மனிதச் சங்கிலிப் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மனிதச் சங்கிலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மனிதச் சங்கிலிப் போராட்டம் என்பது மனிதர்கள் கைகளைக் கோர்த்தபடி வரிசையாகவோ வட்டமாகவோ நின்று தமது எதிர்ப்பை அல்லது கருத்து நிலையை வெளிப்படுத்தும் ஓர் எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஆகும்.[1] எவ்வளவு தொகையான மக்கள் கைகோர்த்து எவ்வளவு தூரம் நிற்கிறார்களோ அவ்வளவுக்கு அது மக்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமையும். போராட்டத்துக்கு எடுத்துக்கொண்ட விடயத்தின் முக்கியத்துவம், அவ்விடயம் எவ்வளவு மக்களைப் பாதிக்கிறது அல்லது அதை ஒழுங்கு செய்பவர்களுக்கு மக்களிடையே எவ்வளவு செல்வாக்கு உள்ளது போன்ற விடயங்கள் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கின்றன. விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே கலந்துகொள்ளும் மனிதச் சங்கிலிப் போராட்டங்களும், மில்லியன் கணக்கில் மக்கள் கலந்துகொள்ளும் மனிதச் சங்கிலிப் போராட்டங்களும் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறுகின்றன.

அடிப்படையில் இது அமைதி வழியிலான போராட்ட வடிவம். எடுத்துக்கொண்ட விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களின் கவனத்தைக் கவர்வது, பொதுமக்களிடம் குறித்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பவற்றை இப்போராட்ட வடிவத்தின் மூலம் ஒரே நேரத்தில் அடையமுடிகிறது. அதேவேளை வேறு சில அமைதிவழிப் போராட்ட வடிவங்களைப்போல் பொதுமக்களுக்கு இதனால் அதிகம் தொந்தரவு ஏற்படுவதில்லை.

மிக நீண்ட மனிதச் சங்கிலிகள்[தொகு]

கின்னஸ் பதிவுகளின் படி உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலிப் போராட்டம் 2004 டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி வங்காள தேசத்தில் இடம்பெற்றது. வங்காளதேச தேசியக் கட்சியின் ஆட்சி மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி புதிய தேர்தலை நடத்தக்கோரும் அவாமி லீக் கட்சியின் தலைமையிலான 14 எதிர்க் கட்சிகளின் சார்பில் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டதாகவும், தெக்னாவிலிருந்து தென்தூலியாவரை 1,050 கிலோமீட்டர் நீளத்துக்கு மனிதச் சங்கிலியாக மக்கள் நின்றிருந்ததாகவும், பதிவு காட்டுகிறது.[2]

இதன் பின்னர் 2017 சனவரியில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் முழுமையான மதுவிலக்குக் கோரி இடம்பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மூன்று கோடி மக்கள் 11,400 கிலோமீட்டர் நீளத்துக்கு நின்று போராடியதாகத் தெரிகிறது.[3]

தமிழ்நாட்டில் ஒக்டோபர் 24, 2008 அன்று இலங்கை அரசு மேற்கொள்ளும் தமிழர் படுகொலைகளை கண்டித்து மேற்கொள்ளப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டம் இவ்வகைப் போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. English Oxford Living Dictionaries[தொடர்பிழந்த இணைப்பு] 2017-11-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. Longest Human Chain (Length), Guinness World Records 2017-11-01 அன்று பார்க்கப்பட்டது.
  3. Bihar supports prohibition with ‘the world’s longest human chain’, The Hindu, 21 January 2017