பொறியாளர் சங்க உறுப்பினர் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் கல்கத்தாவிலுள்ள இந்தியப் பொறியாளர்கள் நிறுவனம் (The Institution of Engineers (India)) என்கிற அமைப்பு பொறியாளர் சங்க உறுப்பினர் கல்வித் (A.M.I.E.,) தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வுகள் மாணவர் நிலை (Studentship), பகுதி-அ (Section-A), பகுதி-ஆ (Section-B) என்று மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. +2 முடித்த மாணவர்கள் (கணக்கை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும்) முதலில் மாணவர்கள் நிலையில் சேர வேண்டும். அந்த நிலையில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பகுதி-அ நிலையில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். இந்நிலையில் வெற்றி பெற்றவர்கள் இறுதியாக பகுதி-ஆ நிலையில் அவர்கள் விருப்பப் பாடமாக எடுத்த பிரிவில் (கட்டிடவியல், மின்னியல், இயந்திரவியல் போன்ற பொறியியல் பிரிவுகள்) தேர்வு எழுத வேண்டும். இந்த மூன்று நிலையிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பொறியாளர் சங்க உறுப்பினர் கல்விச் (A.M.I.E.,) சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இந்த சான்றிதழ் பெற்றவர்கள் இளங்கலைப் பொறியியல் (B. E.,) பட்டப் படிப்புக்கு நிகரானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு (I.A.S) , இந்தியக் காவல் பணித் தேர்வு (I.P.S) போன்ற தேர்வுகள் எழுதவும் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். மேலும் அரசுப் பணிகளில் இளங்கலைப் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பொறியாளர் சங்க உறுப்பினர் கல்விச் சான்றிதழ் படிப்புக்கான பயிற்சி மையங்கள் முன்பு நிறைய இருந்தன. தற்போது பொறியியல் பட்டப் படிப்புக்கான சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் அதிக அளவில் துவங்கப்பட்டு விட்டதால் இந்த படிப்பில் சேர்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போய் விட்டது. இருப்பினும் பொறியியல் துறை சார்ந்த பணியில் இருப்பவர்கள் பலர் கல்வியிலும், பணியிலும் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக இந்தப் பயிற்சியில் அதிக அளவில் சேர்ந்து வருகிறார்கள்.

கல்வி நிலை[தொகு]

பொறியாளர் சங்க உறுப்பினர் கல்வியில் சேர்வதற்குக் கீழ்காணும் தகுதிகள் இருந்தால் அவர்கள் இக்கல்வியின் குறிப்பிட்ட நிலைகளில் நேரடியாகச் சேர முடியும்.

  • மேல்நிலை வகுப்பில் (+2) தேர்ச்சி பெற்றவர்கள் மாணவர் நிலையில் சேரலாம்.
  • பல்தொழில்நுட்பப் பயிலகங்களில் பொறியியலில் பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பகுதி-அ நிலையில் நேரடியாகச் சேரலாம்.
  • கல்லூரிகளில் பயன்பாட்டு அறிவியல் (Applied Science) பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பகுதி-ஆ நிலையில் நேரடியாகச் சேரலாம்.