ராஜ பார்வை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஜ பார்வை
இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
தயாரிப்பாளர் ஹாசன் பிரதர்ஸ்
கமல்ஹாசன்
நடிப்பு கமல்ஹாசன்
மாதவி
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு 1981
நீளம் 3954 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

ராஜ பார்வை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கதைக்கரு[தொகு]

பார்வையற்ற ஒரு இந்து இளைஞனுக்கும், பணக்கார கிருத்துவப் பெண் ஒருத்திக்கும் விளைகிற காதலையும் அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விவரிக்கிறது. இறுதியில், தேவாலயத்தில், மற்றொருவனுடன் அவளுக்குத் திருமண ஒப்பந்தம் நிகழவிருக்கையில், அவளது விசும்பல் ஒலியின் மூலம் அவளுக்கு விருப்ப்பமில்லை எனத் தெளிவாக அறிந்து கொள்ளும் நாயகன், தன் நண்பனின் உதவியுடன் அவளை அழைத்துச் சென்று விடுகிறான். இதற்கு அப்பெண்ணின் தாத்தாவின் ஆசிகளும் உண்டு!

படத்தின் சிறப்பம்சங்கள்[தொகு]

மிகச் சாதாரணமான ஒரு காதல் கதையை ஓரளவுக்குச் சிறப்பான முறையில் வடிவமத்திருந்தமைக்கு சிங்கிதம் ஸ்ரீனிவாசன் மட்டும் அல்லாது, கமலின் பங்களிப்பும் மிகப்பெரும் அளவில் உண்டு. தனது நூறாவது படமாக இதைக் கொண்டிருந்த கமல், பார்வையற்ற இளைஞன் வேடத்தில் திறம்பட நடித்திருந்தார். அவருடைய பல பரிமாணங்களையும் அறிவித்த படங்களூள் முதன்மையான சிலவற்றில் ராஜபார்வையும் அடங்குவதானது.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் இன்னிசை மழையாகவே இருந்தன. குறிப்பாக, வசந்தா என்னும் கருநாடக இசையொற்றிய அந்தி மழை என்னும் பாடல் மிகவும் பிரபலமானது. கமல் வயலின் நிகழ்ச்சியாக இசைத்தடம் ஒன்றும் இதில் இடம் பெற்றிருந்தது. பந்துவராளி என்னும் கருநாடக இசையைப் பின்பற்றி முதல் பகுதியிலும், மேலை நாட்டுப் பாணியில் இரண்டாவது பகுதியுமாக மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

கமலஹாசனுடன் மாதவி இணைந்த முதல் படம் இது. ஆயினும், இது பெரும் வெற்றியைப் பெறவில்லை. கமலுடன் மாதவி இணைந்த இதை அடுத்த படங்களும் அவ்வளவாக வெற்றி அடையவில்லை.

மிகப் பிரபலத் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான எல்.வி.பிரசாத் இதில் மாதவியின் தாத்தா வேடம் ஏற்றிருந்தார். ஓரளவு கமலிடமிருந்து காட்சியைத் திருடி விட்டார் எனவே கூறும் வண்ணம் அவரது நடிப்பு அமைந்திருந்தது.

சுவையான தகவல்கள்[தொகு]

  • ஒரு பத்திரிகையின் நேர்காணலில் இதை ஒரு குடும்பப்படம் என கமல் விவரித்திருந்தார். ஹாசன் பிரதர்ஸ் என்று குடும்பப் பெயரின் கீழ் தயாரித்தது மட்டும் அன்றி, அவரும் அவரது தமையன் சாருஹாசனும் இதில் நடித்திருந்தனர். அவரது குடும்பத்தில் பலரும் இப்படத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்புற்றிருந்தனர் என்று கமல் கூறினார்.
  • கமலின் நண்பனாக, ஒய்.ஜி.மகேந்திரனின் பாத்திரத்தில் முதலில் தாம் நடித்திருந்ததாகவும், அப்பாத்திரம் நாயகனை விட மிகச் சிறப்பாக உருவெடுத்துவிட்டமையால் விலக்கப்பட்டுப் பிறகு தாம் ஒரு சாதாரண பாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டதாகவும் அண்மையில் ஜெயா டி.வி.யின் திரும்பிப் பார்க்கிறேன் என்னும் நிகழ்ச்சியில் டெல்லி கணேஷ் கூறியிருந்தார்.
  • கமலின் முதல் சொந்தப் படமாகவும் அவரது நூறாவது படமுமான இது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அக்கால கட்டத்தில் மடை வெள்ளமெனக் காதல் கதைத் திரைப்படங்கள் வெளி வந்தமையும் (அலைகள் ஓய்வதில்லை, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை போன்றவை) ஒரு காரணமாக இருக்கலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_பார்வை_(திரைப்படம்)&oldid=1380879" இருந்து மீள்விக்கப்பட்டது