இராமானுசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராமானுஜர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்ரீஸ்ரீ இராமானுச சுவாமிகள்

இராமானுசர் (இராமானுஜர், 1017-1137) [1] இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கினவர். அண்மைக்காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது இறப்பும் 20 ஆண்டுகள் வரை பிந்தியே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதும் சிலரது கருத்து. இவர் விசிட்டாத்துவைத தத்துவ இயலை நாடளாவிய முறையில் பரப்பிய மெய்யியலாளர். பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்திற்கு மாற்றுச்சொன்ன ஆன்மீகவாதி. பாரததேசத்தின், சரித்திரப்பிரசித்தி பெற்று உலகளவில் புகழடைந்த, மூன்று முக்கிய குருமார்களில் ஒருவர். மற்ற இருவரில் ஒருவர் ஆதி சங்கரர். மற்றவர் துவைத மதப்பிரிவை நிலைநாட்டிய மத்வர். இராமானுசரைப் பின்பற்றியவர்கள் வைஷ்ணவர் எனப்படுவர்.

பொருளடக்கம்

ஆச்சாரிய பரம்பரை [தொகு]

ஒன்பதாவது நூற்றாண்டைச் சார்ந்த நாதமுனிகள் என்ற முதல் ஆச்சாரியரில் அடங்கிய குரு பரம்பரையில் மூன்றாவதாக வந்தவர் இராமானுசர். ஸ்ரீவைஷ்ணவப் பண்பாட்டில் ஆழ்வார்கள் பன்னிருவரும் மக்களின் இதயத்தைத் தொட்டு மனதை மாற்றியவர்கள். ஆச்சாரியர்களோ புத்திபூர்வமாக மனதைத் தொட்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் புவியில் உலாவிய நம்மாழ்வாரின் பிரபந்தங்களை நாதமுனிகள்தான் தமிழ்நாட்டில் தேடித்தேடி வெளிக்கொணர்ந்து, பாசுரங்களை இசைக்குகந்ததாக ஆக்கி எல்லா இடங்களிலும் பரப்பினார். யோகசக்தி மூலம் நம்மாழ்வாரிடமிருந்து பிரபந்தங்களை நேரிடையாகப் பெற்றார் என்பது ஸ்ரீவைஷ்ணவர்கள் சிலரின் நம்பிக்கை. இரண்டாவதாக ஆச்சாரிய பீடத்தில் ஏறியவர் யமுனாச்சாரியார் என்பவர். ஆளவந்தார் என்பது அவரது இன்னொரு பெயர். நாதமுனிகளின் பேரன். ஒரு சொற்போரில் வென்று அரசகுலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பிற்பாடு தன் குரு மணவாள நம்பியின் தூண்டுதலால் திருவரங்கத்திற்கு வந்து துறவியானவர். வைணவ சம்பிரதாயங்களை ஒழுங்காக வகுத்து பின்வரும் நான்கு அடிப்படை நூல்களை எழுதியவர்.

சித்தித்ரயம்: இது விசிட்டாத்துவைதக் கொள்கைகளை விவரிக்கிறது.

ஆகம ப்ராமாண்யம்: இது பாஞ்சராத்ர ஆகம விளக்கம்.

மஹாபுருஷ நிர்ணயம்: இது மகாலட்சுமியுடன் கூடிய நாராயணன் தான் பரம்பொருள் என்பதை நிர்ணயிப்பது.

கீதார்த்த சங்கிரகம்: இது கீதைக்கு பொருளுரை.

யமுனாச்சாரியார்தான் இராமனுசரைக் கண்டுபிடித்து தனக்குப் பிறகு ஆச்சாரிய பதவிக்கு வரவேண்டியவர் அவர் என்று உலகுக்குக் காட்டியவர்.

வாரிசு எடுத்துக்கொண்ட சபதம் [தொகு]

யமுனாச்சாரியார் தன்னைக் கூப்பிட்டிருக்கிறார் என்று காஞ்சீபுரத்திலிருந்து ஓடோடியும் வந்த இராமானுசர் யமுனாச்சாரியாரின் உயிர்பிரிந்த உடலைத்தான் பார்த்தார். ஆனால் அவ்வுடலின் மூன்று கைவிரல்கள் மடிந்த நிலையில் இருந்தன. யாராலும் காரணம் சொல்ல இயலவில்லை. இராமானுசர் மூன்று பிரமாணங்கள் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அப்பிரமாணங்களை ஒவ்வொன்றாகச் சொன்னதும் பிண்த்தின் மூன்று மடிந்த விரல்களும் ஒவ்வொன்றாக விரிந்தன. அந்த பிரமாணங்களாவன:

• பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஒரு உரை எழுதுவது;

பராசரரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவது;

• நம்மாழ்வாரின் பெயர் உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது.

இம்மூன்றையும் இராமானுசர் தன் காலத்தில் செய்து முடித்தார் என்பது வரலாறு. பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரை எழுதி 1100ம் ஆண்டு முடித்தார். பராசரரின் பெயரை தன் சீடன் மகனுக்கு வைத்து, அவனை விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு ஒரு விரிவான உரை எழுதச் செய்தார். இன்றும் பராசர பட்டரின் உரை என்று அது சிறந்து விளங்குகிறது. மூன்றாவதாக தன் சீடன் திருக்குருகைப்பிரான் பிள்ளான் மூலம் திருவாய்மொழிக்கு உரை படைத்து நம்மாழ்வாரின் பெயர் என்றும் ஓங்கி உலகளாவி இருக்கும்படிச் செய்தார்.

கருணைக்கடல் [தொகு]

யமுனாச்சாரியாரின் வைணவத் தத்துவங்களைக் கற்பதற்காகவே இரண்டாண்டுகள் தவமிருந்தார் இராமானுசர். யமுனாச்சாரியாரின் ஐந்து சீடர்கள் அவருக்குக் கற்பித்தனர். திருக்கோட்டியூரில் எட்டெழுத்து மந்திரத்தை அவர்களில் ஒருவரிடமிருந்து உபதேசம் பெற்றவுடன் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்கும்படி அதை எல்லோருக்கும் உபதேசம் செய்தார். இரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்வது குருவின் சொல்லுக்கு துரோக மிழைப்பதாகுமே என்ற பேச்சுக்கு அவருடைய பதில்: அந்த மந்திரம் எல்லோரையும் கடவுளிடத்தில் கொண்டு சேர்ப்பதாயிருந்தால் அதை முரசு கொட்டி எல்லோருக்கும் சொன்னதற்காகத் தான் நரகத்திற்கும் செல்லத் தயங்கவில்லை என்றார்!

நிர்வாகி [தொகு]

இராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இவ்வேற்பாடுகளில் அவருக்கு எதிர்ப்புகளும் முளைத்து அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நடந்தன. தற்கால ஸ்ரீவைஷ்ணவ நடைமுறைகளை உருவாக்கி சடங்குகளோ, சம்பிரதாயங்களோ, பழக்க வழக்கங்களோ எல்லாவற்றிற்கும் கருத்துச் செறிவுடன் உயிர் கொடுத்தவரும் அவரே. இவையெல்லாம் செவ்வனே செயல்பட முடிந்ததற்கு முழுக் காரணம் அவர் ஒருவராகவே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைஷ்ணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தியது தான்.

வைஷ்ணவத்தின் பரவல் [தொகு]

இராமானுசர் பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்து வைஷ்ணவத்தின் பெருமையை எங்கும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று வைஷ்ணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மீகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மீகத் தலைவர்களாக்கினார். திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிப்படுத்தினார். ஒவ்வொருவரிடமும், முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையேயும், இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைச் சொரிந்தார். தமிழ் பிரபந்தங்களை ஓதவும் வைணவச் சின்னங்களை தரிக்கவும் எந்தச் சாதியினரோ ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் வைஷ்ணவத்தில் இடம் இருக்கச் செய்தார்.

நூல்கள் [தொகு]

வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல். அதைத்தவிர அவர் இயற்றியவை:

வேதாந்த சங்கிரகம். இது உபநிடத தத்துவங்களை விவரித்துச்சொல்கிறது.

வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம் : இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சுருக்கமான உரைகள்.

கீதா பாஷ்யம். இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.

நித்யக்கிரந்தங்கள். அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும்.

கத்யத்ரயம். இவை மூன்று உரைநடை நூல்கள். சரணாகதி கத்யம் பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது. ஸ்ரீரங்க கத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. வைகுண்ட கத்யம் மகாவிட்டுணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது.

இராமானுசர் அவருடைய சொற்பொழிவுகளை தமிழில் செய்தாலும், தமிழில் அவர் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் ஸ்ரீபாஷ்யம் தவிர அவருடைய இதர நூல்களில் ஆழ்வார்களின் பக்திச்சுவை பாதிப்பு நன்றாகவே தெரிகிறது.

இராமானுசருக்குப் பின் [தொகு]

இராமானுசருக்குப் பின் ஆச்சாரியராக வந்தவர் பராசர பட்டர் என்பர் தென்கலை வைணவர்கள். கூரேசர் என்பர் வடகலை வைணவர்கள். இராமானுசர் தன்னுடைய வடமொழிப் புலமையையும், வேதாந்தக்கடலில் தான் கடைந்தெடுத்த முத்துக்களையும் ஆழ்வார்களின் பக்திவெள்ளப் பெருக்குடன் இணைத்து விசிஷ்டாத்வைதத்தை அமைத்தார். ஆனால் அடுத்த இரு நூற்றாண்டுகளில் வடமொழி நூல்கள், ஆழ்வார்களின் தமிழ் பிரபந்தங்கள் இவையிரண்டில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கொள்கையில் வேறுபாடுகள் ஏற்பட்டு வடகலை, தென்கலை என்ற இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. தத்துவத்திலும் சில வேறுபாடுகள் தலைப்பட்டன. ஆனால் இரு சாராரும் இராமானுசர் என்ற பெயருக்கும் அவருடைய நூல்களுக்கும் உயர்ந்த மதிப்பு தருவதில் ஒருவரையொருவர் மிஞ்சுவர். ஒவ்வொரு வைணவக் கோயிலிலும் இராமானுசரின் கைகூப்பிய சிலை ஆண்டவன் சன்னிதியில் இருப்பதை இன்றும் காணலாம். வைணவத்தின் உட்பிரிவுகள் மட்டுமல்ல, இந்து சமய உலகத்தின் எந்தப்பிரிவிலும், ஆண்டவனைத் தொழும்போது ‘கடவுள் அனந்த கல்யாண குணங்களைப் பெற்றவன், அடியேன் ஒரு சின்னஞ்சிறு துளியிலும் துளி’ என்ற அடிப்படை மனப்பான்மை இருத்தல் வேண்டும் என்ற கோட்பாடு இராமானுசர் இட்டுச்சென்ற அழியாத முத்திரையே.

வடநாட்டிலும் [தொகு]

இராமானுசரின் விசிட்டாத்துவைதத் தத்துவங்கள் காசுமீரம் வரையில் வடநாட்டிலும் பிரபலமடைந்தன. இராமானந்தர் (1300-1411) விசிட்டாத்துவைதத்தை ஏற்று காசியில் ஜாதிவேற்றுமை பாராது கபீர்தாசர், ரவிதாசர், முதலிய பல சீடர்கள் மூலம் வைணவத்தைப் பரப்பினார். சக்கிலியார் வகுப்பில் பிறந்த இந்த ரவிதாசர் தான் இராசபுதனத்து மீராவை பக்தி மார்க்கத்தில் இழுக்கக் காரணமாயிருந்தவர். பிற்காலத்தில் ராமசரிதமானஸ் என்ற அமர காவியத்தை இயற்றி வடநாடு முழுவதும் ராமபக்தி செழிக்கச் செய்த துளசிதாசரும் இராமானுசருடைய தத்துவங்களால் உந்தப்பட்டவர்தான்.

இவற்றையும் பார்க்க‌ [தொகு]

துணை நூல்கள் [தொகு]

  • Swami Tapasyananda. Bhakti Schools of Vedanta.1990. Sri Ramakrishna Math. Mylapore, Chennai. ISBN 81-7120-226-8
  • V.N. Gopaladesikan. A Dialogue on Hinduism. 1990. Vishishtadvaita Research Centre, Madras.
  • Swami Krishnananda. A Short History of Religious an d Philosophical Thought in India. 1970. Divine Life Society, Shivanandanagar.
  • Cultural Heritage of India. Bharatiya Vidya Bhavan, Bombay. Article on ‘The Historical Evolution of Sri Vaishnavism in South India’.
  • V. Krishnamurthy. The Ten Commandments of Hinduism.1994. New Age International. New Delhi.ISBN 81-224-0628-9

அடிக்குறிப்பு [தொகு]

  1. பன்னிரண்டாம் நூற்றாண்டு என்பது மு. அருணாசலம் கருத்து
"http://ta.wikipedia.org/w/index.php?title=இராமானுசர்&oldid=1346436" இருந்து மீள்விக்கப்பட்டது