மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மேற்குத் தொடர்ச்சி மலைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகிறது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.[1]

இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.

பொருளடக்கம்

பரவல் [தொகு]

இம்மலைத்தொடர் மராட்டியம், குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மராட்டியம், கோவா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது.

இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2,695 மீ) ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும்.

புவியியல் [தொகு]

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆண்டுவாரி மழை அளவைக் காட்டும் வரைபடம்.

இந்த மலைத் தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் வரலாறு கூறுகிறது. முற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் செசல்சு தீவுகளோடு இணைந்திருந்தது. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால், கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென் இந்தியப் பகுதிகள் ஆசிய கண்டத்தை நோக்கி இடம் பெயர்ந்தது மற்றும் ஏறக்குறைய 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் இந்தியப் பகுதிகள் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவாக்கிய புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகும். இன்றும் மராட்டிய மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எரிமலை இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகிறது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு பிற்காலத்தில் அரிய தாவரங்களும் விலங்குகளும் உருவாக காரணமானது.

ஆறுகள் [தொகு]

சோக் அருவி- இந்தியாவின் மிகப்பெரிய அருவி

தென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகுகின்றன. இங்கு உருவாகி கிழக்கு நோக்கி தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடா வில் கலக்கும் முக்கியமான ஆறுகள் சில கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் தாமிரபரணி. இவை தவிர பல சிறு ஆறுகள் இம்மலைத்தொடரில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. புவியியல் ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அரபிக்கடலிற்கு அருகில் அமைந்துள்ளதால் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் சிறிய ஆறுகளேயாகும். அவற்றுள் சில சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கபினி ஆறு, கல்லாவி ஆறு, பெண்ணாறு மற்றும் பெரியாறு ஆகும்.

இந்த ஆறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டு பாசனத்திற்கும், சாகுபடிக்கும் மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்கும் உதவுகின்றன. மகராட்டினத்தில் உள்ள கோபாளி அணை, கோய்னா அணை, கேரளாவில் உள்ள பரம்பிகுளம் அணை, தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணைக்கட்டு போன்றவை குறிப்பிடத்தகுந்தவைகளாகும்.

உலகப் பாரம்பரியக் களம் [தொகு]

இம் மலைத் தொடரை உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. [2][1]

புகைப்பட தொகுப்பு [தொகு]

விலங்குகள் [தொகு]

தாவரங்கள் [தொகு]

நீலகிரி மலைகளில் மரங்கள்

தேசிய பூங்காக்கள் [தொகு]

காட்டு விலங்குக் காப்பகங்கள் [தொகு]

மூணாரின் தேயிலை தோட்டங்கள்
மூணாரின் தேயிலை தோட்டங்கள்

மேற்கோள்கள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]