முருகேச பண்டிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூ. முருகேச பண்டிதர் (1830 - 3 செப்டம்பர் 1898) இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் 1830இல் பிறந்தார். சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இவரின் மாணாக்கர் ஆவார். இவர்கள் இருவருமே "தோடஞ்ஞர்" (பிறரின் இலக்கிய பிழைகளைக் கண்டு பிடிப்பவர்) எனப் பெயர் பெற்ற புலவர்களாவார்கள். தோஷம் என்பது தமிழில் தோடம் என்றானது. அதன் பொருள் குற்றம் அல்லது பிழை என்பதாகும்.

சுன்னாகம் முருகேச பண்டிதருக்கு இலக்கிய ஆற்றலுடன் இலக்கணப் பயிற்சியுமிருந்ததால் "இலக்கணக் கொட்டர்" என்றும் அவர் சிறப்பிக்கப்பட்டார்.

முருகேச பண்டிதருக்கு கவி புனையும் ஆற்றல் இயற்கையாகவே அமைந்திருந்தது. கண்டனக் கவிகள், விநோதச் சிலேடை, நடு வெழுத்தலங்காரம் முதலிய கவிகள் பலவும் பாடியுள்ளார். மயிலணிச் சிலேடை வெண்பா, குடந்தை வெண்பா, ஊஞ்சல் பதிகம், நீதி நூல், பதார்த்த தீபிகை முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

ஆசிரியப் பணி[தொகு]

சுன்னைநகர் புன்னைநகர் சொல்லியதென் கோவைநகர்
பன்னுசிறு பிட்டியள வெட்டியொடு மல்லாகந்
துன்னியக வளைமுதலாந் தொன்னகர்வாழ் மாணவர்க்கும்
மன்னுதமிழ் சொன்னவன்மன் முருகேச பண்டிதனே! (அ. குமாரசுவாமிப் புலவர்)

யாழ்ப்பாணத்திலே சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன், கோப்பாய், சிறுப்பிட்டி, அளவெட்டி, மல்லாகம், கல்வளை ஆகிய ஊர்களில் கல்வி கற்பித்த முருகேச பண்டிதர் தமிழ்நாட்டில் சிதம்பரம், சென்னை, திருப்பத்தூர் முதலிய இடங்களிலும் ஆசிரியராக இருந்துள்ளார்.

முருகேச பண்டிதர் கும்பகோணத்திலிருந்த கல்லூரியில் சோதனை எழுதாமலே தலைமைப் பண்டிதராக நியமனம் பெற்றார். இது பற்றி ஒரு சுவாரசியமான கதை உண்டு. நியமனத்துக்காக போட்டிப் பரீட்சை எழுதச் சென்றவர், கொடுக்கப்பட்ட கேள்வித் தாளைப் படித்துவிட்டு, விடைகளை எழுதாமல், கேள்வித் தாளில் கண்ட பிழைகளை குறியிட்டு, தக்க நியாயங்களையும் எழுதி, கேள்வி கேட்கும் முறையையும் பாட்டாக எழுதி பரீட்சகரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டாராம். அவரது மதி நுட்பத்தையும், பஞ்ச இலக்கண திறமையையும் கண்ட கல்லூரி அதிபர் முருகேச பண்டிதரை தலைமை பண்டிதராக நியமனம் செய்தார்.

இலக்கியப் பணி[தொகு]

பண்டிதர் அவர்கள் ஆறுமுக நாவலரையே வெல்லக் கருதிய காலம் உண்டு, என்றாலும் பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாக விளங்கினர்.

ஒருவரை நிந்திப்பது போல - அதாவது, இகழ்வது போல - புகழ்ந்து பாடுதல் நிந்தாஸ்துதி என்ற பா வகையாகும். ஆறுமுகநாவலர் பேரில் முருகேச பண்டிதர் நிந்தாஸ்துதி பாடியுள்ளார். அப்பாடல் வருமாறு:

வாணிதனை வசப்படுத்தி மலரயனை
நான்முகனாய் மயங்கச் செய்து
பேணியவ ளடிபணிந்து பிரிவகற்றிப்
புணர்ந்தவனைப் பிரமம் தேர்ந்த
மாணியென்று நீதியுள்ளா னென்றுஞ்சொல்
வகையெங்கே மாண்ட நின்னைக்
காணுவதோ இறப்பதுவிங் காறுமுக
நாவலனே கமிப்ப தன்றோ

நிந்தையாக கருத்தைப் பார்க்கும்போது:

பிரமச்சாரியான நாவலர் நீதிமான் எனப் பேரெடுத்தவர், பிரமனை நான்கு முகங்களாக்கி மயங்கச் செய்துவிட்டு வாணியை அணைத்துக் கொண்டான். இது சரியான செயலா? இப்போ நீயோ இறந்து விட்டாய். இந்த நிலையில் நாங்கள் காண்பது நீதியா?

புகழ்ச்சியாக கருத்தைப் பார்க்கும்போது:

பிரமனும் மயங்கும் வகையில் பிரம்மத்தை அறிந்தவர் நாவலர். சரஸ்வதியின் கடாட்சம் பெற்றவர். அதனால் கல்வியிலும் நாவன்மையிலும் சிறந்து விளங்கியவர். (கலைமாணி, முதுமாணி போல) பிரம்மம் தேர்ந்த மாணி நாவலர். அதாவது சமய தத்துவங்கள், புராணங்கள் முதலியவற்றில் வல்லவர். நைட்டிகப் பிரம்மச்சாரி, நீதிமான். அத்தகைய நாவலர் இறந்து விட்டார். அவர் எங்களை (கமிப்பதன்றோ) பொறுப்பாராக.

முருகேச பண்டிதர் விடுகவிப் பாடல்களும் பாடியவர். உதாரணத்துக்கு ஒன்று:

நாலுகால்ப டைத்திருக்கு நடப்பதில்லை
நம்மைப்போல் இருகையுண்டாம் பிடிப்பதில்லை
ஏலவேபின் னலுண்டாமு டிப்பதில்லை
இடையிடையே கண்களுண்டாம் பார்ப்பதில்லை
கோலமுடி அரசருக்கும் எல்லோருக்கும்
கொடுத்திடுமுட் காருதலைத் தவிர்ப்பதில்லை
சீலமிகு பொருண்விளங்க ஏங்குமாகித்
திகழுதய பானுவே செப்புவாயே!

நாலு காலுண்டு நடப்பதில்லை, இரண்டு கையுண்டு பிடிப்பதில்லை, பின்னல் உண்டு ஆனால் (குடுமி) முடிப்பதில்லை, கண்கள் உண்டு ஆனால் பார்ப்பதில்லை, அரசர்களையும் மற்றவர்களையும் உட்கார வைக்கும் மறுப்பது கிடையாது, உதயபானுவே இதற்கு விடை சொல்வாயாக. (விடை: ரைதிக)

மறைவு[தொகு]

முருகேச பண்டிதர் 1898 செப்டம்பர் 3 அன்று காலமானார்.[1]

முருகேச பண்டிதர் மறைவு பற்றி [சி. கணேசையர்|மகாவித்துவான் கணேச ஐயர்] எழுதிய பாடல்:

எழுத்தொடு சொற்பொருள் யாப்பணி யென்னு மிலக்கணங்கள்
பழுத்துள நாவினன் பாக்களோர் நான்கொடு பாவினங்கள்
வழுத்திடப் பாடு முருகேச பண்டிதன் வாதியெனத்
தொழத்தகு விற்பனன் சென்று பரகதி துன்னினனே.

மேற்கோள்கள்[தொகு]

  • ஈழநாட்டுப் புலவர்களின் கவித்திறமும் தனிப்பாடல்களும். தொகுப்பு: த. கனகரத்தினம் (மணிமேகலைப் பிரசுரம்)
மேற்படி புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள உசாத்துணை நூல்: முருகேச பண்டிதர் பிரபந்தத் திரட்டு - கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை
"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகேச_பண்டிதர்&oldid=3426953" இலிருந்து மீள்விக்கப்பட்டது