விக்டர் ஹியூகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விகடர் ஹூகோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விக்டர் ஹியூகோ
Victor Hugo

விக்டர் ஹியூகோ, 1883
பிறப்பு {{{birthname}}}
பெப்ரவரி 26, 1802(1802-02-26)
பெசான்சோ, பிரான்ஸ்
இறப்பு மே 22, 1885 (அகவை 83)
பாரிஸ், பிரான்ஸ்
தொழில் கவிஞர், நாடகாசிரியர், புதின எழுத்தாளர், கட்டுரையாளர், காட்சிக் கலைஞர், அரசியலாளர், மனித உரிமைகள் ஆர்வலர்
இயக்கம் புனைவியம்
கையொப்பம் Autograph-VictorHugo.png

விக்டர்-மாரீ ஹியூகோ (Victor Hugo, பெப்ரவரி 26, 1802 - மே 22, 1885) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், காட்சிக் கலைஞரும், அரசியலாளரும், மனித உரிமைகள் ஆர்வலரும் ஆவார். இவரே பிரான்சின் புனைவிய இயக்கத்தின் மிகச் செல்வாக்குள்ள பேச்சாளர் ஆவார். பிரான்சில் இவரது புகழ் முதன்மையாக இவர் எழுதிய கவிதை, நாடகம் என்பவற்றிலேயே தங்கியிருந்தது. புதினங்கள் இரண்டாம் நிலையே. இவரெழுதிய பல கவிதை நூல்களில், லெஸ் காண்டம்பிளேஷன்ஸ் (Les Contemplations), லா லெஜெண்டே லெஸ் சீக்கிளெஸ் (La Légende des siècles) என்பன திறனாய்வு நோக்கில் உயர்வாக மதிக்கப்படுகின்றன. இவருடைய ஆக்கங்களில் லே மிசராப் (Les Misérables), நோட்ரே-டேம் டி பாரிஸ் (Notre-Dame de Paris) என்னும் புதினங்கள் பிரான்சுக்கு வெளியே பெயர் பெற்றவை. இவரது இளமைக் காலத்தில் தீவிரமான பழமைவாதியாக இருந்தபோதும், பிற்காலத்தில் இடதுசாரி அரசியல் பக்கம் சாய்ந்தார். இவர் குடியரசுவாதத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இவரது ஆக்கங்கள், அவரது காலத்தின் அரசியல், சமூகப் பிரச்சினைகளையும், கலைப் போக்குகளையும் காட்டிநின்றன. இவரது நாடகங்கள் நூற்றுக்கணக்கான முறை மேடை நாடகமாக அரங்கேறின. திரைப்படங்களாகவும் தயாரிக்கப் பட்டன. இவரது படைப்புகள் சுயநலமற்ற, தொலைநோக்குப் பார்வையையும், மனித நேயத்தையும் எடுத்துக்கூறின.

வாழ்க்கை[தொகு]

இவர் பிரான்சின் பெசன்கான் என்ற இடத்தில் 1802இல் பிறந்தார். இவரின் தந்தை ஒரு இராணுவ அதிகாரி. மாவீரன் நெப்போலியனின் கீழ் ஜெனரலாகப் பணி புரிந்தவர்.

பள்ளிக்கல்வி முடித்து சட்டம் பயின்ற இவருக்கு இலக்கியத்தில் தான் ஆர்வம் இருந்தது. இதற்கு இவரது அம்மாவின் முழு ஆதரவும் இருந்தது.

பத்திரிக்கையும், எழுத்தும்[தொகு]

இவர் சொந்தமாக ஒரு பத்திரிகையைத் தொடங்கித் தனது கவிதைகளையும் தனது நண்பர்களின் எழுத்தையும் அதில் வெளியிட்டார். தனது முதல் கவிதை நூலை 1821-ல் வெளியிட்டார். முதல் நாவல் 1823-ல் வெளிவந்தது. தொடர்ந்து எண்ணற்ற நாடகங்களும் வெளிவந்தன.

இவரது கவிதைகளில் லே கன்டம்பிளேஷன்ஸ் மற்றும் லா லெஜன்டே லே சீக்ளெஸ் ஆகியவை மிகவும் போற்றப்பட்டன. லே மிஸரபிள்ஸ், நோட்ரே-டேம் டி பாரீஸ் ஆகிய நாவல்கள் மிகவும் புகழ் பெற்றவை.

இளம் வயதில் தொடங்கிய இவரது இலக்கியப் பயணத்தில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 20-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், 10-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தனி முத்திரை பதித்தார்.

ஹியூகோவின் எழுத்துக்கள் எளிய மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை, துயரங்கள், வேதனைகளை எடுத்துக் கூறின. முறையான வரிவிதிப்பு, ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சமூக மாற்றங்கள், யுத்தமற்ற அமைதியான வாழ்க்கை ஆகியவற்றுக்காகவும் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடினார்.

அரசியல் நிலைப்பாடு[தொகு]

ஹியூகோ தனது படைப்புகளில் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில்நடை பெற்ற மாபெரும் அரசியல் மாற்றங்கள் அனைத்துக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்து தெரிவித் துள்ளார். தனது இலக்கிய செல்வாக்கை சமூக மாற்றங்கள், முன்னேற்றங்களுக்காகப் பயன்படுத்தினார்.

1848-ல் நடைபெற்ற தேர்தலில் இவர் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1849-ல் ஏழ்மைக்கு எதிராக இவர் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. அதன் பிறகு நடைபெற்ற அரசியல் மாற்றத்தில் மக்களாட்சி போய் மீண்டும் குடியாட்சி நிறுவப்பட்டது.

அதை எதிர்த்து மக்களைப் புரட்சிக்குத் தூண்டினார். இதனால் நாட்டைவிட்டுத் தப்பியோட வேண்டி வந்தது. ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் இடைவிடாமல் குரலெழுப்பினார். தனது நாவல்களையே இவர் தனது போராட்ட ஆயுதங்களாகப் பயன்படுத்தினார்.

தமிழில்[தொகு]

இவரது லே மிஸரபிள் நாவலை சுத்தானந்த பாரதி ‘ஏழை படும் பாடு’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்.

மறைவு[தொகு]

1885-ம் ஆண்டு, 83-வது வயதில் காலமானார். இறக்கும் தருவாயில் சொத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்காக எழுதி வைத்தார்.இவரது இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.இவர் பந்தியனில் அடக்கம் செய்யப்பட்டார்.

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:
"http://ta.wikipedia.org/w/index.php?title=விக்டர்_ஹியூகோ&oldid=1832338" இருந்து மீள்விக்கப்பட்டது