மின்னோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மின்னோட்டவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மின்னோட்டம்

கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டம் பாயும் வீதமே மின்னோட்டம் (Electric current) அல்லது ஓட்ட மின் (Current electricity) என அழைக்கப்படுகிறது[1]. ஒவ்வொரு துகளும் ஒரு குறிப்பிட்டளவு மின்மம் (charge, மின் ஏற்பு, மின்னூட்டு) கொண்டிருக்குமாகையால், ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை நொடிக்கு எவ்வளவு மின்மம் கடந்து செல்கின்றது என்பதுதான் மின்னோட்டத்தின் அளவு ஆகும். அதாவது, கடத்தி ஒன்றின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் வழியே மின்னூட்டம் (மின்மம்) பாயும் வீதம் மின்னோட்டம் ஆகும்.[2]

விளக்கம்[தொகு]

ஆறுகளில் நீர் ஓடுவதை நீரோட்டம் என்பதைப் போல எதிர் மின்தன்மை கொண்ட இலத்ரான்கள் நகர்ந்து ஓடுவது மின்னோட்டம் ஆகும். நீர் அழுத்தத்தின் காரணமாக, நீரோட்டம் மேல் இருந்து கீழே பாய்வது போல அதிக மின்னழுத்தம் கொண்ட இடத்திலிருந்து மின்னழுத்தம் குறைவான பகுதிக்கு மின்னோட்டம் பாய்கின்றது.

மின்னோட்ட அலகு - ஆம்பியர் மின்னோட்டம்[தொகு]

மின் தன்மையில் இரு வகை இருப்பதால், எந்த வகை மின் பொருள் நகர்ந்தாலும் மின்னோட்டம் நிகழும். மின்னோட்டமானது ஆம்பியர் என்னும் அலகால் அளக்கப்படுகின்றது. ஓர் ஆம்பியர் என்பது ஒரு நொடிக்கு ஒரு கூலம் அளவு மின்மம் (மின்னூட்டம்) ஒரு தளத்தைக் கடக்கும் ஓட்டம் ஆகும். மின்னோட்டச் செறிவு என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவைக் கடக்கும் மின்னோட்ட அளவாகும். எத்தனை ஆம்பியர் மின்னோட்டம் ஒரு சதுர செ.மீ பரப்பைக் கடந்து செல்கின்றது என்பது மின்னோட்டச் செறிவு ஆகும் (= ஆம்பியர்/பரப்பளவு).[சான்று தேவை]

இருவகை மின்மம், மின்னோட்ட திசை[தொகு]

இரண்டு வகை மின் தன்மைகளில் ஒன்றை நேர்மின் தன்மை என்றும், இத்தன்மை கொண்ட மின்மத்தை நேர்மின்மம் என்றும் அழைக்கப்படுகின்றது. நேர்மின்மத்தை கூட்டல் குறி (+) இட்டுக் காட்டுவது வழக்கம். மற்றது எதிர்மின் தன்மை கொண்டது. அதனை எதிர்மின்மம் என்பர். எதிர்மின்மத்தை கழித்தல் குறி (-) இட்டுக் காட்டுவது வழக்கம். மின்னோட்டத்தின் திசை, நேர்மின்மம் ஓடும் திசை ஆகும். எதிர்மின்மம் கொண்ட துகள்கள் ஒரு திசையில் ஓடினால், அவை எதிர்மின்மம் கொண்டிருப்பதால் மின்னோட்டம் வழமையாகத் துகள் ஓடும் திசைக்கு எதிரான திசையில் நிகழ்வதாகக் கொள்ளப்படும்.

எதிர்மின்னி[தொகு]

ஒர் அணுவிலே உள்ள எதிர்மின் தன்மை கொண்ட எதிர்மின்னிகள் என்னும் இலத்திரன்கள் மின் கம்பிகளின் வழியாக மின்னழுத்த வேறுபாடால் ஓடுவது பொதுவாக நிகழும் மின்னோட்டம் ஆகும். இவ்வகை மின்னோட்டத்தால் மின் விளக்கு எரிவது, மின் விசிறிகள் சுழல்வது போன்ற ஆயிரக்கணக்கான பயன் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. நீர் போன்ற வடிவம் கொண்ட நீர்மக் கரைசல்களிலும் மின்னோட்டம் பாயும். [சான்று தேவை]

ஓர் அணுவில் உள்ள ஒவ்வொரு எதிர்மின்னியும் துல்லியமாக 1.60217653x10−19 கூலம் மின்மம் தாங்கி உள்ளது என்று கண்டிருக்கிறார்கள். எனவே ஓர் ஆம்பியர் மின்னோட்டம் என்பது நொடிக்கு 6.24150948x1018 நுண்ணிய எதிர்மின்னிகள் ஒரு தளத்தைக் கடந்து ஓடும் ஓட்டமாகும்.

சில இடங்களில் நேர்மின் தன்மை கொண்ட நேர்மின்மம் நகர்வதும் உண்டு. பெரும்பாலும் இவை எதிர்மின்னி இழந்த ஒரு அணுவாகவோ, மூலக்கூறாகவோ இருக்கும். இவ்வகை மின்னோட்டம் பெரும்பாலும் நீர்மக் கரைசல்களின் வழியே மின்னோட்டம் பாய்ச்சிப் பொருள்களின் மீது மாழைப் (உலோகப்) படிவு அல்லது பூச்சு ஏற்படுத்தும் நிகழ்வுகளில் காணலாம். இவ்வகை மின்னோட்டத்தால் வெள்ளி பூச்சுகள் செய்யப்பட்ட (வெள்ளி முலாம் பூசப்பட்ட) அகப்பை, கரண்டி முதலியன பலரும் அறிந்தது.

மாறு மின்னோட்டம்[தொகு]

மின்னோட்டம் ஒரே திசையில் பாய்ந்தால் அதற்கு நேர் மின்னோட்டம் என்று பெயர். மின்கலத்திலிருந்து பெறும் மின்னோட்டம் இத்தகைய நேர் மின்னோட்டம். இதுதவிர முன்னும் பின்னுமாக மாறி மாறி ஓடும் மின்னோட்டத்திற்கு மாறு மின்னோட்டம் என்று பெயர். வீடுகளில் பொதுவாகப் பயன்படும் மின்னாற்றல் மாறுமின்னோட்டமாகப் பயன்படுகின்றது. ஒரு நொடிக்கு எத்தனை முறை முன்னும் பின்னுமாய் மின்னோட்டம் மாறுகின்றது என்பதை பொறுத்து அதன் அதிர்வெண் அமையும். ஒரு நொடிக்கு அமெரிக்காவில் 60 முறை முன்னும் பின்னுமாய் அலையும். எனவே அதிர்வெண் 60. இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வீட்டு மின்னோட்டம் நொடிக்கு 50 முறை முன்னும் பின்னுமாய் அலையும். எனவே அங்கு அதிர்வெண் 50. ஒரு நொடிக்கு ஒருமுறை முன்னும் ஒருமுறை பின்னும் ஓடும் மின்னோட்டத்திற்கு ஒரு ஹெர்ட்ஸ் என்று பெயர். அதிர்வெண் ஹெர்ட்ஸ் என்னும் அலகால் அளக்கப்படுகின்றது. மின்னோட்டம் பொதுவாக ஒரு முழுச் சுற்றுப்பாதையில் ஓடும். மிக அதிக அதிர்வெண் கொண்ட மின்னழுத்த வேறுபாடுகள் இயக்கும்பொழுது, இவ்வாறு மின்னோட்டப் பாதைகளைத் தனித்தனியே முழு சுற்றுப்பாதைகளாகப் பிரித்தறிவது கடினம். இத்தகு நிலைமைகளில் மாக்சுவெல் என்பாரின் மின் காந்தப் புலன்களின் கோட்பாடுகளால் தான் பிரித்தறிய முடியும்.

மின்னோட்டம் காந்தப் புலமுள்ள ஓரிடத்தில் பாயும்பொழுது மின்னோட்டத்தின் திசை மாறும். இது காந்தப்புலத்தின் திசையையும் மின்னோட்டத் திசையையும் பொறுத்தது. ஏன் இவ்வாறு மின்னோட்ட திசையில் மாறுதல் ஏற்படும் எனில், மின்னோட்டம் பாயும் பொழுதுப் பங்கு கொள்ளும் எதிர்மின்னி போன்ற மின்னிகளின் நகர்ச்சியால், ஓட்டத்திசையைச் சுற்றி சுழலாக ஒரு காந்தப் புலம் தானே உண்டாகின்றது. இம்மின்னோட்டத்தால் ஏற்படும் சுழல் காந்தப் புலத்தோடு வெளியில் ஏற்கனவே உள்ள காந்தப்புலம் முறண்படுவதால் (ஏற்படும் விசையால்) மின்னோட்ட திசையில் மாறுதல் ஏற்படுகின்றது. [படங்களுடன் இவை இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டும்]

வரையறை[தொகு]

ஒரு நொடிக்கு எவ்வளவு மின்மம் (மின்னூட்டம்) ஒரு குறுக்குவெட்டுப்பரப்பை கடக்கின்றது என்பதை பொருத்து மின்னோட்டம் கணிக்கப்படும்.

I = {dQ \over dt}

நேரத்திற்கு நேரம் மின்னோட்டம் மாறுபடக்கூடும் ஆகையால், காலத்தால் மாறுபடும் மின்னோட்டத்தைக் கீழ்க்காணும் வகையில் குறிக்கலாம்:

i(t) = {dq(t) \over dt} என்றும், இதையே, மாற்றிப்போட்டு நேரத்திற்கு நேரம் மாறுபடும் மின்னூட்டத்தின் அளவைக் குறிக்க, q(t) = \int_{-\infty}^{t} i(x)\, dx என்றும் கூறலாம்.

பல திசைகளிலும் வெளி உந்துதல் ஏதும் இல்லாமல் தன்னியல்பாய் அலையும் மின்னூட்டுகள் எந்த ஒரு திசையிலும் மின்னோட்டத்தை ஏற்படுத்துவதில்லை. எனினும், அவை மொத்தமாக ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்ந்தால் அத்திசையில் மின்னோட்டம் நிகழும்.

அலகு[தொகு]

மின்னோட்டத்தின் உலக முறை அலகு ஆம்பியர் ஆகும். இது ஃபிரஞ்சு அறிஞர் ஆந்திரே-மேரி ஆம்பியரை (en) பெருமை செய்யும் விதமாக அவர் பெயரில் வழங்கப்படுகிறது. ஓர் இலத்திரன் -1.6 × 10−19 கூலும்கள் ஊட்டுடையது. எனவே, 1/(1.6 × 10−19) = 6.24 x 1019 எலெக்ட்ரான்கள் ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை ஒரு நொடியில் கடந்தால் அதன் எதிர் திசையில் ஓர் ஆம்பியர் அளவு மின்னோட்டம் பாய்வதாகக் கொள்ளலாம்.

மின்னோட்ட அடர்த்தி[தொகு]

மின்னோட்ட அடர்த்தி = மின்னோட்டம் / (குறுக்கு வெட்டுப் பரப்பளவு) = current / unit normal area

கணிதக் குறியீடுகளைக் கொண்டு மின்னோட்டத்தைக் கீழ்காணுமாறு விளக்கலாம்:


I = j \cdot A

மேலே உள்ளதில் மீட்டர்-கிலோ கிராம்-நொடி (MKS) அளவியல் அலகு முறை அல்லது உலக முறை அலகுகள் (SI) முறைப்படி:

I என்பது ஆம்பியர்கள் அலகில் அளக்கப்பட்ட மின்னோட்டம்
j என்பது ஒரு சதுர மீட்டர் குறுக்கு வெட்டுப் பரப்பில் பாயும் ஆம்பியர்கள் என்னும் அலகில் அளக்கப்படும் மின்னோட்ட அடர்த்தி.
A என்பது மின்னோட்டம் பாயும் குறுக்கு வெட்டுப் பரப்பளவு சதுர மீட்டர்கள்.

நுட்பியல் சொற்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lakatos, John; Oenoki, Keiji; Judez, Hector; Oenoki, Kazushi; Hyun Kyu Cho (1998). "Learn Physics Today!". Lima, Peru: Colegio Dr. Franklin D. Roosevelt. பார்த்த நாள் 2009-03-10.
  2. http://www.sengpielaudio.com/calculator-ohmslaw.htm
"http://ta.wikipedia.org/w/index.php?title=மின்னோட்டம்&oldid=1817454" இருந்து மீள்விக்கப்பட்டது