யாழ்ப்பாண வைபவமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ்ப்பாண வைபவமாலை (Yalpana Vaipava Malai) என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறவென எழுந்த ஒரு நூலாகும். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில் அக்காலத்திலிருந்த ஒல்லாந்த அதிகாரியொருவரென நம்பப்படும் மேக்கறூன் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க இது எழுதப்பட்டதாக, இந்நூலிலுள்ள சிறப்புப் பாயிரச் செய்யுளொன்றினால் அறியப்படுகிறது. இது ஐக்கிய தேசியக் கட்சியினால் யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பின் போது அழிக்கப்பட்டது.[1]

கைலாய மாலை, வையாபாடல், பரராசசேகரன் உலா மற்றும் இராசமுறை போன்ற நூல்களை முதல் நூல்களாகக் கொண்டே வைபவமாலையை இயற்றினாரென்று மேற்படி செய்யுளில் புலவர் எடுத்துக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தையாண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் கால வரலாறுபற்றிக் கூடிய அளவு தகவல்களைக் கொண்டுள்ள தற்போது கிடைக்கக்கூடிய நூல் இதுவேயாகும். எனினும் மேற்படி காலப்பகுதியின் இறுதியின் பின் 150 தொடக்கம் 200 ஆண்டுகள் வரை கழிந்த பின்னரே இந் நூல் எழுதப்பட்ட காரணத்தால், பல்வேறு நிகழ்வுகளின் காலங்கள் தொடர்பிலும், மேலும் பல விடயங்களிலும், பிழைகளும், குழப்பங்களும் நேர்ந்துள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும் யாழ்ப்பாண வரலாறு தொடர்பில் இந் நூலின் பெறுமதியைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

உள்ளடக்கம்[தொகு]

இந் நூல் ஆரம்பத்தில் இராமாயணத்திலிருந்து, இராம இராவண யுத்தத்தின்பின் ஏற்பட்ட விபீஷணன் ஆட்சியைத்தொட்டுப் பின் மகாவம்சத்திலிருந்து, வட இந்தியாவிலிருந்து வந்த விஜய ராஜனின் கதையையும், அவன் பின் அரியணையேறிய அவன் தம்பியின் மகனாகிய பண்டுவாசனதும் கதைகூறிப் பின் அவன் வம்சத்தில் வந்த ஒருவனிடமிருந்து தென்னிந்தியப் பாணன் ஒருவன் பரிசாகப்பெற்ற மணற்றிடர் என்ற இடம் யாழ்ப்பாணமான கதைகூறி யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொடங்குகிறது. இலங்கையின் மேற்குக்கரையிலுள்ள திருக்கேதீஸ்வரத்தின் புனரமைப்பு, கிழக்குக்கரையிலுள்ள திருக்கோணேஸ்வரம், தெற்கிலுள்ள சந்திரசேகரன் கோயில் மற்றும் வடகரையிலுள்ள திருத் தம்பலேஸ்வரம் என்பவற்றை விஜய ராஜனின் திருப்பணிகளாக இந்நூல் கூறுகிறது. பின்னர் யாழ்பாடியின் வரவுக்கு முன்னரே வன்னியர்களின் குடியேற்றம் பற்றியும் பேசப்படுகிறது.

யாழ்பாடிக்குப் பின் யாழ்ப்பாணத்திலேற்பட்ட குழப்பநிலையைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிலிருந்து, கூழங்கைச் சக்கரவர்த்தி அழைத்துவரப்பட்டமை, நல்லூர் இராஜதானியின் தோற்றம், யாழ்ப்பாணத்தில் மேலும் தமிழர்களின் குடியேற்றம், என்பவற்றை விபரிக்கும் இந்நூல், தொடர்ந்து இந் நாட்டையாண்ட மன்னர்கள் பற்றியும் அவர்கள் காலத்தில் நடந்த முக்கிய சில சம்பவங்கள் பற்றியும் சுருக்கமாக விபரந் தருகிறது. போர்த்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைய முன் நடந்த சம்பவங்களிலும், காலப்பகுதிகளிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

போர்த்துக்கீசர் ஆட்சிபற்றியும், பின்னர் அவர்களின் வீழ்ச்சிபற்றியும் கூறும் இந்நூல், ஒல்லாந்தரின் ஆட்சிபற்றியும் ஓரளவுகூறி நிறைவுபெறுகிறது.

ஒல்லாந்தர் ஆட்சியின்போது அவ்வரசின் அதிகாரியொருவரின் வேண்டுகோளின் பேரில் எழுதப்பட்ட இந் நூலில் காணப்படும் ஒல்லாந்தர் ஆட்சிபற்றிய சில கடுமையான விமர்சனங்களும், பிரித்தானியர் ஆட்சிபற்றி வருகின்ற பகுதிகளும், பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Knuth, Rebecca (27 June 2006). "Destroying a Symbol: Checkered History of Sri Lanka's Jaffna Public Library" (PDF). IFLA. பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்ப்பாண_வைபவமாலை&oldid=3885604" இலிருந்து மீள்விக்கப்பட்டது