வி. பொ. பழனிவேலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. பொ. பழனிவேலன் (30-10-1909--20-12-2005) தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர். பெரியாரியக் கருத்துகளில் முனைப்பானவர். மாணாக்கன் என்னும் மாத இதழை நடத்தி வந்தார்.திருத்துறைக்கிழார் என்னும் புனை பெயரும் இவர் கொண்டிருந்தார்.

பிறப்பு,இளமை,கல்வி[தொகு]

தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், விழல்குடி என்னும் சிற்றூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியைப் பிறந்த ஊரிலும் உயர்கல்வியை ராஜாமடம் என்னும் ஊரிலும் கற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டமும் பீ. ஓ. எல் பட்டமும் பெற்றார் தஞ்சையில் ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சிப் பெற்றார்.

ஆசிரியர் பணி, பிற பணிகள்[தொகு]

தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் தலைமைஆசிரியராகப் பணி புரிந்தார். 1950 முதல் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிசெய்து 1968 இல் ஓய்வு பெற்றார். மாணாக்கன் என்னும் தனித்தமிழ் மாத இதழை 1968முதல் 1975 வரை பல இன்னல்களுக்கிடையில் தொடர்ந்து நடத்தி வந்தார். 1972இல் மறைமலையடிகள் மகளிர் தமிழ்ப் பயிற்றுக் கல்லூரி (மதுரைத் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்தது) தொடங்கி 1975 வரை நடத்தினார். உலகத் தமிழ்க் கழகம், தமிழியக்கம், தமிழின விடுதலைக் கழகம் தமிழக நல்வாழ்வு மாமன்றம் ஆகிய இயக்கங்களோடு தொடர்புகொண்டு மொழி இனம் பொதுமை நலத்திற்காகப் பாடுபட்டார். தேவநேயப்பாவாணருடன் இணைந்து தமிழ்த் தொண்டு ஆற்றினார். தென்மொழி இதழில் சில காலம் இருந்தார். 1959 சூன் திங்களில் தலைவர் கி.ஆ.பெ.வி.யின் அழைப்புக்கு இணங்க ஆகாசவாணி எதிர்ப்புப் போராட்டத்தை மாணவர்களையும் சேர்த்து நடத்தினார். சாமி.சிதம்பரனார் இவருக்கு நண்பர்.பேரா.சி.இலக்குவனார் இவருடைய ஒருசாலை மாணாக்கர். குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் கொள்கைப் பிடிப்புடன் 96 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார்.

பட்டங்கள்,சிறப்புகள்[தொகு]

தனித்தமிழ் அரிமா, தமிழிசைச்செம்மல், செந்தமிழ்க் காவலர். தமிழகப் புலவர் குழு உறுப்பினர். இலண்டன் தமிழ்ச் சங்கத்தின் பாராட்டும் பரிசும்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • வேலன் சிந்தனைப் பூங்கொத்து
  • மொழித் தூய்மை தேவையா?
  • வேலா பிறமொழி-தமிழ் அகரமுதலி
  • பண்டைத் தமிழர் வாழ்வியல்
  • திருக்குறள் தேர்பொருளுரை
  • தமிழிலக்கியச் சொல் அகரமுதலி
  • Thamizh a Universal Language

அச்சேறாத நூல்கள்[தொகு]

பண்டைத் தமிழ் நூல்களின் அழிவும் ஆக்கமும் கட்டுரைக் கோவை பாவரங்குகளில் பாடிய பாத்தொகுப்பு தமிழ் வளர்ச்சிக் கட்டுரைகள் சங்கத் தமிழ் அகர முதலி

இதழ்களுடன் தொடர்பு[தொகு]

செந்தமிழ்ச் செல்வி,செந்தமிழ், குறளியம், குத்தூசி, அறிவுப்பாதை, பகுத்தறிவு, விடுதலை, தமிழ்ப்பாவை, எழுகதிர் போன்ற இதழ்களில் தமிழ் வளர்ச்சி பகுத்தறிவு தொடர்பான கட்டுரைகளையும் பாடல்களையும் எழுதினார்.

மேற்கோள் நூல்[தொகு]

தனித்தமிழரிமா புலவர் வி.பொ.பழனிவேலனார் (2006)

(இக்குறு நூலை ஆக்கியோர்: முனைவர் தமிழ்முடி முனைவர் ப.தமிழ்ப்பாவை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பொ._பழனிவேலன்&oldid=1736293" இலிருந்து மீள்விக்கப்பட்டது