மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை நற்றிணையில் பாலைத்திணைப் பாடல்களாக அமைந்துள்ளன. பாடல் எண் 329, 352.

புலவர் பெயர் விளக்கம்[தொகு]

'செகு' என்னும் வினைச்சொல் சங்கநூல்களில் 'சாகடி', 'சாகச் செய்' என்னும் பொருளில் பரவலாகக் கையாளப்பட்டுள்ளது.

'யானை ... இயங்குநர்ச் செகுக்கும் எய்படு நனந்தலை' - அகம் 307
  • சா = செத்துப்போ - தன்வினை.
  • செகு = சாகச் செய் - பிறிதின்வினை

இந்தப் புலவர் தம் இரண்டு பாடல்களிலும் வழியில் செல்வோரின் உயிரை வழிப்பறி செய்வோர் செகுக்கும் செய்தியைக் கூறுகிறார். நற்றிணைப் பாடல்களைத் தொகுத்தவர் இப்புலவரின் பெயர் தெரியாத நிலையில் பாடற்பொருளால் பெயர் சூட்ட விரும்பியிருக்கிறார். செகுத்தனார் எனப் பெயர் சூட்டிப் பார்த்திருக்கிறார். செகுத்தனார் என்றால் சொல்லச்செய்தவர் என்று பொருள்படச் செய்யும். எனவே இதனை விடுத்துப் புதிய சொல் ஒன்றைப் படைத்துக் கொலைபுரிவோரைப் பாடியவர் என்று பொருள்படும்படி 'சொகுத்தனார்' எனப் பெயர் சூட்டியுள்ளார்.

நற்றிணை 329 பாடல் சொல்லும் செய்திகள்[தொகு]

பிரிவால் தலைவி வாடுகிறாள். அவர் வந்துவிடுவேன் என்று சொன்ன கார்ப்பருவம் வந்துவிட்டதைக் காட்டித் தோழி தேற்றுகிறாள்.

அத்தம் (எல்லை தாண்டும் வழி)[தொகு]

பறக்கும் வலிமை இல்லாத கிழட்டுக் கழுகு வழிப்பறி செய்வோர் கொன்று போட்ட பிணத்துக்காகக் காத்திருக்கும் அத்தமாம்.

வழிப்பறியாளர்[தொகு]

  • வரையா நயவினர் = அளவில்லாத ஆசை கொண்டவர்கள்.
  • நிரையம் பேணார் = தம்மை நிரையத்திலிருந்து காத்துக்கொள்ளாதவர்கள்.

இவர்கள் கொன்று போட்ட பிணங்களிக்காகக் கிழட்டுக்கழுகுகள் காத்துக் கிடக்குமாம். இத்தகைய வழியில் தலைவன் சென்றதற்காகத் தலைவி கவலை கொள்கிறாள்.

'அழல் போல் செவிய ... முதுநரி'

நற்றிணை 352 பாடல் சொல்லும் செய்திகள்[தொகு]

சுரவழியில் தலைவன் தலைவியை நினைக்கிறான்.

நெஞ்சே! அவள் உனக்கும் எனக்கும் அரியவளாய் இருக்கிறாள். அப்படியிருக்க உன்னிடம் மட்டும் எப்படி வந்தாள்? உண்மையில் அவள் கிடைத்தற்கு அரியவளாயிற்றே! - நெஞ்சோடு பேசுகிறான்.

அருஞ்சுரக் கவலை[தொகு]

வழிப்பறி செய்து வாழும் பாலைநில மக்கள் பல வழிகள் பிரியும் கவலையில் இருந்துகொண்டு இலைபோல் கூர்நுனி கொண்ட அம்பு எய்து அன்பின்றிப் பலரைத் தொலைப்பார்களாம்.

நரி[தொகு]

தீ எரிவது போன்ற காதுகளைக் கொண்ட முதுநரி சேவலின் பச்சை ஊனைக் கொள்ளையிட்டுக் கொண்டுபோய் நிழலில் வைத்துக்கொண்டு கதிக்குமாம்.

  • கதித்தல் = வெடுக்கு வெடுக்கென்று கௌவிக் கௌவி உண்ணல்

பேய்த்தேர் என்னும் வெயிலோட்ட நீரை உண்ண ஓடிக் களைத்துப்போய் மண்ணில் பறித்த தன் பதுக்கையில் பதுங்கிக்கொள்ளுமாம். - இப்படிப்பட்ட வழியில் சென்றானாம் தலைவன்.