விரல் விகிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hand with index finger being shorter than the ring finger, resulting in a small 2D:4D ratio, pointing to a high exposure to testosterone in the uterus.

விரல் விகிதம் என்பது விரல்களினது நீளத்தின் விகிதம் ஆகும். விரல் விகிதம் வலது கையின் சுட்டு விரல் (இரண்டாவது விரல்: 2வி) நீளத்தை மோதிரவிரலின் நீளத்தால் (நான்காவது விரல்: 4வி) வகுப்பதன் (2வி / 4வி) மூலம் கணிக்கப்படுகின்றது. சுட்டு விரலை விட நீளமான மோதிரவிரல் உடையவருக்கு இதன் பெறுமானம் ஒன்றிலும் குறைவாக இருக்கும், அதேவேளை மோதிரவிரலை விட சுட்டு விரல் நீளமாக இருப்பவருக்கு ஒன்றிலும் கூடியதாக இருக்கும். இரண்டுமே சமமாக உள்ளோருக்கு இதன் விகிதத்தின் பெறுமானம் ஒன்று ஆகும்.

விரல் நீளம் கணிப்பு[தொகு]

விரலின் நீளத்தைக் கணிப்பதற்கு சில முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு விரலின் நுனிப்பகுதியில் இருந்து விரலும் கையும் இணையும் இடத்தில் அமைந்துள்ள தோல் மடிப்பு (இரேகை) வரை உள்ள அளவு விரலின் நீளமாகக் கணிக்கப்படுகின்றது. இதை அளக்கும் முறையில் வழுக்கள் ஏற்படலாம். சாதரணமாக, இதை ஒரு அளவுகோலால் அளக்கலாம்,ஆனால் வெறும் பார்வைத் தோற்றத்தை மட்டும் வைத்து இதை மதிப்பிட முயன்றால், கையின் அமைப்பின் காரணமாக, அளவீடுகளில் வழுக்கள் ஏற்படலாம். பொதுவாக, சுட்டு விரலின் கீழே உள்ள தோல் மடிப்பு ஒரு கோடாகவும், மோதிரவிரலின் கீழ் உள்ளது இரண்டு கோடாகவும் இருக்கும்.[1]

பால் ஈருருமை[தொகு]

2வி:4வி விகிதம் பால் ஈருருமையைக் காட்டுகின்றது. சுட்டு விரலும் மோதிரவிரலும் ஆண்ட்ரோசன் எனப்படும் ஆணூக்கியத்தின் (ஆண்மை ஒர்மோன், எ.கா: தெசுத்தொசுத்திரோன்) தாக்கத்திற்குள்ளாகின்றது. ஆணூக்கியத்தின் அளவு கூடினால் மோதிரவிரலின் அளவும் கூடும், இது கருப்பையில் முளைய வளர்ச்சியின் போது தீர்மானிக்கப்படுகின்றது. குறைவான 2வி:4வி விகிதம் கூடுதலான ஆண்ட்ரோசன் அளவு உள்ளதைக் காட்டுகின்றது.

இயல்பு நிலையில் ஆண்களில் சுட்டு விரல் மோதிரவிரலைவிடக் கட்டையாகவே இருக்கின்றது. பெண்களில் சுட்டு விரல் மோதிரவிரலை விடச் சிறிது கட்டையாக அல்லது ஏறத்தாள சமமாக அல்லது சிறிது நீளமாக இருக்கும்.

136 ஆண்களும் 137 பெண்களும் ஈடுபடுத்தப்பட்ட ஆய்வுப் படிப்பு (3) ஒன்றில் பின்வரும் பெறுபேறுகள் பெறப்பட்டன:[2]

  • ஆண்கள்: சராசரிப் பெறுமானம் ௦.947, நியம விலகல் 0.029.
  • பெண்கள்: சராசரிப் பெறுமானம் ௦.965, நியம விலகல் 0.026.

இதன்படி, இயல்புநிலையில், ஆண்களுக்கு ௦.910 – 0.984 எனும் வீச்சு எல்லையிலும் பெண்களுக்கு 0.932 – 0.998 எனும் வீச்சு எல்லையிலும் விரல் விகிதம் காணப்படுகின்றது.மேலும், இவ்விரு விரல்களின் நீள வித்தியாசம் ஆண்களில் பெண்களைவிடக் கூடுதலாக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு ஆணின் சுட்டு விரல் நீளம் 7.3 செ.மீ ; மோதிரவிரல் நீளம் 7.7 செ.மீ, எனவே, நீள வித்தியாசம் 0.4 செ.மீ. ஒரு பெண்ணின் சுட்டு விரல் நீளம் 7.6 செ.மீ ; மோதிரவிரல் நீளம் 7.7 செ.மீ, நீள வித்தியாசம் 0.1 செ.மீ.

பாலீர்ப்பு[தொகு]

விரல் விகிதம் இயல்புநிலையில் இருந்து மாறுபடுதலை அவதானித்தல் அவர்களின் பாலீர்ப்புத் தன்மையை வேறுபடுவதைக் காட்டுகின்றது என அறியப்பட்டுள்ளது. ஓருபாலீர்ப்புடைய பெண்விழைபெண்களில் ஆண்களைப் போன்ற விரல் அமைப்பு, அதாவது சுட்டு விரல் கட்டையாக, காணப்படலாம். ஆண்களைப் பொறுத்தவரையில் இக்கணிப்பு சற்றுச் சிக்கலானது. அவர்களின் குடும்பத்தில் பல மூத்த ஆண் சகோதரர்கள் இருக்கும் பட்சத்தில் சுட்டு விரல் மிகவும் கட்டையாக இருந்தால் அவர்கள் ஒருபாலீர்ப்புடைய ஆண்விழைஆண்களாக இருக்கலாம்.[3] 2வி:4வி விகிதம் குறைவாக உள்ள ஆண்விழைஆண்கள் பெண்ணிய இயல்பைக் கொண்டுள்ளனர்.[4]

அறிவாற்றல் மற்றும் தொழில்[தொகு]

எத்தகைய துறைகளில் குறிப்பிட்ட நபர் சிறந்து விளங்குவார் என்பது விரல்களின் வித்தியாசம் மூலம் ஆய்வுகளில் கணிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஆய்வு ஒன்றில் சுட்டுவிரலை விட மோதிரவிரல் கட்டையாக உள்ள சிறார்கள் கணிதத்தை விட எழுத்தறிவில் முன்னணியில் இருப்பதையும் மோதிரவிரல் நீளமாக இருப்பவர்கள் கணிதத்தில் கூர்மையாக இருப்பதையும் அறிந்தனர். தெசுத்தொசுத்திரோன் எனப்படும் ஆணூக்கியத்தின் வெளிப்படுமை கூடுதலாக உள்ளவர்களில் மோதிரவிரல் நீளமாக அமைந்துள்ளதையும் ஈசுத்திரோசன் எனும் பெண்ணூக்கியத்தின் வெளிப்படுமை கூடுதலாக உள்ளவர்களில் சுட்டுவிரல் நீளமாக உள்ளதையும் இவ்வாய்வு விளக்கியது.[5] 2வி:4வி விகிதம் குறைவாக உள்ளோர் இசைத்துறையில் வல்லுனராக இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. 2வி:4வி விகிதம் உயர்வாக இருந்தால் அவர்கள் உடல் திறன் விளையாட்டில் முன்னணியில் இருப்பார்கள்.

2வி:4வி விகிதம் குறைவாக அமைந்துள்ளவர்கள், மோதிரவிரல் நீளமாக உள்ளவர்கள், வியாபாரத்தில் பணம் சம்பாதிப்பது கூடுதலாக இருக்கும். தலைமைத்துவத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கும்[6] புதிய விடையங்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கும் இவ்விகிதம் குறைவாக இருக்கும்.[7]

நோய்களில் விரல் விகிதம்[தொகு]

  • மாரடைப்பு: 2வி:4வி விகிதம் ஆண்களில் உயர்வாக இருப்பது, அதாவது மோதிரவிரல் கட்டையாக இருப்பது, அவர்களில் மாரடைப்பு (இதயத்தசை இறப்பு) முற்பருவத்தில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறைத் தெரிவிக்கின்றது. தெசுத்தொசுத்திரோன் மாரடைப்பு உருவாகுவதைக் கட்டுப்படுத்துகின்றது. 2வி:4வி விகிதம் உயர்வாக உள்ள ஆண்களில் தெசுத்தொசுத்திரோன் வீதம் குறைவாகக் காணப்படுகின்றது.
  • சுக்கிலவகப் புற்றுநோய் (prostate cancer): 2வி:4வி விகிதம் உயர்வாக இருந்தால், அதாவது சுட்டு விரல் மோதிரவிரலை விட நீளமாக இருப்பவருக்கு இந்நோய் ஏற்படும் சாத்தியக்கூறு குறைவு.[8]

உளவியல் குறைபாடுகள்[தொகு]

  • 2வி:4வி விகிதம் உயர்வாக உள்ள ஆண்களில் மன அழுத்தம் உருவாகும் இடர்காரணி உயர்வடைகிறது.[9]
  • 2வி:4வி விகிதம் உயர்வாக இருந்தால் மதியிறுக்கம் அல்லது ஓட்டிசம் குறைவாக உள்ளது.[10]
  • நீளமான சுட்டுவிரல் உடையவருக்கு சிசோபிரேனியா எனப்படும் மனப்பிளவு நோய் உருவாகும் இடர்காரணி உயர்வடைகிறது.[11]
  • உயர் 2வி:4வி விகிதமுடைய பெண்களுக்கு மனநோய் உண்டாகும் இடர் காரணி உயர்ந்து உள்ளது.[12]

குண இயல்புகள்[தொகு]

  • ஆண்களில் வலுச்சண்டைக்குப் போகும் உணர்வு குறைவான 2வி:4வி விகிதத்துடன் தொடர்பு கொண்டுள்ளது.
  • இரக்கம், பரிவு போன்ற பண்புகள் சுட்டு விரல் நீளமாக இருத்தலுடன் தொடர்பு கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. T M Mayhew, L Gillam, R McDonald, and F J P Ebling (November 2007). "Human 2D (index) and 4D (ring) digit lengths: their variation and relationships during the menstrual cycle". Journal of Anatomy 211: 630–638. doi:10.1111/j.1469-7580.2007.00801.x. 
  2. Bailey AA, Hurd PL (March 2005). "Finger length ratio (2D:4D) correlates with physical aggression in men but not in women". Biological Psychology 68 (3): 215–22. doi:10.1016/j.biopsycho.2004.05.001. பப்மெட்:15620791. https://archive.org/details/sim_biological-psychology_2005-03_68_3/page/215. Lay summary – LiveScience (2 March 2005). 
  3. பிபிசி (29 March 2000). "A finger on sexuality". BBC NEWS. பார்க்கப்பட்ட நாள் 28 January 2013.
  4. McIntyre MH (December 2003). "Digit ratios, childhood gender role behavior, and erotic role preferences of gay men". Archives of Sexual Behavior 32 (6): 495–6. doi:10.1023/A:1026054625638. பப்மெட்:14627046. 
  5. பிபிசி (22 May 2007). "Fingers 'a clue to exam success'". BBC NEWS. பார்க்கப்பட்ட நாள் 28 January 2013.
  6. Derval, Diana. The Right Sensory Mix: Targeting Consumer Product Development Scientifically. Springer, 2010, p. 129-130.
  7. Derval, Diana. The Right Sensory Mix: Targeting Consumer Product Development Scientifically. Springer, 2010, p. 129-135.
  8. Walsh, Fergus (1 December 2010). "Index finger length prostate cancer clue". BBC News. http://www.bbc.co.uk/news/health-11880415. பார்த்த நாள்: 1 December 2010. 
  9. Bailey, A. & Hurd, P. (2005). "Depression in men is associated with more feminine finger length ratios". Personality and Individual Differences 39 (4): 829–836. doi:10.1016/j.paid.2004.12.017. http://www.sciencedirect.com/science/article/pii/S0191886905001133. 
  10. Manning JT, Baron-Cohen S, Wheelwright S, Sanders G (March 2001). "The 2nd to 4th digit ratio and autism". Developmental Medicine and Child Neurology 43 (3): 160–4. doi:10.1017/S0012162201000317. பப்மெட்:11263685. https://archive.org/details/sim_developmental-medicine-and-child-neurology_2001-03_43_3/page/160. 
  11. Arató M, Frecska E, Beck C, An M, Kiss H (January 2004). "Digit length pattern in schizophrenia suggests disturbed prenatal hemispheric lateralization". Progress in Neuro-psychopharmacology & Biological Psychiatry 28 (1): 191–4. doi:10.1016/j.pnpbp.2003.09.020. பப்மெட்:14687873. 
  12. Blanchard, A.; Lyons, M. (May 2010). "An Investigation into the Relationship between Digit Length Ratio and Psychopathy". British Journal of Forensic Practice 12 (2). http://lhu.academia.edu/AlysonBlanchard/Papers/305985/An_Investigation_Into_the_Relationship_Between_Digit_Length_Ratio_2D_4D_and_Psychopathy. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரல்_விகிதம்&oldid=3578268" இலிருந்து மீள்விக்கப்பட்டது