விக்கிப்பீடியா:2010 தமிழ் இணைய மாநாட்டுக்கான கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்னுரை[தொகு]

உலகில் மனித அறிவுக்குத் தெரிந்த அனைத்துத் தகவல்களையும் ஒன்றாகத் தொகுக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டதன் முதிர்ச்சியாக “என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா” எனும் மிகப்பெரும் கலைக்களஞ்சியம் தோன்றியது. இதில் ஏற்கனவே தொகுக்கப்பட்ட தகவல்களுடன், உலகில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்கள் குறித்த தகவல்களும் சேர்க்கப்பட்டு வருகின்றன. உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் பயன்பாட்டிலுள்ள மொழிகளில் இந்த “என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா”வை அடிப்படையாகவும், வழிகாட்டியாகவும் கொண்டு கலைக்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்தக் கலைக்களஞ்சியங்களை நவீன ஊடகமான இணையத்தில் கொண்டு வரும் முயற்சியில் உருவாக்கப்பட்டதுதான் விக்கிப்பீடியா. தமிழ் உட்பட 267 மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு மொழியிலும் தன்னார்வப் பயனர்களின் பங்களிப்போடும் கூட்டு முயற்சியோடும் பல அரிய தகவல்களைக் கொண்ட கட்டுரைகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில் தமிழ் மொழியிலான விக்கிப்பீடியாவும் ஒரு அரிய தமிழ்க் கலைக்களஞ்சியமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

விக்கிப்பீடியாவின் தொடக்கம்[தொகு]

2001 ஆம் ஆண்டில் இணையதளம் அமைப்பதில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் மற்றும் தத்துவ ஆசிரியரான லாரி சாஞ்சர் ஆகியோர் அடங்கிய குழுவினர் விக்கிப்பீடியாவைத் தொடங்கினர். ஹவாய் (Hawaii) மொழியில் விக்கி (Wiki) என்ற சொல்லுக்கு விரைவு என்று பொருள். அறிவு சார்ந்த தகவல்களை விரைவாகப் பயன்பாட்டாளர்களுக்குத் தருவதால் இணைய வழி என்சைக்ளோபீடியாவிற்கு விக்கிப்பீடியா எனப் பெயரிட்டதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விக்கிப்பீடியாவிற்காக 2001 ஆம் ஆண்டில் ஜனவரி 12 ஆம் தேதியில் www.wikipedia.com என்கிற இணைய முகவரியும், ஜனவரி 13 ஆம் தேதியில் www.wikipedia.org எ‎ன்கிற இணைய முகவரியும் பதிவு செய்யப்பட்டு, ஜனவரி 15 ஆம் தேதியில் “விக்கிப்பீடியா” (Wikipedia) தொடங்கப்பட்டது.

தமிழ் விக்கிப்பீடியா[தொகு]

விக்கிப்பீடியா அமைப்பு, 2001 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரெஞ்ச் மொழியிலும், மே மாதத்தில் ஜெர்ம‎ன் மொழியிலும் விக்கிப்பீடியாக்களை உருவாக்கியது. இத்துடன் விக்கிப்பீடியா தளத்தில் பிற மொழிகளில் ஆர்வமுடையவர்கள் அம்மொழிகளில் விக்கிப்பீடியாக்களை உருவாக்கிக் கொள்ளும் வசதி செய்யப்பட்டது. இவ்வசதிகளைப் பய‎‎ன்படுத்தித் தங்கள் மொழிகளில் ர்வமுடைய பலர், அவரவர் மொழிகளுக்கான விக்கிப்பீடியாக்களைத் தொடங்கினர். ‏இப்படி உலகி‎ன் பல்வேறு நாடுகளில் பய‎ன்பாட்டில் ‏இருந்து வரும் சுமார் 267 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

2003 ம் ஆண்டில் செப்டம்பர் 30 ம் தேதியில் “மனித மேம்பாடு” எ‎‎ன்கிற தலைப்பில் ஒரு சிறு தகவல் தமிழில் இடம் பெற்றது. ஆனால் பின்னர் இது தமிழ் விக்கிப்பீடியாவின் நடைமுறைகளுக்கு ஏற்றதாக இல்லை என நீக்கப்பட்டது. இலங்கையில் பிறந்து வளைகுடா நாடான அபுதாபியில் கட்டிடப் பொறியாளராக இருந்து வரும் மயூரநாதன் என்பவர் 2003 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான முகப்புப் பக்கத்தை (முதற்பக்கம்) முதன்முதலாகத் தமிழில் உருவாக்கினார். அதன் பிறகு இவர் தொடர்ந்து பல கட்டுரைகளின் வாயிலாகப் பங்களிப்பு செய்து தமிழ் விக்கிப்பீடியாவின் பக்கம் உலகத் தமிழர்கள் பலரது கவனத்தையும் கொண்டு வந்தார்.

தன்னார்வப் பயனர்கள்[தொகு]

வணிக நோக்கமற்ற விக்கிமீடியா பவுண்டேசன் எனும் அமைப்பால் இயக்கப்படுகிறது. விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் மற்றும் பக்க வடிவமைப்புகளில் பங்களிப்பவர்கள் அனைவரும் பயனர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தவிர பயனர் நிர்வாகி, தானியங்கிகள், பயனர் அதிகாரி போன்ற சில உயர்நிலையிலான பயனர்களும் உள்ளனர். இவர்களுக்கு கட்டுரை தொகுப்பில் பயனர்களைக் காட்டிலும் கூடுதலாக சில உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியா அமைப்பு எந்தப் பயனர்களுக்கும் பணம் மற்றும் பிற பயன்கள் என்று ஏதும் அளிப்பதில்லை. இருப்பினும் அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் தன்னார்வத்துடன் பல லட்சக்கணக்கான பயனர்கள் பதிவு செய்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். தமிழ் விக்கிப்பீடியாவில் சுமார் பதினைந்தாயிரம் பயனர்கள் வரை பதிவு செய்துள்ளனர். இவர்களில் சுமார் ஐம்பது பயனர்கள் மட்டும் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.

ஐந்து தூண்கள் கொள்கை[தொகு]

விக்கிப்பீடியாவில் 1. கலைக்களஞ்சியம், 2. நடுநிலைமை, 3. இலவசக் கலைக்களஞ்சியம், 4. நன்னடத்தை, 5. கொள்கை மாற்றங்கள் என்கிற ஐந்து வழியிலான பொதுக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவை விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் என்று சொல்லப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவிலும் இக்கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கப்படும் கட்டுரைகள் பாகுபாடில்லாமல் நடுநிலைமையுடன் பிற மொழிச் சொற்கள் கலப்பின்றி இருக்க வலியுறுத்தப்படுகிறது. கட்டுரைகளில் பிற பயனர்கள் மாற்றம் செய்யும் பொழுது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆலமரத்தடி என்கிற கலந்துரையாடல் பக்கத்தின் வழியாக பயனர்களால் பரிந்துரைக்கப்படும் கொள்கைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதுபோல் விக்கிப்பீடியாவின் பெயருக்கு களங்கம் ஏற்படும் நிலையைத் தவிர்க்க சில வழிகாட்டல்களை முன்வைத்து அதைப் பின்பற்றவும் வேண்டப்படுகிறது.

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்புகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா இணையத்தில் இருக்கும் ஒரு இலவசக் கலைக்களஞ்சியம். இதில் உலகின் எப்பகுதியில் இருப்பவரும் தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகளுக்கும், வழிகாட்டலுக்கும் உட்பட்டு பங்களிப்புகளைச் செய்ய முடியும். தமிழ் விக்கிப்பீடியாவிற்குள் ஏதாவது ஒரு தகவலைத் தேடி பார்வையாளராக வந்தவர்கள் யாரும் அந்தப் பக்கத்தில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் அல்லது புதிதாக ஏதாவது சேர்க்க வேண்டும் என்கிற நிலையில் பங்களிக்க முடியும். இதே போல் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனராகப் பதிவு செய்து கொண்டு புதிய கட்டுரைகள் உருவாக்கம், ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் தேவையான மாற்றங்கள், தகவல் மற்றும் படம் சேர்க்கைகள் போன்றவற்றை செய்து பங்களிக்க முடியும்.

கட்டுரை உள்ளீடு செய்தல்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு பக்கத்திலும் இடது புறத்தில் இருக்கும் தேடல் என்கிற தலைப்பின் கீழ் காலியாக இருக்கும் பெட்டியில் கட்டுரைக்கான தலைப்பை உள்ளீடு செய்து செல் அல்லது தேடு என்ற பொத்தானைச் சொடுக்கினால், தமிழ் விக்கிப்பீடியாவில் அந்தத் தலைப்பில் கட்டுரை முன்பே இடம் பெற்றிருந்தால் அந்தப் பக்கம் திறக்கும். அந்தத் தலைப்பில் கட்டுரை எதுவும் இல்லாத நிலையில், உள்ளீடு செய்த தலைப்பு சிகப்பு நிறத்தில் தெரிவதுடன் “இந்தத் தலைப்பில் கட்டுரைகள் எதுவுமில்லை, இதை நீங்கள் உருவாக்கலாம்” என்கிற செய்தியும் கிடைக்கிறது. சிகப்பு நிறத்தில் தெரியும் தலைப்பைச் சொடுக்கினால் அந்தத் தலைப்பிற்கான புதிய தொகுத்தல் பக்கம் திறக்கிறது. இந்தப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஏற்ற முறையில் தமிழில் தட்டச்சு செய்யலாம் அல்லது முன்பே தட்டச்சு செய்யப்பட்ட கட்டுரையை அப்படியே பிரதி (Copy) செய்து உருவாக்க விரும்பும் கட்டுரைக்கான தொகுப்புப் பக்கத்தில் (Paste) ஒட்டி விடலாம்.

தொகுப்புப் பக்கத்தில் தட்டச்சு செய்து முடித்த பின்பு அதன் கீழ் உள்ள “முன் தோற்றம் காட்டு” என்கிற பொத்தானைச் சொடுக்கிக் கட்டுரை இடம் பெறும் தோற்றம் காணலாம். அவை சரியாய் இருக்கும் நிலையில் “பக்கத்தைச் சேமிக்கவும்” என்கிற பொத்தானைச் சொடுக்கினால் தமிழ் விக்கிப்பீடியாவில் அந்தக் கட்டுரை இடம் பெற்று விடும்.

விக்கிக் குறியீடுகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் அமைக்கப்படும் போது அதன் அமைப்பில் எளிமையான விக்கிக் குறிகள் சில பயன்படுத்தப்படுகிறது. இந்தக் குறியீடுகள் கட்டுரை தனித்துத் தெரியவும், விக்கிப்பீடியாவின் பிற பக்கங்களுக்குச் செல்ல இணைப்பாகவும், பிற தளங்களுக்குச் செல்ல இணைப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கீழ்காணும் சில முக்கியக் குறியீடுகளை மட்டும் காணலாம்.

தலைப்புகள்[தொகு]

கட்டுரையினுள் உள்ள தலைப்புகளுக்கு = எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. முதன்மைத் தலைப்புகளுக்கு ==முதன்மைத் தலைப்பு== என்று இரு முறையும், துணைத்தலைப்புகளுக்கு ===துணைத்தலைப்பு=== என்றும், அடுத்து வரும் உள்தலைப்புகளுக்கு ஏற்ப = குறியீட்டின் எண்ணிக்கை இருபுறமும் அதிகமாகிறது. இந்தத் தலைப்புகள் நான்கிற்கு அதிகமாகும் போது கட்டுரையின் மேல் பக்கத்தில் நாம் அளித்த தலைப்புகளைக் கொண்டு தானாகவே ஒரு பொருளடக்கப் பெட்டி உருவாகி விடுகிறது. இந்த பொருளடக்கப் பெட்டியைக் காட்டவும் மறைத்துக் கொள்ளவும் வசதி உள்ளது.

எழுத்து அமைப்பு[தொகு]

கட்டுரையில் சில இடங்களில் குறிப்பிட்ட சொற்கள் தனித்துத் தெரிய ஒற்றை மேற்கோள் குறி பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, சொல் என்று இருபுறமும் இரண்டு ஒற்றை மேற்கோள்குறியை இரு புறமும் தட்டச்சு செய்தால் சொல் என்று சாய்வெழுத்தாகவும், மூன்று ஒற்றை மேற்கோள்குறியை இரு புறமும் தட்டச்சு செய்தால் சொல் என்று தடித்த எழுத்தாகவும், ஐந்து ஒற்றை மேற்கோள்குறியை இரு புறமும் தட்டச்சு செய்தால் சொல் என்று தடித்த எழுத்தாகவும், சாய்ந்த எழுத்தாகவும் தெரியும்.

இணைப்புகள்[தொகு]

கட்டுரையின் உள்ளே இடம் பெற்றிருக்கும் ஒரு சொல்லில் உள்ள கட்டுரைக்குச் செல்ல சதுர அடைப்புக்குறி பயன்படுத்தப்படுகிறது. கட்டுரை இப்பெயரில் இருக்கலாம் என்று கருதும் சொல்லின் இருபுறமும் இரு சதுர அடைப்புக்குறிகளை இட வேண்டும். உதாரணமாக, கட்டுரையிலுள்ள கோயம்புத்துர் என்ற சொல்லின் இருபுறமும் சதுர அடைப்புக் குறிகளைப் பயன்படுத்தி கோயம்புத்தூர் என்று தட்டச்சு செய்து விட்டால் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கோயம்புத்தூர் என்ற கட்டுரைப் பக்கத்திற்கு அங்கிருந்து இணைப்பு செய்யப்பட்டு விடுகிறது. கோயம்புத்தூர் என்ற பெயரில் கட்டுரை இருந்தால் நீலநிறத்திலும் கட்டுரை இல்லாவிடில் சிகப்பு நிறத்திலும் தெரியும். நீலநிறமாக இருக்கும் பெயரில் சொடுக்கினால் அப்பெயரிலான கட்டுரைக்கு நேரடியாகச் சென்றுவிடுகிறது. சிகப்பு நிறமாக இருக்கும் பெயரில் சொடுக்கினால் அந்தப்பக்கத்தை உருவாக்கச் சொல்லி வேண்டுவதுடன் அதற்கான தொகுப்புப் பக்கமும் திறக்கிறது. இது உள் இணைப்புகள் எனப்படுகிறது.

இதுபோல் கட்டுரையில் தேவையான இடங்களில் பிற இணைய தளங்களுக்கு இணைப்பு செய்ய ஒரு சதுர அடைப்புக் குறியுடன் அந்த இணைய தள முகவரியை அளித்து நாம் அளிக்கும் பெயரையும் சேர்க்கலாம். உதாரணமாக உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தளத்திற்கு இணைப்பு செய்ய இணைய முகவரியிட்டு சிறிது இடைவெளி விட்டு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்று தட்டச்சு செய்து இருபுறமும் ஒரு சதுர அடைப்புக் குறியிட்டு விடவேண்டும். அதாவது, உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்று தட்டச்சு செய்தால் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்று நீலநிறத்தில் தனியே தெரிவதுடன் அதைச் சொடுக்கினால் அந்தத்தளத்திற்கு நேரடியாகச் சென்று விடுகிறது. இது வெளி இணைப்புகள் எனப்படுகிறது

அடிக்குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்[தொகு]

கட்டுரையில் மேற்கோள்கள் காட்ட வேண்டிய இடங்களில்

[1]


என்று தட்டச்சு செய்து விடலாம். கடைசியாக தலைப்புகளில் ஒன்றாக மேற்கோள்கள் என்று குறிப்பிட்டு அதன் கீழாக

<reference/> அல்லது

  1. என்று தட்டச்சு செய்து அடிக்குறிப்புத் தகவல்களை குறிப்பிட்டு அதன்பின்பு


என்று தட்டச்சு செய்து விட்டால் வரிசையாக எண்ணிடப்பட்டு கொடுக்கப்பட்ட அனைத்து அடிக்குறிப்புகளும் மேற்கோள்கள் என்ற தலைப்பின் கீழ் ↑ என்ற குறியீட்டுடன் தனியாகத் தரப்பட்டு விடுகின்றன.

பிற குறியீடுகள்[தொகு]

இதுபோல் கட்டுரைகளில்

புள்ளியிடலுக்கு * என்ற குறியீடும்,

எண்ணிடலுக்கு # என்ற குறியீடும்,

வரி தள்ளலுக்கு : என்ற குறியீடும் பயன்படுத்தப்படுகின்றன.

இதுபோல் கட்டுரைகளுக்குத் தேவையான செயல்பாடுகளுக்கு ஏற்ற எளிமையான விக்கிக் குறியீடுகளை அளித்து கட்டுரையைச் சிறப்பாக்க விக்கிப்பீடியாவின் தனி மென்பொருள் உதவுகிறது.

படிமங்கள்[தொகு]

கட்டுரைக்குத் தேவையான படிமங்களையும் எளிதில் சேர்க்க முடியும். தமிழ் விக்கிப்பீடியாவின் அனைத்துப் பக்கங்களிலும் இடது புறமுள்ள கோப்பைப் பதிவேற்று என்கிற இடத்தில் சொடுக்கினால் அதற்கான பக்கம் திறக்கிறது. இதில் விக்கிப்பீடியாவின் கட்டுப்பாடுகள் மற்றும் காப்புரிமை குறித்த சில விபரங்களைத் தெரிந்து கொண்டு, தேவையான விபரங்களைப் பதிவு செய்து, கட்டுரைக்குத் தேவையான படிமங்களைக் அதற்கான பெயர்களில் பதிவேற்றி விடலாம். இதில் விக்கிப்பீடியாவின் விதிமுறைகளுக்குப் பொருந்தாத படிமங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்பு நீக்கப்பட்டுவிடும். பதிவேற்றம் செய்யப்பட்ட படிமங்களை தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளில் தேவையான இடங்களில்

[[படிமம்: படிமத்தின் பெயர்.jpg]]

என்று தட்டச்சு செய்தால் கட்டுரையில் படிமம் இடம் பெற்று விடுகிறது. இந்தப் படிமத்தை தேவைக்கேற்ப வலது, இடது அல்லது மத்தியப்பகுதியில் இணைக்கவும், படிமங்களின் கீழ் குறிப்புகளிடவும், படிமங்களை தேவைப்பட்டால் பார்வையிடவும், படிமங்களுக்கு தனியே இணைப்பு செய்து கொள்ளவும் சில குறியீடுகள் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன.

வார்ப்புருக்கள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தயார் நிலையிலுள்ள சில வார்ப்புருக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த வார்ப்புருக்கள் பட்டியலிலிருந்து நமக்குத் தேவையான வார்ப்புருக்களைக் கட்டுரையில் தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்ளமுடியும். இதற்கு

வார்ப்புரு:வார்ப்புருவின் பெயர்

என்று தட்டச்சு செய்து விட்டால் கட்டுரையில் குறிப்பிட்ட வார்ப்புரு இடம் பெற்றுவிடும். இந்த வார்ப்புருக்களில் குறிப்பிட்ட இடங்களில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்தும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அட்டவணைகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் அட்டவணைகளை உருவாக்கிக் கொள்ள சில எளிய வழிமுறைகள் உள்ளன. இந்த வழிமுறைகளைப் பயன்படுத்திக் கட்டுரையில் தேவையான இடங்களில் தேவையான அட்டவணைகளை இடம் பெறச் செய்ய முடியும்.

பகுப்புகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் என்று முக்கிய பகுப்புகளின் கீழ் கட்டுரைகளைக் கொண்டு வரமுடியும். இதற்கு கட்டுரையின் கீழ்ப்பகுதியில்


அல்லது குறிப்பிட்ட பகுப்புகளின் கீழ் குறிப்பிடப்பட்டால் அந்தக் கட்டுரையின் தலைப்பு குறிப்பிட்ட பகுப்பின் கீழ் இடம் பெற்றுவிடும். இந்த முக்கியப் பகுப்பின் கீழ் அடங்கிய உள் பகுப்புகளின் கீழும் உள்ளீடு செய்ய முடியும்.

கட்டுரை செயலிகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெறும் ஒவ்வொரு கட்டுரைக்கும் மேல்பக்கத்தில் கட்டுரை, உரையாடல், தொகு, வரலாறு என்று சில செயலிகள் இடம் பெறுகிறது. கட்டுரைப் பக்கத்தில் சொடுக்கினால் கட்டுரையும், உரையாடல் பொத்தானைச் சொடுக்கினால் அந்தக் கட்டுரை குறித்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் பகுதியும் தெரிகின்றன. தொகு எனும் பொத்தானைச் சொடுக்கினால் கட்டுரையில் தேவையான இடங்களில் மாற்றம் செய்யவும், தகவல்களைச் சேர்க்கவும் முடியும். வரலாறு எனும் பொத்தானைச் சொடுக்கினால் அந்த கட்டுரையில் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களும் பேச்சு, உரையாடல், நாள், நேரம், பைட்ஸ் அளவு, மாற்றம் செய்த பயனர் அல்லது பயன்படுத்தியவரது இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number) போன்ற விபரங்கள் இடம் பெறுகின்றன. இதுபோல் அண்மைய மாற்றங்கள் எனும் தலைப்பிலான தனிப்பக்கத்திலும் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.

தரம் நிர்ணயம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றிருக்கும் சில கட்டுரைகள் தரத்தின் அடிப்படையில் சிறப்பு, மிகவும் நல்லது, நல்லது, துவக்கம், குறுங்கட்டுரை என்கிற ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது. இதுபோல் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி மிக உயர்வு, உயர்வு, நடுநிலை, தாழ்வு என்றும் வகைப்படுத்தப்படுகிறது. இந்த வகைப்பாடுகளுக்கு குறிப்பிட்ட சில நிறங்கள் மட்டுமே அடையாளமாக கொள்ளப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் சில முக்கியக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு சிறப்புக் கட்டுரைகளாக்கப்படுவதுடன் முதற்பக்கத்தில் குறிப்புகள் வெளியிடப்பட்டு இதற்கான இணைப்பும் தரப்படுகின்றன. மிக முக்கியமான மற்றும் முழுமையான கட்டுரைகள் பிற பயனர்களால் மாற்றம் செய்ய முடியாதபடி பயனர் நிர்வாகிகளால் பூட்டிடப்பட்டு விடுகின்றன. இதனால் முழுமையடைந்த கட்டுரைகளில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்படுவது தடுக்கப்படுகின்றன.

குறைபாடுகள்[தொகு]

விக்கிப்பீடியாவில் எவரும், எப்போது வேண்டுமானாலும் பங்களிக்க முடியும் என்கிற பொதுவான நிலை உள்ளது. இதனால் சில சமயம் இங்குள்ள கட்டுரைகளைப் பார்வையிடும் சில தவறான நோக்கமுடைய, விஷமத்தனமுடையவர்களால் சில கட்டுரைகள் தவறுதலான மாற்றத்துக்கு உள்ளாகிறது. இதை அவ்வப்போது கவனித்து வரும் பயனர் நிர்வாகிகள் முன்பிருந்த நிலைக்கு மீட்டெடுக்கின்றனர். தவறும் நிலையில் கட்டுரையில் பதிவான தவறான கருத்துக்கள் கண்டுபிடிக்கப்படும் வரை தொடர்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்யப்படும் பல கட்டுரைகள் குறுங்கட்டுரைகளாகத் துணுக்குத் தகவல்களைப் போல் இருக்கின்றன என்கிற குறைபாடும் உள்ளது. இவை குறுங்கட்டுரைகள் எனும் தனிப் பகுப்புகளின் கீழ் இருக்கின்றன. இவைகளைப் பார்வையிடும் பயனர்கள் விரிவாக்கம் செய்யும் வரை இவை குறுங்கட்டுரைகளாகவே தொடர்கின்றன.

முடிவுரை[தொகு]

இது போன்ற ஒரு சில குறைபாடுகள் இருக்கின்ற நிலையிலும் தமிழ் விக்கிப்பீடியா தன்னார்வப் பயனர்கள் பலரின் கூட்டு முயற்சியோடும் அவர்களின் பங்களிப்போடும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலகின் 267 மொழிகளில் இருக்கும் விக்கிப்பீடியாக்களில் தமிழ் விக்கிப்பீடியா 22,000-க்கும் அதிகமான கட்டுரைகளுடன் 67 வது நிலையில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு, தமிழ் விக்கிப்பீடியாவின் நிலையை உயர்த்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்த தமிழ் இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக கல்லூரி மாணவர்களுக்கு விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி ஒன்றை நடத்த முன் வந்துள்ளது. இதன் மூலம் மாணவ சமுதாயத்திலிருந்து தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்கும் புதிய பயனர்களை உருவாக்க உதவியுள்ளது. மேலும் இந்தப் போட்டிக்கு வரும் கட்டுரைகளில் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இதனால் தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளில் முதலிடத்தையும், உலக மொழிகளில் சிறிது முன்னேற்றத்தையும் அடையும். உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் தங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்களாகப் பதிவு செய்து கொண்டு தங்களுக்குத் தெரிந்த துறையிலான தகவல்களை பதிவேற்றம் செய்து தமிழ் விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியத் தொகுப்பில் பங்கேற்க முன்வர வேண்டும்.

கட்டுரை இடம்பெற்ற மலர்[தொகு]

  • தமிழ் இணையம் 2010 கோவை மாநாட்டுக் கட்டுரைகள்

கட்டுரை வாசிக்கப்பட்ட இடம்[தொகு]

தேனி.எம்.சுப்பிரமணி கட்டுரை வாசித்த போது எடுத்த படம்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்த ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டில் 24-06-2010 அன்று உமர்தம்பி அரங்கில் மூன்றாவது அமர்வில் தமிழ் மி்ன்தரவு மற்றும் மின்னகராதிகள் எனும் தலைப்பிலான ஆய்வரங்கில் தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம் என்கிற தலைப்பில் கட்டுரையாளர் தேனி.எம்.சுப்பிரமணியால் வாசிக்கப் பெற்றது.