யாழ்ப்பாண அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரியச்சக்கரவர்த்தி அரசு
யாழ்ப்பாண அரசு
1215–1624
யாழ்ப்பாண அரசு அதன் உச்சத்தில் கி.பி. 1350.
யாழ்ப்பாண அரசு அதன் உச்சத்தில் கி.பி. 1350.
தலைநகரம்நல்லூர்
பேசப்படும் மொழிகள்தமிழ்
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
ஆரியச் சக்கரவர்த்தி 
• 1215–1255[1][2][3][4]
கூழங்கைச் சக்கரவர்த்தி (கலிங்க மாகன்) [1][2][3][4]
• 1617–1619
சங்கிலி குமாரன்
வரலாற்று சகாப்தம்மத்திய காலம்
• கலிங்க மாகன் இலங்கை மீது படையெடுத்தலும் பொலனறுவையின் வீழ்ச்சியும்[1][2][3][4]
1215
• பாண்டியர் பாண்டியரிடமிருந்து விடுதலை
1323
1450
1467
1505
• நல்லூரின் வீழ்ச்சி
1624
நாணயம்சேது நாணயம்
முந்தையது
பின்னையது
பொலன்னறுவை இராச்சியம்
போர்த்துக்கேய இலங்கை

யாழ்ப்பாண அரசு (Jaffna kingdom) சிங்கைநகர் அரசு அல்லது ஆரியச்சக்கரவர்த்தி அரசு (Kingdom of Aryacakravarti) (கி.பி 1215–1624) எனப்படுவது இலங்கையின் தற்போதைய வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் யாழ்ப்பாணம் நகரில் அமைந்திருந்த வரலாற்று அரசைக் குறிக்கின்றது. இந்தியாவின் கலிங்க நாட்டைச் சேர்ந்த, யாழ்ப்பாண அரசின் நிறுவனர் எனப்படும் கலிங்க மாகன் படையெடுப்பின் பின் இது அமைக்கப்படதெனக் கூறப்படுகின்றது.[1][2][3][4] பலமிக்க படையை வடக்கு, வடகிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டு, பின் தற்போதைய தென்னிந்தியாவின் பாண்டியர் அரசுக்கு 1258 இல் நிலமாணிய வரியை கப்பமாக செலுத்தி வந்த இவ்வரசு பாண்டியரின் உடைவின் பின்னர் 1323 இல் விடுதலை பெற்றது.[1][5] தில்லி சுல்தானகம் முசுலிம் அரசின் படைத்தளபதி மாலிக் கபூர் மூலம் 1323 இல் மதுரையிலிருந்த கடைசி பாண்டிய ஆட்சியாளர் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதும் பாண்டியரின் உடைவு ஏற்பட்டது.[6] இவவ்வரசு ஆரம்பம் முதல் மத்திய 14 ஆம் நூற்றாண்டு வரை இலங்கைத் தீவில் பலம் பெற்று அப்பிராந்திய அரசுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆயினும், சுமார் 1450 ஆண்டளவில் இளவரசன் சப்புமால் படையெடுப்பினால் போட்டிமிக்க கோட்டை இராச்சியம் மூலம் தோற்கடிக்கப்பட்டது.[5]

இது சிறீ ஜெயவர்தனபுர கோட்டை கட்டுப்பாட்டில் இருந்து 1467 இல் விடுதலை பெற்றது.[7] இதன் பின்தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களினால் முத்துக்கள், யானை போன்றவற்றின் ஏற்றுமதி வரி, நில வரி ஆகியவற்றை அதிகரித்து பொருளாதார முக்கியத்துவத்தில் தங்கள் ஆற்றலை நகர்த்தினர்.[8][9] அது அக்கால இலங்கைத் தீவில் இருந்த பல அரசுகளைவிடக் குறைவான நில மானிய முறைமையாக இருந்தது.[9] ஆட்சிக்காலத்தில், மொழி வளர்ச்சிக்காக கல்விச்சாலைகள் உட்பட உள்ளூர் தமிழ் இலக்கியம் உருவாக்க முக்கியத்துவம், இந்து கோவில்கள் கட்டுமானம் என்பன இடம்பெற்றன.[10][11][12]

1505 இல் இலங்கைத் தீவிற்கு போர்த்துகல் குடியேற்ற சக்தியின் வருகை, பாக்கு நீரிணையின் கேந்திர முக்கியத்துவம் எல்லா சிங்கள அரசுகளையும் தென்னிந்தியாவினுடன் இணைத்தமை போன்றவை அரசியல் குழப்பங்களை உருவாக்கின. பல அரசர்கள் மோதி, பின்னர் போர்த்துக்கல்லுடன் சமாதானம் செய்து கொண்டனர். 1617 இல், இரண்டாம் சங்கிலி அரியணையை பறித்துக் கொண்டு, போர்த்துக்கல்லுடன் சண்டையிட்டார், ஆயினும் தோற்கடிக்கப்பட்டார். இதனால், 1619 இல் யாழ்ப்பாண அரசின் விடுதலை முடிவுக்கு வந்தது.[13][14] தஞ்சை நாயக்கர்கள் அரசின் ஆதரவுடன் மிக்கபிள்ளை ஆராச்சி போன்ற போராட்டக்காரர்கள் அரசை மீளவும் அமைக்க முயன்று, கடைசியில் தோற்றுப் போயினர்.[15][16][16] யாழ்ப்பாண நகரின் புறநகரான நல்லூர் அப்போது தலைநகராக இயங்கியது.

வரலாறு[தொகு]

தோற்றம்[தொகு]

யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களில் ஒன்றான வையாபாடல் இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 என்று கூறுகிறது. இன்னொரு நூலான வைபவமாலை இவ்வரசு கி.பி. 1314 இல் தொடங்கியதாகச் சொல்கிறது. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13 ஆம், 14 ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13 ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான களம் அமைத்துக் கொடுத்தன. ஆயினும், அதன் தோற்றம் பற்றிய வாத எதிர்வாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன.

யாழ்ப்பாண அரசின் தோற்றம் பற்றி தெளிவற்ற கருத்துக்களும் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகளும் காணப்படுகின்றன.[17][18][19][20][21] குறிப்பிடத்தக்க பிரதான வரலாற்று ஆய்வாளர்களான கே. எம். டி சில்வா, சிவசுப்பிரமணியம் பத்மநாதன், கா. இந்திரபாலா போன்றோர் பரவலாக ஆரியச் சக்கரவர்த்திகள் அரசு யாழ்ப்பாணத்தில் 1215 இல் இந்தியாவின் கலிங்க நாட்டைச் சேர்ந்த தளபதி கலிங்க மாகன் படையெடுப்புடன் ஆரம்பமாகியது என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.[2][3][4] பொலன்னறுவை அரசினை தன்னுடைய படையினர் மற்றும் கலிங்கம், கேரளம், தமிழ்நாடு ஆகிய இடத்து கூலிப்படையினர் உதவியுடன் ஆட்சி செய்த பாண்டியர் மன்னன் இரண்டாம் பராக்கிம பாண்டியனை கலிங்க மாகன் சிம்மாசனத்தைவிட்டு அகற்றினான்.[1] சோழர் ஆட்சிக்குப் பொறுப்பாக மூன்றாம் குலோத்துங்க சோழனது படைத்தளபதிகளுள் ஒருவனான அல்லது அரச பிரதிநிதியான குலோத்துங்கசோழக் காலிங்கராயன் இருந்துள்ளான். மேலும் இவனே கங்கராஜகாலிங்க விஜயபாகுவிற்கு (கலிங்கமாகனுக்கு) பட்டாபிஷேகம் செய்தான்.  ‘ஸ்ரீகுலோத்துங்கசோழக் காலிங்கராயநேன் ஈழமண்டலமான மும்முடி சோழமண்டல மெறிந்தும் கங்கராஜ காலிங்க விஜயவாகு தேவற்கு வீராபிஷேகம்’ செய்தான் என குமரன்கடவை கலவெட்டு தெரிவிக்கின்றது.

இலங்கையில் யாழ்ப்பாண அரசு உட்பட பாண்டியருக்கு கப்பம் செலுத்திய நிலப்பகுதிகள், கிட்டத்தட்ட 1250.

இராசரட்டையை வெற்றி கொண்ட கலிங்க மாகன், தலைநகரை பாரிய வன்னிக் காடு மூலம் பாதுகாக்கப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு தலைநகரை நகர்த்தி, தஞ்சாவூர் சோழர் அரசுக்கு கப்பம் செலுத்தும் அரசாக ஆட்சி செய்தான்.[1] அக்காலத்தில் (1247), தற்கால தாய்லாந்து நாட்டின் தம்பிரலிங்கா எனும் இடத்து மலாய் தளபதி சந்திரபானு அரசியல் அடைப்படையில் பிளவுபட்டிருந்த தீவில் படையெடுப்புச் செய்தான்.[1] ஆயினும், தம்பதெனியாவின் இரண்டாம் பராக்கிமபாகு (1236–70) தாக்குதலை முறியடிக்க, சந்திரபானு வடக்கிற்கு நகர்ந்து சிம்மாசனத்தை சுமார் 1255 இல் மாகனிடம் இருந்து காத்துக் கொண்டான்.[1] முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 13 ஆம் நூற்றாண்டில் இலங்கை மீது படையெடுத்து வட இலங்கையின் யாழ்ப்பாண அரசை பலாத்காரமாக ஆண்ட சந்திரபானுவைத் தோற்கடித்தான்.[22] முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சந்திரபானுவை பாண்டியர் ஆட்சிக்கு கீழ்ப்படிய கட்டாயப்படுத்தி, பாண்டியருக்கு கப்பம் செலுத்தச் செய்தான். ஆனால் பின்பு சந்திரபானு வலிமை பெற்று சிங்கள அரசு மீது படையெடுத்தான். ஆனாலும், அவர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சகோதரன் முதலாம் வீர பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டு, உயிரிழந்தான்.[22] இலங்கை மூன்றாவது முறையாகவும் பாண்டியர் படையெடுப்புக்கு உள்ளானது. இதனை யாழ்ப்பாண அரசை உருவாக்கிய ஆரியச் சக்கரவர்த்தி மூலம் மேற்கொள்ளப்பட்டது.[22]

ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சம்[தொகு]

அரச குடும்பம்: வலப்பக்கத்தில் முதலாவதாக இருப்பது முதலாம் சங்கிலி.

சந்திரபானு இரண்டாவது தென் படையெடுப்பைத் தொடங்கியதும், பாண்டியர் சிங்களவருக்கு உதவி செய்து சந்திரபானுவை 1262 இல் கொன்று, படையெடுப்பை நடத்திய மந்திரியான ஆரியச் சக்கரவர்த்திகள் அவர்களால் அரசராக நியமிக்கப்பட்டனர்.[1] முஸ்லிம் படையெடுப்புக்களினால் பாண்டியர் அரசு பலவீனமானதும், ஆரியச் சக்கரவர்த்தி ஆட்சியாளர்கள் யாழ்ப்பாண அரசை விடுதலைமிக்க அரசாக மாற்றி, இலங்கையில் பிராந்திய சக்தியாக மாற்றினர்.[1][5] யாழ்ப்பாண அரசின் எல்லா அரசர்களும் கூழங்கைச் சக்கரவர்த்தியின் வழித்தோன்றல்களாக கருதப்பட்டனர். கூழங்கைச் சக்கரவர்த்தி கலிங்க மாகனாக சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் இராசநாயகம் போன்றோரினால் அவர்களின் பாண்டிய வம்சாவளி குடும்பப் பெயருடன் அடையாளப்படுத்தப்பட்டனர்.[23][24]

அரசியல் ரீதியாக, 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுகளில் அரசு வல்லமையுள்ளதாகப் பரந்தபோது, எல்லாப் பிராந்திய அரசுகளும் அதற்கு கப்பம் செலுத்தின.[5] ஆயினும், அது தென் இந்தியாவின் விஜயநகரத்தில் இருந்து ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசுடன் எதிர்க்க வேண்டி இருந்தது. அத்தோடு தென் இலங்கையின் கோட்டை இராச்சியத்துடனும் எதிர்க்க வேண்டி இருந்தது.[25] இதனால் அரசு விஜயநகரப் பேரரசின் கீழ் வரவேண்டு ஏற்பட்டதுடன், 1450 முதல் 1467 வரையான காலப்பகுதியில் கோட்டை இராச்சியத்திடன் தன் விடுதலையை இழக்கவும் நேரிட்டது.[5] கோட்டை இராச்சியத்தின் சிதைவு விஜயநகரப் பேரரசின் உடைவு என்பவற்றால், இது மீண்டும் உருவாக்கம் பெற்றது.[7] இது மிகவும் நெருக்கமான வாணிப, அரசியல் தொடர்புகளை தென்னிந்திய தஞ்சை நாயக்கர்கள் அரசுடனும் கண்டி அரசுடனும் கோட்டை இராச்சியத்தின் பிளவுபட்ட அரசுடனும் கொண்டிருந்தது. இக்காலத்தில் இந்துக் கோயில்களின் உருவாக்கம், தமிழ், சமசுகிருத இலக்கிய செழுமை என்பன இடம் பெற்றன.[25][26][27]

கோட்டை இராச்சிய வெற்றியும் மீட்டலும்[தொகு]

கோட்டை இராச்சியம் யாழ்ப்பாண அரசை ஆறாம் பராக்கிரமபாகுவின் பெறா மகன் சப்புமால் குமாரயா (செண்பகப் பெருமாள்) மூலம் வெற்றி கொண்டது. இதற்கான சண்டைகள் பல பகுதிகளாக இடம்பெற்றன. முதலாவதாக, யாழ்ப்பாண அரசுக்கு கப்பம் செலுத்தி வந்த வன்னிப் பகுதியில் இடம்பெற்றது. அங்கிருந்த வன்னிமையின் தளபதிகளான வன்னியர் தோற்கடிக்கப்பட்டனர். இது இரு வெற்றிகரமான சண்டைகளுடன் பின் தொடர்ந்தது. அரசைக் கைப்பற்றுவதற்கான முதலாவது போர் வெற்றி பெறவில்லை. 1450 இல் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான சண்டையால் அரசு கைப்பற்றப்பட்டது.

திருநெல்வேலி அரிகேசரி பராக்கிரம பாண்டியனின் தென்காசிக் கல்வெட்டு கி.பி. 1449–50, 1453-4 காலப்பகுதியில் போர் இடம்பெற்றதாகக் குறிப்பிடுகிறது.[28] ஆரியச் சக்கரவர்த்தி அரசன் கனகசூரிய சிங்கையாரியன் தன் குடும்பத்துடன் தென் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றான். சப்புமால் குமாரயா கோட்டைக்குச் சென்றதும், கனகசூரிய சிங்கையாரியன் 1467 இல் அரசை மீட்டெடுத்தான்.

சரிவும் பின்னடைவும்[தொகு]

யாழ்ப்பாண அரசின் காரணித்துவ கால வரைபடம். ஏறக்குறைய 1619

போர்த்துக்கேய வர்த்தகர்கள் இலங்கைக்கு 1505 இல் வந்தனர். ஆரம்பத்தில் அவர்கள் தென்மேற்குக் கரையில் இருந்த கோட்டை அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். இருதரப்பும் அப்போது மசாலாப் பொருள் வர்த்தகத்தில் ஆதாய உரிமையில் ஈடுபாடு கொண்டு இருந்ததே அதற்கான காரணம்.[29] கத்தோலிக்க திருச்சபையின் மறைபரப்புச் செயற்பாடுகள் உட்பட்ட பல காரணங்களுக்காக போர்த்துக்கேயர் கொழும்பில் செயற்பட்டதை யாழ்ப்பாண அரசு விளங்கிக் கொண்டது.[29] அதனால், யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேய எதிர் செயற்பாடுகளைக் கொண்டிருந்த கோட்டை அரசில் உள்ளவர்களுக்கும் சீதாவக்கை அரசு தளபதிகளுக்கும் உதவினர்.[29] அத்துடன், கடல் துறைமுகங்கள் எதுவுமின்றி மலைநாட்டில் அமைந்திருந்த கண்டி அரசின் விநியோகத் தளமாகவும், தென்னிந்தியாவிலிருந்து வரும் படை உதவிகளின் நுழைவாயிலாகவும் யாழ்ப்பாண அரசு செயற்பட்டது.[29] மேலும், அதனுடைய கேந்திர முக்கியத்துவத்தினால், இடச்சுப் பேரரசின் தரையிறக்கப் பகுதியாக யாழ்ப்பாண அரசு அமையலாம் எனவும் அஞ்சப்பட்டது.[29] அரசன் முதலாம் சங்கிலி போர்த்துக்கேய தொடர்பை தடுத்ததுடன், மன்னார் தீவில் இருந்த 600-700 வரையான பரதவ கத்தோலிக்கரை கொலை செய்தான். யாழ் அரசர்களிடமிருந்து முத்து ஆதாயத்தை எடுத்துக் கொள்ள அக்கத்தோலிக்கர் இந்தியாவிலிருந்து மன்னாருக்கு கொண்டு வரப்பட்டனர்.[30][31]

கீழ்ப்பட்ட அரசு
யாழ்ப்பாணத்தை 1658 இல் வன் கோன்ஸ் வெற்றி கொள்ளல்.

இவற்றைச் சாக்காக வைத்துக்கொண்டு, போர்த்துக்கீச அரச பிரதிநிதி டொம் கொன்சுடன்டீனோ டி பிரகன்சா 1560 இல் படையெடுப்புச் செய்து அரசை கீழ்படியச் செய்வதில் வெற்றிபெறாவிட்டாலும் யாழ்ப்பாண அரசுக்குக் கீழ்ப்பட்ட மன்னார் தீவு பகுதியைக் கைப்பற்றினான்.[32] ஆயினும் தெளிவற்ற கூற்றுகளின்படி, 1582 இல் யாழ்ப்பாண அரசன் போத்துக்கேயருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள இணங்கினான் என்றும், பத்து யானைகளை அல்லது அதற்குச் சமமமான பணத்தை கப்பமாகச் செலுத்தினான் என்று கூறப்படுகின்றது.[29][32] இல் 1591, இரண்டாவது படையெடுப்பு அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா தலைமையில் இடம்பெற்றது. அரசன் புவிராஜ பண்டாரம் கொல்லப்பட்டு, அவனுடைய மகன் எதிர்மன்னசிங்கம் முடியரசாக போர்த்துக்கேயரால் நியமிக்கப்பட்டான். போர்த்துக்கேயர் எதிர்மன்னசிங்கத்துடன் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டனர். அதன்படி, கத்தோலிக்க மறைபரப்புனர்களுக்கு சுதந்திரமாக செயற்பட அனுமதி, போர்த்துக்கல்லுக்கு யானை ஏற்றுமதி செய்வதற்கான உரிமை ஆகியன உள்ளடங்கின.[32][33] ஆயினும், போர்த்துக்கேயருக்கு கட்டுப்பட்டிருந்த அரசன் அவற்றை எதிர்த்தான்.[32][33] அவன் முதலாம் விமலதர்மசூரியன் கீழ் இருந்த கண்டி அரசுக்கு 1593–1635 காலகட்டத்தில் போர்த்துக்கேயரை எதிர்க்க தென் இந்தியாவிலிருந்து உதவி வருவதற்கு துணை நின்றான். ஆயினும் அவன் அளவுக்கதிகமான போர்த்துக்கேயரை எதிர்க்காது சுயாட்சியை நடத்தினான்.[32][33]

இரண்டாம் சங்கிலி
இரண்டாம் சங்கிலியின் சிலை, நல்லூர், யாழ்ப்பாணம்.

1617 இல் எதிர்மன்னசிங்கத்தின் இறப்புடன், இரண்டாம் சங்கிலி, அரசனால் பரிந்துரைக்கப்பட்டவரைக் கொன்றுவிட்டு, அரியணையில் அமர்ந்தான்.[13] இரண்டாம் சங்கிலியின் செயலை போர்த்துக்கேயர் ஏற்றுக் கொள்ளாததால், படை உதவியை தஞ்சை நாயக்கர்கள் மூலம் பெற்றதுடன் நெடுந்தீவு பகுதியில் மலபாரிலிருந்து வரவழைக்கப்பட்ட தனியார் கப்பல் படையையும் முகாமிடச் அனுமதியளித்தான். இதனால் பாக்கு நீரிணை ஊடான போர்த்துக்கேயரின் கப்பல் போக்குவரத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தியது.[13] இரண்டாம் சங்கிலிக்கு கண்டி ஆட்சியாளர்களும் உதவியளித்தனர். யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியின் பின் பெயரிடப்படாத இரு யாழ்ப்பாண இளவரசிகள் குமாரசிங்க, விஜயபால ஆகியவர்களைத் திருமணம் செய்து கொண்டனர்.[16] இரண்டாம் சங்கிலி எதிர்பார்ப்புடன் தஞ்சை நாயக்கர்களிடமிருந்து படை உதவியைப் பெற்றான். தஞ்சை நாயக்கர்கள் யாழ்ப்பாண அரசை மீட்டெடுப்பதில் முனைப்புக் காட்டினர்.[16] ஆயிலும், போர்த்துக்கேயரிடமிருந்து மீள எடுக்க மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

சூன் 1619 இல், இரு படையெடுப்பு முயற்சிகள் போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்டன. மலபாரிலிருந்து வரவழைக்கப்பட்ட தனியார் கப்பல் படையினர் ஒரு கடற் படையெடுப்பை முறியடித்தனர். மற்றது பிலிப்பே டி ஒலிவேரா தலைமையில் 5,000 பலமிக்க தரைப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு, இரண்டாம் சங்கிலி தோற்கடிக்கப்பட்டான்.[13] சங்கிலியும் தப்பிப்பிழைத்த அவனது குடும்ப அங்கத்தவர்களும் சிறைபிடிக்கப்பட்டு, கோவாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சங்கிலி தூக்கிலிடப்பட்டான். எஞ்சியவர்கள் துறவிகளாகவும் துறவற கன்னியராகவும் வர அரச கட்டளையால் ஊக்கப்படுத்தப்பட்டனர். பலர் அதற்கு உடன்பட்டனர். இதனால் யாழ்ப்பாண முடிக்கு உரிமை கோர முடியாதவாறு ஆக்கப்பட்டனர்.[13]

நிருவாகம்[தொகு]

மந்திரிமனை – தற்போது எஞ்சியுள்ள மந்திரியின் வசிப்பிடம். இதனை போர்த்துக்கேயரும் இடச்சுக்காரரும் மீளவும் பயன்படுத்தினர்.[34]

யாழ் தீபகற்பத்தில் அரசு “பாறு” என்ற துணைப்பிரிவுகளுடன் மாகாணங்களாகப் பிரித்து இருந்தது. பாறு பெரிய நிலப்பகுதிகளாகக் காணப்பட, சிறிய பிரிவுகளாக ஊர் அல்லது கிராமங்கள் காணப்பட்டன. இவை பிராந்திய அடிப்படையில் அல்லது படிநிலை அமைப்பில் நிருவகிக்கப்பட்டன.[35] அரசன் படிநிலையின் உச்சத்தில் இருந்தான். அவனுக்குப் பின் அவனுடைய மூத்த மகனுக்கு அது சென்றது. இதற்கு அடுத்த படிநிலையில் அதிகாரிகள் மாகாண நிருவாகிகளாக இருந்தனர்.[5][35] இதனை அடுத்து முதலியார் நிலத்தின் சட்டம், வழக்கம் ஆகியவற்றை விளக்குபவர்களாகவும் நீதிபதிகளாகவும் செயற்பட்டனர்.[35] அத்துடன் அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு மாகாணத்தில் நடக்கும் தகவல்களைச் சேகரித்து அறிக்கையிட வேண்டும். உள்நாட்டு வருவாய் நிருவாகிகள் கண்காணிகள் (கங்காணி), மேற்பார்வையாளர்கள், கணக்குப்பிள்ளைகள் அல்லது கணக்காளர்கள் என அழைக்கப்பட்டவர்கள் அடுத்த படிநிலையில் இருந்தனர். இவர்கள் பண்டாரப்பிள்ளை எனவும் அறியப்பட்டனர். இவர்கள் கணக்குப் பராமரிப்பு, பதிவேடுகள் வைத்திருத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.[35][36]

பாறுக்கான தலைமையாளர் மணியம் ஆவார்.[35] இவர்களுக்கு முதலியார்மார் உதவி செய்தனர். முதலியாருக்கு கிராமம் அல்லது கிராமங்களின் குழுவுக்கு பொறுப்பான உடையார்கள் உதவி செய்தனர்.[35] இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் வரி வசூலித்தல், நில அளவீட்டுக்கு உதவி, சட்டம் ஒழுங்கு கண்காணித்தல் ஆகியவற்றைச் செய்தனர்.[35] கிராமத்தலைவர்கள் தலையாரி, பட்டான்கட்டி அல்லது அடப்பண்ணர் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். இவர்கள் வரி வசூலிப்பதற்கு உதவு செய்தல் தங்கள் பிரதேசப் பிரிவு சட்டத்தை பராமரிப்பதிலும் பொறுப்பாகவிருந்தனர்.[35] அத்துடன், ஒவ்வொரு சாதியினரும் தலைவர் ஒருவரைக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் சாதியின் உதவி செயற்பாடு, கடமை என்பவற்றைக் கண்காணித்தனர்.[35][36]

நிலமானிய உறவு

தற்போதைய வடமத்தி, கிழக்கு மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாண தீபகற்பத்தின் தென் பகுதிகள் வன்னிமைகள் ஆகும். அங்கு குறைவான அளவில் மக்கள் குடியேறினர். அவர்கள் வன்னியார் என்ற சிறு தலைமைகளின் கீழ் ஆளப்பட்டனர்.[36]

யாழ்ப்பாண தீபகற்பத்தின் தெற்கு, கிழக்கு திருக்கோணமலை மாவட்ட வன்னிமைகள் வரிக்குப் பதிலாக வருடாந்தத் திறையினை யாழ்ப்பாண அரசுக்கு வழங்கி வந்தனர்.[7][36] அத்திறை பணம், தானியங்கள், தேன், யானை, யானைத் தந்தம் ஆகியவாறு அமைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து பாரிய தொலைவில் அமைந்திருந்ததால் வருடாந்த திறை முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.[36] 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப, மத்திய காலப்பகுதிகளில், தீவின் மேற்கு, தெற்கு, மத்திய பகுதி சிங்கள அரசுகளும் நிலமானியத்தின் கீழ் வந்தன. இது 1450 காலப்பகுதியில் ஆறாம் பராக்கிரமபாகுவின் படைகள் கிட்டத்தட்ட 17 வருடங்ள் அரசை கைப்பற்றும்வரை தொடர்ந்தது.[37] கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில், அரசு தென்னிந்திய “மடலகோட்டா” மூலம் நிருவகிக்கப்பட்டது.[38]

தலைநகர்

பயணிக்கும் மொரோக்கோ வரலாற்றாசிரியர் இப்னு பதூதாவின் 1344 ஆம் ஆண்டுக் குறிப்பின்படி, அரசு வடக்கில் நல்லூரில் ஒன்றும், மேற்கில் புத்தளத்தில் ஒன்றும் என இரு தலை நகரங்களைக் கொண்டு இருந்ததாக அறிய முடிகின்றது.[5][27][39] மேலும், யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்தவையென சிங்கைநகர், நல்லூர் என இரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. தற்போதைய யாழ்ப்பாண நகருக்கு அருகேயுள்ள நல்லூர், அரசின் இறுதிக்காலத்தில் தலைநகராயிருந்ததென்பதில் ஐயமெதுவும் இல்லை. சிங்கைநகரென்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையிலுள்ள வல்லிபுரப்பகுதியில் அமைந்திருந்ததென்றும், இவ்வரசின் ஆரம்பகாலத் தலைநகரம் இதுவேயென்றும் சிலர் கூற, சிங்கைநகரென்பதும் நல்லூரையே குறிக்குமென்றும், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரம் நல்லூர் மட்டுமேயென்றும் வேறு சிலர் கொள்வர்.

எல்லைகள்

இதேபோல யாழ்ப்பாண அரசின் ஆட்சி எல்லை பற்றியும் தெளிவு இல்லை. குடாநாட்டுப் பகுதியைத் தளமாகக் கொண்டு, சமயங்களில் இவ்வரசின் எல்லை, வன்னிப்பகுதி முழுவதையும் உள்ளடக்கி, மேற்குக் கரையில் புத்தளம் வரை கூடப் பரந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

நல்லூர் இராசதானி[தொகு]

எருதும் மீன்களும் கொண்ட யாழ் அரச நாணயம்

தனித்திறம் வாய்ந்ததாகக் கணிக்கக்கூடிய பாரம்பரிய வரலாறு யாழ்ப்பாணத்துக்கு இருந்து வந்தாலும், வரலாற்றில் அதன் பெருமை சுதந்திரத் தமிழரசின் தோற்றத்தோடு மேலும் சிறப்படைவதனைக் காணலாம். இதை இந்த அரசு தொடர்பாகத் தோன்றிய தமிழ் இலக்கியங்களிலும், பிற வரலாற்று மூலங்களிலிருந்தும் அறிய முடிகிறது. அவ்வரலாற்று மூலங்கள் இவ்வரசின் தலைநகர் 'சிங்கை'[40], 'யாப்பாபட்டுன'[41], 'நல்லூர்'[42] என வேறுபட்ட தகவல்களைத் தருகின்றன. இவை தலைநகர் மாற்றத்தைக் குறித்து நிற்கின்றன என்ற கருத்தை வரலாற்று ஆசிரியர்களிடையே ஏற்படுத்தினாலும் கூட, தற்போது நல்லூரைத் தவிர ஒரு இராசதானிக்குரிய கட்டிட அழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பதினாறாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்திற்கு வந்த போர்த்துக்கேயர்கள் கூட நல்லூர் நகரத்தை மட்டுமே கண்டதாகத் தெரிகிறது.[43] இதனால் 13 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாண அரசின் தலைநகராக நல்லூரே விளங்கியதெனக் கூறலாம்.

வரலாற்றுச் சான்றுகள்[தொகு]

யாழ்ப்பாண இராச்சியத்தில் இந்த இராசதானி அமைந்திருந்த உண்மையான இடத்தையோ அதன் விஸ்தீரணத்தையோ பூரணமாக அறிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு போதிய தொல்பொருள் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்த சான்றுகளை வைத்து நோக்கும்போது இது தற்போதைய நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்னால் உள்ள மூன்று மைல் சுற்று வட்டத்திற்குள் அமைந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. இதன் எல்லைக்குள் வரலாற்றுப் பழைமை வாய்ந்த கொழும்புத்துறையும், பண்ணைத்துறையும் அடங்குகின்றன. இதை யாழ்ப்பாண வைபவமாலை யில் வரும் ஆதாரங்களும், போர்த்துக்கேய ஆசிரியர்களின் குறிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன.[43] இந்த இராசதானியின் அமைப்புப் பற்றி யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்படும் பின்வரும் வர்ணனைகள் இங்கு நோக்கத்தக்கது.

"நாலு மதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்கா விடு

வித்து மாட மாளிகையும், கூட கோபுரங்கைள
யும், பூங்காவையும், பூங்காவன நடுவிலே
ஸ்நான மண்டபமும். முப்படைக் கூபமும் உண்
டாக்கி அக்கூபத்தில் யமுனா நதி தீர்த்தமும்
அழைப்பித்துக் கலந்துவிட்டு நீதிமண்டபம் யானைப்
பந்தி, குதிரை லாயம், சேனாவீரரிருப்பிடம்
முதலியன கட்டுவித்து - கீழ்திசை வெய்யிலுக்குகந்த
பிள்ளையார் கோயிலையும், மேற்றிசைக்கு வீர
மாகாளியம்மன் கோயிலையும், தென்திசைக்கு
கைலாய பிள்ளையார் கோயிலையும், வடதிசைக்கு
சட்ட நாதேஸ்வரர் கோயில் தையல்நாயகி
அம்மன் கோயில் சாலை விநாயகர் கோயிலையும்

அமைப்பித்தனர்."[40]

குதிரையும், குத்துவிளக்கும் மீன்களும் கொண்ட யாழ் அரச நாணயம்

மேற்கூறப்பட்ட வர்ணனைகள் இன்று நல்லூர் இராசதானியைக் காண விழைவோர் மிகையாகவோ அல்லது கற்பனையாவோ கருத இடமளிக்கலாம். அதில் ஓரளவு உண்மையிருப்பினும், அவற்றை முற்றாக வரலாற்று உண்மைக்கு மாறானவையென ஒதுக்கிவிட முடியாது. இந்த நகர் பற்றி யாழ்ப்பாண வைபவமாலையில் மட்டுமன்றி போர்த்துக்கேய ஆவணங்களிலும் ஓரளவு குறிப்பிடப்பட்டுள்ளது. போர்த்துக்கேயரே இங்கிருந்த கோட்டையையும், ஆலயங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கியதாகக் கூறியுள்ளனர். அவ்வாறு இடிக்கப்பட்டவைகளைக் கொண்டே அவர்கள் தமது கோட்டைகளையும், தேவாலயங்களையும், தங்கியிருப்பதற்கான வீடுகளையும் கட்டினார்கள் என்பது கீழே வரும் பாடல் மூலம் உறுதியாகின்றது.

"பறங்கிகள் ஆட்சியினை ஒப்புக்கொண்டு

நல்லூரிற்குள்ளே குடியிருந்து கொண்டு
தங்கள் கருமங்களை நடத்திப் புறக்
கோட்டை மதில்களை இடிப்பித்து அக்
கற்களைக் கொண்டு போய்க் கடல்
ஓரத்திலே சங்கிலியரசன் இடிப்பித்துப்
பரவிவிட்ட தங்கள் கோட்டையை மறுபடி
கோட்டையாகக் கட்டி அதன் கீழ்ப்
புறத்திலே வீடுகளையும் அரசாட்சி
மண்டபங்களையும் கட்டுவித்துக் குடிகள்
சமீபத்தில் வீடுகட்டி வந்திருக்கும் படி

வசதி பண்ணினார்கள்."[44]

இக்கூற்றில் பெருமளவு உண்மையிருக்கலாம் என்பதை பறங்கித் தெரு பிரதான வீதியிலும், குறுக்கு வீதியிலும் உள்ள பல வீடுகள் பழைமையான கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை தமது 'யாழ்ப்பாணச் சரித்திரம்' என்னும் நூலில். நல்லூர் கோட்டையில் இருந்த கற்சாசனங்கள் இங்குள்ள வீடுகளில் வைத்துக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.[45] இதற்குச் சான்றாக இங்குள்ள பிரதான வீதியில் இருக்கும் தேநீர்க் கடையொன்றின் வாசற் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டொன்றாகும். இக்கல்வெட்டு இன்னொரு கட்டிடத்தின் தூணாகவோ அல்லது கதவு நிலையின் ஒரு பாகமாகவோ இருந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது. ஐந்தரை அடி நீளமும் ஏழு அங்குல அகலமும் கொண்ட இக்கல்வெட்டில் 25 வரிகளில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. இதில் 15 வரிகளை மட்டும் தெளிவாக வாசிக்க முடிகிறது. அவற்றிலிருந்து இக்கல்வெட்டு பதினைந்தாம் நூற்றாணடில் நல்லூரிலிருந்து ஆட்சி புரிந்த ஆறாம் பராக்கிரமபாகுவிற்குரியது என்பது தெரிய வருகிறது. இந்த அரசனின் ஆட்சி நல்லூரில் இருந்ததென்பதை இலக்கிய ஆதாரங்கள் தெரிவித்திருந்தாலும், அதை உறுதிப்படுத்தக் கிடைத்திருக்கும் ஒரேயொரு சாசனம் இக் கல்வெட்டாகும். இதே போல் நல்லூர் இராசதானிக்குரிய பல கற்சாசனங்களும். கற்றூண்களும் யாழ்ப்பாணக் கோட்டையில் வைத்துக் கட்டப்பட்டிருப்பதாக ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை மேலும் கூறியுள்ளார். அவ்வாறானவை யாழ்ப்பாணக் கோட்டையில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், கோட்டையின் மேற்குப் பகுதியில் காணப்படும் கற்றூண்களில் ஒன்றில் செதுக்கப்பட்டிருக்கும் நேர்த்தியான தாமரைச் சிற்பம் இக்கூற்றை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தற்போதைய நல்லூர் பிரதேசத்தில் யாழ்ப்பாண மன்னர்காலக் கட்டிடங்கள் எவையும் முழுமையாக இல்லாவிட்டாலும், அங்குள்ள மந்திரிமனை, சங்கிலியன் தோப்பு, இராசாவின் தோட்டம், பண்டார மாளிகை, பண்டாரக் குளம் போன்ற பெயர்களும், இவ்விடங்களில் அழிந்த நிலையில் இருக்கும் கட்டிடச் சிதைவுகளும் அக்கால நல்லூர் இராசதானியை நினைவுபடுத்துகின்றன.

Yamuna Eri in panorama view
Π வடிவிலமைந்த யமுனா ஏரி

பொருளாதரம்[தொகு]

ஒரு சேது நாணயம்

அரச பொருளாதாரம் கிட்டத்தட்ட முழுவதுமாக 15 ஆம் நூற்றாண்டு வரை விவசாய அடிப்படையில் காணப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, பொருளாதாரம் பல்வகைப்பட்ட, வாணிகமாக்கப்பட்டு, இந்தியப் பெருங்கடலில் வியாபித்த ஒன்றாகியது.

1344 இல் பயணித்த இப்னு பதூதா, யாழ்ப்பாண அரசு பாரிய வணிக அரசு என்பதையும் அது கடல்கடந்த தொடர்புகளைக் கொண்டுள்ளது என்பதையும் அவதானித்தார். அரச வாணிபங்கள் தென்னிந்தியா தொடர்புடைய கடல்சார்பானதாக, சுயாதீன வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டதாகவிருந்தது. விவசாயமற்ற அரச பாரம்பரியம் பாரியளவு கரையோர மீன்பிடி, படகுகளின் அதிகரிப்பு, கடல் வர்த்தக வாய்ப்பு அதிகரிப்பு என்பதால் பலமுள்ளதாகியது. செல்வாக்குச் செலுத்தும் வர்த்தக குழுக்கள், குறிப்பாக தென்னிந்தியக் குழுக்களும் மற்றவர்களும் அரச தலைநகர், துறைமுகம், சந்தை நிலையங்கள் ஆகியவற்றில் தங்கியிருந்தனர். கைவினைஞர் குடியிருப்புக்கள் உருவாக்கம், திறன்மிக்க தொழிற் குழுக்களான தச்சர்கள், கற்கொத்தன்கள், நெசவாளிகள், உலர்த்துபவர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள் ஆகியோர் கிராமங்களில் தங்கியிருந்தனர். அதனால், பலதரப்பட்ட சமூக பொருளாதார விவசாயச் செயற்பாடுகள், வர்த்தகம், கைப்பொருள் உற்பத்தி ஆகியன சிறப்பான உருவாக்கம் பெற்றன.[8]

யாழ்ப்பாண அரசு இலங்கையில் ஏனைய அரசுகளான கோட்டை, கண்டு ஆகியனவற்றைவிட குறைந்தளவு நிலமானியத்தைக் கொணடு இருந்தது.[9] அதனுடைய பொருளாதாரம் நில, அதன் உற்பத்தி வணிக நடவடிக்கையைவிட அதிகம் பண வணிக நடவடிக்கையைக் கொண்டு இருந்தது. யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகள் ஊழிய மானிய வரி இல்லாமலும், அரசனுடைய சேவையில் இருந்தவர்களுக்கு ஊதியம் பணமாகக் கொடுக்கப்பட்டது.[9] அரசனின் உத்தியோகத்தர்களான முதலியார்கள் ஊதியமும் பணமாகக் கொடுக்கப்பட்டதுடன், குறிப்பிட்டளவு எண்ணிக்கையிலான இந்துக் கோயில்கள் சொந்தமாக பாரியளவு சொத்துக்களை தெற்கில் இருந்த பௌத்த கோயில்கள் கொண்டிருந்தது போலல்லாது காணப்பட்டன. கோயில்களும் நிருவாகிகளும் அரசனில் சார்ந்திருந்தனர்.[9] அரசின் வரிகள் அனேகம் யானைகளாக வன்னியிலிருந்து வந்தன.[9]

மறுபக்கத்தில் சேது என்று பொறிக்கப்பட்ட சேது நாணயம்

நில வரிக்கு அப்பால், வாழை, தென்னை, பாக்கு ஆகியன உள்ளவற்றிற்கு தோட்ட வரி இருந்தது. பனை, வேம்பு, இலுப்பை ஆகியவற்றுக்கு மர வரி காணப்பட்டது. ஒவ்வொரு சாதி அல்லது வணிகர் சங்க அங்கத்தவர்களிடம் தொழில் வரியும், மற்றவர்களிடம் வர்த்தக வரியும், உடைகளுக்கு (உடைகள் பிரத்தியோகமாகவல்லாது அலுவலக முத்திரையைக் கொண்டு இருக்க வேண்டும்) முத்திரை வரியும், உணவுப் பொருட்களுக்கு தரகு அல்லது வரியும் மற்றும் துறைமுக, சுங்க வரிகளும் பெறப்பட்டன. கொழும்புத்துறை தீபகற்பத்தை பிரதான நிலத்துடன் பூநகரியில் படகு சேவை மூலம் இணைத்தது. அது பிரதான துறைமுகங்களில் ஒன்றாகவும் பச்சிலைப்பள்ளியைக் கடந்து சுங்கச் சோதனை பகுதியும் இருந்தது.[35] யானைகள் தென் சிங்கள அரசுகள், வன்னிப் பகுதி ஆகியவற்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவந்து வெளிநாட்டு வாங்குனர்களுக்காக விற்கப்பட்டன. ஊருகாத்துறை எனப்பட்ட தற்போது ஊர்காவற்றுறைஎனப்படும் குடாவில் வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இது சுருக்கமாக போர்த்துக்கேயத்தில் “காஸ் டொஸ் எலிபன்டிஸ்” ( Caes dos elephantess”, யானைகளின் குடா) என அழைக்கப்பட்டது.[29] இறந்தவர்களை தகனம் செய்ய யாழ்ப்பாணத்தில் அனுமதிக்கட்டண வரி இருந்தது.[35]

எல்லாக் கொடுப்பனவுகளும் காசாக மாற்றாமல் அரிசி, வாழைப்பழம், பால், கருவாடு, இறைச்சி, தயிர் எனக் கொடுக்கப்பட்டன.[9] சிலர் “ஊழியம்” என்ற கொடுப்பனவு இல்லாத சேவையைச் செய்தனர்.[9]

அரசன் பல வகையான நாணயங்களை வழங்கினான். சில வகை நாணயங்கள் சேது நந்தி என்று வகைப்படுத்தப்பட்ட, 1284 முதல் 1410 வரையான நாணயங்களின் பெரும் தொகுதி வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நாணயத்தின் ஒரு பக்கத்தில் மனித உருவமும் விளக்குகளும் காணப்பட, மறுபக்கத்தில் நந்தி தேவர் சின்னம், சேது என்று பொறிக்கப்பட்டுக் காணப்பட, மேலே பிறை நிலவு காணப்பட்டது.[4][46]

கலாச்சாரம்[தொகு]

சமயம்[தொகு]

நல்லூர் கந்தசுவாமி கோவில் – தலைநகர் நல்லூரின் அரச கோயில்களில் ஒன்று.

இந்தியாவிலிருந்து ஆரம்ப காலத்தில் குடியேறியவர்கள் முதற்கொண்டு தொடர்ச்சியாக வரலாற்றை சைவ சமயம் இலங்கையில் கொண்டுள்ளது. பௌத்த சமயம் செயற்பாட்டில் இருந்தபோதுகூட இந்து சமய வழிபாடு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.[47] இலங்கையில் சோழர் காலத்தில், கிட்டத்தட்ட 9 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில், அலுவலக சமயத் தகுதியை இந்து சமயம் பெற்றிருந்தது.[48] சோழருக்குப் பின் ஆட்சி செய்த கலிங்க மாகன் அக்காலத்தில் சுதேச இலக்கிய இந்து மறுமலர்ச்சிக்கு உதவினான்.[49]

யாழ்ப்பாண அரச காலத்தில் சைவம் அரச சமயமாக இருந்து எல்லாச் சலுகையையும் பெற்றுக் கொண்டது. இந்திய இந்து சமய யாத்திரைத்தலமாக மிகவும் அறியப்பட்ட இராமேசுவரம் கோயிலை தங்கள் மூதாதையர் பரிபாலித்ததன் நிமித்தம் ஆரியச்சக்கரவர்த்தி அரசு சைவம் தொடர்பில் அதற்குரிய சேவையைச் செய்வதிலும் பரிபாலிப்பதிலும் மிகவும் விழிப்புள்ளதாக இருந்தது. குறிப்பின்படி, அரசனின் தலைப்பு “சேது காவலன்”, அதாவது இராமேசுவரம் மற்றொரு பெயரான “சேது” என்பதைக் கொண்டிருந்ததாக ஊகிக்க முடிகிறது. “சேது” என்பது நாணயம், கல்வெட்டு அரச அடையாளமாக பயன்படுத்தப்பட்டது. [10]

கோட்டை அரசின் சார்பாக யாழ்ப்பாண அரசை ஆண்ட சப்புமால் குமாரயா நல்லூர் கந்தசுவாமி கோவில் புனரமைப்பு அல்லது கட்டுமானத்திற்கு உதவினான்.[7][50] சிங்கை பரராசசேகரன் சத்தானந்தர் கோயில், வைகுந்தப் பிள்ளையார் கோயில், வீரகாளியம்மன் கோயில் ஆகியவற்றைக் கட்டினான். அவன் கட்டிய குளமான யமுனை ஏரியை, வட இந்தியாவிலுள்ள இந்துக்களினால் புனிதமாக கருதப்பட்ட யமுனை ஆறு தண்ணீரினால் நிரப்பினான்.[11] இவன் திருக்கோணேச்சரத்திற்கு அடிக்கடி சென்று தரிப்பவனும், முதலாம் சங்கிலியின் மகனும் அடுத்த அரசனுமாவான்.[51] அரசன் செயவீர சிங்கையாரியன் தற்போது கோணேஸ்வரம் கோயிலின் ஸ்தல புராணம் என்று அறியப்படும் தக்சண கைலாச புராணம் என்பதனை செய்யுள்களாக கோயிலின் பாரம்பரிய வரலாறாகத் தொகுத்தான்.[52] பெரிய கோயில்கள் சாதாரணமான அரசர்களினால் பராமரிக்கப்பட்டு, கோயிலில் வேலை செய்வோருக்கு அரச கருவூலத்திலிருந்து சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்தியாவிலும் இலங்கையின் பிற பகுதிகளிலும் போலல்லாது, சமய நிலைநாட்டல்கள் சுயாட்சி உள்ளதாகவும் பாரிய நில அறக்கொடையாகவும் வரிக்கு உட்பட்டதாகவும் இருந்தது.[9]

தேர் வீடு, நல்லூர் கந்தசுவாமி கோவில்

சிவன் அதிகளவில் முதன்மையான ஏற்றுக் கொள்ளப்பட்டும், இலிங்கம், சிவனின் ஒட்டுமொத்த சின்னமாவும் இருந்ததோடு, புண்ணியத்தளங்கள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருந்தன. ஏனைய இந்துக் கடவுள்களான முருகன், பிள்ளையார், காளி என்போரும் வழிபடப்பட்டனர். கிராமங்களில், கிராமத்துத் தெய்வமான கண்ணகி புகழ்பெற்று வழிபடப்பட்டதோடு, தெற்கிலுள்ள சிங்களவர் மத்தியிலும் கண்ணகி வழிபாடு பொதுவாகவிருந்தது. மந்திர நம்பிக்கை, தீய ஆவிகளின் இருப்பு ஆகியன தெற்கு ஆசியாவில் காணப்பட்டவாறே அங்கும் காணப்பட்டது.[10]

அரசினுள் பல இந்துக் கோயில்கள் காணப்பட்டன. சில பாரிய வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டு, குறிப்பாக திருக்கோணமலையில் திருக்கோணேச்சரம், மன்னாரில்திருக்கேதீச்சரம், கீரிமலையில் நகுலேஸ்வரம் என்பவற்றோடு நூற்றுக்கணக்கான கோயில்கள் பிராந்தியத்தில் பரந்து காணப்பட்டன.[53] தற்போதைய தென்னிந்தியாவில் உள்ளதைப் போன்ற கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் காணப்பட சில சிறிய மாற்றத்துடன் காணப்பட்டன. நாயன்மாரின் தேவாரம் வழிபாட்டில் பயன்படுத்தப்பட்டன. ஏப்ரல் மத்தியில் வரும் இந்து புதுவருட மிகவும் முக்கிய கொண்டாட்ட விழாவாகக் காணப்பட்டதோடு, நவராத்திரி, தீபாவளி, சிவராத்திரி, தைப்பொங்கல் என்பனவும் கொண்டாடப்பட்டன. இவற்றுடன், திருமணம், இழவு, பூப்பெய்தல் ஆகியன வாழ்க்கையில் பகுதியாக முக்கியத்துவம் பெற்று இருந்தன.[54]

கிட்டத்தட்ட கி.பி 1550 காலப்பகுதியில் முதலாம் சங்கிலி பௌத்தர்களான சிங்களவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றி, அவர்களின் பல வழிபாட்டிடங்களை அழித்தான். வெளியேறாதிருந்த சிங்களவர்களினால் பௌத்தம் யாழ்ப்பாண அரசில் பாதுகாக்கப்பட்டது.[55][56][57] நம்போட்டையில் குறிப்பிடப்பட்ட சில முக்கிய பௌத்த வழிபாட்டிடங்களாக நாகதீபம்,தெல்லிப்பழை, மல்லாகமம், மீனுவாங்கொமு, கதுருகொடை (கந்தரோடை) என்பன இருந்தாலும்[58][59] நாகதீபத்தில் உள்ள பௌத்த விகாரை மட்டும் இப்போதும் காணப்படுகின்றது.[59]

சமூகம்[தொகு]

19 ஆம் நூற்றாண்டு சாதி அமைப்பு
பறை அடித்தல்
சலவைத் தொழில்
சட்டி பானை வனைதல்
அரிக்கட்டுகள் சுமத்தல்
1837 இல் கிறித்தவ மறைபரப்புனர்களால் எழுதப்பட்ட Seventy-two Specimens of Castes in India எனும் நூலின்படி, இலங்கையை ஒத்துக் காணப்பட்ட இந்திய சாதிகள் சில.
சாதி அமைப்பு

யாழ்ப்பாண அரசின் மக்கள் சமூக அமைப்பானது தென்னிந்தியாவில் இருந்தது போன்ற விவசாயம், நிலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த சாதி அமைப்பு காணப்பட்டது. இவ்வாறே தெற்கில் சிங்கள அரசுகளிலும் சமூக அமைப்பு காணப்பட்டது. அங்கு “கோவிகம” சாதியினர் ஆளும் குடும்பத்தினருக்கு குறைந்தவர்களாகக் கருதப்பட்டனர். ஆரியச்சக்கரவர்த்தி அரசர்களும் அவர்களது குடும்பத்தினரும் பிராமண சத்திரியர் தகுதி உடையவர், அதாவது சத்திரியர் வாழ்க்கையை பிராமணர் ஆக மாற்றியவர் என்று கருதுகின்றனர்.[60] மடைப்பள்ளியர் அரண்மனைக் காரியதரிசிகள், அகம்படையார் அரண்மனை ஊழியர்களாகவும் சிவியார் பல்லக்குக் காவுவோராக இருந்தனர்.[61][62] அரச படைகள் மற்றும் கடற்படை தளபதிகள் கரையார் சாதியிலிருந்து வந்தவர்கள், அவர்கள் முத்துத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர், அதன் தலைவர்கள் பட்டங்கட்டியர் மற்றும் அடப்பனார் என்று அழைக்கப்பட்டனர்.[63] முக்குவர் மற்றும் திமிலர் ஆகியோர் முத்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.[64] கிராமப்புற தலைவர்கள் மற்றும் வேளாண்மை சங்கங்களின் நிலப்பிரபுக்களாக இருந்த உடையார்கள், வெள்ளாளார் சாதியிலிருந்து வந்தவர்கள். உடையார்கள் திருட்டு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தினர் மற்றும் கிராமங்களுக்கு பொறுப்பானவர்கள்.[65] அம்பட்டர், வண்ணார், கடையர், மாராயர், பறையர், நளவர், பள்ளர் மற்றும் பிராமணர்கள் போன்ற பல்வேறு குழுக்கள் குடிமக்கள் எனப் பணியாற்றினார்.[66] அவர்கள் தொழிலில் முக்கிய காரணிகளாக இருந்தனர், மற்றும் திருமண மற்றும் இறுதி சடங்கு களத்தில் சிறப்பாக முக்கியத்துவம் பெற்றனர்.[67] செட்டியார் வர்த்தகர்களாகவும் இந்துக் கோயில்களின் சொந்தக்காரர்களாகவும் காணப்பட, பள்ளர், நளவர் சாதியினர் நிலமற்ற தொழிலாளிகளாகவும் நிலத்தை பண்படுத்துபவர்களாகவும் காணப்பட்டனர்.[48] கம்மாளர் என்றும் அறியப்படும் கைவினைஞர்கள் கொல்லர், தட்டார், தச்சர், கருமான் மற்றும் கன்னார் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.[68][69]

கூலிப்படைவீரர்களும் வாணிபர்களும்

கூலிப்படைவீரர்கள் இந்தியாவின் பல இன, சாதிப் பின்னனியில் இருந்து குறிப்பாக தெலுங்கர் (வடுகர்), கேரளாவின் மலையாளிகள் ஆகியோர் படைவீரர்களாக அரசர்களால் வரவழைக்கப்பட்டனர்.[48][48] முஸ்லிம் வர்த்தகர்களும் கடற்கொள்ளையரான மாப்பிளமார், சோனகர் ஆகிய இனத்தவர்கள் மற்றும் சிங்களவர்கள் என்போர் அரசில் வாழ்ந்தனர்.[5][70] அத்துடன் அரசு அரசியல் புரட்சியால் தோல்லியடைந்த தென்னிலங்கைப் போராட்டக்காரர்களில் அடைக்கலமாகவும் செயற்பட்டது. யாழ்ப்பாண அரசின்ஆரம்ப வரலாற்று இலக்கியமான, 14 ஆம் – 15 ஆம் நூற்றாண்டு வையாபாடல், 77 ஆம் செய்யுள் பப்பர்வர் (பர்பர், பொதுவாக ஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்கள்), குச்சிலியர் (குஜராத்தியர்), கோணர் (அராபியர், முஸ்லிம் குதிரைப்படையாக நம்பப்படும்) ஆகியோர் பல்லுவில் சாதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளனர். பல்லுவில் அல்லது பல்லிவில் சாதி யாழ்ப்பாணத்திற்கு மட்டும் உரிய ஒன்றாகும். கி.பி 1790 இல் இடச்சுக்காரர்களினால் எடுக்கப்பட்ட யாழ்ப்பாண சனத்தொகை மதிப்பீட்டின்படி, 196 ஆண்கள் பல்லுவில் சாதியைச் சேர்ந்த வரிசெலுத்துவோர் ஆவர். இதனால் இடச்சுக் காலம் வரை அடையாளமும் தொழில் பிரிப்பும் இருந்தது என்று அறியலாம். ஆனால், சனத்தொகை மதிப்பீட்டின்படி , தனிச் சமூகமாக 492 சோனக ஆண்கள், அதாவது பொதுவாக முசுலிம்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.[71]

சட்டங்கள்

ஆரியச்சக்கரவர்த்தி ஆட்சிக்காலத்தில், சமூக சட்ட ஆட்சியானது சமூகத்தின் தாய் மரபாட்சி முறையையும் ஆழமான தந்தை மரபாட்சி முறை ஆட்சியையும் இணைத்துக் காணப்பட்டதாக அமைந்தது. இச்சட்டங்கள் உள்ளூர் முதலியார்களினால் மரபு வழக்காறுகளுக்கு ஏற்ப விளக்கப்பட்டு இணைந்து காணப்பட்டன. சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக தற்போதைய கேரளம், துளு நாடு ஆகியவற்றின் மருமககட்டயம் சட்டத்திற்கு ஒத்ததாக காணப்பட்டதாக அறிஞர்கள் சுட்டிக்காட்டினர். மரபுச் சட்டங்களில் பக்கத்து இந்திய இசுலாமிய, இந்துச் சட்டங்களும் தாக்கத்தை ஏற்படுத்தின. மரபுச் சட்டங்கள் பின்னர் தொகுக்கப்பட்டு 1707 இல் ஒல்லாந்தர் கால ஆட்சியில் தேசவழமைச் சட்டம் என அச்சுப்படுத்தப்பட்டது.[72] ஆரம்ப மரபின் கீழான ஆட்சியில் பெண்களிடமிருந்து பெண்களுக்கு அவை சென்றன. ஆனால், சமூகம் தந்தை மரபாட்சிக்கு மாறியதும், அவை ஆணிடமிருந்து ஆணுக்குச் சென்றது. இதனால், முத்துசம் மகன்களுக்கும் வரதட்சணை பெண்களுக்கும் என அமைந்தது.[72]

கட்டடக்கலை[தொகு]

மந்திரிமனை வாயில் அலங்கார அமைப்பு

தென்னிந்தியாவின் குறிப்பிட்ட கால அலையானது இலங்கையின் கலை, கட்டடக்கலை என்பவற்றிலும் தாக்கம் செலுத்தினாலும், 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் நினைவுச்சின்னக் கலை, கட்டடக்கலை ஆகியன நலிவுற்றன.[73] 10 ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய விஜயநகரப் பேரரசு கால மதுரை வகை கோயில்களை தமிழர் கட்டினர்.[73] மதுரைப் பாணி புகழ்மிக்க அமைப்பாக கோயில் வாயிலுக்கு மேலாக கோபுரம் அல்லது பாரிய சிற்பக்கலைக் கோபுரம், அலங்காரம் என்பன இடம்பெற்றன.[73] யாழ்ப்பாண அரசின் ஆட்சிப் பகுதியில் முக்கிய சமய கட்டுமானங்களில் எதுவும் போர்த்துக்கேய அழிப்பிலிருந்து தப்பவில்லை.[73]

தலைநகர் நல்லூர் கதவுகளுடனான நான்கு நுழைவாயில்களுடன் கட்டப்பட்டது.[74] நான்கு நுழைவாயில்களில் நான்கு கோயில்களும் இரு பிரதான வீதிகளும் அமைந்திருந்தன.[74] தற்போதுள்ள மீளமைக்கப்பட்ட கோயில்கள் போர்த்துக்கேயரால் பிடிக்கப்பட்டு கிறிஸ்தவ தேவாலயங்களை உருவாக்கியதால், மூல இடத்தில் அமைக்கப்படவில்லை.[74] நகரின் மையப்பகுதியாக முத்திரைச் சந்தை காணப்பட, அதனைச் சுற்றி சதுர வடிவ அரண் அமைக்கப்பட்டிருந்தது.[74] அங்கு அரசர்கள், பிராமணக் குருக்கள், படைவீரர், சேவை வழங்குனர் என்போருக்கான நேர்த்தியான கட்டடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.[74] பழைய நல்லூர் கந்தசுவாமி கோயில் உயர்ந்த மதில்களுடன் பாதுகாப்புக் கோட்டையாகச் செயற்பட்டது.[74] பொதுவாக, நகரம் இந்துப் பாரம்பரியத்துக்கு ஏற்ப பாரம்பரிய கோயில் நகரமாகத் திகழ்ந்தது.[74]

இலக்கியம்[தொகு]

சங்கிலியன் தோப்பு – கடைசி அரசன் இரண்டாம் சங்கிலியின் அரண்மனை முகப்பு.[75]

அரசகுல மன்னர்கள் இலக்கியத்திற்கும் கல்விக்கும் ஆதரவு வழங்கினர். கோயில் பள்ளிகள் வீட்டுத்தாழ்வார (தின்னை பள்ளிக்கூடம்) பாரம்பரிய குருகுலம் என்பன மேல் வகுப்பினருக் தமிழ் மொழி, சமசுகிருதம், சமயம் போன்றவற்றில் அடிப்படைக் கல்வியினை வழங்கின.[12] ஜெயவீர சிங்கையாரியன் ஆட்சிக்காலத்தில், மருத்துவ விஞ்ஞான செயற்பாடு (செகராஜசேகரம்), சோதிடம் (செகராஜசேகரமாலை),[12][76] கணிதம் (கணகத்திகரம்) ஆகியன கரிவையரால் எழுதப்பட்டன.[12] குணவீர சிங்கையாரியன் ஆட்சிக்காலத்தில், மருத்துவ விஞ்ஞான நூலான பரராஜசேகரம் எழுதி முடிக்கப்பட்டது.[12] சிங்கை பரராசசேகரன் ஆட்சிக்காலத்தில், தமிழ் மொழி வளர்ச்சிக்காக கல்விக்கூடம் ஒன்று பண்டைய தமிழ்ச்சங்க மாதிரியாக நல்லூரில் உருவாக்கப்பட்டது. இக்கல்விக்கூடம் சரஸ்வதி மகால் என்றழைக்கப்பட்ட நூலகத்தில் பண்டைய தமிழ் கையெழுத்துப்படிகளை சேகரித்து, பாதுகாக்கும் முக்கிய சேவையைச் செய்தது.[12] சிங்கை பரராசசேகரனின் உறவினன் அரசகேசரி தமிழுக்கு சமஸ்கிரத இரகுவம்சம் என்பதை மொழிபெயர்த்தான்.[76] ஐரோப்பியர் வருவதற்கு முன்னர் ஏனைய பிற வரலாற்று முக்கியத்துவமுள்ள இலக்கிய ஆக்கங்கள், குறிப்பாக வையாபுரி ஐயர் எழுதிய “வையா பாடல்” போன்றன தொகுக்கப்பட்டன.[12][77]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 de Silva, A History of Sri Lanka, p.91-92
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Nadarajan , V History of Ceylon Tamils, p.72
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Indrapala, K Early Tamil Settlements in Ceylon, p.16
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Coddrington, K Ceylon coins and currency, p.74-76
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 Peebles, History of Sri Lanka, p.31-32
  6. The History of Sri Lanka By Patrick Peebles page 31
  7. 7.0 7.1 7.2 7.3 Peebles, History of Sri Lanka, p.34
  8. 8.0 8.1 Pfaffenberger, B The Sri Lankan Tamils, p.30-31
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 9.7 9.8 Abeysinghe, T Jaffna Under the Portuguese, p.29-30
  10. 10.0 10.1 10.2 Gunasingam, M Sri Lankan Tamil Nationalism, p.63
  11. 11.0 11.1 Kunarasa, K The Jaffna Dynasty, p.73-74
  12. 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 12.6 Gunasingam, M Sri Lankan Tamil Nationalism, p.64-65
  13. 13.0 13.1 13.2 13.3 13.4 Abeysinghe, T Jaffna Under the Portuguese, p.58-63
  14. Gnanaprakasar, S A critical history of Jaffna, p.153-172
  15. An historical relation of the island Ceylon, Volume 1, by Robert Knox and JHO Paulusz, pp.19-47.
  16. 16.0 16.1 16.2 16.3 An historical relation of the island Ceylon, Volume 1, by Robert Knox and JHO Paulusz, p.43.
  17. Gunasingam, M Sri Lankan Tamil Nationalism, p.53
  18. Manogaran, C, The untold story of Ancient Tamils of Sri Lanka, p.22-65
  19. Kunarasa, K The Jaffna Dynasty, p.1-53
  20. Rasanayagam, M Ancient Jaffna, p.272-321
  21. "The so called Tamil Kingdom of Jaffna". S.Ranwella. பார்க்கப்பட்ட நாள் 2007-11-30.
  22. 22.0 22.1 22.2 Sri Lanka and South-East Asia: Political, Religious and Cultural Relations by W. M. Sirisena p.57
  23. Kunarasa, K The Jaffna Dynasty, p.65-66
  24. Coddrington, Short history of Ceylon, p.91-92
  25. 25.0 25.1 de Silva, A History of Sri Lanka, p.132-133
  26. Kunarasa, K The Jaffna Dynasty, p.73-75
  27. 27.0 27.1 Codrington, Humphry William. "Short history of Sri Lanka:Dambadeniya and Gampola Kings (1215–1411)". Lakdiva.org. பார்க்கப்பட்ட நாள் 2007-11-25.
  28. Humphrey William Codrington, A Short History of Ceylon Ayer Publishing, 1970; ISBN 0-8369-5596-X
  29. 29.0 29.1 29.2 29.3 29.4 29.5 29.6 Abeysinghe, T Jaffna Under the Portuguese, p.2
  30. Kunarasa, K The Jaffna Dynasty, p.82-84
  31. Gnanaprakasar, S A critical history of Jaffna, p.113-117
  32. 32.0 32.1 32.2 32.3 32.4 Abeysinghe, T Jaffna Under the Portuguese, p.3
  33. 33.0 33.1 33.2 de Silva, A History of Sri Lanka, p.166
  34. Kunarasa, K The Jaffna Dynasty, P2
  35. 35.00 35.01 35.02 35.03 35.04 35.05 35.06 35.07 35.08 35.09 35.10 "Yarl-Paanam". Eelavar Network. Archived from the original on 2007-12-22. பார்க்கப்பட்ட நாள் 2007-11-24.
  36. 36.0 36.1 36.2 36.3 36.4 Gunasingam, M Sri Lankan Tamil Nationalism, p.58
  37. de Silva, A History of Sri Lanka, p.117
  38. Abeysinghe, T Jaffna Under the Portuguese, p.28
  39. Gunasingam, M Sri Lankan Tamil Nationalism, p.54
  40. 40.0 40.1 சபாநாதன், குல. (பதிப்பு) யாழ்ப்பாண வைபவமாலை (கொழும்பு) – 1953
  41. முத்துத்தம்பிபிள்ளை.ஆ. யாழ்ப்பாணச் சரித்திரம் - 1915
  42. சிவசாமி.வி. "நல்லூரும் தொல்பொருளும்" ஒளி - ஆகஸ்ட், 1972
  43. 43.0 43.1 Epigraphia Tamilica Vol 1 – K.Indrapala
  44. சபாநாதன், குல. (பதிப்பு) யாழ்ப்பாண வைபவமாலை (கொழும்பு) – 1953, பக்கம் 78
  45. முத்துத்தம்பிபிள்ளை, ஆ. யாழ்ப்பாணச் சரித்திரம் - 1915
  46. V. Sundaram. "Rama Sethu: Historic facts vs political fiction". News Today. Archived from the original on 2008-11-23. பார்க்கப்பட்ட நாள் 2007-11-29.
  47. Parker, H Ancient Ceylon: An Account of the Aborigines and of Part of the Early Civilisation, p.65,115,148
  48. 48.0 48.1 48.2 48.3 Gunasingam, M Sri Lankan Tamil Nationalism, p.62
  49. Codrington, Humphry William. "The Polonaruwa Kings, (1070–1215)". Lakdiva.org. பார்க்கப்பட்ட நாள் 2007-12-06.
  50. Gnanaprakasar, S A critical history of Jaffna, p.103
  51. Pieris, Paulus Edward (1983). Ceylon, the Portuguese era: being a history of the island for the period, 1505–1658, Volume 1. 1. Sri Lanka: Tisara Prakasakayo. பக். 262. இணையக் கணினி நூலக மையம்:12552979. 
  52. Navaratnam, C.S. (1964). A Short History of Hinduism in Ceylon. Jaffna. பக். 43–47. இணையக் கணினி நூலக மையம்:6832704. 
  53. Gunasingam, Sri Lankan Tamil Nationalism, p.65
  54. Gunasingam, Sri Lankan Tamil Nationalism, p.66
  55. வில்லெம் கெய்கர் Culture of Ceylon in mediaeval times, Edited by Heinz Bechert, page 8
  56. C. Rasanayagam, Ancient Jaffna: being a research into the history of Jaffna, pages 382-383
  57. De Silva, Chandra Richard Sri Lanka and the Maldive Islands, page 128
  58. Seneviratna, Anuradha Anusmrti: thoughts on Sinhala culture and civilization, Volume 2
  59. 59.0 59.1 Indrapala, Karthigesu Evolution of an Ethnic Identity,(2005), page 210
  60. Gnanaprakasar, S A critical history of Jaffna, p.96
  61. Pulavar, Mātakal Mayilvākan̲ap (1995) (in ta). Mātakal Mayilvākan̲ap Pulavar el̲utiya Yāl̲ppāṇa vaipavamālai. Intu Camaya Kalācāra Aluvalkaḷ Tiṇaikkaḷam. https://books.google.no/books?id=3VUKAAAAIAAJ&q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=no&sa=X&ved=0ahUKEwjTjPm9l_bZAhXubZoKHQroBeAQ6AEIKDAA. 
  62. Arasaratnam, Sinnappah (1996-01-01) (in en). Ceylon and the Dutch, 1600–1800: External Influences and Internal Change in Early Modern Sri Lanka. n Variorum. பக். 381. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-86078-579-8. https://books.google.no/books?hl=no&id=m2puAAAAMAAJ&dq=madapalli+jaffna+kingdom&focus=searchwithinvolume&q=madapalli. 
  63. Raghavan, M. D. (1964) (in en). India in Ceylonese History: Society, and Culture. Asia Publishing House. பக். 143. https://books.google.no/books?hl=no&id=BCUdAAAAMAAJ&dq=vaiyapadal+fish&focus=searchwithinvolume&q=karayoor. 
  64. Hussein, Asiff (2007) (in en). Sarandib: an ethnological study of the Muslims of Sri Lanka. Asiff Hussein. பக். 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789559726227. https://books.google.no/books?hl=no&id=1kVuAAAAMAAJ&dq=sri+lankan+moors+pearl&focus=searchwithinvolume&q=mukkuvar. 
  65. K, Arunthavarajah (March 2014). "The Administration of Jaffna Kingdom- A Historical View". International Journal of Business and Administration Research Review (University of Jaffna) Volume 2, Issue 3.: 32. http://ijbarr.com/downloads/2014/vol2-issue3/5.pdf. பார்த்த நாள்: 2018-03-18. 
  66. David, Kenneth (1977-01-01) (in en). The New Wind: Changing Identities in South Asia. Walter de Gruyter. பக். 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-11-080775-2. https://books.google.no/books?id=Vp_la9QMGIQC&printsec=frontcover&dq=The+New+Wind:+Changing+Identities+in+South+Asia&hl=no&sa=X&ved=0ahUKEwi846z09pjYAhXNCewKHZ3sCHEQ6AEIJzAA#v=onepage&q=paraiyar&f=false. 
  67. Nayagam, Xavier S. Thani (1959), Tamil Culture (in ஆங்கிலம்), Academy of Tamil Culture, பார்க்கப்பட்ட நாள் 2018-03-18
  68. Ramaswamy, Vijaya (2017-08-25) (in en). Historical Dictionary of the Tamils. Rowman & Littlefield. பக். 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5381-0686-0. https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&pg=PA184&dq=kammalar&hl=no&sa=X&ved=0ahUKEwiehOu61vXZAhUIApoKHRUEAmsQ6AEIKDAA#v=onepage&q=kammalar&f=false. 
  69. Perinbanayagam, R. S. (1982) (in en). The karmic theater: self, society, and astrology in Jaffna. University of Massachusetts Press. பக். 25. https://books.google.no/books?hl=no&id=tzPXAAAAMAAJ&dq=jaffna+kammalar&focus=searchwithinvolume&q=kammalar. 
  70. Abeysinghe, T Jaffna Under the Portuguese, p.4
  71. "Place Name of the Day: Papparappiddi". தமிழ்நெட். பார்க்கப்பட்ட நாள் 2008-02-26.
  72. 72.0 72.1 Tambiah, Laws and customs of Tamils of Jaffna, p. 18–20.
  73. 73.0 73.1 73.2 73.3 Gunasingam, M Sri Lankan Tamil Nationalism, p.64
  74. 74.0 74.1 74.2 74.3 74.4 74.5 74.6 "Nallur Rajadhani: City Layout". V.N.Giritharan. Archived from the original on 2007-12-25. பார்க்கப்பட்ட நாள் 2007-12-02.
  75. Kunarasa, K The Jaffna Dynasty, P4
  76. 76.0 76.1 Coddrington, H., Ceylon Coins and Currency, p.74
  77. Nadarajan, V History of Ceylon Tamils, p.80-84

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jaffna kingdom
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்ப்பாண_அரசு&oldid=3687714" இலிருந்து மீள்விக்கப்பட்டது