முக்தாம்பாள் சத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்தாம்பாள் சத்திரம்

முக்தாம்பாள் சத்திரம் என்பது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சத்திரம் ஆகும். இது தஞ்சாவூர் மராத்திய அரசரான சரபோஜியால் இராமேசுவரம் செல்லும் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டது ஆகும்.

அமைவிடம்[தொகு]

முக்தாம்பாள் சத்திரம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ளது. சத்திரம் அமைந்துள்ள பகுதி முக்தாம்பாள்புரம் எனப்படும். இந்த சத்திரமானது 1802 ஆம் ஆண்டு சனவரி 16 ஆம் நாள் பொங்கல் நாளை ஒட்டித் திறக்கப்பட்டதாக அங்கு உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.[1] முக்தாம்பாள் சத்திரம் ஒரத்தநாடு சத்திரம் எனப்பெறும். இது 16-1-1802 துன்மதி புஷ்யசுத்த திரயோதசியில் கட்டத் தொடங்கப் பெற்றதாதல் வேண்டும். இச்சத்திரத்தின் தோற்றத்தைப் பற்றிப் போன்ஸ்லே வமிச சரித்திரம் தமிழாக்கம் பக்கம் 196இல் கூறப்பெற்றுள்ளது.[2] [கு 1]

மராத்தியர் சத்திரங்கள்[தொகு]

தஞ்சை மராட்டிய மன்னர்களின் சத்திரங்கள் மல்லியம் (மல்லியம் சத்திரம்), திருபுவனம் (சக்வாராம்பாள்புரம் சத்திரம்), தாராசுரம் (இராஜஸாம்பாள்புரம் சத்திரம்), திருவையாறு (பஞ்சநதமோகனாம்பாள்புரம் சத்திரம்), பள்ளியக்ரஹாரம் (லக்ஷமிராஜபுரம் சத்திரம்-வெண்ணாறு சத்திரம்), தஞ்சாவூர் (சிரேயஸ் சத்திரம்), தஞ்சாவூர் (கஞ்சி வீடு), தஞ்சாவூர் அண்மையில் நடார் (நடார் சத்திரம்), சூரக்கோட்டை (இராஜகுமாரபாயி சத்திரம்), சூரக்கோட்டை அருகில் (சைதாம்பாள்புரம் சத்திரம்), நீடாமங்கலம் (யமுனாம்பாள்புரம் சத்திரம்), ஒரத்தநாடு (முக்தாம்பாள்புரம் சத்திரம்), மகாதேவபட்டினம் (மகாதேவபட்டினம் சத்திரம்), பட்டுக்கோட்டை (காசாங்குளம் சத்திரம்), இராஜாமடம்(மோகனாம்பாள் சத்திரம்), வேளங்குளம் (அம்மணி சத்திரம்) (சுலக்ஷனாம்பாள்புரம் சத்திரம்), மணமேற்குடி (திரெளபதாம்பாள்புரம் சத்திரம்), மீமிசல் (இராஜகுமாராம்பாள்புரம் சத்திரம்), இராமேசுவரம் (இராமேசுவரம் சத்திரம்), தனுஷ்கோடி (சேதுக்கரை சத்திரம்) ஆகிய இடங்களில் உள்ளன. [3]

சேவைகள்[தொகு]

மராட்டியர் ஆட்சிக்காலத்தில் (கி.பி.1743-1837) 20க்கும் அதிகமான சத்திரங்கள் இருந்தன. பெரும்பாலானவை மராட்டிய மன்னர்களின் மனைவி, காதலிகள், தாய், இஷ்ட தெய்வத்தின் பெயரால் கட்டப்பட்டன. ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்லும் பொதுமக்களும் பக்தர்களும் தங்கி இளைப்பாறுவதற்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும் கட்டப்பட்ட இச்சத்திரங்களில் எவ்விதப் பாகுபாடுமின்றி உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு சத்திரத்திற்கும் சில கிராமங்கள் மானியமாக வழங்கப்பட்டன. மானியமாக வழங்கப்பட்ட கிராமங்களிலுள்ள நிலங்களில் விளையும் தானியங்களைக் கொண்டு உணவு தயாரித்து சத்திரங்களில் வழங்கப்பட்டது. அக்காலத்தில் இச்சத்திரத்திற்கு தென்னமநாடு, புதூர், கண்ணந்தகுடி கிழக்கு, வன்னிப்பட்டு ஆகிய கிராமங்கள், பிற நில மானியங்கள் மூலமாக ஏறத்தாழ ரூ.50,000 வருவாய் கிடைத்துள்ளது. [4] இச்சத்திரத்தின் ஒரு அறையில் உள்ள சிவலிங்கம், முக்தாம்பாள் நினைவாக வைக்கப்பட்டு, தினசரி பூசைகள் நடைபெற்று வந்துள்ளன. தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, மராத்தி, பாரசீகம், உருது போன்ற மொழிகளைக் கற்பிக்க ஆசிரியர்கள் இருந்தனர். அலோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி, வைத்தியர்கள் உரிய முறைப்படி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தனர். ஒரே இடத்தில் 5,000 நபர்கள் தங்கக்கூடிய பிரம்மாண்டிய மாளிகையே இச்சத்திரம். [5]

முக்தாம்பாள்[தொகு]

கி.பி.1798இல் அரசப்பதவியை ஏற்ற இரண்டாம் சரபோஜிக்கு இரு மனைவிகள் இருந்தனர். இத்திருமணத்திற்கு முன்பாகவே அவர் முக்தாம்பாளைத் திருமணம் செய்திருந்தார். [4] இளம் வயதில் காலமான முக்தாம்பாள் தான் இறப்பதற்கு முன்பு தனது பெயரில் அன்னசத்திரம் அமைக்கும்படி மன்னரிடம் வேண்டிக்கொண்டார். அவர் நினைவாக இரண்டாம் சரபோஜியால் இச்சத்திரம் கட்டப்பட்டது. [4] முக்தாம்பாள் நினைவாக இச்சத்திரம் அமைக்கப்பட்டது. இந்தச் சத்திரம் உட்பட அக்ரகாரம், கோயில், குளம் போன்றவற்றையும் அவர் அமைத்தார். [6]

கலை நுட்பம்[தொகு]

இந்தச் சத்திரம் கலை நுட்பங்களைக் கொண்டு, கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.[7] தஞ்சாவூர் மாவட்டத்தில் மராட்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சத்திரங்களில் இது மிகவும் பெரியதாகும். அரண்மனை போல கட்டப்பட்டுள்ள இச்சத்திரத்தில் கலை நயமிக்க ஊஞ்சல் மேடை, அடித்தளத்திலும் மேல் தளத்திலும் அழகிய வேலைப்பாடுகள் உள்ளன.[4] அழகிய தோரண அமைப்பு உடைய யானை, குதிரை பூட்டிய தேர் சக்கர வாயில் பகுதியும், துாண்கள் தாங்கி நிற்கும் பெரிய முற்றங்களும், ஆங்காங்கே சிவலிங்கமும், மேல்தளத்தில் அழகிய வேலைப்பாட்டுடன், மரத்தால் அமைக்கப்பட்ட துாண்களும், நீர் நிறைந்த கிணறும், பழமையோடு காணப்படுகின்றன. [8]

தற்போதைய நிலை[தொகு]

ஆங்கிலேயர் வருகைக்கு பின், பள்ளிக்கூடமாகவும், பின்னர் தொடர்ந்து, மாணவர்கள் விடுதியாகவும் பயன்படுத்தப்பட்டது.தற்போது, சேதமடைந்த நிலையில் உள்ள, இச்சத்திரத்தை சத்திரத்தை பாதுகாக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். [8] இச்சத்திரம், தமிழகத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக மாற்றப்படவுள்ளது. [9]

குறிப்புகள்[தொகு]

  1. இச்சத்திரத்தின் பெயர் முக்தாம்பாள் சத்திரம் என்பதாகும். முத்தம்மாள் சத்திரம் அல்ல.

மேற்கோள்[தொகு]

  1. தஞ்சை வெ. கோபாலன். தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு, பகுதி 21. சென்னை: http://FreeTamilEbooks.com. 
  2. பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், pdf/283, விக்கிமூலம்
  3. பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், pdf/514, விக்கிமூலம்
  4. 4.0 4.1 4.2 4.3 வி.என்.ராகவன், காதலியின் நினைவாக சத்திரம், தினமணி, 14 பிப்ரவரி 2021
  5. அய்யம்பேட்டை என்.செல்வராஜ், முத்தம்மாள் சத்திரம்:: சரபோஜியின் தாஜ்மகால், இந்து தமிழ் திசை, 29 சூன் 2022
  6. முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, ஊர்ப்பெயர்களில் அரச மரபினர் (தஞ்சை மாவட்டம்), தஞ்சை இராசராசேச்சரம் திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா மலர், 1997
  7. Not mere rest houses, The Hindu, 21 October 2011
  8. 8.0 8.1 நினைவு சின்னமாகும் முத்தம்மாள் சத்திரம், தினமலர், 22 செப்டம்பர் 2019
  9. பாதுகாக்கப்பட்ட சின்னமாகும் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம், தினமலர், 17 சூலை 2022

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தாம்பாள்_சத்திரம்&oldid=3483909" இலிருந்து மீள்விக்கப்பட்டது