மதுரை முனியாண்டி விலாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை முனியாண்டி விலாஸ் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற அசைவ உணவங்களில் ஒன்றாகும்.[1] தமிழ்நாடு, மதுரை மாவட்டம் திருமங்கம் வட்டம் பகுதியில் இருக்கும் வடக்கம்பட்டி கிராமத்தினைச் சேர்ந்த சுப்பா நாயுடு என்பவர் காரைக்குடியில் 1935ல் முனியாண்டி விலாஸ் என்ற பெயர் முதன்முதலாக உணவகம் தொடங்கினார். இதற்கு முனியாண்டி தெய்வம் கனவில் வந்து "அன்னம் விற்று பிழைப்பு நடத்துக" என்று அருள் வழங்கியமை காரணமாகக் கூறப்படுகிறது.[2] இவ்வுணவகத்தின் கிளைகள் தற்போது தமிழ் நாடு முழுவதும் உள்ளன.

தோன்றிய வரலாறு[தொகு]

வடக்கம்பட்டி கிராமத்தில் ஊரில் கடுமையான பஞ்சம் ஏற்பட்ட நிலையில் இந்த ஊரைச் சேர்ந்த நாயுடு, ரெட்டியார் சாதியினர் மாற்றுத் தொழிலைத் தேடத் தொடங்கினர்.[சான்று தேவை] அப்போது இந்த ஊரைச் சேர்ந்த சுப்பா நாயுடு என்பவர் அசைவ உணவகம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டார். 1934 ஆம் ஆண்டில் இவர் இந்த ஊர் மக்களின் தெய்வமாக இருந்த முனியாண்டி சுவாமி பெயரில் ஒரு உணவகத்தைத் தொடங்கினார்.[சான்று தேவை] அவரைத் தொடர்ந்து இந்த ஊரிலிருந்த பலர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு இவர்கள் உணவகங்களைத் தொடங்கினர். இந்த உணவகங்களுக்கு அவர்கள் முனியாண்டி விலாஸ் என்றே பெயரிட்டனர்.

உணவக அமைப்புகள்[தொகு]

முனியாண்டி விலாஸ் உணவகம் வைக்க விருப்பப்பட்டவர்கள் இந்த வடக்கம்பட்டியிலிருக்கும் முனியாண்டி கோவிலில் பூசைகள் செய்து அனுமதி கேட்பதுடன் இதற்காகக் கோவிலில் உணவகப் பெயரை ஊருடன் சேர்த்துப் பதிவும் செய்து கொள்கிறார்கள்.[சான்று தேவை] இந்தக் கோவிலில் பதிவு செய்து கொண்ட உணவகங்களுக்கான அமைப்பின் நன்கொடையுடன் வருடம் தோறும் ஜனவரி 3 ஆம் வாரம் இந்தக் கோயிலின் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதில் நாயுடு, ரெட்டியார் சாதியினர்களிடையே ஏற்பட்ட சில பிரிவினைகளின் காரணத்தால் இந்தக் கோவில் மூன்றாகப் பிரிவினை ஏற்பட்டு வடக்கம்பட்டி, அச்சம்பட்டி, புதுப்பட்டி என்கிற மூன்று முனியாண்டி சுவாமி கோயில்களும் அந்தக் கோவிலின் பெயர்களில் உணவகம் மூன்று அமைப்புகளின் கீழ் பிரிந்து போய் விட்டன.[சான்று தேவை] இருப்பினும் உணவகங்களுக்கு “மதுரை முனியாண்டி விலாஸ்” என்கிற பெயரை வைக்கின்றனர்.

வேற்று மதத்தினர்[தொகு]

தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் மதுரை முனியாண்டி விலாஸ் உணவகம், மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த நாயுடு, ரெட்டியார் சாதியினரால் மட்டும் முன்பு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த உணவகம் இவர்களால் பிற சாதியினர் மற்றும் மதத்திற்கு விற்கப்பட்டு விட்ட நிலையில், வாங்கியவர்கள் பெயர் மாற்றமின்றி மதுரை முனியாண்டி விலாஸ் என்கிற பெயரில் தொடர்ந்து உணவகங்களை நடத்தி வருகின்றனர். இந்த உணவகங்களுக்கான அமைப்பில் உறுப்பினராகவும் தொடர்ந்து இருந்து வருவதுடன் முனியாண்டி சுவாமி கோயில் விழாவிற்கு நன்கொடைகளையும் வழங்கியும் வருகின்றனர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்த மதுரை முனியாண்டி விலாஸ் உணவகத்தை இசுலாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் விலைக்குப் பெற்று அதே பெயரில் தொடர்ந்து நடத்தி வருகிறார்.[சான்று தேவை]

முனியாண்டி கோயில் திருவிழா[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2 ஆம் வெள்ளிக்கிழமையில் வடக்கம்பட்டியில் அமைந்துள்ள முனியாண்டி கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. இதில் மதுரை முனியாண்டி விலாஸ் உணவகம் நடத்தும் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவில் முனியாண்டிக்கு பிரியாணி படைத்து, பக்கதர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள்.[3]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://malaigal.com/?p=390 முனியாண்டி விலாஸ் - மலைகள் இதழ் - தமிழர் உணவு நூலின் ஒரு பகுதி]
  2. முனியாண்டி விலாஸ் திருவிழா - ரா. அண்ணாமலை இது நம்ம ஊரு ஸ்பெசல் ஆனந்த விகடன் - 15 பிப்ரவரி, 2012
  3. http://www.maalaimalar.com/2015/02/23100937/muniyandi-temple-festival-mutt.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_முனியாண்டி_விலாஸ்&oldid=3853481" இலிருந்து மீள்விக்கப்பட்டது