மையோடக் கோவனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மையோடக் கோவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். மையோடம் என்பது இவர் வாழ்ந்த ஊர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது பரிபாடல் தொகுப்பில் 7 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது.

வையை ஆற்றில் நீராடுவது பற்றிய செய்தி இதில் உள்ளது.

பித்தாமத்தர் என்னும் இசைவாணர் இதற்கு இசை அமைத்துப் பாலையாழ் என்னும் பண்ணிசைத்துப் பாடியுள்ளார்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

பரத்தை ஒருத்தியின் செவிலி வையையில் அவள் ஆடிய நீராட்டு எப்படியிருந்தது என வினவினாள். பரத்தை தான் கண்ட, ஆடிய நீராட்டம் பற்றி விளக்குகிறாள்.

86 அடிகளைக் கொண்ட நீண்ட பாடல் இது.

செய்திகள் உவமை, உருவக நலங்களுடன் இதில் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சில:

  • வெள்ளம் பாண்டியன் படை போல வந்தது.
  • பாண்டியன் மக்களுக்கு உதவுவது போல வெள்ளம் பயிர்களுக்கு உதவியது.
  • ஆடத் தெரியாத பெண் ஆடுவது போல எங்கெங்கோ ஓடியது.
  • ஊடல் தீராத ஒருத்தி கணவனைக் கடந்து ஓடுவது போல அணையை உடைத்துக்கொண்டு ஓடியது.
  • ஊடல் தீர்க்கும் கணவன் போல ஆசைப்பெருக்கில் ஓடியது.
  • பாண்டியன் பகைப்புலத்தில் கொள்ளையடிப்பது போல நீராடுவோரின் ஆடையணிகளைக் கவர்ந்து சென்றது.
  • நீராடிய மகளிர் ஒருவர்மீது ஒருவர் நீரை விசிற, அவர்களது கண்கள் சினத்தால் சிவந்ததால் வெள்ளத்தின் சிவப்புநிறம் கருமையாகக் காணப்பட்டது.
  • தலைக்கோல் மகளிர் ஆட முழங்கிய இசை இடிமுழக்கம் போல இருந்தது.

எங்களுடைய மாலைகளையெல்லாம் கவர்ந்துகொண்ட வையையே! நாங்கள் உன்னோடு விளையாடி இன்புற மீண்டும் மீண்டும் வருக என்னும் வாழ்த்துடன் பாடல் முடிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மையோடக்_கோவனார்&oldid=2718213" இலிருந்து மீள்விக்கப்பட்டது