ரைட் சகோதரர்கள்
| ஓர்வில் ரைட் Orville Wright |
|
|---|---|
| பிறப்பு | ஆகத்து 19, 1871 ஒகைய்யோ |
| இறப்பு | சனவரி 30 1948 (அகவை 76) ஒகைய்யோ |
| பணி | பதிப்பாளர், விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/பயிற்சியாளர் |
| வாழ்க்கைத் துணை | இல்லை |
| வில்பர் ரைட் Wilbur Wright |
|
|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 16, 1867 இந்தியானா |
| இறப்பு | மே 30 1912 (அகவை 45) ஒகைய்யோ |
| பணி | பதிப்பாளர், விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/பயிற்சியாளர் |
| வாழ்க்கைத் துணை | இல்லை |
ரைட் சகோதரர்கள் (Wright brothers, ஓர்வில் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.
1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டன.
இதற்குத் தேவையான எந்திர திறன்களை அவர்கள் தங்களுடைய அச்சுக்கூடம், மிதிவண்டி, மோட்டார்கள், மற்ற இயந்திரங்கள் மூலம் பெற்றனர். பறக்கும் எந்திரம் போன்ற ஒரு நிலையற்ற வாகனத்தை பயிற்சி மூலம் கட்டுப்படுத்தி சமநிலையில் நிறுத்தலாம் என்ற நம்பிக்கை மிதிவண்டியுடன் வேலை செய்யும்போது அவர்களுக்கு ஏற்பட்டது. 1900 முதல் 1903 வரை தங்களின் முதல் பறக்கும் விமானம் வரை, அவர்கள் பல மிதவை வானூர்திகளை சோதனை செய்தனர். அதன்மூலம் தங்களின் விமானிக்கான திறன்களையும் வளர்த்துக் கொண்டனர். அவர்களுடைய மிதிவண்டி கடையில் ஊழியரான சார்லி டெய்லர் என்பவரும் அவர்களுடைய முதல் வானூர்தியை அமைப்பதில் அவர்களுடன் இணைந்து முக்கிய பங்குவகித்தார்.
மில்டன் ரைட் என்ற ஆங்கிலேய-டச்சுக்காரருக்கும் சுசான் கேத்ரின் என்ற ஜெர்மன்-ஸ்விஸ் பெண்மணிக்கும் பிறந்தவர்கள் ஏழு பேர். அவர்களில் வில்பர் 1867-இலும், ஓர்வில் 1871-இலும் பிறந்தனர். இவ்விருவரும் திருமணமே செய்துகொள்ளவில்லை. தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஓர்வில் குறும்புத்தனம் செய்தார். அதற்காகவே ஒரு முறை அவர் பள்ளியைவிட்டு துரத்தப்பட்டார். அவருடைய தந்தை சர்ச் ஆஃப் தி யுனைடெட் பிரெத்ரென் இன் கிறிஸ்ட்டில் ஆயராக இருந்தார். பணிநிமித்தமாக அவர் அடிக்கடி பயணம் செய்தார். அவ்வாறு ஒருமுறை அவர்தம் பயணத்தின்போது “எலிகாப்டர்“ பொம்மை ஒன்றை அவ்விரு குழந்தைகளுக்கும் வாங்கிவந்தார். வான்வழி தொலையளவு முன்னோடியான அல்ஃபோன்ஸ் பேனாட் என்ற பிரஞ்சு நாட்டவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு காகிதம், மூங்கில், கார்க்கு, இரப்பர் வளையம் ஆகியவற்றால் ஒரு அடி நீளத்திற்கு அப்பொம்மை செய்யப்பட்டிருந்தது. அது உடையும் வரை வில்பரும் ஓர்வில்லும் விளையாடினர், பிறகு அவர்களாகவே ஒன்றை அமைத்தனர். அந்த பொம்மைதான் தங்களுக்கு பறப்பதற்கான ஆர்வத்துக்கான ஒரு தொடக்கப் பொறியாக இருந்தது என்று பிற்பாடு அவர்கள் தங்கள் அனுபவம் பற்றி சுட்டிக்காட்டினர்.
வெளி இணைப்புகள்[தொகு]
- ரைட் சகோ. விமானக் கம்பனி - (ஆங்கிலத்தில்)