் |
| 2600-2450 | மூன்றாம் அரப்பனின் சடைப்பகுதி, இரண்டாம் நௌசாரா | |
| 2450-2200 | மூன்றாம் அரப்பனின் இடைப்பகுதி | |
| 2200-1900 | மூன்றாம் அரப்பனின் கடைப்பகுதி | |
| 1900-1300 | பிந்தைய அரப்பன் செமட்ரி எனப்படும் ஓச்சர் வண்ணப் பானைகள் செய்யப்பட்ட காலம் | ஓரிடப்படுத்தல் காலம் |
| 1900-1700 | நாலாம் அரப்பன் | |
| 1700-1300 | ஐந்தாம் அரப்பன் |
பண்டைய எகிப்து[தொகு]
பண்டைய எகிப்தில் வெண்கலத்தின் பயன்பாடு கி.மு. முப்பத்தி இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. எகிப்தின் முந்தைய வெண்கல அரசுகள் கி.மு. மூன்றாம் ஆயிராவாண்டுக்கு முன் தொடங்கி கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டில் முடிவடைகிறது. மத்திய வெண்கல அரசுகள் கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டுக்கு முன் தொடங்கி கி.மு. பதினேழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் முடிவடைகிறது. பிந்தைய வெண்கல அரசுகள் கி.மு. கி.மு. பதினேழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் தொடங்கி கி.மு. முதலாம் ஆயிராவாண்டில் முடிவடைகிறது. இந்த பிந்தைய வெண்கல அரசுகளின் இறுதிக்காலத்திலேயே வெண்கல-இரும்புக் கால குழப்ப காலமும் எகிப்தில் தொடங்கிவிட்டது.
பண்டைய சீனமும் கொரியாவும்[தொகு]
பண்டைய சீனத்தில் மாசியயோ சமூக (கி.மு. முப்பத்தி ஒன்றாம் நூற்றாண்டு முதல் இருபத்தி ஏழாம் நூற்றாண்டு வரை) வெண்கலக் காலம் அறிமுகமானது. எனினும் கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டின் ஆரம்பம் தொடங்கி கி.மு. எட்டாம் நூற்றாண்டுவரையில் வண்கலத்தின் பயன்பாடு இப்பகுதியில் பரவலாக காணப்பட்டது. கொரியா தீபகற்பத்தில் வெண்கலக்காலம் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டு ஆரம்பமானது.
பண்டைய பிரிட்டன்[தொகு]
பண்டைய பிரிட்டனில் முந்தைய வெண்கலக் காலம் கி. மு. இருபத்தி ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி கி. மு. பதினைந்தாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்தது. பிரிட்டனில் வெண்கலத்தில் தோற்ற காலம் குறித்து தெளிவான வரையறை இல்லாவிட்டாலும் அதன் பிறகு வந்த மத்திய வெண்கலக் காலமும் புதிய வெண்கலக் காலமும் பின்வருமாறு கணிக்கப்படுகின்றன
- முந்தைய வெண்கலக் காலம் (கி. மு. 2500-1500)
- கி. மு. 2500 - 2000: மவுன்ட் பிளசன்ட் பகுதி, முந்தைய பீக்கர் சமூகம் (செம்பும் தகரமும்)
- கி. மு. 2100-1900: பிந்தைய பீக்கர் சமூகம், கத்திகளும் வேல்களும் அறிமுகப்படுத்தப்பட்ட காலம்
- கி. மு. 1900-1500: பெட் பிரான்வென் காலம் (செம்பும் தகரமும்)
- மத்திய வெண்கலக் காலம் (கி. மு. 1500-1000)
- கி. மு. 1500-1300: ஆக்டன் பார்கு பகுதி, பிணைக்கப்பட்ட ஈட்டிகள் (செம்பும் தகரமும் அல்லது செம்பும் ஈயமும்)
- கி. மு. 1300-1200: நைட்டன் ஹெத் காலம்
- கி. மு. 1200-1000: முந்தைய அர்ன்பீல்ட் பகுதி
- பிந்தைய வெண்கலக் காலம் (கி. மு. 1000-700)
- கி. மு. 1000-900 BC: பிந்தைய அர்ன்பீல்ட்
- கி. மு. 800-700 BC: எவர்ட் பார்க் பகுதி, வாள்கள் உருவாக்கம் பெற்ற காலம்
வெண்கலக் காலம் இல்லாத பகுதிகள்[தொகு]
ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது. அதனால் இதை வெண்கலக் காலம் இல்லாத பகுதிகள் எனக் கூறலாம்.
ஜப்பான்[தொகு]
ஜப்பான் பகுதிகளில் சோமான் காலம் வழக்கிழந்த பிறகு கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவில் வெண்கலமும் இரும்பும் ஒன்றாகவே அறிமுகமானது. இந்த இரண்டு உலோகமும் கொரிய தீபகற்பத்திலிருந்து இங்கு சென்றதால் ஜப்பானுக்கு வெண்கலக் காலம் என்று தனியாக இல்லை. ஜப்பானின் முந்தைய குடிகளை விரட்டிய சோமான்களின் வழியாக பரவிய உலோகக் காலத்தில் இரும்பே வேளாண்மைக்கும் மற்ற கருவிகள் உருவாக்கத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. வெண்கலம் கலைப்பொருட்களுக்கும் மதச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களை வைத்துக் கொள்வதற்கே பயன்படுத்தப்பட்டன.
ஆப்பிரிக்கா[தொகு]
மற்ற இடங்களில் வெண்கலக் காலம் வழக்கில் இருந்த போது ஆப்பிரிக்காவில் எகிப்தியப் பகுதிகளைத் தவிர்த்த இடங்களில் புதிய கற்காலமே வழக்கில் இருந்தது. வெண்கலம் ஆப்ரிக்கப் பகுதிகளில் அதிகம் காணப்படாவிட்டாலும் செப்பை மட்டும் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க ஆப்ரிக்கர்கள் அறிந்தே இருந்தனர். எனினும் இந்த செப்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தில் இப்பகுதி முதிர்ச்சி அடைந்து காணப்படவில்லை.
தென் இந்தியாவும் இலங்கையும்[தொகு]
தென் இந்தியாவில் வெண்கலப் பொருட்கள் வட இந்தியாவில் இருந்தே அக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. இதற்கு உதாரணமாக கொடுமணல் அகழாய்வில் கிடைத்த கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவு பழமை என்று கருதத்தக்க வட இந்தியாவின் வெண்கலப் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டின் வட பகுதிகள் புதிய கற்காலத்தில் இருந்து நேரடியாக இரும்புக்காலத்துக்கும் தென் தமிழகம் இடைக்கற்காலத்தில் இருந்து நேரடியாக இரும்புக்காலத்துக்கும் மாறின.
இலங்கையிலும் வெண்கலக் காலம் என்று தனிச்சிறப்பாக ஏதுமில்லாவிடினும் அங்கு செம்பு மட்டும் தாதுப்பொருளில் இருந்து பிரிக்கப்பட்டு சிறிதளவு பயன்பாடில் இருந்துள்ளன.