ரெக்காவின் நெருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஃப்ளேம் ஆஃப் ரெக்கா (ரெக்காவின் நெருப்பு) (烈火の炎 ரெக்கா நொ ஹோனோ?) என்பது நொபுயுகி அன்ஸாய் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு மங்கா தொடர். இதனுடைய தொலைக்காட்சித் தழுவலாக இதே பெயரில் ஒரு அனிமே தொடரையும் உருவாக்கினர். இந்த மங்கா ஷோனென் சண்டே என்ற இதழில் 18 அக்டோபர் முதல் 18 ஏப்ரல் 2002 வரை 33 அத்தியாயங்களாக வெளி வந்தது. இத்தொடரை தழுவி இரண்டு நிகழ்பட ஆட்டங்களை கேம்பாய் அட்வான்ஸ் நிறுவனம் விற்பனையில் விட்டுள்ளது

கதைச்சுருக்கம்[தொகு]

ரெக்காவின் நெருப்பு என்ற இத்தொடர், ரெக்கா ஹானபீஷீ என்ற இளைஞனின் வாழ்க்கையை ஒட்டியது. இவன் தன்னை வீழ்த்துபவர்களுக்கு நிஞ்சாவாக இருப்பதாக அறிவித்ததால், அவ்வப்போது ஒத்த வயதினருடன் எப்போதும் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பான். இருப்பினும், யனாகி சகோஷிடா என்ற பெண்ணிடம் சூழ்நிலைகளின் காரணமாக அவளுக்கு காலம் முழுவதும் நிஞ்சாவாக இருப்பதாக வாக்குறுதி அளிக்கிறான். யனாகி சகோஷிடா குணப்படுத்தும் ஆற்றலுள்ள ஒரு பெண்; மேலும் கருணையும் அன்பும் நிரம்பியவள். இதற்கு இடையில், காகே ஹோஷி என்கிற மாயப்பெண் ரெக்காவின் வாழ்வில் புகுகிறாள். வெகு விரைவில் தனக்குள் நெருப்பை கட்டுப்படுத்தும் திறன் உள்ளதை உணர்கிறான் ரெக்கா. மேலும் அவன் 400 ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட, ஹொக்காகே நிஞ்சா இனத்தவரின் ஆறாம் தலைமுறை தலைவரின் மகன் என்பதையும், மாய ஆயுதங்களால் ஆன மடோகுவைக் குறித்தும் அறிகிறான். இந்நிலையில் மோரியும், குரேயும் யனாகியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்கின்றனர். அதற்காக பல்வேறு மடோகுகளை பயன்படுத்துபவர்களை ரெக்காவுக்கு எதிராக ஏவுகின்றனர். ரெக்காவும் அவனது நண்பர்களும் தங்களது மடோகுகளையும் நெருப்பு டிராகன்களையும் வைத்துக்கொண்டு மோரியிடத்திலிருந்து எவ்வாறு யனாகியை காப்பாற்றுகின்றனர் என்பது தான் கதை. அதே நேரத்தில் ரெக்கா தனது தாயின் சாபத்தையும் தீர்க்க வேண்டும்.

கதாபாத்திரங்கள்[தொகு]

ரெக்கா ஹானபீஷி
ரெக்கா இந்த மங்கா தொடரின் கதாநாயகன். நிஞ்சாவை குறித்தும் அதன் தொடர்புடைய அனைத்தின் மீது மிகவும் பற்றுடையவன். தன்னை தோற்கடிப்பவர்களுக்கு தான் நிஞ்சாவாக அவர்களுக்கு பணிபுரிவதாக அறிவித்துக்கொண்டவன். ஹொக்காகே நின்ஜா இனத்தவரின் தலைவர் ஓக்காவின் இரண்டாவது மகன். தன்னுள் 8 டிராகன்களை கொண்டிருப்பவன். 400 ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய் ககேரோவால், நிகழ்காலத்துக்கு அனுப்பப்பட்டவன். அவன் தாய் இவனை நிகழ்காலத்துக்கு அனுப்பியதில் இருந்து தான் கதை ஆரம்பமாகிறது.

யனாகி சக்கோஷிட்டா
யனாகி, தன்னுள் எவ்வித காயத்தையும் குணமாக்கும் தன்மை கொண்டவள். இவளுடைய கருணை குணத்தைப் பார்த்து இவளுக்கு தன்னை நிஞ்சாவாக அர்ப்பணித்துக்கொண்டான். இத்தொடரின் வில்லன் கோரன் மோரி தனக்கு அமரத்துவம் கிடைப்பதற்காக இவளை அடைய நினைப்பவர். ஆனால் ரெக்காவும் நண்பர்களும் அதை தொடர்ந்து தடுக்கின்றனர்.

ஃபூக்கோ கிரிஸாவா
ஃபூக்கோ, முரட்டுத்தனமாக குணமுடைய பெண். ரெக்காவின் குழந்தைப்பருவ தோழி. ரெக்காவை வீழ்த்தி தன்னுடைய நிஞ்சாவாக்க வேண்டும் என்பது குறிக்கோளாக உடையவள். ரெக்கா யனாகியின் நிஞ்சா ஆனதை கண்டு தொடக்கத்தில் பொறாமை பட்டாலும், பிறகு மூவரும் சிறந்த நண்பர்களாக ஆகின்றனர். காற்றை கட்டுப்படுத்தும் ஃபூஜின் என்ற மடோகுவை கையாள்பவள். ஃபூஜின் உதவியுடன் ரெக்காவுக்கும் மற்றவர்களுக்கு உதவி புரிகிறாள். இந்த ஃபூஜின் ககெரோவால் ஆரம்பத்தில் ரெக்காவை எதிர்க்க தரப்பட்ட மடோகு.

டொமோன் இஷிஜீமா
டொமோன் ரெக்காவின் பள்ளித்தோழன். 'ஃபூக்கோ'வைப்போல் தொடக்கக் காலத்தில் ரெக்காவைத் தோற்கடிக்கத் துடித்தான். ஆனால் பிறகு மூவரும் இணைபிரியா தோழர்களாயினர். இவன் டோஸே நொ வா என்ற மடோகுவை பயன்படுத்துகிறான். இந்த மடோகு பயன்படுத்துபவரின் மனதிடத்திற்கு ஏற்ப அவரின் உடலைத்திடப்படுத்துகிறது. இத்தொடரின் பிற்பாதியில், குசிபாஷீ-ஓ என்ற கூரிய மடோகுவை பயன்படுத்துபவன். மேலும் 'டெட்ஸுகன்' என்ற உடலை இரும்பாக்கும் மடோகுவையும் பயன்படுத்தி உள்ளான்.

டோக்கியா மிககாமி
டோக்கியா நஷிகிரி உயர்நிலைப்பள்ளியின் இரண்டாம் ஆண்டு மாணவன். இவன் என்சூயி என்ற வாளை கையாள்பவன். இந்த என்சூயி தண்ணீரையே தன்னுடைய கூர்மையான வெட்டும் பகுதியாக மாற்றக்கூடியது. தொடக்கத்தில், இறந்த தன் தங்கையை போல் யனாகி இருந்ததால் அவளை தன்னுடன் சேர்த்துக்கொள்ள விரும்பினான். பின்னர், தன் தங்கையின் கொலைகாரர்களைப் பழி வாங்கவும் பிற காரணங்களுக்காகவும் ரெக்காவுடனும் மற்றவர்களுடனும் சேர்ந்து யனாகியை காப்பாற்ற உதவுகிறான்.

கவோரு கோகனே
கவோரு ஒரு காலத்தில் குரேயின் 'உருஹா' குழுவில் இடம் பெற்றிருந்தான். பின்னர் ரெக்காவின் 'ஹோக்காகே' குழுவில் உரா பூடோ சட்ஸுஜின் போட்டியின் போது இணைந்தான். இவன் ஐந்து உருவங்ளைக் கொண்ட புதிர் மடோகுவான கோகன் அங்கி பயன்படுத்துபவன். மங்காவில் இந்த ஆயுதத்துக்கு 'மு' என்ற ஆறாவது வடிவமும் உள்ளது.

காகே ஹோஷி/ககெரோ
காகே ஹோஷி முதலில் வில்லியாக தொடரில் அறிமுகம் செய்யப்பட்டாள். பிறகு இவள் ரெக்காவின் தாய் எனத் தெரிய வந்தது. இவளிடத்தில் 'எய்க்காய் க்யோக்கு' என்ற பந்தில் பிறருடைய கடந்த காலத்தையும், வருங்காலத்தையும் பார்க்க இயலும். மேலும் அதைக்கொண்டு நிழல்கள் மூலமாக நடமாட முடியும். இவள் தான் ரெக்கா கொல்லப்படாமல் தடுப்பதற்காக, தடை செய்யப்பட்ட 'நிஞ்சுட்ஸு'வான 'ஜிக்கூர்யூரி' என்பதை பயன்படுத்தி அவனை நிகழ்காலத்திற்கு அனுப்புகிறாள். ஆனால் தடை செய்யப்பட நிஞ்சுட்ஸுவை பயன்படுத்தியதின் காராணமாக சாகமுடியாத சாபத்தை பெறுகிறாள்.

குரே
குரே ரெக்காவின் அண்ணன். ரெக்காவைவிட நான்கு வயது பெரியவன். ஓக்காவுக்கும், அவனது மூத்த மனைவியான ரெய்னாவுக்கும் பிறந்தவன். ஹோக்காகே தலைவனாக நியமிக்கப்படவேண்டிய இவன், ரெக்காவின் பிறப்பால் புறக்கணிக்கப்பட்டவன். இவனும் நெருப்பை பயன்படுத்தக்கூடியவன். இவனுடைய நெருப்பு 'ஃபீனிக்ஸ்', இறந்தவர்களின் ஆத்மாவை குரேவின் நெருப்பாக மாற்றக்கூடியது. ககெரோ ரெக்காவை நிகழ்காலத்துக்கு அனுப்புகையில் தவறுதலாக இவனும் நிகழ்காலத்துக்கு வருகிறான். மோரி குரானால் தத்தெடுக்கப்படுகிறான். ரெக்காவை பழிவாங்க மோரி குரானுக்கு உதவி புரிகிறான்.

மடோகு[தொகு]

மடோகு என்பது ஒருவித மாய ஆயுதங்கள் ஆகும். ஹொகாகே நிஞ்சா இனத்தவரால் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இவை போரில் பயன்படுத்த உருவாக்கப்பட்டவை. இயற்கையின் கூறுகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. இதனால் தான் மற்ற நிஞ்சா இனத்தவர், ஹொக்காகே இனத்தவரை கண்டு பயந்தனர். இந்த மடோகுகளை கைப்பற்றத்தான் ஓடா நொபுநகா ஹொகாகே இனத்தவரை அழிக்க துடித்தான். இவனிடமிருந்து காப்பாற்றவே ககெரோ ரெக்காவை ஜிக்கூர்யூரி பயனபடுத்தி நிகழ்காலத்துக்கு அனுப்புகிறாள்.

ஒவ்வொரு மடோகுவின் மீதும் சீன கன்ஜி எழுத்து இடப்பட்டு இருக்கும். அந்த கன்ஜி எழுத்துக்களை பொருத்தே, மடோகுவின் ஆற்றல் இருக்கும்.பழங்கால மடோகுகளை மோரியும், குரேவும் சேர்த்து வைத்து, அதை ரெக்காவுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர். இதனை சமாளிக்க ககெரோ தான் பத்திரப்படுத்தியுள்ள சில மடோகுகளை ரெக்காவின் நண்பர்களுக்கு தருகிறாள். இத்தொடரில் உள்ள சில முக்கிய மடோகுகள்(மேற்கூறியவை அல்லாமல்)

  • ஷிக்ககாமி
  • ரைஜின்
  • ஹ்யோமா என்
  • டைஷாகு கைட்டன்
  • ஷிராஹிகே
  • கொடமா
  • ஓனி நோ ட்ஸுமே

இவற்றோடு அனைத்து மடோகுகளுக்கு தலைமையான மற்றும் தீய எண்ணம் கொண்ட மடோகு

  • டெண்டோ ஜிகோகு(சொர்க்கம் நரகம்)

கடைசி அத்தியாயங்களில் மோரான், இதை அடைந்து அதனுடன் ஒன்று சேர்கிறான். இத்தொடரின் முடிவில் ரெக்காவும், குரேவும் ஒன்றிணைந்து யனாகியின் உதவியுடன் இந்த டெண்டோ ஜிகோகுவை அழிக்கின்றனர்.

நெருப்பு டிராகன்கள்[தொகு]

நெருப்பை ஆளுபவர்களின் மூல சக்தியாக விளங்குவது நெருப்பு டிராகன்கள். இந்த நெருப்பு டிராகன்கள் அனைத்தும் ஹொக்காகே முன்னாள் தலைவர்களின் ஆன்மாக்கள். ஒரு ஹொக்காகே தலைவர், இறக்கும் போது நிறைவேறா ஆசைகளுடனோ, நிறைவேற்ற முடியா உறுதிமொழிகளுடனோ இறக்கும் போது, அவர்கள் நெருப்பு டிராகன்கள் ஆகின்றனர். இவர்கள் அடுத்த தலைமுறை தலைவர்களின் உடலில் வாழ்ந்து அவர்களுக்கு நெருப்புத் திறமையினை அளிக்கின்றனர். இப்படி ரெக்காவின் உடலில் ஹொக்காகே இனத்தவரின் எட்டு தலைவர்கள் எட்டு டிராகன்களாக அவனுள் வாழ்ந்து வருகின்றனர்

அந்த எட்டு டிராகன்களும் அவற்றின் ஆற்றல்களும்

எண் பெயர் ஆற்றல்
1 நடரே டான் என், நெருப்புப பந்து ரெக்கா முதன் முதலில் பயன்படுத்திய டிராகன். மேலும் இது தான் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டிராகன்
2 சைஹா என் ஜின், நெருப்புக் கத்தி சைஹா கத்திப் போன்ற ஒன்றை உருவாக்க பயன்படுகிறது
3 ஹோமுரா பென் என், நெருப்பு சாட்டை ரெக்காவின் மிக சக்திவாய்ந்த ஒரு எதிர்ப்பு
4 செட்ஸுனா ஷுன் என், நெருப்பு ஒளி மிகவும் கோபமான டிராகன். தன் கண்களை பார்க்கும் ஒருவரை எரித்துவிடும்
5 மடோக்கா கெக்கை என், நெருப்பு தடுப்பு மிகவும் அமைதியான டிராகன்.
6 ரூயி கென் என், நெருப்பு மாயம் இந்த டிராகன், நெருப்பினால் ஒரு மாயத்தை உருவாக்கி, எதிராளியை நம்ப வைத்துவிடும்.
7 கோக்கூ ஹடோ என், நெருப்பு கிரணம் அவ்வப்போது மனித உருவில் வந்து ரெக்காவுக்கு உதவி செய்யும் டிராகன்
8 ரெஸ்ஷின் / ஓக்கா இறந்த ஆன்மாவை நெருப்பாக மாற்றுதல் இந்த எட்டாவது டிராகன், ரெக்காவின் தந்தையுடைய ஆன்மா.

தழுவல்கள்[தொகு]

அனிமே[தொகு]

இந்த மங்கா தொடர், இதே பெயரில் அனிமேவாக உருவாக்கப்பட்டது. இது 19 ஜூலை 1997 முதல் 10 ஜீலை 1998 வரை ஃபூஜி தொலைக்காட்சியில் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் மங்காவின் 16 அத்தியாயங்களை 42 எபிசோடுகளாக தயாரித்தனர். மங்காவிற்கும் அனிமே தழுவலுக்கு நிறைய குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் உள்ளன். அதில் முக்கியமானது, இந்த அனிமே முற்றுப் பெறாத ஒன்றாக உள்ளது. 33 அத்தியாயங்களில் 16 அத்தியாயங்களே அனிமே தயாரிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன். மேலும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் பல கவனிக்கத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

தீம் பாடல்கள்[தொகு]

  • திறப்புப் பாடல்: "நான்கா ஷீயாவாஸே; なんか幸せ (ஒரு வித மகிழ்ச்சி)
  • முடிவுப் பாடல்கள்:
  1. எபிசோடுகள் 1-32: "லவ் இஸ் சேஞ்சிங்"
  2. எபிசோடுகள் 33-42: "ஸூட்டோ கிமி நோ சொப டே" ずっと君の傍で (என்றும் உன்னருகில்) by Yuki Masuda

கணினி விளையாட்டுக்கள்[தொகு]

ரெக்காவின் நெருப்பு தொடரை தழுவி இரண்டு விளையாட்டுக்கள் உள்ளன. ஒன்று ஃப்ளேம் ஆஃப் ரெக்கா இன்னொன்று ஃப்ளேம் ஆஃப் ரெக்கா ஃபைனல் பர்னிங்க். இவ்விரண்டும் ப்ளேஸ்டேஷன் 2க்குகாக தயாரிக்கப்பட்டன. இந்த விளையாட்டுகளின் கதையோட்டம் மங்கா தொடரின் கடைசி 5 அத்தியாயங்களைத் தழுவி அமைக்கப்பட்டிருந்தது. இந்த விளையாட்டுக்களில் உள்ள கதாபாத்திரங்கள் மங்கா கதாபத்திரங்களை பெரும்பாலும் ஒத்து இருந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெக்காவின்_நெருப்பு&oldid=3227047" இலிருந்து மீள்விக்கப்பட்டது