பொய்த் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொய்த்தீவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
1558ல் வரையப்பட்ட செனோவின் நிலப்படம். இதில் வட அத்திலாந்திக்கில் ஃபிரிசுலாந்து எனக் காட்டப்பட்டிருப்பது ஒரு பொய்த்தீவு ஆகும்.

பொய்த் தீவு (phantom island) என்பது, உண்மையில் இல்லாத ஆனால் இருப்பதாகக் கருதப்பட்டுச் சிறிது காலம் நிலப்படங்களில் காட்டப்பட்டிருந்த தீவைக் குறிக்கும். இவ்வாறான சில தீவுகள் சில நூற்றாண்டுகளாக இவ்வாறு நிலப்படங்களில் காட்டப்பட்டு இருந்ததும் உண்டு.

உருவானதற்கான காரணங்கள்[தொகு]

பொய்த் தீவுகள் பெரும்பாலும், புதிய நிலப் பகுதிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்த கடலோடிகளின் அறிவிப்புகளில் இருந்தே உருவாகின்றன. சில முழுமையாகவே தொன்மம் சார்ந்தவை. பிசாசுத் தீவு இவ்வாறான ஒன்று. வேறு சில, உண்மையான தீவுகளைப் பிழையான அமைவிடத்தில் குறிப்பதனாலோ அல்லது பிற புவியியல் தவறுகளினாலோ ஏற்படுகின்றன. பெப்பிசுத் தீவு என அறியப்பட்டிருந்த ஒரு பொய்த் தீவு உண்மையில் பாக்லாந்து தீவுகளைப் பிழையான இடத்தில் அடையாளம் கண்டதால் ஏற்பட்டது. பாஜா கலிபோர்னியா தீவக்குறை சில நிலப்படங்களில் ஒரு தீவாகக் காட்டப்பட்டிருந்தது. பின்னர், இது உண்மையில் வட அமெரிக்காவுடன் இணைந்திருப்பது அறியப்பட்டது.

கப்பலோட்டுவதில் ஏற்படும் தவறுகள், அவ்வப்போது தென்படக்கூடிய பாறைகள், பனிப்பாறைகளைப் பிழையாக அடையாளம் காணல், நிலக்கரையொத்த மூடுபனித் திரள், ஒளியியல் திரிபுக்காட்சிகள், போன்றவற்றாலும் தீவுகள் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுவது உண்டு. 1823ல் வெட்டெல் கடலில் கவனிக்கப்பட்ட நியூ சவுத் கிரீன்லாந்து பின்னர் ஒருபோதும் காணப்படவில்லை. இது ஒரு மாயத் தோற்றமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பொய்யாகப் புனைந்து கூறப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.[1][2]

சில பொய்த் தீவுகள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். என்றுமே இருந்திராத தீவுகள் பொய்த் தீவுகள் ஆனமை ஒருபுறம் இருக்க, இருந்த தீவுகளும் பல்வேறு காரணங்களால் இல்லாமல் போனதும் உண்டு. எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், கடற்கீழ் மண்சரிவு, தாழ்நிலங்கள் கடலுள் அமிழ்தல் என்பன இதற்கான சில காரணங்கள்.

குறிப்புகள்[தொகு]

  1. Antarctica, p. 47, Paul Simpson-Housley, 1992
  2. Exploring Polar Frontiers, p. 435, William James Mills, 2003

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்த்_தீவு&oldid=2980612" இலிருந்து மீள்விக்கப்பட்டது