விண்கலம்
விண்வெளிப் பயணத்திற்குப் பயன்படும் ஒரு கலன், வாகனம் அல்லது எந்திரம் விண்கலம் (Spacecraft) எனப்படும். விண்கலங்கள் பல்வேறு முக்கிய பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தொலைத்தொடர்பு, புவி அவதானிப்பு, வானிலை ஆய்வு, தெரிமுறை செலுத்து நெறி, கோள்கள் ஆய்வு மற்றும் மனிதர்களையும் சரக்குகளையும் விண்வெளிக்கு அனுப்பவும் இவை பயன்படுகின்றன.
சுற்றுப்பாதை விண்கலங்கள் மீள்பயன்பாட்டுக்குகந்ததாகவும் இருக்கலாம்; பூமிக்குத் திரும்பிவரும் முறையைப் பொறுத்து விண்கலங்கள் இறக்கையற்ற விண்பெட்டகம் மற்றும் இறக்கையுடைய விண்ணூர்தி என வகைப்படுத்தப்படுகிறது.
தற்காலத்தில் ஒருசில நாடுகளே விண்பறப்புச் செயல்திறனைப் பெற்றுள்ளன: ருசியா (ருசிய மத்திய விண்வெளி முகமை), அமெரிக்கா (நாசா, அமெரிக்க வான்படை, ஸ்பேஸ்-எக்சு (இது ஒரு தனியார் நிறுவனம்)), ஐரோப்பிய ஒன்றியம் (ஐரோப்பிய விண்வெளி முகமை), சீன மக்கள் குடியரசு (சீன தேசிய விண்வெளி நிர்வாகம்), யப்பான் (யப்பானிய விண்வெளி ஆய்வு முகமை) மற்றும் இந்தியா (இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு). 2012 நிலவரப்படி அமெரிக்கா, ருசியா மற்றும் சீனா விண்பறப்புச் செயல்திறனை செய்துகாட்டியுள்ளன.
விண்கலம் மற்றும் விண்வெளிப் பறப்பு ஆகியவை அறிவியல் புனைவுகளில் பெரிதும் மையக்கருத்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.