மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் ஓவரது பாடல்கள் மூன்று உள்ளன. அவை அகநானூறு 247, 364, நற்றிணை 388.

பாடல்கள் சொல்லும் பொருள்[தொகு]

அகம் 247[தொகு]

மண்ணா முத்தம்

மலைவழியில் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி கண்ணீர் விட்டாள். தோழி அவளைத் தேற்றுகிறாள்.

  • மண்ணா முத்தம் = நீரில் குளித்து எடுக்காத முத்தம் என்று கண்ணீரைப் பாடல் குறிப்பிடுகிறது.

மலைவழி

எண்கு
இரும்பைப் பூவை உண்டு சலித்தபோது கரையானை உண்ணப் புற்றைக் கிண்டுமாம்.
யானை
ஆள் வந்தால் தாக்க வருமாம்.
பாறு
முடைநாற்றம் வீசும் புலாலை தேடி உண்ணுமாம்.

இத்தகைய தலைச்சுரத்தில் தலைவன் செல்வதை நினைத்ததும் அவள் மார்பில் மண்ணா முத்தம் விழுந்ததாம்.

அகம் 364[தொகு]

வேந்துவிடு பணியை மேற்கொண்டு தலைவன் போர்ப்பாசறையில் இருக்கிறான். அவருக்காகக் காத்திருந்து ஏங்கும் நம்மைக் கொல்வதற்கென்றே கார்கால மாலைப்பொழுதும் துனைகிறது(நெருக்குகிறது).தோழி! என்செய்வோம் என்று தோழியிடம் சொல்லித் தலைவி கலங்குகிறாள்.

கார் தொடங்கியது

  • மகளிர் ஆடுகளத்தில் பறை ஒலிப்பது போலத் தவளைகள் ஒலிக்கின்றன.
  • பொன்னணிகளைத் தொங்கவிட்டிருப்பது போல் கொன்றைப் பூ சரம் சரமாகத் தொங்குகிறது.
  • தோன்றிப் பூக்கள் வானத்து மீன்கூட்டம் போலப் புதர் புதராகப் பூத்துக் குலுங்குகிறது.
  • முல்லைப் பூவும், இல்லம் பூவும் பூத்துவிட்டன.
  • சுனைகள் நிரம்பி வழிந்து விலங்குகள் நீர் பருகுகின்றன.

நற்றிணை 388[தொகு]

துறைவன் உடனிருந்தால் நெற்றியில் பசப்பு ஊராது என்கிறாயே. அவன் என் நெஞ்சை விட்டு அகலாமல் கூடவேதானே இருக்கிறான். பின் ஏன் பசப்பு வந்தது என்று தோழியை வினவுகிறாள் தலைவி.
துறைவன்

பரதவர் நள்ளிரவில் சுடர்விளக்கைத் திமிலில் கட்டிக்கொண்டு கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வர். கயிற்று நுனியில் கட்டிய எறியுளியை வீசி மீன் பிடிப்பர். வைகறைப் பொழுதில் திரும்பிக் கொண்டுவந்த மீன்களையெல்லாம் கானல் மணலில் குவிப்பர்.புன்னைமர நிழலில் தன் சுற்றத்தாரையெல்லாம் கூட்டிக்கொண்டு நறவு உண்டு மகிழ்வர். இப்படிப்பட்ட கானல்துறைக்குத் தலைவன் அவன்.