முத்து குமாரசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சேர் முத்து குமாரசுவாமி (சனவரி 23, 1833 - மே 4, 1879) பிரித்தானிய இலங்கைச் சட்ட சபையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக பதவி வகித்து சேவை புரிந்தவர். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவரின் தந்தையாரான குமாரசுவாமி முதலியாரே முதலாவது தமிழ்ப் பிரதிநிதியாக இருந்தவர். ஆசியாவில் பிறந்து முதன் முதல் "சேர்" பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் முத்துக்குமாரசுவாமி[1]. சேர் முத்துக் குமாரசுவாமியின் புதல்வர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி ஆவார்.

இலங்கை அரசால் வெளியிடப்பட்ட சேர் முத்து குமாரசுவாமியின் உருவப்படம் பொறித்த அஞ்சல்தலை

பொருளடக்கம்

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

முத்து குமாரசுவாமி இலங்கையின் வட மாகாணத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (1783-1836) என்பவருக்குப் பிறந்தவர். கொழும்பு அக்கடெமியில் (இன்றைய கொழும்பு ரோயல் கல்லூரி) 1842 முதல் 1851 வரை கல்வி பயின்றார். கல்லூரியில் இவருக்கு 1851 ஆம் அண்டுக்கான டர்னர் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி இதழிலும் பிரதான ஆசிரியராக இருந்தார். இலங்கை சிவில் சேவையில் சேர்ந்த முத்து குமாரசுவாமி காவல்துறை குற்றவியல் நடுவராகவும் (magistrate), முல்லைத்தீவின் அரச அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் ரிச்சார்க் மோர்கன் என்ற வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று 1856 ஆம் ஆண்டில் இலங்கை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கறிஞராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1861 ஆம் ஆண்டில் சட்டசபையில் தமிழ்மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். மே 1862 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் ஆனார். அங்கு 1863 இல் "லிங்கனின் இன்" (Lincoln's Inn) என்ற பாரிஸ்டர்களின் மாளிகையில் சேர்க்கப்பட்டார். 1865 ஆம் ஆண்டில் இலங்கை திரும்பினார். 1867 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். 1874 ஆகத்து 11 இல் இவர் முதலாவது ஆசியராகவும், இலங்கையராகவும் சேர் பட்டம் பெற்றார்[2].

1877 ஆம் ஆண்டில் முத்து குமாரசுவாமி இங்கிலாந்தின், கெண்ட் நகரைச் சேர்ந்த எலிசபெத் கிளே பீபி என்பாரைத் திருமணம் செய்தார்[1]. இவர்களுக்குப் பிறந்தவரே கலாயோகி ஆனந்த குமாரசுவாமி. ஆனந்த குமாரசுவாமிக்கும் டோனா லூசா என்ற ஆர்ஜெண்டீனியப் பெண்மணிக்கும் பிறந்தவர் மருத்துவர் ராமா குமாரசுவாமி.

சைவ சமயச் சொற்பொழிவாளர்[தொகு]

முத்து குமாரசுவாமி சைவசித்தாந்தத்தினை முதன் முதலில் ஆங்கிலேயருக்கு விளக்கியவர். 1857 ஆம் ஆண்டு மாட்சிமை பொருந்திய ஆசியச்சங்கத்தின் (Royal Asiatic Society) இலங்கைக் கிளையில் "சைவசித்தாந்தச் சுருக்கம்" எனும் ஒரு கட்டுரையினை வாசித்து விளக்கியுள்ளார். இக்கட்டுரை அச்சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞரான முத்துக் குமாரசுவாமி தமது 24 வது வயதில் இக்கட்டுரையை எழுதி அச்சபையில் விளக்கியுள்ளார். 1860 ஆம் ஆண்டு "இந்து சமயம்" என்ற கட்டுரை அதே சபையில் வாசிக்கப்பட்டு சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

தாம் ஒரு இங்கிலாந்து வழக்கறிஞர் (Barrister) ஆவதற்கு இங்கிலாந்து சென்ற போதும் தமது சமயத்திலும் தத்துவத்திலும் அவருக்கிருந்த ஈடுபாடு குறையவில்லை எனலாம். அரிச்சந்திரனின் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடகமாக்கி ஆங்கிலேய நடிக நடிகைகளுடன் தாம் அரிச்சந்திரனாக நடித்து அரச சபையில் மேடையேற்றினார். விக்டோரியா மகாராணியாரால் சேர் பட்டம் முத்துக் குமாரசுவாமிக்கு வழங்கப்பட்டது. ஆங்கில மொழிப் பேச்சுத் திறனுக்கும் நடிப்புக் கலைக்குமாக இக்கௌரவம் கொடுக்கப்பட்டதாக இலண்டனில் வெளிவந்த Illustrated London News என்ற பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. 'அரிச்சந்திரன்' நாடகமாக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டபோது அதன் பின்னிணைப்பாக 'சைவசித்தாந்தச் சுருக்கம்' என்ற கட்டுரை சேர்க்கப்பட்டது.

சேர் முத்துக் குமாரசுவாமி அவர்கள் இலண்டனில் உள்ள கலைக் கூடங்களில் (Arts Councils) தொடர்ச்சியாகச் 'சைவ சித்தாந்தம்' பற்றியும் 'இந்தியத் தத்துவம்' பற்றியும் சொற்பொழிவுகள் ஆற்றினார். சேர் முத்துவின் ஆங்கிலச் சொல்லாட்சியினை மெச்சி அவர்கள் அவரை "கிழக்கின் மிகச் சிறந்த நாவன்மை படைத்தவர்" (The Silver tongued Orator of the East) என்று அழைத்தனர்.

எழுதிய நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sorkhabi, Rasoul (2008-02-10). "Ananda K. Coomaraswamy: From geology to philosophia perennis". Current Science (Bangalore: Indian Academy of Sciences) 94 (3): 394–401. http://www.ias.ac.in/currsci/feb102008/394.pdf. Retrieved 2009-06-23. 
  2. NANNITHAMBY E Mudaliyar of Manipay - Family #5017
"http://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_குமாரசுவாமி&oldid=1377489" இருந்து மீள்விக்கப்பட்டது