வடக்கு சென்டினல் தீவு

ஆள்கூறுகள்: 11°33′N 92°14′E / 11.550°N 92.233°E / 11.550; 92.233
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு சென்டினல் தீவு
North Sentinel Island
வடக்கு சென்டினல் தீவின் 2009 நாசா புகைப்படம்; பவளப் பாறைகள் தெளிவாகத் தெரிகின்றன.
புவியியல்
ஆள்கூறுகள்11°33′N 92°14′E / 11.550°N 92.233°E / 11.550; 92.233
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்[1]
பரப்பளவு72 km2 (28 sq mi)[1]
உயர்ந்த ஏற்றம்122 m (400 ft)[2]
நிர்வாகம்
ஒன்றியப் பகுதிஅந்தமான் நிக்கோபார் தீவுகள்
மக்கள்
மக்கள்தொகை250 முதல் 300[3] (2005)
இனக்குழுக்கள்சென்டினலீசு[1]

வடக்கு சென்டினல் தீவு (North Sentinel Island) வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இது தெற்கு அந்தமான் தீவின் தெற்குப் பகுதியின் மேற்கே அமைந்துள்ளது.[1] இத்தீவின் பெரும்பாலான பகுதி காடுகளைக் கொண்டுள்ளது.[4] அந்தமானின் மக்கள் குடியிருப்புகளில் இருந்து தொலைவில் அமைந்துள்ள இத்தீவு பவளப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது. இத்தீவில் இயற்கைத் துறைமுகங்கள் எதுவும் இல்லை.

வடக்கு சென்டினல் தீவில் கிட்டத்தட்ட 50 முதல் 400 வரையிலான சென்டினலீசு என அழைக்கப்படும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.[1] வெளியுலகத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாது இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.[5] தொற்றுநோய்களாலும், வன்முறைகளாலும் மக்கள்தொகை இங்கு அருகி வருகிறது. இதனால், இம்முழுத் தீவையும், அதனைச் சுற்றி மூன்று மைல் சுற்றளவு கடற்பகுதியையும் இந்திய அரசு தவிர்ப்பு வலயமாக அறிவித்துள்ளது.[6]

வரலாறு[தொகு]

ஆரம்ப காலம்[தொகு]

அந்தமான் தீவுகளில் வடக்கு சென்டினல் தீவின் அமைவிடம் (சிவப்பில்).

வடக்கு சென்டினல் தீவைப் பற்றி ஒன்கே பழங்குடி மக்கள் அறிந்து வைத்துள்ளனர். அவர்களின் தகவல்களின் படி இத்தீவின் அல்லது மக்களின் மரபுப் பெயர் "சியா டாக்வோக்வெயே" (Chia daaKwokweyeh என்பதாகும்.[1][7][8] ஒன்கே மக்கள் சென்டினலீசு மக்களின் கலாசாரத்தையே பெரும்பாலும் கொண்டுள்ளனர்.[7] 19ஆம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த பிரித்தானியர்கள் ஒன்கே மக்கள் சிலரை இங்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனாலும், அவர்களின் மொழியை ஒன்கே மக்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.[1][7]

பிரித்தானியர் ஆட்சியில்[தொகு]

1771 ஆம் ஆண்டில் ஜான் ரிட்ச்சி என்னும் பிரித்தானிய நில அளவையாளரின் தலைமையில் சென்ற கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பல் ஒன்று இத்தீவைக் கடந்து சென்ற போது இங்கிருந்து வெளிச்சங்கள் வருவதை அவதானித்துள்ளது.[1][5][7] 1867 மார்ச்சில் ஓம்ஃபிரே என்ற நிருவாகி ஒருவர் இத்தீவுக்கு சென்றுள்ளார்.[9] அதே ஆண்டின் இறுதியில் "நினேவே" (Nineveh) என்ற இந்திய சரக்குக் கப்பல் ஒன்று இத்தீவின் பவளப் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்து தப்பிய 106 பேர் தீவுக்கு நீந்திச் சென்றனர். அங்கு அவர்கள் உள்ளூர் மக்களினால் அடித்து விரட்டப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரித்தானிய அரச கடற்படையினால் மீட்கப்பட்டனர்.[7]

மோரிசு வைடல் போர்ட்மேன் என்ற பிரித்தானிய நிருவாகியின் தலைமையில் சென்ற குழுவொன்று உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையை அறியும் பொருட்டு 1880 சனவரியில் வடக்கு சென்டினல் தீவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கு சிறிய, கைவிடப்பட்ட பல கிராமங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். சில நாட்களின் பின்னர் ஆறு சென்டினலீசு மக்களை (ஒரு முதியவர், அவரது மனைவி, நான்கு பிள்ளைகள்) அவர்கள் கண்டுபிடித்து, அந்த ஆறு பேரையும் பலவந்தமாக போர்ட் பிளேர் நகருக்கு அழைத்து வந்தனர். அங்கு அந்த ஆறு பேரும் கடும் சுகவீனம் அடைந்தனர். முதியோர்கள் இருவரும் இறந்து விட்டனர். பிள்ளைகள் நால்வரையும் பெருமளவு பரிசுப் பொருட்களைக் கொடுத்து மீண்டும் தீவில் கொண்டு சென்று விட்டதாக போர்ட்மேன் எழுதியுள்ளார்.[1][5][9]

1883 இல் கிரகட்டோவா எரிமலை வெடித்ததை துப்பாக்கிச் சமர் என்றும், கப்பல் ஒன்றில் இருந்து வரும் அபாய சைகை எனத் தவறுதலாக நினைத்து போர்மேன் தலைமையிலான குழு 1883 ஆகத்து 27 இத்தீவில் மீண்டும் தரையிறங்கியது. அங்கு அவர்கள் உள்ளூர் வாசிகளுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கி விட்டு போர் பிளேர் திரும்பினர்.[1][9] 1885 சனவரி முதல் 1887 சனவரி வரை போர்ட்மேன் பல முறை இத்தீவுக்குச் சென்று வந்தார்.[9]

அண்மைக்கால வரலாறு[தொகு]

சென்டினலீசு மக்களுடன் நட்புறவையே வைத்திருக்க வேண்டும் என்ற கட்டளையுடன் இந்திய ஆய்வுக்குழுக்கள் 1967 ஆம் ஆண்டு முதல் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தீவுக்குச் சென்று வந்துள்ளனர்.[1] 1975 இல், அந்தமானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பெல்ஜியம் மன்னர் மூன்றாம் லியோபால்டு இத்தீவின் கரையில் ஓரிரவு கப்பலில் தங்கியிருந்தார்.[5] எம்வி ருசுலி, எம்வி பிரிம்ரோசு என்ற இரு சரக்குக் கப்பல்கள் முறையே 1977, 1981 இல் இங்கு தரைதட்டின. உள்ளூர் சென்டினலீசு மக்கள் இக்கப்பல் சிதைவுகளில் இருந்து இரும்பு எடுத்த்ச் சென்றதாகக் கூறப்படுகிறது. 1991 இல், இக்கப்பல்களின் சிதைவுகளை அகற்றுவதற்கு மீட்புக் குழுக்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டது.[10]

சென்டினலீசு மக்களுடனான முதலாவது அமைதியான தொடர்பு இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த திரிலோகிநாத் பண்டிட் மற்றும் அவரது குழுவினரால் 1991 சனவரி 4 இல் நிகழ்த்தப்பட்டது.[11][12] 1997 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியர்கள் எவரும் அங்கு செல்லவில்லை.[1]

சென்டினலீசு மக்கள் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தின் தாக்கத்தில் தப்பிப் பிழைத்தனர். ஆழிப்பேரலை இடம்பெற்ற மூன்று நாட்களின் பின்னர் தீவின் மேலே சென்ற இந்திய உலங்குவானூர்தி மக்கள் அம்புகளையும், கறளையும் வானூர்தியை நோக்கி எறிவதை அவதானித்தனர்.[1][7][8]

2006 சனவரி 26 அன்று மீன்பிடிப் படகு ஒன்று தீவின் பக்கம் ஒதுங்கியதில், இரண்டு மீனவர்கள் உள்ளூர் மக்களால் கொல்லப்பட்டனர்.[13]

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று சில மீனவர்களின் உதவியுடன் இங்கு சென்ற அமெரிக்கரான ஜான் ஆலன் சாவ் என்பவர் மாயமானார். அவரின் நிலைமை என்ன ஆனது என்ற விடை இன்னமும் கிடைக்கவில்லை.[14]

புவியியல்[தொகு]

தீவின் வரைபடம்

2004 நிலநடுக்கத்திற்கு முன்னர் வடக்கு சென்டினல் தீவின் பரப்பளவு கிட்டத்தட்ட 72 கிமீ² ஆகவும், ஏறக்குறைய சதுர வடிவிலும் இருந்தது.[1] தீவின் சுற்றுவட்டத்தில், நிலப்பரப்பு 20 மீட்டர் வரை உயர்ந்து, படிப்படியாக நடுப்பகுதியில் 98 மீ வரை உயர்ந்தது[2][15] பவளப்பாறைகள் கரையில் இருந்து 800 முதல் 1300 மீட்டர்கள் வரை அதிகரித்தன.[2] தென்கிழக்கு கரையோரத்தில் இருந்து 600 மீட்டர்கள் தூரத்தில் பவளப்பாறைகளின் எல்லையில் சிறு தீவு ஒன்று (கான்ஸ்டன்டு தீவு) உருவானது. 2004 நிலநடுக்கம் வடக்கு சென்டினல் தீவின் அடியில் உள்ள நிலத்தட்டை 1 முதல் 2 மீட்டர்கள் வரை நகர்த்தியது. பவளப்பாறைகளைச் சுற்றியுள்ள பெரிய தடங்கள் வெளிப்பட்டு நிரந்தரமான வறண்ட நிலங்களாயின. தீவின் எல்லை மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் 1 கிமீ தூரத்துக்கு விரிந்தது. இதனால் கான்ஸ்டன்சு தீவு சென்டினல் தீவுடன் இணைந்தது.[16][17]

குறுகிய கடற்கரை மற்றும் பவளத்திட்டுகளைத் தவிர்த்து, தீவின் ஏனைய பகுதிகள் அடர்த்தியான காடுகளால் சூழப்பட்டுள்ளது.[1]

அரசியல்[தொகு]

வடக்கு சென்டினல் தீவு இந்தியாவின் ஒன்றியமான அந்தமான் நிக்கோபார் தீவுகளினால் 1947 ஆம் ஆண்டு முதல் அதிகாரபூர்வமாக நிருவகிக்கப்பட்டு வருகிறது.[18] ஆனாலும், இத்தீவு மக்களுடன் எக்காலத்திலும் எந்தவொரு உடன்பாடும் மேற்கொள்ளப்படாமையினாலும், எக்காலத்திலும் இத்தீவு ஆளுகைக்கு உட்படாமையினாலும், இத்தீவு இந்தியாவின் பாதுகாப்பில் சுதந்திரமான தீவாக நிகழ்வுநிலை இந்தியத் தன்னாட்சிப் பகுதியாக உள்ளது.

அந்தமான் நிக்கோபார் அரசு 2005 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சென்டினல் மக்களின் வாழ்க்கையுடனோ அல்லது அவர்களின் வாழ்விடங்கள் மீதோ தலையிடத் தமக்கு எவ்வித எண்ணமோ அல்லது ஆர்வமோ இல்லை எனக் கூறியுள்ளது.[3]

ஆண்டு மக்கள்தொகை மதிப்பீடு[19]
1901 117
1911 117
1921 117
1931 70


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 George Weber. "The Andamanese - Chapter 8: The Tribes". pp. part 6. The Sentineli. Archived from the original on 2009-03-02. பார்க்கப்பட்ட நாள் 2007-05-03.
  2. 2.0 2.1 2.2 National Geospatial Intelligence Agency (2005) p. 226.
  3. 3.0 3.1 Subir Bhaumik. "Extinction threat for Andaman natives" பரணிடப்பட்டது 2012-09-14 at Archive.today March 5, 2005.
  4. George Weber. "The Andamanese - Chapter 2: They Call it Home" பரணிடப்பட்டது 2012-04-02 at the வந்தவழி இயந்திரம் Retrieved October 12, 2011
  5. 5.0 5.1 5.2 5.3 Adam Goodheart (2000). "The Last Island of the Savages" பரணிடப்பட்டது 2012-08-25 at the வந்தவழி இயந்திரம். American Scholar. Autumn 2000.
  6. "The Island Tribe Hostile To Outsiders Face Survival Threat". பார்க்கப்பட்ட நாள் 2015-07-24.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 Pandya (2009) p. 362-363.
  8. 8.0 8.1 Buncombe, Andrew (பெப்ரவரி 6, 2010). "With one last breath, a people and language are gone". The New Zealand Herald. The Independent. http://www.nzherald.co.nz/world/news/article.cfm?c_id=2&objectid=10624531. பார்த்த நாள்: நவம்பர் 1, 2011. 
  9. 9.0 9.1 9.2 9.3 Ratha; Pfeffer; Behera (1997) p. 288.
  10. Pandya (2009) பக். 342.
  11. Ratha; Pfeffer; Behera (1997) p. 289.
  12. Tim McGirk (1993). "Islanders running out of isolation: Tim McGirk in the Andaman Islands reports on the fate of the Sentinelese". The Independent
  13. Peter Foster (2006). "Stone age tribe kills fishermen who strayed on to island". டெலிகிராப்
  14. https://tamil.thehindu.com/world/article25612857.ece%7C'நார்த் சென்டினல்' தீவில் அமெரிக்கர் உடலைத் தேடும் முயற்சி ஆபத்தானது: பழங்குடிகளுக்கான உரிமை அமைப்பு எச்சரிக்கை
  15. Great Britain, Hydrographic Dept (1887), பக். 257.
  16. George Weber (2009), The 2004 Indian Ocean Earthquake and Tsunami பரணிடப்பட்டது 2010-07-15 at the வந்தவழி இயந்திரம். Accessed on 2012-07-12.
  17. Pandya (2009), பக். 347.
  18. George Weber. "The Andamanese - Chapter 1: Contact" பரணிடப்பட்டது 2011-10-03 at the வந்தவழி இயந்திரம்
  19. Venkateswar (2004) பக். 120.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_சென்டினல்_தீவு&oldid=3816486" இலிருந்து மீள்விக்கப்பட்டது