பேச்சு:மைன்றீ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை மைண்டுட்றீ என்றோ மைண்டுட்ரீ என்றோ எழுதலாம். இரண்டு "ட்ட்" வருவது தமிழில் இயல்பன்று. நாம் ஒலிபெயர்த்து எழுதும்பொழுது மைன்ட்ரீ என்றே ஒலிக்கும். ஆங்கிலத்தில் open, happen ஆகிய இரண்டும் ஒரு p இருப்பது போலவே ஒலிக்கும். --செல்வா (பேச்சு) 23:32, 29 சூலை 2012 (UTC)[பதிலளி]

மைண்டுட்ரீ ஐ விட மைன்ட்ரீ நன்றாக இருப்பதாக தோன்றுகிறது. அதற்கு மாற்றலாமா?--சண்முகம்ப7 (பேச்சு) 04:09, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]
மைன்ட்ரீ என்று மாற்றலாம், சண்முகம், ஆனால் மிகவும் நெருடுகின்றது. மைன்றீ என்றால் பிழை இல்லை, ஆனால் ஆங்கில ஒலிப்போடு ஒப்பிடும்பொழுது சிறிது ஒலிப்பிறழ்வு இருக்கும். இந்த ஒலிப்பிறழ்வு ஏற்கத்தக்கது எனில் மைன்றீ என்று எழுதலாம் என்பது என் பரிந்துரை. பலரும் மைன்ட்ரீ என்பது ஏற்பு எனில் அப்படியும் இடலாம் (மிகுந்த நெருடலுடன்). சில மொழிகளில் எப்படிவேன்டுமானாலும் எழுதலாம், தமிழ் மொழியில் அப்படி எழுதுவது கூடாது. எனவேதான் மைன்றீ என்று எழுதப் பரிந்துரைக்கின்றேன். இங்கே வரும் -ன்ற்+உயிர்- என்னும் எழுத்துக்கூட்டல் ஏற்புடையது. வென்றி, பன்றி என்பது போல் ஆனால் றீ என ஈகார ஒலிப்பு. ஒலிப்பை மட்டும் குறிப்பதாயின் மைன்ற்றீ என்பது ஏலும் போல் தென்படும் ஆனால் அப்படி ன்ற்றீ என்பதும் தமிழில் ஏற்பில்லாத கூட்டல். எப்படி ஆங்கிலத்தில் "a pen" , "an act" என்றுதான் கூற வேண்டும் என்னும் விதி உள்ளதோ, அதுபோல் தமிழில் இன்ன இன்ன எழுத்துகள்தான் சேர்ந்து வரலாம் என்னும் விதி உண்டு. --செல்வா (பேச்சு) 04:32, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]
இது வணிகப் பெயர் என்பதால் தான் சற்று ஒலிப்பிற்கேற்ப எழுதாலாம் என நினைத்தேன், வேறு யாராவது கருத்து சொல்கிறார்களா என்று பார்க்கலாம். இல்லையெனில் மாற்றிவிடலாம் (எனக்கு ட்ரீ என்பதை றீ என்று ஒலிக்க சற்று தயக்கமாக இருக்கிறது :)) --சண்முகம்ப7 (பேச்சு) 04:52, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]
மைண்டுட்ரீ என்பதில் நடுவில் வரும் டுகரத்தைக் குற்றியலுகரமாகக் கொண்டால் கிட்டத்தட்ட ஆங்கில ஒலிப்புடன் நெருங்கியே வருகிறது. -- சுந்தர் \பேச்சு 07:37, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]
சண்முகம்,மைன்றீ என்பது mindree என்று ஒலிக்கும் mindtree என்று அன்று. ஆனால் அதுவே தமிழில் நெருக்கமான ஒலிப்பு (தமிழ் எழுத்துக்கூட்டல் விதிகளுட்பட்ட ஒலிப்பு). மைன்ட்ரீ என்பதில் மெல்லின ன் என்னும் எழுத்துக்குப் பிறகு ட் வருவது தமிழில் கிடையாது. -ன்ட்- என்னும் புதிய எழுத்துக்கூட்டலை ஆங்கிலத்தில் -nt- என்பதற்கு ஈடான ஒலிப்பாகக் கொள்ளலாம் ஆனால் அது போன்ற புதுமைகளை நுழைக்கலாமா என்பதே கேள்வி. என்னைப்பொருத்த அளவில் புதிய எழுத்துக்கூட்டலாக ஏற்கலாம், ஆனால் பொதுவாக ஏற்பார்களா? penta என்று வரும் இடங்களிலும் பென்டா என்று எழுதலாம். ஆனால் தமிழ் இயல்பின் படி வல்லின எழுத்துக்கு முன்னே மெல்லின எழுத்து வந்தால், வல்லினம் மெலிந்து ஒலிக்கும். எ.கா. பந்து (ஒப்பிட்டுப் பார்க்கவும் பத்து), பண்டு-பட்டு, வங்கு-வக்கு, நான்கு (இது ஒலிப்பின்படி naanku அன்று, naangu! பென்டா என்று எழுதினால் - அப்படி எழுதுவது தமிழில் பிழையே என்றாலும்- அதன் ஒலிப்பு pendaa என்பதுதான், penta அன்று. ஆனால் பென்ட்டா என்றால் இது தமிழில் பிழையானது எனினும், pentaa என ஒலிப்பதாகக் கொள்ள இடம் உண்டு (இங்கும் தமிழ் டகரம் ஆங்கில t அன்று. தமிழ் டகரம் நா வளையொலி). penta என்பதைப் பெந்தா என்று குறிப்பதால் தவறில்லை (சிறு ஒலி மாறுபாடு உண்டு என்பது உண்மை). அதே போல மைன்றீ என்றால் mindree என்பது போல ஒலிக்கும். அதனை ஈடானதாக ஏற்பதால் தவறில்லை. Raman, Tilak என்று எழுதினாலும் ஆங்கிலேயர் ரேமன், ரமான், ரேமான் என்றும் டீலாக், டைலாக், டைலேக் என்றும் வெவ்வேறு விதமாக ஒலிக்கின்றனர். மணி (Mani) என்னும் பெயரை மேனி என்றும் கண்ணன் (Kannan) என்னும் பெயரைக் கேனன் என்றுமே ஒலிக்கின்றனர். எனவே மொழிக்கு மொழி மாறுபாடுகள் இருக்கும் என்பதை உணர்ந்து ஏற்க வேண்டும் (இது உலகப்பொது விதி). மைன்றீ என்று கூறலாம், அது தவறில்லை. மைன்ட்ரீ என்று கூற வேண்டும் எனினும் எனக்குப் பெரிய எதிர்ப்பு இல்லை, ஆனால் பென்டா என்று எழுதி அது penta என்று வழங்குவதில் குழப்பங்கள் வரும் (நான்கு, அன்பு, போன்ற சொற்களில் வரும் ஒலிப்பொழுக்கத்தின் சீர்மையைக் கெடுக்கும், குழப்பும். தமிழில் ன்ட் மெய்யொலிக்கூட்டம் கிடையாது.--செல்வா (பேச்சு) 14:12, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]
ன்ட் தொடர்ந்து வராது என்பதாலும், மைன்றீ விளக்கம் சரியே எனினும் ஒலிப்பு சற்று வித்தியாசமாக தோன்றுவதாலும், சுந்தர் மற்றும் உங்களின் கருத்தை கொண்டு மைண்டுட்ரீ என்ற தலைப்பிற்கு மாற்றியுள்ளேன்--சண்முகம்ப7 (பேச்சு) 15:02, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]

ட்ரீ என்ற மெய்யொலிக்கூட்டமும் தமிழில் வராது என்பதால் இந்த வழக்கை மீண்டு விஜாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன் :) செல்வா, penta எடுத்துக்காட்டு நன்று. இத்தனை நாளும் nta ஒலிப்புக்கு ன்ட பயன்படுத்தலாம் என்றே நினைத்திருந்தேன். இதுவும் nda ஒலி தரும் என்றால் ண்டா ஒலியில் இருந்து எப்படி மாறுபடுகிறது? ஒரு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட தமிழில் மெய்யொலிக் கூட்டங்கள் குறித்த விதிகளைப் பின்பற்றி வந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இங்லேண்ட் என்று எழுத முடியும் போது ஏன் இங்கிலாந்து என்று எழுதியிருக்க வேண்டும்? இன்று அதுவே இயல்பாகி land வரும் இடங்கள் அனைத்திலும் லாந்து என்று இயல்பாகப் பொருந்துகிறது. எனவே, இருக்கிற தமிழ் எழுத்துகளைக் கொண்டு இலக்கணத்துக்குப் புறம்பாக எழுதாமல் இயன்ற அளவு இலக்கணத்தைப் பின்பற்றினால் வருங்காலத்தில் அதுவே இயல்பாகி விடும் என்பதையும் கருத்தில் கொள்ளலாம்--இரவி (பேச்சு) 16:23, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]

அட போங்கப்பபா! ட்ரீயும் வராதா :).. எனக்கு இந்த இலக்கணம் எல்லாம் தெரியாது (நாலு வருசத்துக்கு முன்னாடியே மறந்து போச்சு :)).. மைன்றீக்கே மாத்திறலாமா?--சண்முகம்ப7 (பேச்சு) 16:35, 30 சூலை 2012 (UTC)[பதிலளி]
நல்ல வேளை சொன்னீங்க இரவி. இந்தெந்த தொடர்கள் வரும் என்பதற்கு தமிழில் மெய்யொலிக்கூட்டம் கட்டுரையைப் பாருங்க, சண்முகம். -- சுந்தர் \பேச்சு 12:49, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி சுந்தர். கட்டாயம் இந்தப் பக்கத்தை அறிந்திருக்க வேண்டும், நடைக்கையேட்டிலும் தொடுப்பு இருக்கவேண்டும் (இப்பொழுது சேர்த்து இருக்கின்றேன்).--செல்வா (பேச்சு) 13:14, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
சண்முகம் மைன்றீ என்றால் பிழை இல்லை. ஆங்கிலத்தில் MindTree என்றாலும் இடையே வரும் d என்பது வலித்தே ஒலிக்கும். ஒலிப்புப்படி பார்த்தால் மைன்ட்ட்ரீ என்பது போலவே இருக்கும். ஆனால் அதனைத் தமிழில் தமிழ் இயல்புக்கு ஏற்ப மைன்றீ (mindree) என்று குறிப்பதே நல்லது. ஆங்கிலத்தில் அழகப்பனை "அலகப்பன்" ( beak-man, unit-man, alaGAPan = beautiful gap man, alagaPAN = unit-plate) என்று கூறுவதுபோன்றதே. அதாவது மொழிக்கு மொழி மாறுபடுவது இயல்பானதே. இன்னொரு எடுத்துக்காட்டாக அரபு மொழியில் Pepsi என்று கூற முடியாது, bebusi என்றுதான் கூற இயலும் என்பதையும் கருதலாம். இரவி, தமிழில் மெல்லினத்துக்குப்பின் வல்லின ஒலிப்பு வருதல் இயல்பன்று எனவே -ங்க்கா-, -ஞ்ச்சா-, -ண்ட்டா-, -ந்த்தா-, -ம்ப்பா- முதலானவை வர இயலாது. ஆங்கிலத்தில் Toronto என்றாலும், ஆங்கிலேயருமே, மிகப்பலரும் Trono என்றே ஒலிப்பர் (இதனை பில் பிரைசன் (Bill Bryson) Mother Tongue என்னும் நூலிலும் குறிப்பிட்டுள்ளார்). மலையாளிகளில் பலரும் simply, complicated என்னும் சொற்களை ஒலிக்குபொழுது simbly, comblicated என்பது போல ஒலிப்பதையும் கேட்டிருக்கலாம். இவை தமிழ் மொழியின் இயல்பை உணர்த்தும். ஃசிம்ப்ளி என்று நாம் எழுதினாலும் ளி என்று கூறுவது நம் மொழியில் உள்வாங்கு இயல்பால் (கூகுள், கிளிக், கிளாப் பண்ணினார், கிளியோபாட்ரா போன்றவையும் இவை போன்றவையே). இப்படி மொழி இயல்பின்படி உள்வாங்கி எழுதுதல், ஆங்கில, பிரான்சியம், முதலான அனைத்து மொழிகளுக்கும் உண்டு. எனவே மைன்றீ என்று எழுதுவதால் பெரிய பிழை ஏதும் இல்லை. ஆங்கிலத்தில் மைன்ட்ரீ என்பது போல ஒலிக்கும் என்று பிறைக்குறிகளுக்குள் வேண்டுமானால் எழுதிக்காட்டலாம்.--செல்வா (பேச்சு) 13:35, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
நன்றி செல்வா. // மலையாளிகளில் பலரும் simply, complicated என்னும் சொற்களை ஒலிக்குபொழுது simbly, comblicated என்பது போல ஒலிப்பதையும் கேட்டிருக்கலாம். இவை தமிழ் மொழியின் இயல்பை உணர்த்தும். // நானும் இதைச் சிலகாலமாகக் கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். மலையாள எழுத்துமுறையும் தமிழ்மொழியின் இயல்பை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகிறது. தேவநாகரியில் உள்ள சில எழுத்துக்களைக் கொண்டிருக்கும்போதும் தமிழில் உள்ள மலையாளச் சொற்களை எழுதும்போது அவற்றைத் தவிர்த்து தமிழ்/மலையாள வல்லின எழுத்து மரபைப் பேணுகிறார்கள் (இடையில் மெலிந்து வரும்போது மெலிந்த ஒலிக்கான 'அன்னிய' எழுத்தைப் பயன்படுத்தாமல் விடுகின்றனர். கன்னட எழுத்தைப் படித்து அங்கும் அப்படி உள்ளதா என அறிய விரும்புகிறேன்.) -- சுந்தர் \பேச்சு 13:40, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மைன்றீ&oldid=1179445" இலிருந்து மீள்விக்கப்பட்டது