மரவள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரவள்ளி
Leaves of the cassava plant
கிழங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malpighiales
குடும்பம்: ஆமணக்குக் குடும்பம்
துணைக்குடும்பம்: Crotonoideae
சிற்றினம்: Manihoteae
பேரினம்: Manihot
இனம்: M. esculenta
இருசொற் பெயரீடு
Manihot esculenta
Crantz
வேறு பெயர்கள் [1]
  • Janipha aipi (Pohl) J. Presl
  • Janipha manihot (L.) Kunth
  • Jatropha aipi (Pohl) A. Moller
  • Jatropha diffusa (Pohl) Steud.
  • Jatropha digitiformis (Pohl) Steud.
  • Jatropha dulcis J. F. Gmel.
  • Jatropha flabellifolia (Pohl) Steud.
  • Jatropha glauca A. Rich. nom. illeg.
  • Jatropha janipha Lour. nom. illeg.
  • Jatropha loureiroi (Pohl) Steud.
  • Jatropha manihot L.
  • Jatropha mitis Rottb.
  • Jatropha mitis Sessé & Moc. nom. illeg.
  • Jatropha paniculata Ruiz & Pav. ex Pax
  • Jatropha silvestris Vell.
  • Jatropha stipulata Vell.
  • Mandioca aipi (Pohl) Link
  • Mandioca dulcis (J. F. Gmel.) D. Parodi
  • Mandioca utilissima (Pohl) Link
  • Manihot aipi Pohl
  • Manihot aypi Spruce
  • Manihot cannabina Sweet
  • Manihot cassava Cook & Collins nom. inval.
  • Manihot diffusa Pohl
  • Manihot digitiformis Pohl
  • Manihot dulcis (J. F. Gmel.) Pax
  • Manihot dulcis (J. F. Gmel.) Baill.
  • Manihot edule A. Rich.
  • Manihot edulis A. Rich.
  • Manihot flabellifolia Pohl
  • Manihot flexuosa Pax & K. Hoffm.
  • Manihot guyanensis Klotzsch ex Pax nom. illeg.
  • Manihot loureiroi Pohl
  • Manihot manihot (L.) H. Karst. nom. inval.
  • Manihot melanobasis Müll. Arg.
  • Manihot sprucei Pax
  • Manihot utilissima Pohl

மரவள்ளி (Manihot esculenta, manioc, cassava; உள்நாட்டுப் பெயர்கள்: குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரச்சினி கிழங்கு) என்பது இயுபோபியேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி. தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட இச்செடி இன்று ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவே இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. வெப்பவலய, துணைவெப்பவலயப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளியிலிருந்து உணவுக்குப் பயன்படக்கூடிய கிழங்கு பெறப்படுகின்றது. இது மாவுப்பொருளைத் தரும் ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். மனிதர்களின் உணவுக்கான கார்போவைதரேட்டுக்களைத் தருவதில் உலகின் மூன்றாவது பெரிய மூலம் மரவள்ளியாகும்.[2][3]

மரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava) என்பது கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவுப் பொருள் ஜவ்வரிசி ஆகும். இது உப்புமா, பாயாசம், கஞ்சி முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது. மனிதர் மற்றும் விலங்குகளின் உணவுப் பொருளாகவும் பல்வேறு தொழில்துறைகளில் இது ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. மரவள்ளிக் கிழங்கில் சயனோசெனிக் குளுக்கோசைட்டு எனப்படும் நச்சுப் பொருள் காணப்படுகின்றது. இப்பொருள் இருக்கும் அளவைப் பொறுத்து மரவள்ளிக் கிழங்கு "இனிப்பு" மரவள்ளி, "கசப்பு" மரவள்ளி என இரண்டு வகைகளாக உள்ளது. முறையாகச் சமைக்கப்படாத "கசப்பு" மரவள்ளி கோன்சோ என்னும் நோயை உருவாக்கக்கூடும். "கசப்பு" மரவள்ளிப் பயிர், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றை அண்டவிடாதிருப்பதால், பயிர் செய்பவர்கள் "கசப்பு" மரவள்ளியையே பெரிதும் விரும்புகின்றனர்.[4]

வரலாறு[தொகு]

மரவள்ளிச் செடி

தற்காலத்தில் உணவுக்காகப் பயிரிடப்படும் மரவள்ளி, ம. எசுக்கியூலெண்டா தாவர இனத்தின் துணை இனமான பிளபெலிபோலியா என்னும் காட்டு மரவள்ளி இனத்திலிருந்தே உருவானதாகக் கருதப்படுகின்றது. இக் காட்டுவகையின் வீட்டுப் பயிராக்கம் ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு உள்ளாகவே தொடங்கியது. கிமு 6,600 காலப் பகுதியைச் சேர்ந்த, மெக்சிக்கோ குடாவின் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள சான் ஆண்ட்ரெசு தொல்லியல் களத்தில் மரவள்ளி மகரந்தப்பொடி காணப்பட்டது. எல் சல்வடோர் நாட்டில் உள்ள 1,400 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயன் காலத்துத் தொல்லியல் களமான ஜோயா டி செரனில் மரவள்ளிப் பயிர்செய்கை குறித்த நேரடியான சான்றுகள் கிடைத்துள்ளன. தென்னமெரிக்காவின் வடக்குப் பகுதி, நடு அமெரிக்காவின் தெற்குப் பகுதி, கரிபியப் பகுதி ஆகியவற்றை எசுப்பானியர்கள் ஆக்கிரமித்த காலத்துக்கு முன்பே, மரவள்ளி, அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக ஆகிவிட்டது. போத்துக்கேய, எசுப்பானியக் குடியேற்றவாதக் காலங்களிலும், இப் பகுதியில் மரவள்ளிச் செய்கை தொடர்ந்து நடைபெற்றது. கொலம்பசின் காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காக் கண்டத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக விளங்கிய மரவள்ளி அவர்களின் தாயக ஓவியங்களிலும் இடம்பெற்றது. மோச்சே மக்கள் தமது மட்பாண்டங்களில் மரவள்ளியை வரைந்தனர்.

அமேசானை பிறப்பிடமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் கேரளாவில் போர்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

பொருளாதார முக்கியத்துவம்[தொகு]

மரவள்ளிக் கிழங்கு பெரிய அளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இக்கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம். வளரும் நாடுகளில் மரவள்ளிக் கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது.

உலகின் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் மட்டும் 6% உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்யும் மற்ற சில நாடுகள் பிரேசில்,கொலம்பியா, வெனின்சுலா, கியூபா, போர்ட்டோ ரிகோ, ஹைதி, டொமினிக்கன் குடியரசு, மேற்கிந்தியத் தீவுகள், நைஜீரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகும்.

உலகெங்கும் சுமார் 15.7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு சராசரி 10 டன்கள் மரவள்ளிக் கிழங்கு வீதம் 158 மில்லியன் டன்கள் உற்பத்தியாகிறது. மரவள்ளி கிழங்கு பயிரிடப்படும் கண்டங்களில் 51.44 மில்லியன் ஹெக்டேர் அளவில் ஆப்பிரிக்கா முதல் இடத்திலும், ஆசியா 3.97 மில்லியன் ஹெக்டேர் அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

உலகளவில் மரவள்ளிக் கிழங்கு ஆப்பிரிக்கா கண்டத்தில் 57%-ம் (சுமார் 95 நாடுகளில்) ஆசியாவில் 25%-ம் விளைவிக்கப்படுகிறது. மண் வளம் போன்ற எவ்விதமான வேளாண் சூழலையும் தாங்கி வளரக்கூடிய பயிராதலால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் குறிப்பாக, ஆப்பிரிக்கா,அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் ஒரு முதன்மைப் பயிராக மரவள்ளிக் கிழங்கு விளங்குகிறது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தரவின்படி 2012 இல் மரவள்ளி உற்பத்தி செய்த முதல் 20 நாடுகள்:

இடம் நாடு உற்பத்தி

மெ. டன்

1 நைஜீரியா 54 000 000
2 தாய்லாந்து 29 848 000
3 இந்தோனேசியா 24 177 372
4 பிரேசில் 23 044 557
5 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 16 000 000
6 கானா 14 547 279
7 அங்கோலா 10 636 400
8 மொசாம்பிக் 10 051 364
9 வியட்நாம் 9 745 545
10 இந்தியா 8 746 500
11 கம்போடியா 7 613 697
12 தன்சானியா 5 462 454
13 உகாண்டா 4 924 560
14 மலாவி 4 692 202
15 சீனா 4 560 000
16 கமரூன் 4 287 177
17 சியேரா லியோனி 3 520 000
18 மடகாசுகர் 3 621 309
19 பெனின் 3 295 785
20 ருவாண்டா 2 716 421

கிழங்கு[தொகு]

மரவள்ளிக் கிழங்கு

மரவள்ளிக் கிழங்கு நீண்டு இரு முனைகளும் கூம்பிய வடிவம் கொண்டது. உள்ளே இறுக்கமான மாவுப்பொருளைக் கொண்ட இது ஏறத்தாழ ஒரு மில்லிமீட்டர் தடிப்புள்ள தோலினால் மூடப்பட்டிருக்கும். தோல் கரடுமுரடானதும், மண்ணிறம் கொண்டதாகவும் காணப்படும். நடுவில் 5 முதல் 10 சமீ வரை விட்டம் கொண்டவையாகக் காணப்படும் மரவள்ளிக் கிழங்குகள் பொதுவாக 15 தொடக்கம் 30 சமீ வரை நீளம் கொண்டவை. இதைவிட நீளமான கிழங்குகளும் உள்ளன. கிழங்கின் மையப் பகுதியில் அதன் நீளப் போக்கில் நார் போன்ற அமைப்பு உள்ளது. கிழங்கின் உட்பகுதி, வெண்ணிறமாக அல்லது சிறிது மஞ்சட்தன்மை கொண்டதாகக் காணப்படும். மரவள்ளிக் கிழங்கு அதிக அளவு மாவுச்சத்துக் கொண்டது. அத்துடன் குறிப்பிடத்தக்க அளவில் கல்சியம் (50 மிகி/100கி), பொசுபரசு (40 மிகி/100கி), உயிர்ச்சத்து சி (25 மிகி/100கி) என்பனவும் உள்ளன. எனினும் இக்கிழங்கில், புரதமோ பிற சத்துக்களோ குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.

தமிழர்கள் சமையலிலும் மரவள்ளிக் கிழங்கை அவித்து, கடைந்து, கறியாக்கி உண்கிறார்கள். இக்கிழங்கை உலர்த்தி, அரைத்து மாவாகவும் பயன்படுத்துவதுண்டு.

பொருளாதார அம்சங்கள்[தொகு]

யாழ்ப்பாணத்தில் மரவள்ளிச் செடிகளைப் பிடுங்கிக் கிழங்கு எடுக்கும் காட்சி

2002 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, உலகில் மரவள்ளிக் கிழங்கின் உற்பத்தி 184 மில்லியன் தொன்கள் ஆகும். இவற்றில் ஆப்பிரிக்காவில் 99.1 மில்லியன் தொன்களும், ஆசியாவில் 51.5 மில்லியன் தொன்களும், இலத்தீன் அமெரிக்காவிலும் கரிபியன் பகுதிகளிலும் 33.2 மில்லியன் தொன்களும் உற்பத்தியாகின. உலகில் மிக அதிக அளவான மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடு நைசீரியா எனினும், உலக உணவு அமைப்பின் புள்ளி விபரங்களின்படி, கூடிய அளவு மரவள்ளியை ஏற்றுமதி செய்யும் நாடு தாய்லாந்து ஆகும். 2005 ஆம் ஆண்டில் உலக மொத்த ஏற்றுமதியின் 77% தாய்லாந்திலிருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வியட்நாம் 13.6% ஐயும், இந்தோனீசியா 5.8% ஐயும், கொசுத்தாரிக்கா 2.1% ஐயும் ஏற்றுமதி செய்தன. 1988 க்கும் 1990 க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகின் மரவள்ளி உற்பத்தி 12.5% கூடியுள்ளது.

பயிர்த் தாவரங்களில் கரும்புக்கு அடுத்தபடியாக, ஒரு நாளுக்கு, ஓரலகு பயிர்ச் செய்கைப் பரப்பில் மிகக்கூடிய உணவு ஆற்றலை வழங்குவது மரவள்ளியாகும். வளம் குறைந்த மண்ணிலும், குறைந்த மழை வீழ்ச்சி கொண்ட இடங்களிலும் சிறப்பாக வளர்வதால், கீழ் சகாரா ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள நாடுகள் போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் வேளாண்மையில் மரவள்ளி முக்கிய இடத்தை வகிக்கின்றது. இது ஒரு பல்லாண்டுத் தாவரம் என்பதால், இதனை வேண்டியபோது அறுவடை செய்துகொள்ள முடியும். இது, மரவள்ளியை பஞ்சகாலத்துக்காக ஒதுக்கி வைக்க உதவுவதுடன், அறுவடைக் கூலியாட்கள் மேலாண்மை தொடர்பிலும் பயனுள்ளதாக அமைகின்றது. இதனைப் பணப் பயிராகவோ, வாழ்வாதாரப் பயிராகவோ பயிரிட முடிவதால், குறைந்த வளங்களைக் கொண்ட விவசாயிகளுக்கு இது ஒரு நெகிழ்வுத் தன்மையையும் வழங்குகிறது.

ஆப்பிரிக்கக் கண்டத்து மக்களைப்போல் வேறெந்தக் கண்டத்து மக்களும் அதிகமாகக் கிழங்கு வகைகளில் தங்கியிருப்பதில்லை எனலாம். வெப்பவலய ஆப்பிரிக்காவில், மரவள்ளி முக்கிய உணவாக அல்லது முக்கியமான துணை உணவாகப் பயன்படுகின்றது. கானாவில், வேளாண்மைத்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46% மரவள்ளியிலிருந்தும் பிற கிழங்கு வகைகளிலிருந்துமே கிடைக்கின்றது. கானாவில், நாளுக்குரிய கலோரி உள்ளெடுப்பின் 30% மரவள்ளிக் கிழங்கு மூலமே பெறப்படுவதுடன், ஏறத்தாழ எல்லா வேளாண் குடும்பங்களுமே மரவள்ளியைப் பயிர் செய்கின்றன.

இந்தியா[தொகு]

இந்தியாவில், 3.1 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்படுகிறது. 60 லட்சம் டன்கள் கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு இந்தியாவின் 13 மாநிலங்களில் பயிரிடப்படுகிறது என்றாலும், தென்னிந்தியாவில் குறிப்பாக, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் அதிகமாகப் பயிராகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, வளைகுடா நாடுகளின் பணப்புழக்கம், பொது விநியோக முறையின் மூலம் கிடைக்கும் தானியங்கள் மற்றும் சாகுபடி முறை ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மரவள்ளிக் கிழங்கு சார்ந்த வேளாண் தொழில்கள்[தொகு]

யாழ்ப்பாணப் பகுதியில் மரவள்ளிப் பயிர்ச் செய்கை

இது ஒரு உணவுப் பொருள். பல்வேறு தொழில்சாலைகளின் ஒரு மூலப் பொருளாகவும் குறிப்பாக நொதித்தல் சார்ந்த தொழிற்சாலைகளில் முக்கிய பொருளாகவும் பயன்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் இது முக்கிய பணப் பயிராகும். தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா ஆகியவற்றிலும், இலங்கையிலும் குறிப்பிடத்தக்க அளவில் மரவள்ளி பயிர் செய்யப்படுகின்றது.உலக மொத்த கிழங்கு உற்பத்தி செய்யும் நான்கு நாடுகளில் (158 மில்லியன் டன்) ஆசியா நான்காவது இடத்தில் உள்ளது.

  • உலக அளவில் உற்பத்திசெய்யப்படும் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் 58 சதவிகிதம் மனிதர்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. 28 சதவீதம் கால்நடை தீவனமாகவும் 4 சதவீதம் ஆல்கஹால் மற்றும் ஸ்டார்ச் [5] சார்ந்த துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 10 சதவீதம் கெட்டுப் போகிறது.
  • இந்தியாவில் 6.5 சதவீதமும், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் பொறிப்புகள் மற்றும் மாவு வகைகள் 10 சதவீதமும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் இது கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் பொறிப்புகள் மற்றும் மாவின் தேவைகள் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதிப் போட்டியால், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பிற தொழில்கள்[தொகு]

  • மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச்,சவ்வரிசி குளுக்கோஸ்,டெக்ஸ்ட்ரின், கோந்து, புரூக்டோஸ் சாறு ஆகியவை தயாரிக்கும் தொழில்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது. இந்த தொழில்துறைகளை "வளர்ச்சி துறைகள்" என வகைப்படுத்தலாம்.

பயன்கள்[தொகு]

உணவு[தொகு]

அவித்த கிழங்குகள்

மரவள்ளி பயிரிடப்படும் இடங்களில் வாழும் மக்கள் மரவள்ளியைப் பயன்படுத்திப் பல வகையான உணவுப் பொருள்களைச் சமைத்து உண்கின்றனர். இவற்றுட் சில உணவு வகைகள் பிரதேச, தேசிய, இன முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன. மரவள்ளியைச் சமைக்கும் போது அதிலிருந்து நச்சுப் பொருள் நீக்கி முறையாகச் சமைக்க வேண்டும். அத்துடன், மரவள்ளியைச் சமைக்கும்போது இஞ்சியைக் கலந்து சமைத்தல் அல்லது மரவள்ளி உணவுடன் இஞ்சி கலந்த உணவுப் பொருள்களை உட்கொள்ளல் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என அறியப்பட்டுள்ளது.

தோலுரித்த மரவள்ளிக் கிழங்கை வெறுமனே அவித்து உண்பது உலகின் பல பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. இதனைத் துணைக் கறிகளுடன் ஒரு வேளை உணவாகப் பயன்படுத்துவதும் உண்டு. அவித்த கிழங்கை மிளகாய், உப்பு போன்ற பொருட்களுடன் சேர்த்து உரலில் இட்டு இடித்து உண்பதும் உண்டு. கிழங்கைக் குறுக்காக மெல்லிய சீவல்களாக வட்டம் வட்டமாகச் சீவி, எண்ணெயில் இட்டுப் பொரித்து உண்பதுண்டு. இது பொதுவாக சிற்றுண்டியாகவே பயன்படுகின்றது. இப் பொரியலைப் பல நாட்கள் வைத்து உண்ண முடியும் என்பதால், இவற்றை நெகிழிப் பைகளில் அடைத்து விற்பதுடன் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

மரவள்ளிக் கிழங்கு-பொரிப்பு மற்றும் மாவு[தொகு]

கிழங்குமாவு
அப்பளம்
  • கிழங்கு மாவு தயாரிக்கப்பட்டு அரிசி மாவிற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றது
  • இது பல விலங்குகளின் உணவுகளில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.
  • தொழில்துறையில் இது உற்பத்தி ஸ்டார்ச், தெக்கிரின், குளுக்கோஸ் மற்றும் எத்தில் தயாரிக்க ஒரு மூல பொருளாக விளங்குகிறது.
  • கிழங்குபொரிப்புகள்,முறுக்குகள் செய்யப்பட்டு நெகிழிப் பைகளில் அடைத்து கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற பல்வேறு பகுதிகளில் வணிகரீதியாக சிற்றுண்டியாக விற்கப்படுகிறது. விரல் பொறிப்புகள், வேஃபர்கள், சவ்வரிசி வடகங்கள், அப்பளங்கள் ஆகியவை மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் சிற்றுண்டி உணவு பொருட்களின் சில.
  • இது ஒரு முக்கியமான குடிசை தொழிலாக உளது.

காகிதம் மற்றும் ஜவுளி[தொகு]

  • மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பல்வேறு துறைகளில், குறிப்பாக பருத்தி மற்றும் சணல் ஆடைகள் உற்பத்தி, காகிதம் மற்றும கெட்டி அட்டைகள் தயாரிக்கும் தொழில் ஆகியவற்றில் பயன்படுகிறது.

மருந்து[தொகு]

  • மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் மாவில் உள்ள உயிரியல் மற்றும் இரசாயன மற்றும் கட்டமைப்பு பண்புகள் உள்ளதால், அதை எளிதாக திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் ஆக மாற்ற முடியும். திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் பரவலாக உணவு மற்றும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த துறைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் உள்ளன.
  • உணவு மற்றும் மருந்து தயாரிக்கும் பல தொழிற்சாலைகளில் தற்போது மரவள்ளிக் கிழங்கு மாவைப் பயன் படுத்தி திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மரவள்ளியிலிருந்து கிடைக்கும் பொருள்கள்[தொகு]

சவ்வரிசி

சவ்வரிசி[தொகு]

சவ்வரிசி, கூழ் தயாரிப்பு மற்றும் சிற்றுண்டியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஒரு குழந்தை உணவாகவும் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழகத்தில் பல தொழிற்சாலைகளும், ஆந்திர பிரதேசத்தில் சுமார் 35-கு மேற்பட்ட தொழிற்சாலைகளும், (குடிசைத்தொழிலாக) மரவள்ளிக் கிழங்கிலிருந்து கிடைக்கும் சவ்வரிசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

சேகோ (Sago), மலேய மொழியின் சேகு என்கிற சொல்லிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்றதாகும். மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) வகையைச் சார்ந்த, தெற்காசியச் சதுப்பு நிலங்களில் விளைகிற ஒருவகைப் பனைமரத்தின் ஊறலைக் (பதநீரை) காய்ச்சுவதால் கிடைக்கும் மாவுதான் சேகோ. அந்த மாவைக் கோள வடிவில் அரிசி போல் சிறிய உருண்டைகளாக்கி இந்தியாவில் விற்பனைசெய்தனர். ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அது ஜாவா அரிசி (ஜவ்வரிசி) எனப்பட்டது.

மாப்பொருள்[தொகு]

மாப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மரவள்ளிக் கிழங்கு மிக அதிகமாகப் பயன்படுகிறது. மாப்பொருள் தயாரிப்பு மற்றும் சவ்வரிசி தயாரிக்கும் 900-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகள் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ளன. குறைந்தபட்சம் இரண்டு பெரிய அளவிலான தொழிற்சாலைகள் தமிழ் நாட்டில் உள்ளன.

  • காகித தொழிற்சாலைகளில் அடிநிலை, நாள்காட்டி தயாரிப்பு, காகிதப் பூச்சு ஆகிய வேலைகளில் கிழங்கு மாவு பயன்படுத்தப்படுகிறது.
  • ஜவுளி தொழிலில் துணிகளுக்கு மொடமொடப்பான மடிப்பேற்படுத்த, இறுதி வேலைகளுக்கும் பயன்படுகிறது
  • உணவு தொழில்களிலும், ஒட்டக்கூடிய கெட்டியான பசை தயாரிப்பிலும் மாப்பொருள் பயன்படுகிறது.
  • திருவணந்தபுரத்தில் குடிசைத் தொழிலாக கோந்து மற்றும் சலவைக் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழக்கமான சந்தையிடல் மற்றும் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 4 January 2015.
  2. Phillips, T. P. (1983). An overview of cassava consumption and production.[தொடர்பிழந்த இணைப்பு] In Cassava Toxicity and Thyroid; Proceedings of a Workshop, Ottawa, 1982 (International Development Research Centre Monograph 207e). pp. 83–88 [F. Delange and R. Ahluwalia. editors]. Ottawa. Canada: International Development Research Centre.
  3. Claude Fauquet and Denis Fargette, (1990) "African Cassava Mosaic Virus: Etiology, Epidemiology, and Control" Plant Disease Vol. 74(6): 404–11. [1] பரணிடப்பட்டது 2008-04-09 at the வந்தவழி இயந்திரம்
  4. Linley Chiwona-Karltun, Chrissie Katundu, James Ngoma, Felistus Chipungu, Jonathan Mkumbira, Sidney Simukoko, Janice Jiggins (2002) Bitter cassava and women: an intriguing response to food security LEISA Magazine, volume 18 Issue 4. Online version[தொடர்பிழந்த இணைப்பு] accessed on 2009-08-11.
  5. கிழங்கு: மண்ணுக்குள் வைரம் 19 நவம்பர் 2016 தி இந்து தமிழ்

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Manihot esculenta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரவள்ளி&oldid=3854020" இலிருந்து மீள்விக்கப்பட்டது