லூயிசு மம்ஃபோர்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூயிசு மம்ஃபோர்டு
Lewis Mumford
பிறப்பு(1895-10-19)19 அக்டோபர் 1895 [1]
பிளசிங், நியூயார்க்[1]
இறப்பு26 சனவரி 1990(1990-01-26) (அகவை 94)[1]
அமெனியா, டியூச்செசு கவுன்டி, நியூயார்க்[1]
தொழில்வரலாற்றாளர்,
எழுத்தாளர்
தேசியம்அமெரிக்கர்
வகைவரலாறு, மெய்யியல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்வரலாற்றில் நகரம் (The City in History), நுட்பங்களும் நாகரிகமும் (Technics and Civilization), எந்திரம் குறித்த தவறான நம்பிக்கைகள் (The Myth of the Machine)

லூயிசு மம்ஃபோர்டு (லூயிஸ் மம்ஃபோர்ட், Lewis Mumford, அக்டோபர் 19, 1895சனவரி 26, 1990) ஒரு அமெரிக்கத் தொழில்நுட்ப வரலாற்றாளரும், சமூகவியலாளரும், தொழில்நுட்ப மெய்யியலாளரும் செல்வாக்குப் பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். நகரங்களைப் பற்றியும், நகர்ப்புறக் கட்டிடக்கலை பற்றியும் செய்த ஆய்வுகள் மூலமாகப் பெரிதும் அறியப்பட்ட இவர் ஒரு எழுத்தாளராக விளங்கினார். இசுக்காட்லாந்தைச் சேர்ந்த கோட்பாட்டியலாளரான பட்ரிக் கெட்சு என்பவரது எழுத்துக்கள் இவரைக் கவர்ந்தன.

புகழ் பெற்று விளங்கிய பிராங்க் லாயிட் ரைட், கிளரன்சு இசுட்டெயின், பிரெட்ரிக் ஒசுபோன், எட்மன்ட் என். பேக்கன், வன்னெவார் புஷ் ஆகியோரது சமகாலத்தவராகவும், அவர்களுக்கு நண்பராகவும் இவர் விளங்கினார்.

வாழ்க்கை[தொகு]

இறக்கும்போது மம்ஃபோர்டு வாழ்ந்த வீடு. நியூயார்க், அமெனியாவில் உள்ளது.

மம்ஃபோர்டு, நியூயார்க்கின் குயீன்சு பகுதியில் உள்ள பிளசிங் (Flushing) என்னும் இடத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் உயர் பள்ளிக் கல்வியை முடித்துக்கொண்டு.[2], நியூயார்க் சிட்டி கல்லூரியிலும், சமூக ஆய்வுக்கான புதிய பள்ளியிலும் உயர் கல்வி பெற்றார். எனினும், படித்துக்கொண்டிருக்கும் போதே காசநோயால் பீடிக்கப்பட்ட அவரால் பட்டம் பெற முடியவில்லை. 1918 ஆம் ஆண்டில், முதலாம் உலகப் போர்ப் பணிக்காக ஒரு வானொலி மின்னியலாளராகக் கடற்படையில் இணைந்து கொண்டார்.[1][3] 1919 ஆம் ஆண்டில் இப்பணியில் இருந்து மம்ஃபோர்டு விடுவிக்கப்பட்ட பின்னர், அக்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த "த டயல்" என்னும் நவீனவாத இலக்கிய ஆய்விதழில் இணையாசிரியராகச் சேர்ந்து கொண்டார். பின்னர், "த நியூ யார்க்கர்" சஞ்சிகையில் இணைந்துகொண்டு கட்டிடக்கலைத் திறனாய்வுகளையும், நகர் சார்ந்த விடயங்களையும் எழுதினார். மம்ஃபோர்டு இங்கே 30 ஆண்டுகள் பணியாற்றினார்.

இலக்கியத் திறனாய்வுத் துறையில் மம்ஃபோர்டின் தொடக்ககால நூல்கள், சமகால அமெரிக்க இலக்கியத் திறனாய்வில் நீண்டகாலத் தாக்கத்தைக் கொண்டிருந்தன. "த கோல்டன் டே", "ஏர்மன் மெல்வில்: அவரது வாழ்வும் நோக்கும் பற்றிய ஓர் ஆய்வு" ஆகிய நூல்கள் 1850களின் அமெரிக்க ஆழ்நிலைவாத எழுத்தாளரான ஏர்மன் மெல்வில் என்பவரின் படைப்புக்கள் பற்றிய ஆய்வுகளில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கின. பின்னர், "த பிரவுன் டெக்கேட்" என்னும் நூலில், ஐக்கிய அமெரிக்கக் கட்டிடக்கலை, நகர்ப்புற வாழ்க்கை என்பன பற்றிச் சமூகப் பின்னணியில் விளக்கிய மம்ஃபோர்டு, இத் துறைகள் தொடர்பில் தன்னை ஒரு விற்பன்னராக நிலை நிறுத்திக்கொள்ளத் தொடங்கினார்.

நகர்ப்புற வாழ்க்கை தொடர்பான மம்ஃபோர்டின் தொடக்காகால நூல்களில், அவர் மனித இனத்தின் வல்லமை குறித்துத் தனது நம்பிக்கையை வெளியிட்டார். மின்சாரம், மக்கள் தொடர்பியல் என்பவற்றைப் பயன்படுத்தி மனித இனம் தமக்காக மேலும் சிறப்பான உலகைக் கட்டியெழுப்பும் என அவர் நம்பினார். அவரது பிற்கால எழுத்துக்களில் கூடிய நம்பிக்கையற்ற நிலை வெளிப்பட்டது. இவரது தொடக்ககாலக் கட்டிடக்கலைத் திறனாய்வுகள் என்றி ஒப்சன் ரிச்சர்ட்சன், லூயிசு சலிவன், பிராங்க் லாயிட் ரைட் ஆகியோரின் படைப்புக்களைப் பரந்த அளவில் மக்களுக்கு அடையாளம் காட்டின.

1963 ஆம் ஆண்டில் கலைத் திறனாய்வுக்காக கல்லூரிக் கலைக் கழகத்தின் பிராங்க் செவெட் மேதர் விருது இவருக்குக் கிடைத்தது.[4] 1964 ஆம் ஆண்டில் சுதந்திரத்துக்கான சனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டது..[1] 1975ல் மம்ஃபோர்டுக்கு பிரித்தானியப் பேரரசின் கௌரவ பிரபுப் பட்டம் கிடைத்தது.[1] தொடர்ந்து 1976ல், "சினோ டெல் டூக்கா" உலகப் பரிசையும்,[1] 1986ல், கலைகளுக்கான தேசியப் பதக்கத்தையும்[1] இவர் பெற்றார். 1961 ஆம் ஆண்டில் இவர் எழுதிய வரலாற்றில் நகரம் (The City in History) என்னும் நூலுக்கு நூல்களுக்கான தேசிய விருது கிடைத்தது.[1]

லூயிசு மம்ஃபோர்டு நியூயார்க்கின் அமெனியாவில் உள்ள அவரது வீட்டில், 1990 ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் தேதி, தனது 94 ஆவது வயதில் காலமானார்.[1] இவர் இறந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வீடு வரலாற்றுப் புகழ் கொண்ட இடங்களின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Chronology of Mumford's Life". Lewis Mumford Center. பார்க்கப்பட்ட நாள் 12 October 2010.
  2. Wojtowicz, Robert (January 2001). "City As Community: The Life And Vision Of Lewis Mumford". Quest (Old Dominion University) 4 (1). http://www.odu.edu/ao/instadv/quest/cityascommunity.html. பார்த்த நாள்: 2007-10-31. 
  3. Sorensen, Lee (ed). "Mumford, Lewis". Dictionary of Art Historians. பார்க்கப்பட்ட நாள் 12 October 2010. {{cite web}}: |first= has generic name (help)
  4. "Awards". The College Art Association. பார்க்கப்பட்ட நாள் 11 October 2010.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிசு_மம்ஃபோர்டு&oldid=3227542" இலிருந்து மீள்விக்கப்பட்டது