வால் நட்சத்திரம் (திரைப்படம்)
வால் நட்சத்திரம் (ஆங்கிலத்தில் Like Stars on Earth), ஹிந்தியில் அமீர் கான் இயக்கி நடித்த தாரே ஜமீன் பர் என்ற திரைப்படத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகும். இத்திரைப்படம் இந்தியில் 2007ஆம் ஆண்டு வெளியானது. குழந்தைகளின் கற்றல் குறைபாடுகளை உணரச்செய்யும் விதத்தில் இதன் கதையம்சம் இருந்தது.
பொருளடக்கம் |
[தொகு] கதைச்சுருக்கம்
டிஸ்லெக்சியா எனும் செயல்பாடு சார்ந்த குறைபாட்டுடன் உள்ள சிறுவன் இஷான் அவஸ்தி(தர்ஷீல் சஃபரி) கற்றல் மற்றும் புரிந்து கொள்ளுதல் திறன்களில் சராசரி மாணவர்களுடன் ஒப்பிடும்போது பின் தங்கிய நிலையில் இருக்கிறான். இதை உணராத அவனது பெற்றோர், துடுக்குத் தனத்தினால்தான் அவன் அவ்வாறு நடந்து கொள்வதாக எண்ணி, அவனை கண்டிக்கின்றனர். ஏற்கனவே மூன்றாம் வகுப்பில் தோல்வியடைந்த அவனை, விடுதியில் தங்கிப்படிக்கும் கண்டிப்பான பள்ளியில் சேர்த்தால் அவனது நடத்தை மற்றும் கல்வியறிவு மேம்படும் என்று கருதி அவனின் விருப்பத்திற்கு மாறாக சேர்க்கின்றனர். தனது கற்றல் குறைபாட்டை உணராத ஆசிரியர்கள் மற்றும் இல்லத்தைப் பிரிந்த துயரம் இஷனை எதிலும் ஈடுபாடு அற்றவனாக மாற்றுகிறது. அவன் மிகவும் விரும்பி செய்யும் வரைதல் செயல்பாட்டை முழுவதுமாகக் கைவிடுவதன்மூலம் தன்னையே வருத்திக் கொள்கிறான். சில நாட்களுக்குப் பிறகு அவனது புதிய ஓவிய ஆசிரியராக வரும் ராம் ஷங்கர் நிகம்ப் (அமீர் கான்), பிற ஆசிரியர்களைப்போல் கண்டிப்பாக நடந்து கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாகவும் புரிதலுடனும் பழகுகிறார். இஷானுடைய பாட ஏடுகளைப் புரட்டிப் பார்க்கும் அவர், அவனது கவனக்குறைவு மற்றும் எழுத்துப்பிழைகள் டிஸ்லெக்சியாவின் விளைவுகளாக அடையாளம் கண்டுகொண்டு அவனது பெற்றோரை சந்திக்கிறார். பள்ளித் தலைமையாரிசியரின் ஒப்புதலுடன், தனது பிரத்தியேகப் பயிற்சி மற்றும் உத்திகளின் மூலம் இஷானை படிப்படியாக அனைத்து செயல்பாடுகளிலும் ஈடுபடுத்தி, அவனது உடைந்து போன தன்னம்பிக்கையை மீட்டெடுக்கிறார். இதற்கிடையில் அவனது கற்றல் தேவைகளையும் நிறைவேற்றிவிடுகிறார். ஆண்டு இறுதியில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் ஒரு ஓவியப்போட்டியில் பங்குபெற ஊக்குவிக்கிறார். போட்டியில் பங்குபெறும் இஷான், தனது ஓவியக்கலையை மீண்டும் வெளிக்கொனர்கிறான். மீண்டும் பழைய நிலைக்கு அவன் மாறியதை உணர்ந்து ஆசிரியர் பிரமிக்கிறார். ராம் ஷங்கர் என்ன வரைந்திருக்கிறார் என்று பார்க்கும் இஷான், அவர் தனது ஓவியத்தை அழகாக சித்தரித்து உள்ளதை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்குகிறான். போட்டி முடிவில் இஷானின் ஓவியமும், ராம் ஷங்கரின் ஓவியமும் ஒத்த மதிப்புடையதாகக் கருதப்படுகிறது. இறுதியில் இஷான் அவஸ்தியின் ஓவியமே சிறந்ததாக அறிவிக்கப்படுகிறது. போட்டியின் நடுவராக வருகை தந்திருந்த லலிதா லஜ்மி, ராம் ஷங்கரின் டிஸ்லெக்சியா குறைபாட்டை நிவர்த்தி செய்த அவரது ஆசிரியர். பரிசினைப் பெற்ற பின், சிறுவன் ஓடி வந்து ஆசிரியரை அனைத்து உளம் பூரிக்கிறான். தொடர்ந்து வரும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டத்தில், இஷானின் அபரிமிதமான கற்றல் முன்னேற்றங்கள் அவனது பெற்றோரை பூரிப்படையச் செய்கின்றன. இஷானின் தாய், தந்தை இருவரும் ராம் ஷங்கருக்கு தங்களது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கின்றனர். விடுமுறைக்காக விடைபெற்றுச் செல்லும் தருவாயில், இஷான் ஓடி வந்து, தன் ஆசிரியரால் தாவிப் பிடிக்கப்பட்டு மேலே மகிழ்ச்சியாக உயர்த்தப்படுவதுடன் படம் நிறைவடைகிறது.
[தொகு] மொழி பெயர்ப்பு
தமிழில் அமீர் கானின் கதாப்பாத்திரத்திற்கு நடிகர் சூர்யா[1] குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரவினில் பயந்தேன் என்ற சங்கர் மகாதேவன் பாடிய பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.
[தொகு] பாடல்கள்
- மண்ணில் விண்மீன்கள்
- தட்டி தட்டி
- பாரு பாரு
- கட்டு ஷூவை
- இரவினில் பயந்தேன் நானம்மா
- ஒய்.. ஒய்..
- தொடுவானம்
- இஷானின் இசை
[தொகு] பாராட்டுகள்
இந்தியில் இப்படம் பெருவாரியான விமர்சகர்களிடையே நன்மதிப்பைப் பெற்றது. படத்தின் கருவாக டிஸ்லெக்சியாவை விட, சாதாரணமான மாணவர்களின் கற்றல் குறைபாடுகள் மற்றும் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்ற பார்வையுமே உற்றுநோக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது எனினும் அவ்வாண்டு டேனி பாயில் இயக்கி, ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் எட்டு ஆஸ்கர்களை வாங்கியது.
[தொகு] உசாத்துணை
- ↑ "தமிழ் பேசும் 'தாரே ஜமீன் பர்'!". மீடியா.