விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 7, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹாத்திகும்பா கல்வெட்டு என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலர் என்பவரால் கிமு 2-ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட அத்திக்கும்பா கல்வெட்டு ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரம் நகரத்திற்கு மேற்கில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது. இது அசோக மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் உள்ளது. இந்தக் கல்வெட்டு பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் இருப்பதும் அதன் தொன்மையை கி.மு. 150க்கு நெருங்கிய காலம் என்று கணிக்கத் துணைபுரிகிறது. இந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்தபோதே பல பகுதிகள் மங்கிச் சிதைந்து போயிருந்ததால் இதைப் படிப்பது கடினமாகி வீணான பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தது.மேலும்...


சைமன் காசிச்செட்டி (1807-1860) 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழர்களில் ஒருவர் ஆவார். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கை சட்டசபைக்கும் பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். தனது அரசுப் பணிகளுக்கு மத்தியிலும் இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகுந்த தொண்டாற்றினார். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் பற்றி எழுதியதோடு, தமிழ் - வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்த் தாவரவியல் அகராதி என்னும் நூல்களைத் தயாரித்தார். யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன. இவர் எழுதிய நூல்களுள் "தமிழ் புளூட்டாக்" மிக முக்கியமானது. இது 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. மேலும்...