மண்ணும் மனிதரும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மண்ணும் மனிதரும் டாக்டர் சிவராம காரந்த் எழுதிய மரளி மண்ணிகே (மண்ணை நோக்கி மீண்டும்) என்ற கன்னட புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். தமிழில் மொழிபெயர்த்தவர் டாக்டர் சித்தலிங்கையா. இப்புதினம் 1971 ல் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக வந்தது. இந்திய இலக்கியத்தின் முக்கியமான பேரிலக்கியங்களில் ஒன்று.

கதைக்கட்டு[தொகு]

‘மண்ணும் மனிதரும்’ ஒரு யதார்த்தவாதப் படைப்பு. தெற்கு கர்நாடகம் (கனரா) பகுதியில் மணூர், கோடி என்னும் கடலோரக் கிராமங்களிலாக கதை நிகழ்கிறது. இதன் மையக் கதாபாத்திரம் இராம ஐதாளர். கிராமத்தில் புரோகிதம் செய்வது அவரது தொழில். அவரது தங்கை சரஸ்வதி, விதவையாகி அவருடனேயே இருக்கிறாள். அவர் மனைவி பார்வதிக்கு குழந்தைகள் இல்லை. அங்கே பிராமணர்கள் ஆனாலும் ஆணும் பெண்ணும் மண்ணில் இறங்கிக் கடுமையாக உழைத்தேயாகவேண்டும். சரஸ்வதியும் பார்வதியும் ஏர் பிடிக்கவும் செய்கிறார்கள். விளைபொருட்களை தலையில் சுமந்து விற்கச்செல்கிறார்கள்.

பார்வதிக்குக் குழந்தை இல்லை. ஒரு குழந்தையை சுவீகாரம் செய்துவிடலாம் என்று சரஸ்வதி தீர்மானிக்கிறாள். அதை ராம ஐதாளரிடம் சொல்ல சந்தர்ப்பம் பார்த்திருக்கிறாள். ஆனால் அவர் ஒருநாள் வீட்டில் விசேஷத்துக்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்யும்படிச் சொல்லிவிட்டு வெளியூர் செல்கிறார். சுவீகாரம் செய்யத்தான் என்பது அவர்களின் ஊகம். ஆனால் ராம ஐதாளர் சென்றது தனக்கு இரண்டாம் மனைவியை ஏற்பாடு செய்வதற்காக. ராம ஐதாளருக்கு இரண்டாம் மனைவியாக சத்தியபாமா வந்துசேர்கிறாள். பார்வதி சக்களத்தியை ஏற்றுக் கொள்கிறாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. மூத்தவன் லட்சுமிநாராயணன் என்ற லச்சன். இரண்டாவது சுப்பி.

லட்சுமிநாராயணன் பெரியம்மாவையே அம்மாவாக அம்மாவைவிட மேலாக நினைத்து வளர்கிறான். அவளுக்கும் வாழ்க்கையின் அர்த்தமாகவே குழந்தை இருக்கிறது. லச்சம் ஆங்கிலம் படிகக்வேண்டும் என்று விரும்பும் ஐதாளர் அவனை தன் மானனார் வீட்டுக்கு அனுப்பி படிக்கவைக்கிறார். படிப்பு லச்சத்தை மாற்றுகிறது. அவன் அப்பா பெரியம்மா அம்மா அனைவரையும் ஆர்வமூட்டாத அன்னியர்களாக எண்ணுகிறான். வளர வளர அந்த அன்னியப்படல் பெரிதாகிறது. குந்தாபுரத்திலும் உடுப்பியிலும் உள்ள போகங்களில் அவன் மனம் ஈடுபடுகிறது. தங்கும் ஓட்டலின் உரிமையாளரின் மனைவியான ஜலஜாட்சியுடன் உறவு வைத்துக் கொள்கிறான். ஒருவழியாக பெரும் பணச்செலவில் படிப்பை முடிக்கிறான்

ராம ஐதாளர் அவனுக்கு மணம்செய்து வைக்கிறார். குந்தாபுரத்தில் பெரிய வக்கீலின் மகளான நாகவேணி அவனுக்கு மானைவியாகிறாள். ஆனால் சீக்கிரமே லச்சத்தின் நடத்தை மூலம் அவன் பெற்றிருந்த நோயால் அவள் நோயாளியாகிறாள். பெண்ணை அனுப்ப மறுத்த வக்கீலிடம் அழுது நாகவேண்டியை கூட்டிவருகிறார் ஐதாளர். இறக்கும்போது தன் சொத்துகளை நாகவேணிக்கு எழுதிவைத்துவிட்டு சாகிறார். அவரது சாவுக்கு வரும் லச்சம் அதன் மூலம் தான் அவமதிக்கபட்டவனாக உணர்கிறான். ஊரைவிட்டே சென்று எங்கோ கிராம அதிகாரியாக ஆகிறான்.

லச்சத்தின் வாழ்க்கை இடைவிடாது சூதாட்டம் பெண்போகம் ஆகியவற்றுக்கான அலைச்சலாகவே எஞ்சுகிறது. அந்த ஓட்டத்தில் அவனுக்கு குழந்தைகள் மனைவி தாய் எதுவுமே பொருட்டாக இல்லை. குடும்பசொத்தையும் அழித்துவிட்டு மனைவி குழந்தையை அனாதையாக்கிவிட்டு அவன் சென்றுவிடுகிறான். மூத்த குழந்தை பிட்டு இறக்க இரண்டாவது குழந்தை ராமனை வளர்த்து ஆளாக்க நாகவேணி கொடும் துன்பங்களை அனுபவிக்கிறாள். அவளுடைய தமையர்களின் உதவியுடன் அவனை மெட்ரிகுலேஷன் வரை படிக்கவைக்கிறாள். படிக்கும்போது ராமனுக்கு சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் ஏற்படுகிறது. படிப்பை விட்டு சிறைசெல்கிறான். அதை நாகவேணியால் ஏற்கவே முடியவில்லை. பிள்ளை தனக்கு ஓர் அநீதி இழைத்திவிட்டதாகவே அவள் நினைக்கிறாள். ஒருபக்கம் கொந்தளிக்கும் கருத்துலகும் கலைமீதான பித்தும் மறுபக்கம் தாயின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் என அலைபாயும் ராமன் மெல்ல மெல்ல தாயின் அகவலியை புரிந்துகொள்கிறான்.

இதுதான் மண்ணுமனிதரும் முன்வைக்கும் கதை. செவ்வியல் பண்பு கொண்ட பிற யதார்த்தவாத நாவல்களைப் போலவே இதிலும் ‘கதை’ என்ற வடிவம் இல்லை. தொடர்ந்து வளர்ந்து விரிவடையும் சம்பவங்கள்தாம் உள்ளன.

சிறப்பு[தொகு]

எவ்விதமான பாரபட்சமும், விருப்பு வெறுப்பும் இன்றி காரந்த் கதையைச் சொல்லும் முறை. ஆசிரியர் என்று ஒருவர் இப்படைப்பின் பின் உள்ளார் என்ற பிரக்ஞையே உருவாகதபடி அத்தனை துல்லியமாகத் தன்னை விலக்கிக் கொண்டிருக்கிறார் காரந்த்.

உணர்ச்சிகளையும் உறவுகளின் நுட்பங்களையும் கூறுமிடத்து மிகுந்த கவனத்துடன் அவர் கொள்ளும் எளிமையுணர்ச்சி. மொத்த நாவலுமே மிக வயதான ஒரு பாட்டி அதிக ஈடுபாடு இன்றி தான் கண்ட வாழ்வை கூறுவது போன்று அமைந்துள்ளது. காரந்தின் குணச்சித்திரச் சித்தரிப்பு முறையும்கூட எதனுடனும் கலந்து விடாமல் தனித்து நிற்பதன் மூலம் உருவாவதுதான். குறைந்தது சரி தவறுகள் குறித்துகூட அவர் அழுத்தமளிக்கவில்லை. முதிர்ந்து விலகிய ஒரு மனம் பற்றின்றிச் சொல்லும் கதையாக உள்ளது இந்நாவல். இது செவ்விலக்கியப் பண்பாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணும்_மனிதரும்&oldid=1373773" இருந்து மீள்விக்கப்பட்டது