மிகை திருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிகை திருத்தம் (Hypercorrection) அல்லது மீதிருத்தம் என்பது பொதுவாக மீறப்படும் இலக்கண நெறிகளைத் திருத்தும் எண்ணத்தில் அந்நெறிகள் பொருந்தா (பரிந்துரைக்காத) இடங்களிலும் உரைகளை மாற்றியமைக்கும் மொழியியல் நிகழ்வுகளைக் குறிக்கும். இதன் விளைவாக பிழை இல்லாத இடங்களிலும் திருத்தம் என்ற பெயரில் பிழைகள் புகுத்தப்படும் வாய்ப்பு உண்டு.

இது பின்வரும் காரணங்கள் உட்பட பல வழிகளில் நிகழ்வதுண்டு.

  1. இலக்கண நெறிகளின் வரம்புகளைப் பற்றிய தவறான புரிந்துணர்வு
  2. வேற்றுமொழி பேசுபவர் ஒரு மொழியைக் கற்கையில் தான் அடிக்கடி மீறும் இலக்கண நெறியைத் திருத்த கூடுதல் முனைப்பு காட்டி அந்நெறி செல்லாதவிடத்தும் செயற்படுத்துதல்
  3. வேறு மொழிகளில் உள்ள இலக்கண நெறியை போதிய வரம்புகளுக்குட்படுத்தாமல் செயல்படுத்துதல் - எ.கா. கன்னட மொழியில் ஆம் என்பது ஹௌது (ಹೌದು) என்றும் அப்படியா? என்பது ஔதா? என்றும் உள்ளது. இரண்டுமே திராவிட மொழிகள் என்பதால் பெரும்பாலான கன்னடச் சொற்களுக்கிணையான தமிழ்ச்சொற்கள் ஒலித்திரிபு நெறிகளுக்குட்படுபவை. அதனால் இலக்கணத்திலும் சொல்லாக்கத்திலும் ஒரு இசைவு உண்டு. இவ்வாறான இசைவுகளை அடிக்கடி எதிர்நோக்குவதால் இந்த எதிர்பார்ப்பு தமிழ் பழகும் கன்னட மொழியினரிடம் இயல்பாக ஏற்படுகிறது. அதனால் அவர்களுக்கு இவ்விசைவின் விதிவிலக்குகளை ஏற்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அவர்களில் பெரும்பாலானோர் அப்படியா என்பதைத் தவறுதலாக ஆமாவா? என்கின்றனர். இதே சூழலில் வளரும் தமிழ்க்குழந்தைகளும் இவ்வாறே பழகுவதும் குறிப்பிடத்தக்கது.

இலக்கண வரலாற்றில் மிகைதிருத்தம்[தொகு]

பன்னெடுங்காலம் முன்பு எழுதப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியத்தில் அப்போதைய பேச்சு வழக்கு பற்றிய பதிவுகள் உள்ளன. இவற்றில் இலக்கணம் மீறிய பயன்பாடுகள் பற்றியும் அறிய முடிகிறது. அவ்வாறான ஒரு பதிவைக்[1] கீழே காணலாம்:

பலரை அறிவதற்கான வினாச்சொல்லாகிய யாவர் என்ற பெயரிலுள்ள வகர உயிர்மெய் கெட்டு 'யார்' என வருவதும், அஃறிணையைச் சுட்டும் ஒன்றன்பால் வினாச்சொல்லாகிய 'யாது' என்பதன் இடையில் வகரம் தோன்றி 'யாவது' என்று வருதலும் வழக்கில் திரிந்து வருகின்ற முறையாகும். இத்திரிபு ஒரு நெறியை வேரோரிடத்தில் செலுத்துவதால் விளைவதால் ஒருவேளை மிகைபடத் திருத்தம் எனலாம்.

ஊடகங்களில் மிகுதிருத்தம்[தொகு]

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் டி. எஸ். பாலையா அசோகன் (நடிகர் இரவிச்சந்திரன்) தனது மகளைக் காதலிப்பதை விரும்பாமல் அவர்மேல் வெறுப்புற்றிருப்பார். அவரை தனது வீட்டிலிருந்து வெளியேற்றியும் விடுவார். இந்நிலையில் ஒரு காட்சியில் நடிகர் முத்துராமன் செல்வந்தன் போல வேடம் பூண்டு அசோகனின் தந்தை எனச்சொல்லி பாலையாவிடம் என் மகன் எங்கே? என்று கேட்பார். அக்காட்சியில் அசோகன் செல்வந்தன் என அறிந்து அதிர்ச்சியுறும் பாலையா பதற்றத்தில் "அசோகர் உங்க(ள்) மகரா?" என்பார். உயர்திணையில் மதிப்பு தருவதற்காகச் சேர்க்கப்படும் அர் ஒட்டை பயன்பாடு மீறி மகன் என்ற சொல்லுடனும் இணைத்து மிகைபடத் திருத்தம் செய்வதுபோல் பகடியாக அக்காட்சி அமைந்திருந்தது.

தமிழில் மிகைதிருத்தம்[தொகு]

'அருகாமை' என்ற சொல்லை அண்மை, மிக அருகில் என்ற பொருள்களில் பல இடங்களிலும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஒரு வேர்ச் சொல்லுடன் 'ஆமை' என்ற விகுதி சேர்ந்தால் வழக்கமாக எதிர்மறைப் பொருளைக் குறிக்கும்.

காட்டு

பணிவு + ஆமை = பணியாமை கனிவு + ஆமை = கனியாமை செய் + ஆமை = செய்யாமை

அதே நெறியில் பார்த்தால்

அருகு + ஆமை = அருகாமை

என்பது நெருங்கியிராமை என்றல்லவா பொருள் தர வேண்டும். ஆனால் online Tamil lexican-இல் கூட proximity என்றே அருகாமைக்குப் பொருள் சொல்கிறது. இது புழக்கத்தில் வந்துவிட்டதால் தந்த மரியாதையா? அல்லது இந்தச் சொல்லுக்குமட்டும் ஏதேனும் விதிவிலக்கா?

அருகாமை என்பது எதிர்மறை பொருள் அல்ல

மிக அருகில் என்றே பொருள்

அருகுதல் என்றால் அருகில் வருவது, அதாவது நெருங்கி வருவது என்று பொருள்.

அருகாமை என்றால் நெருங்க முடியாது அளவு ஏற்கனவே நெருங்கு விட்டதாக பொருள்

தமிழண்ணலின் ஒரு கட்டுரை[தொகு]

அருகில் புகுந்த ஆமை

எங்கள் வீட்டிற்கு அருகில், சிவன் கோயிலுக்கு அருகில் என்று கூற வேண்டிய இடங்களில் அருகாமையில் என்று எழுதுகிறார்கள். செந்தமிழாக எழுதுகிற நினைப்பு; எங்கிருந்து இந்த ஆமை 'அருகில்' வந்ததென்று தெரியவில்லை. கல்லாமை, அழுக்காறாமை, வெஃகாமை, விளங்காமை போன்ற எதிர்மறைத் தொழிற் பெயர்கள் பலவுள. அருகாமையில் எதிர்மறை எதுவுமில்லை. அருகுதல்- சுருங்குதல்; அருகாமை - சுருங்காமை என்றால் அத் தொழிற்பெயர் வேறு. இனிமேல் நம் அருகில் இந்த 'ஆமை' வராமல் காக்க வேண்டும்.

'அண்மையிலுள்ளது; அண்மையில் நிகழும்' என இட அணிமையும் கால அணிமையும் குறிக்கப்படுகின்றன.

'பசிப்பிணி மருத்துவன் பண்ணன் இல்லம், அணித்தோ, சேய்த்தோ' என்பது புறப்பாட்டு (புறம்: 173). அருகே என்பதை இடச்சுருக்கத்தை மட்டும் சுட்டவும், 'அண்மை', 'அணிமையை' இடம், காலம் இரண்டிற்கும் பயன்படுத்தவும் பழகியுள்ளோம். எங்கள் வீடு அருகில்தான் இருக்கிறது; குடியரசு நாள் அணிமையில் வருகிறது, இல்லையா?*

சரியாக இருப்பதைத் தவறுபடத் திருத்துவது மிகைப்பட்ட செயலாகும். மிகைத் திருத்தம் என்பது செந்தமிழாக எழுதுகிறோம் என நினைத்துக் கொண்டு தவறு செய்வது. அவற்றுள் முக்கியமான சிலவற்றை நினைவுகூர்வோம்.

நூல்கள்

நூல்களே முறையாகும். செந்தமிழில் எழுதுவதாக எண்ணிக்கொண்டு நூற்கள் எனப்பலர் எழுதி விடுகின்றனர். நமது கால்களைக் காற்கள் ஆக்கலாமா? உழுகின்ற சால்களை சாற்களாக்குவதா? வால்கள், வேல்கள் இருக்கவும் நூல்கள் நூற்களாவது 'மிக நன்றாக' எழுதுவதாக எண்ணிக் கொண்டு செய்யும் தவறு! அதைத் தவிர்க்க வேண்டும்.

பொருள்கள்

பொருள்கள்தான் சரி. ஆனால் பொருட்களை, பொருட்களுக்கு என்றே எழுதக் காரணம் பொருட்சிறப்பு, பொருட்பேறு, பொருட்குறை எனப் பிற இடங்களில் விகாரப்படுவதால், இதிலும் அவ்வாறே ஒலித்துவிடும் பழக்கமாகும். பொருள்களை எடுத்து வை, அங்கு எத்தனை பொருள்கள் உள்ளன என்பதே முறையாகும்.

இவையெல்லாம் சரியாக உள்ளவற்றை நாமே ஒரு நினைப்பில் தவறென்று எண்ணிக்கொண்டு பிழைபட எழுதி விடுவன ஆகும். பொருத்தமாகயிருப்பதைத் திருத்தம் எனலாம். இப்படி மிகையாக - வேண்டாமல் செய்வதை (மிகைத் திருத்தம்) என்றுதானே சொல்ல வேண்டும்.

  • கோவை தமிழாசிரியர் நா.கு. பொன்னுசாமி, 'அருகண்மை என்ற சொல்லே அருகாமை ஆயிற்று என்கிறார். 'நெடுஞ்சேண் ஆரிடை' போல, ஒரு பொருட் பன்மொழியாக வருதல் கூடும் ஆயினும், 'அருகண்மை' பேச்சிலோ, எழுத்திலோ ஆட்சி உண்டா என்று தேட வேண்டும். மற்றபடி மிகப் பொருத்தமாக உளது.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. தொல்காப்பியம், பாடல் 172
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகை_திருத்தம்&oldid=2741757" இலிருந்து மீள்விக்கப்பட்டது