கலிங்க மாகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாகோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கலிங்க மாகன் 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அக்காலத்தில் இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையைக் கைப்பற்றி 40 ஆண்டுகள்வரை ஆண்டவன் ஆவான். பாளி மொழியிலுள்ள சிங்கள வரலாற்று நூல்கள் மாகன் கலிங்க நாட்டிலிருந்து 24,000 வீரர்களைக் கொண்ட படையுடன் இலங்கையில் இறங்கியதாகக் கூறுகின்றன. பௌத்த மதத்துக்கு எதிரான இவனது ஆட்சி, இலங்கை வரலாற்றில் பெரும் தாக்கங்களை உருவாக்கியது ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையை உருவாக்கியவனும் இவனே என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்[1].


கலிங்க மாகனிற்கு வழங்கப்பெற்ற பெயர்கள்[தொகு]

  • காலிங்க விஜயபாகு
  • விஜய காலிங்கச் சக்கரவர்த்தி
  • விஜய காலிங்கன்
  • விஜய கூளங்கை ஆரியன்
  • விஜயபாகு காலிங்கன்

கலிங்க இளவரசன்[தொகு]

18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வைபவமாலையை இயற்றிய மயில்வாகனப் புலவர் உக்கிரசிங்கன் என்னும் அரசன் பற்றிக் குறிப்பிடுகிறார். பண்டைக் காலத்தில் கலிங்க நாடு அமையப் பெற்றிருந்த இக்கால ஒரிசாவில் அவனே கலிங்க மாகன் என்றும் விசயனின் உடன் பிறந்தானின் வழிவந்தவன் என்றும் அறியப்படுகிறது. இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலேயே பண்டைய கலிங்க நாடு அமையப் பெற்றிருந்ததற்கு ஆதாரமாக, கலிங்க மரபு இளவரசனும் இலங்கையின் மன்னனுமான நிசங்க மல்லன் தன் கல்வெட்டுக்களில் கலிங்க நாட்டின் தலைநகரம் சிம்மபுரம் எனக் குறிப்பிட்டுள்ளதைக் கூறலாம். இன்றைய ஒரிசாவின் பண்டைய தலைநகரம் சிம்மபுரம் என்றே குறிப்பிடப்படுகிறது[2].

கலிங்கமாகனின் ஆட்சி பற்றிப் பல விபரங்களைத் தருகின்ற சூளவம்சம், ராஜாவலிய போன்ற பாளி நூல்கள் அவனை ஒரு கலிங்க தேசத்தவனாகக் கூறுகின்றன. மட்டக்களப்பின் வரலாறு கூறும் தமிழ் நூலான மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் என்னும் நூல், அவனைக் கலிங்க மன்னான மனுவரதன் என்பவனின் மூன்றாவது மகன் என்கிறது. இவன் கலிங்க தேசத்தவனாக இருந்தபோதிலும், அவனுடைய படைகள் கலிங்க தேசத்துப் படைகள் அல்ல[சான்று தேவை]. வரலாற்று நூல்களின் கூற்றுப்படி, மாகன், தென்னிந்தியாவிலிருந்தே படை திரட்டி வந்ததாகத் தெரிகிறது[சான்று தேவை]. அவனுடைய படையில், தமிழரும்[சான்று தேவை], கேரளருமே[சான்று தேவை] அடங்கியிருந்ததாகத் தெரிகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. சுவாமி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - தமிழர் உகம், 1928, பதிப்பாசிரியர்: கந்தையா குணராசா, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 2004.
  2. இலங்கை அரசன் விசயன் பற்றி ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரை.


உசாத்துணை[தொகு]

  • க. தங்கேஸ்வரி (ப-106) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).
"http://ta.wikipedia.org/w/index.php?title=கலிங்க_மாகன்&oldid=1344661" இருந்து மீள்விக்கப்பட்டது